Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, October 29, 2013

முன்னுரை-7


     இந்த ஆய்விற்கு, முதலில் சென்ற களம், வலை தளம் தான். அதில் சோதிடம் பற்றிய நிறைய தகவல்கள் கிடைத்தாலும், இரண்டு முக்கிய வலைப்பூக்களைச் சொல்லியே ஆகவேண்டும். பின்னர் இது தொடர்பான புத்தகங்கள், தகவல்கள், நண்பர்கள் என்று நீண்டு கொண்டே செல்கின்றது. மெய்யென்று சொன்ன தளங்கள் மட்டுமின்றி, பொய்யென்று சொல்லும் தகவல்களையும் தேடத்தொடங்கினேன்.

    ஓரளவு தகவல்கள் திரட்டிய பின்பே, இந்த வலைப்பூவைத் தொடங்க தலைப்பட்டேன்.

   தகவல்கள் திரட்டலுக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தாலும், கீழ் வருபவர்கள் முதன்மையானவர்கள்.

விலையில்லாமல் வழங்கியவர்கள்

1.   கூகுள் தேடு தளம்
2.   வலைப்பூ - தமிழோவியம் – சோதிட ரத்தினா திரு S. சந்திரசேகர் அவர்களின் “நீங்களும் சோதிடராகலாம்” எனும் பதிவுகள்
3.   வலைப்பூ – வகுப்பறை 2007 – திரு சுப்பையா வீரப்பன் (வகுப்பறை வாத்தியார்) அவர்களின் சோதிட பாடங்கள்
4.   பிருகத் ஜாதகா – வராகமிகிரர் – ஆங்கில மொழிபெயர்ப்பு திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் (1885)
5.   பிருகத் சம்கிதா – வராகமிகிரர் – ஆங்கில மொழிபெயர்ப்பு திரு V. சுப்ரமணிய சாஸ்த்திரி அவர்கள் (1946)
6.   பல தீபிகா – மந்திரேஸ்வரர் – ஆங்கில மொழிபெயர்ப்பு திரு Dr. G.S.  கபூர் அவர்கள்
7.   ஜெகனாத ஹோரா – PVR நரசிம்மராவ் அவர்கள்
8.       THE MATHEMATICS OF ASTROLOGY - DOES HOUSE DIVISION MAKE SENSE?- By Kevin Heng Ser Guan, Department of Physics, National University of Singapore
9.       மேலத்தாணியம் ஆசாத் – பிளாக் தொடங்கும் வழிமுறைகள்
10.  மற்றும் இதர வலை தளங்கள் (எதிர் தளங்களும்).


வாங்கிய புத்தகங்கள்(விலைகொடுத்து)

11.  சோதிட ஆராய்ச்சித் திரட்டு – மூன்று பாகங்கள் – திரு மு. மாதேஸ்வரன் அவர்கள்
12.  ஜாதக அலங்காரம் – கீரனூர் நடராசன் – மூலமும், உரையும் விரிவுரையும் – திருமதி சி. மகாலட்சுமி அவர்கள்
13.  உத்திர காலாமிர்தம் – மகாக்கவி காளிதாசர் – மூலமும் உரையும் – எஸ்.எம். சதாசிவம் அவர்கள்
14.  வரகமிகிரரின் பிருகத் ஜாதகச் சாரம் – மணிமேகலைப் பிரசுரம்
15.  உங்களின் ஜாதகப்படி நிகழும் திசாப் புத்தி பலன்கள் – மணிமேகலைப் பிரசுரம்
16.  ஜோதிடக் கலைக் களஞ்சியம் – எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள்
17.  மகரிஷி ஜெயமினி ஜோதிட விளக்கம் – எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள்
18.  பாவக பலன் – கீழவளவு K. சுப்ரமணியம் அவர்கள்
19.  லக்கினப்பலன் – விதியும் விதிவிலக்கும் - கீழவளவு K. சுப்ரமணியம் அவர்கள்
20.  12 லக்கினபாவ பலன்கள் – மு. மாதேஸ்வரன் அவர்கள்
21.  அஷ்டவர்க்க கணிதமும் பலன்களும் – திரு. மு. மாதேஸ்வரன் அவர்கள்
22.  ஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை – திரு மு. மாதேஸ்வரன் அவர்கள்.
23.  குடும்ப ஜோதிடம் – லிப்கோ பதிப்பகம்
24.  கடவுள் தோன்றியது எப்படி – கிராண்ட் ஆலன் – தமிழாக்கம் – திரு சி. வெள்ளயன், அவர்கள்
25.  நான் நாத்திகன் ஏன்? – தோழர் கே, பகத்சிங் அவர்கள்
26.  சோதிட ஆராய்ச்சி – தந்தை பெரியார் அவர்கள்
27.   இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல் வாதமும் – நியூ சென்சுரி புத்தகப் பதிப்பு


பாடங்கள்

28.  முதுகலை – சோதிடவியல் - பாடங்கள் – அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – சோதிட ஆசிரியர்-ஒருங்கிணைப்பாளர் – திரு K.R.  சுப்பிரமணியன் அவர்கள்


நண்பர்கள்

29.  திரு சு. குமாரவேல்
30.  திரு வீ. கனகராஜ்

    தொலைக்காட்சி

 31.   மெகா தொலைக்காட்சியில் காலம் நம் கையில் வழங்கி வரும் திரு. கோவர்த்தன் அவர்கள் 



    எதுவும் தேவையின் பொருட்டு கொஞ்சம் கற்பதுதான், ஆனால் அனைத்திலும் நிபுணத்துவம் பெறுதல் கடினம் என்பதை அனுபவம் உணர்த்தும் என்பது முற்றிலும் உண்மை. நானும் தேவையின் பொருட்டு கொஞ்சம் கற்றுக் கொண்டுவருகிறேன்.

    நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உங்களின் கருத்துகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நல்ல ஆரோக்கியமான ஆய்வினைச் செய்வோம்.

     எங்கிருந்து தொடங்குவது?



                                                      …. முன்னுரை முடிந்தது.

                           சற்றே இளைப்பாரலுடன் மீண்டும் வருகிறேன்.

Monday, October 28, 2013

முன்னுரை-6




     எனக்கு முதலில் சோதிடத்தில் கொஞ்சமும் ஆர்வம் கிடையாது. நம்பிக்கையும் கிடையாது. மகாக்கவி பாரதியார்கூட, சோதிடம் தனை இகழ்”. என்று தனது புதிய ஆத்திச்சூடியில் எழுதியிருப்பார். தந்தைப் பெரியாரைப் பின்பற்றுபவர்கள், சோதிடத்தைத் இகழ்வார்கள், கூடவே, பாரதியாரையும் இகழ்வார்கள், மகாக்கவி அந்த வரியை எழுதியிருந்தபோதும். ஆனால் தந்தை பெரியார் நிதர்சனமான ஒரு உண்மையைச் சொல்லியிருப்பார். நீ ஒரு கொள்கையில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும், அது நிரூபிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே.


“உண்மை” இதழில் படித்தபோது, பெரியாரின் பதில் ஒன்றைப் படித்தேன்.

ஒருவர்:     “கடவுள் இல்லையென்று சொல்லுகின்றீரே, திடீரென கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன சொல்வீர்?”

பெரியார்:    சட்டென்று “இருக்குதுன்னு சொல்லிட்டுப் போறேன்”.



இந்த மன நிலை எல்லோருக்கும் வேண்டும்.


     “சோதிடம் இகழ்ந்திருந்த” எனக்கு, மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சோதிடம் பற்றிய நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. இரு பிரிவு. ஒன்று சோதிடம் உண்மை, மற்றொன்று சோதிடம் பொய்.

     முதலில் பெயரில்லாத, பிறந்த தகவல்கள் இல்லாத ஒரு சாதகம் கொடுக்கப்பட்டு, இது யாருடையது எனக் கேட்க, அங்கு அமர்ந்திருந்த சோதிடர்கள், அது ஒரு அரசியல்வாதியின் சாதகம் என கணித்துச் சொன்னார்கள் (பெயர் வேண்டாம்). அதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில், அது பெரும்பாலன சோதிடர்கள் (தேர்தலின்போது) பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கும் சாதகம்.

    பின்னர், சோதிடத்தை மறுக்கும் பிரிவிலிருந்து ஒரு பெண் ஒரு சாதகத்தைக் கொடுத்து ஆராயச் சொன்னார். ‘ஷெல்வி’’ (என்று நினைக்கிறேன்) என்ற அந்த சோதிடர், அந்த சாதகத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு, இந்த சாதகக்காரர், திருமணத்தில் தோற்று போயிருப்பார். விவாகரத்து வரை போயிருக்கும், என்று சொன்னார். முதலில் மறுத்த அந்தப் பெண், பின்னர், ஆம் தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும், அது தன்னுடைய சாதகம்தான் என்றும் கூறினார்.

    நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருப்பவர், திரு கோபிநாத். இதில் ஏதும் பொய் பித்தலாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் எப்படி அவ்வளவு துல்லியமாக அந்த சோதிடரால், முன்பின் பார்த்திராத ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வினைக் கூறமுடிந்தது?

    அந்த நிகழ்வுதான், என்னை சோதிட ஆய்வின் பக்கம் திருப்பியது.


…. முன்னுரை தொடரும்

Sunday, October 27, 2013

முன்னுரை-5




சோதிடம் பற்றி அறிந்துகொள்ள நிறைய தகவல்களைத் திரட்டியபோது, ஒரு அரிய புதையல் வலைதளத்தில் கிடைக்கப் பெற்றேன். பிருகத் ஜாதகா எனும் வடமொழி நூலை, ஆங்கிலத்தில் திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் மொழியாக்கம் செய்திருந்தார். புதையல் எனக் கூறக் காரணம், அது 1885-ம் ஆண்டு மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. ஏறக்குறைய 130 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலத்தில் அற்புதமான மொழியாக்கம் செய்திருந்தார். அதைத் தமிழில் தற்போது மொழிபெயர்த்து வருகிறேன். அந்த நூலில் தமது முன்னுரையில் அவர் எழுதியிருப்பதில் சிறு பகுதியைத் தமிழில் தருகிறேன். [தமிழில் அப்படியே வரியாக்கம் செய்திருக்கிறேன் - இன்னமும் திருத்தம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது]




திரு சிதம்பரம் அய்யர் அவர்களுக்கு நன்றி. 

                                              
                                         ……….முன்னுரை இன்னமும் தொடரும்.

Saturday, October 26, 2013

முன்னுரை-4




     ஒரு அறிவியல் தேற்றத்தை (theory) மதத்தோடு தொடர்புபடுத்தி நிரூபிக்க முயலும்போது, மற்ற மதத்தினர் அதனை ஏற்க மறுக்கின்றனர். அதனை எவ்வாறு இழிவுபடுத்தி நிராகரிக்கலாம் என்பதில் முழு முனைப்புக் காட்டுகின்றனர். நாத்திகவாதிகளோ தோலுரித்து தொங்கவிடுவதற்கு அதில் உள்ள பொருந்தா விதிகளைத் தோண்டி எடுத்து, தூற்றுகின்றனர். சரி பொருந்தா விதிகளுக்கு விளக்கம் சொல்லுங்கள் என்று கேட்டால், அது விளக்க முடியாத, விளங்க முடியாத கடவுளின் தத்துவம் என்று அதனைத் தொடர்பவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

     உலகில் எல்லோருமே ஆத்திகர்கள் தான் – தங்களின் நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்த மறுக்கும், அல்லது மறுபரிசீலனைச் செய்ய மறுக்கும், அனைவருமே ஆத்திகர்கள் தான். ஒருவர் “அ” எனும் கடவுள் நம்பிக்கை கொண்டவராக இருப்பார். இன்னொருவர் ‘இ’ எனும் கடவுள் நம்பிக்கையைக் கொண்டவராக இருப்பார். பிரிதொருவர் ‘உ’ எனும் கடவுள் நம்பிக்கையைக் கொண்டவராக இருப்பார். நான்காமவர், கடவுளே இல்லை எனும் நம்பிக்கையைக் கொண்டவராக இருப்பார். ஆகவே அவரவர் தத்தமது நம்பிக்கையில் விடாப்பிடியாக இருப்பதால், நம்பிக்கை எனும் அளவீட்டில் அனைவருமே ஆத்திகர்கள் தான்.

     உலகில் எல்லோருமே நாத்திகர்கள் தான் – பிறரின் நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்த நினைக்கும், அல்லது  அந்த நம்பிக்கையை மறுக்கும், அனைவருமே நாத்திகர்கள் தான்.  “அ” எனும் கடவுள் நம்பிக்கை கொண்ட ஒருவர் - ‘இ’. அல்லது “உ” எனும் கடவுளே இல்லை எனச் சொல்லுவார். அவரைப்போலவே, மற்றவர்கள் தத்தமது கடவுளைத் தவிர மற்றக் கடவுள்கள் இல்லை என்பர்.. நான்காமவர், கடவுளே இல்லை என்பவர். ஆகவே அவரவர் பிறரது நம்பிக்கையை நம்பாமல் இருப்பதால், நம்பிக்கை எனும் அளவீட்டில் அனைவருமே நாத்திகர்கள் தான்.

    ஆனால், ஆத்திகரானாலும், நாத்திகரானலும், அனைவருமே இந்த பிரபஞ்சம் உள்ளதை நம்புகிறார்கள். சூரியனை நம்புகிறார்கள், மழையை நம்புகிறார்கள், ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ளவர் பேசுவது, அருவமாய், காற்றில் மிதந்து வந்து, தன் அலைப்பேசியில் ஒலிப்பதை நம்புகிறார்கள். ஏனெனில் இவை பொதுவில் வைக்கப்பட்டுள்ளன.

   ஆனால், பொதுவில் வைக்கப்பட வேண்டிய ஒரு பொருள், மதம் சார்ந்த பொருளாக ஆக்கப் பட்டுள்ளதால், அதை நம்புபவர்களை மயக்கவும், வியக்கவும், தவிக்கவும் வைக்கும் பொருளாக ஆக்கப் பட்டுள்ளதால், அது ஒரு குழுவிற்கு உரிய பொருளாக இருந்துவருகிறது. ஆனால், வியக்க வைக்கும் உண்மை என்னவெனில், அதனை நம்பாதவர்களும் அதன் தொடர்பில் இருப்பதுதான்.

அது, சோதிடம்.

முன்னுரை தொடரும்…………

Friday, October 25, 2013

முன்னுரை-3



     மனித இனம் தோன்றியது சுமார் பத்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன்புதான் என அறிவியல் சொன்னாலும், [பதினான்கு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதனின் தாடை எலும்புகள் இந்தியாவில் சிவாலிக் குன்றுகளிலும் வடமேற்கு கென்யா நாட்டிலும் கண்டெடுக்கப்பட்டுள்ளன – தமிழ் விக்கி] மதங்களின் கருத்தோ வேறுவிதமாக இருந்தன, இருக்கின்றன.

     படைப்பிற்காக ஒரு கடவுள் இருப்பதாகவும், அவரே ஒவ்வொருவரையும் படைப்பதாகவும், அவர்களது தலைவிதியை நிர்ணயிப்பதாகவும் –ஒரு மதம் கூறுகிறது.

    ஒரே ஒரு ஆணையும், பெண்ணையும் மட்டும் படைத்து இந்த உலகில் உலாவ விட்டதாகவும், அவர்களின் மூலம், இன்று அனைத்து மனித இனமும் தோன்றியதாக – ஒரு மதம் கூறுகிறது

     உருவமே இல்லாத ஒரு கடவுள், உருவம் உள்ள ஆணையும் பெண்ணையும் படைத்ததாக – ஒரு மதம் கூறுகிறது.

     ஆனால் அறிவியலோ, அமினோ அமிலம், ஒரு செல் உயிரினம், பல் செல் உயிரினம் என பரினாம வளர்ச்சி அடைந்து, மனித இனம் உண்டாகியதாகக் கூறுகிறது. அந்த அறிவியலை உயிரியல் மேதைகள் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த மேதைகள் எல்லா மதத்திலும் உள்ளனர்.

    ஆனால், மதம் சார்ந்த கோட்பாடு என்பதாலேயே, இதைக் கண்டிப்பாக மறுக்க வேண்டும் என்று மதவாதிகள் எதிர்க்கிறார்கள். நாத்திகவாதிகளோ, மதங்களை நையாண்டி செய்து அறிவியற் கருத்துக்களை பரப்ப முயற்சிக்க, மத நம்பிக்கையாளர்கள் அதை ஏற்க மறுப்பதால், கருத்து முழுமையாக சென்று சேராமல், முடங்கி விடுகிறது.

    கடவுள் யார் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மனிதர்களால் தான் மதம் உருவாகியது என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மதமோ அல்லது மார்க்கமோ அது உண்டா அல்லது இல்லையா; சரியா அல்லது தவறா என்று இங்கு விவாதம் செய்ய வரவில்லை. ஆனால் அறிவியல் கருத்துக்களை அல்லது அறிவியல் தேற்றங்களை, மதங்களோடு தொடர்பு படுத்தக் கூடாது என்பது தான் முக்கியம்.

தொடரும்….

Thursday, October 24, 2013

முன்னுரை-2



‘    
    அந்த அனுபவமே நான் தான்’ என்று கடவுள் சொல்வதாக கவியரசு கண்ணதாசன் சொல்வார். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அனுபவம் என்பது நாம் உணர்ந்ததும், பிறர் உணர்ந்ததும், பொதுவாக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதுமான, அறிவியல் எனக் கொள்ளலாம்.

   ஆத்திகம் ஆகட்டும் அல்லது நாத்திகம் ஆகட்டும், அவை கொள்கைகளின் அடிப்படையில் அமைந்த கோட்டைகள். அவை கற்பனைக் கொள்கையாகவும் இருக்கலாம். நமக்கு புரியவில்லை என்பதற்காக மறுக்கவும் கூடாது, பிறர்க்கு புரியவில்லை என்பதற்காக திணிக்கவும் கூடாது. உங்கள் கருத்துக்களை ஆதாரங்களுடன் முன் வையுங்கள், ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பம். ஆனால் உங்கள் கருத்து உடைபடும்போது, எதிராளியின் கருத்தை ஏற்றுக் கொள்ளும் மனம் வேண்டும்.

   உலகில் எல்லாக் கருத்துக்களும், அறிவியல் கருத்துக்கள் எனத் தீர்மானிக்கப்பட்டவை உட்பட, மாறுதலுக்கு உட்பட்டே வந்துள்ளன. ஏற்புடைய கருத்துக்களை ஏற்றுக் கொள்வதில் உலகம் எப்போதும் தயங்கியதில்லை. தற்போதைய ஹிக்போஸான் துகள் வரை. 

தொடரும்….

Wednesday, October 23, 2013

முன்னுரை-1


முன்னுரை-1

     வருகை புரியும் அனைவருக்கும் என் முதல் வணக்கம். இந்த வலைப் பூ தொடங்கியதற்கு ஏதோ ஒரு வகையில் தூண்டுகோலாய் இருக்கும் அத்தனை வலைப் பூ பதிவாளர்களுக்கும் நன்றி.

    அறிவு அற்றம் காக்கும் கருவி என்றார் திருவள்ளுவர். ஆய்ந்து தெளிதலை அறிவு என்று சொல்லலாம். அறிவுசார் இயலை அறிவியல் எனலாம், ஆனால், இன்று அறிவியல் என்பது தொலை நோக்கியும், கொஞ்சம் வேதிப் பொருட்களும், உயிரிப் பொருட்களும் கலந்த கலவையினை ஆராய்தல் என்ற நிலையிலேயே உள்ளது. மற்றவை எல்லாம் கலை, நுண்கலை என்ற பகுப்பிற்குள் அடங்கி விட்டது. கணிதம் கலையும் இல்லாமல் அறிவியலும் இல்லாமல் வவ்வால் போன்று உள்ளது.

     அண்டத்தின் உருவாக்கம், கொள்கை சார்ந்த தேற்றம் தான். அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து ஒரு பொருளாக கையில் அள்ளித் தர முடியாது. இயற்பியல் மற்றும் கணிதக் கோட்பாடுகளின் வகைகளுக்கு உட்பட்டு, காலத்தை தர முயன்று கொண்டிருக்கிறார்கள். அதிலும் முரண்பாடுகள் இருந்தாலும், அதிக வாக்குகள் பெற்ற பெரு வெடிப்புக் கொள்கை முன்னிலையில் இருந்து கொண்டிருக்கிறது.  அது அறிவியல் என்ற வடிவிற்குள் உள்ளது.

    இதே போன்றுதான், அகழ்வுகள், படிவுகள், வடிவங்கள் மற்றும் கணிதக் கோட்பாடுகளின் வகைகளுக்கு உட்பட்டு, திருவள்ளுவர் காலமும், சோழர்கள் காலமும், சமணர்கள் காலமும் தீர்மானிக்கப் பட்டு வந்துள்ளன. அதிக உடன்பாடுடைய கருத்துக்கள், அவர்களின் காலமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை அறிவியல் என்று கொள்ளாமல், வரலாறு என்ற ‘கலை’ க்குள் கொண்டுவருகிறார்கள்.


தொடரும்….