Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, January 16, 2014

பிருகத் ஜாதகா – தமிழில்-1

பிருகத் ஜாதகா 

     வணக்கம். நான் நிமித்திகன் பதிவிடத் தொடங்கியபோது, வராகமிகிரரின் பிருகத் ஜாதகா எனும் நூலைப் பற்றி முன்னுரை-5-ல் குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தமிழில் மொழிபெயர்ப்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். நிமித்திகனில் முதன்மைப் பதிவு தற்போது பதிவிடப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், பிருகத் ஜாதகாவின் தமிழ் பெயர்ப்பையும் – கிளையாகப் பதிவிடலாம் என்று நினைக்கிறேன். பிருகத் ஜாதகாவின் தமிழ் பெயர்ப்பு நூல்கள் கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை. மணிமேகலைப் பிரசுரம் வராகமிகரரின் பிருகத் ஜாதகச் சாரம் என சுருக்கப் பதிப்பை வெளியிட்டுள்ளது தெரியும். மற்ற பதிப்புகள் பற்றி தெரியவில்லை. திரு. சிதம்பரம் அய்யர் அவர்கள் வடமொழி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ததுடன், ஆங்காங்கே, தமது கருத்துக்களையும் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.

    அந்த நூலை நான் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் படித்ததைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது, அது இன்னமும் கொஞ்சம் ஆழமாக என் மனதில் பதியும். அதே சமயம், அதை பிறர் படிக்கக் கொடுக்கும்போது, தொட்டனைத்தூறும் மணற்கேணியாக எனக்கு இருப்பதோடு, இதைப் படிக்க விரும்புவர்களுக்கு பயன் உள்ளதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

     கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், “ மாடு மேய்த்தது போலவும் ஆயிற்று .. பொண்ணு பார்த்தது போலவும் ஆயிற்று” என்று. அதே நிலைதான் இதிலும். நான் படித்தது போலவும் ஆயிற்று, பிறருக்கு படிக்கக் கொடுத்தது போலவும் ஆயிற்று.

     நான், பள்ளி இறுதி வகுப்புவரை தமிழ் வழிக்கல்வி பயின்றவன். ஆங்கிலத்தில் எனது அறிவு என்பது “As I am suffering from fever, I go to my sister marriage” என விடுப்புக் கடிதம் எழுதும் அளவுதான். அதன்பிறகு தட்டுத்தடுமாறி ஆங்கில வழியில்  மேற்கல்வி பயின்றவன். எனவே முடிந்தவரை பிழையில்லாமல் மொழிபெயர்க்க முனைந்திருக்கிறேன். பொருள் குற்றம் ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இந்த மொழிபெயர்ப்பு முடிந்தவரை எளிமையான நேரடி பெயர்ப்பாக இருக்கும்.

     இந்த மொழிபெயர்ப்பை யாரும் எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், உங்களதுபோல் காட்டிக்கொள்ள முயலாதீர்கள். வெட்டி ஒட்டுதல் செய்யக்கூடாது என்பதற்காக இதைப் படப் பதிவாக வெளியிடுகிறேன்.

     இது நிமித்திகனின் கிளைப் பதிவு என்பதால் – பிருகத் ஜாதகா – தமிழில் என பதிவிடப்படும். வரிசை எண்கள் உண்டு.

[சோதிட ஆய்வு தொடர்பான பதிவுகள் நிமித்திகனில் முதன்மைப் பதிவுகளாக எப்போதும் இருக்கும்]


வராக மிகிரர்:

    இந்தக் கணிதக் குறியீடுகள் உங்களுக்குப் புரிகிறதா? 



     ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இந்தியர் இந்த சமன்பாட்டினைக் கொடுத்திருக்கிறார். அவர்தான் வராக மிகிரர். முக்கோணவியல் கணிதச் சமன்பாடுகளில் சில தான் இது. சைன், காஸ், கொசக், டான் என்பன இன்றைய பதங்களாக இருக்கலாம். ஆனால் அதன் மூலத்தை அன்றே அறிந்து கணித்து சொன்னவர் வராக மிகிரர். இவர், ஆர்யபட்டர்-2 க்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர். ஐன்ஸ்டினுக்கு முன்பே புவியீர்ப்பு விசை பற்றி குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆர்யபட்டர்-1 வகுத்துச் சென்ற பல கணித சூத்திரங்களை துல்லியமாக செதுக்கியவர். வானியல் அறிவியலில் சிறந்து விளங்கிய இவர், வானியல் கோட்பாடுகளை சோதிடவியலோடு தொடர்புபடுத்தி மிகச் சிறந்த சோதிட ஆய்வாளர் ஆகவும் இருந்துள்ளார். இவரது காலம் கி.பி. 505 – 587 என அறியப்படுகிறது. இவர் உஜ்ஜயினியில் வசித்தவர். 

    இவரது முதன்மை நூல்களில் சில:
  • 1.   பஞ்ச சித்தாந்தம் (வானியல் கணிதம்)
  • 2.   பிருகத் ஜாதகா (சோதிடம்)
  • 3.   லகு ஜாதகா (சோதிடம்)
  • 4.   பிருகத் சம்கிதா (கால நிகழ்வுகள்)

    இவரைப்பற்றிமட்டுமே, இருபது பதிவுகள் போடலாம். அவ்வளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றன.


திரு N. சிதம்பரம் அய்யர்:

    அதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. மதுரை இவரது ஊர். சென்னை அடையாரில் உள்ள தியாசோபிகல் சொசைட்டியில் உறுப்பினராக இருந்துள்ளார். திருவடி ஜோதிஸ்தந்த்ர  சபாவை தொடங்கியவர். வராக மிகரரின் பிருகத் ஜாதகா மற்றும் பிருகத் சம்கிதா ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததுடன், தேவைப்படும் இடங்களில் தமது விளக்கங்களையும் வழங்கியுள்ளார். ஆங்கில நடை சில இடங்களில் மிகக் கடினமாக இருப்பதைப் பார்க்கும்போது, இவரது ஆங்கிலப் புலமை வியக்க வைக்கிறது. அதாவது ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஆங்கிலக் கல்வி பயின்று அதை கைவரப்பெற்றுள்ளார். இந்நூலின் முதற்பதிப்பு 1885-ல் வெளிவந்துள்ளது. இரண்டாம் பதிப்ப் 1905-ல் வெளிவந்துள்ளது. தமிழில் மொழிபெயர்த்தாரா என்று தெரியவில்லை.  தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

    இந்த பதிப்பு எனக்கு கூகுளில் டிஜிடல் லைப்ரரியில் கிடைத்தது. ஆனால் தற்போது பிருகத் ஜாதகாவின் ஆங்கில பதிப்பினை சாகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள் உஷா – ஷஷி, மேம்படுத்தியது ஜி.கே. கோயல் என்று பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கில மொழிபெயர்ப்பானது, அப்படியே வரிக்கு வரி, எழுத்திற்கு எழுத்து திரு. சிதம்பரம் அய்யரின் மொழிபெயர்ப்பை படி எடுக்கப்பட்டிருக்கிறது. அதைக் கீழே தந்துள்ளேன். இது தகவல் திருட்டா என்று தெரியவில்லை. ஆனால் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறது.

              இது ORIGINAL                                இது அப்படியே COPY





இனி, பிருகத் ஜாதகா .. தமிழில் தொடரும்.



No comments: