Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, January 28, 2015

இராசிகளில் கோள்களின் (நகர்வு) வக்கிரம் (2)




            வேறு ஏதேனும் வலைப்பதிவில் வக்கிரம் பற்றிய விரிவு இருப்பின் தெரியப்படுத்துங்கள் என்று எழுதியிருந்தேன். இன்னும் சற்றுக் கூடுதலான தகவல்களுடன் எழுதலாம் என்றுதான் அவ்வாறு கேட்டிருந்தேன். எதுவும் வரவில்லை. முடிந்தவரையில் கோள்களின் வக்கிரத்தை விளக்க முற்படுகிறேன்.

            காட்சிப்பிழை என்கிற வார்த்தை இப்பதிவுகளில் அடிக்கடி பயன்படுத்தப் படுகிறதல்லவா? அந்தக் காட்சிப் பிழைதான், வக்கிரம் எனும் சொல்லிற்கும் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. சூரியக் குடும்பக் கோள்களை இருபிரிவாகப் பிரிக்கலாம். உள்வட்டக் கோள்கள்வெளிவட்டக் கோள்கள் என இருவகைப்படுத்தலாம். சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள கோள்களான, புதனும், வெள்ளியும் உள்வட்டக் கோள்கள் என்றும், பூமிக்கு வெளியே உள்ள கோள்களான செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்றும் வெளிவட்டக் கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.

            பூமியானது 365.26 நாட்களில் சூரியனைச் சுற்றிவரும் வேளையில், சூரியனுக்கு மிக அருகில் உள்ள புதன் 88 நாட்களில் சூரியனைச் சுற்றிவந்து விடுகிறது. அதேபோல், வெள்ளிக் கோளும் 225 நாட்களில் சுற்றிவந்து விடுகிறது. ஆனால் வெளிவட்டக் கோள்கள் சூரியனைச் சுற்றிவர, பூமியின் நாட்களைவிட அதிகம் எடுத்துக் கொள்கின்றன. செவ்வாய் – 687 நாட்களும், வியாழன் 11.86 ஆண்டுகளும், சனி 29.45 ஆண்டுகளும் எடுத்துக் கொள்கின்றன.

            இந்தக் கோள்களின் நகர்வை நாம் பூமியிலிருந்துதான் காண்கிறோம். சூரியன் பூமியைச் சுற்றுவதுபோல் (புவிமையக் கொள்கைகாட்சிப் பிழை), பிறக் கோள்களும் பூமியைச் சுற்றுவதுபோல்தான் காண்கிறோம். ஆனால் உண்மையில் அனைத்து கோள்களும் சூரியனையே சுற்றி வருகின்றன. ஆனாலும், நாம் பூமியிலிருந்து பார்ப்பதால் அவற்றின் சுற்று முறையில், காட்சிப்பிழை ஏற்படுகிறது. அதாவது சில நேரங்களில் சில கோள்கள் பின்னோக்கி நகர்வது போல் தோற்றம் ஏற்படுகிறது. அது சூரியன்-பூமி சுற்றுப்பாதையின் கோண அளவில் ஏற்படும் காட்சியே ஆகும்.

      எடுத்துக்காட்டாகபுதனின் சுழற்சியை எடுத்துக் கொள்வோம். புதனானது, சூரியனை 88 நாட்களில் சுற்றி வருகிறது. மறுமொழியில் சொல்வதென்றால், பூமி ஒருமுறை சுற்றி வருவதற்குள், புதன் ஏறக்குறைய நான்கு முறை சுற்றி வந்துவிடுகிறது. அவ்வாறெனில், இராசி மண்டலத்தை (இராசி சக்கரத்தை) ஓர் ஆண்டிற்குள் நான்கு முறை சுற்றி வரவேண்டும். ஆனால், சூரியன் இராசி சக்கரத்தை ஆண்டிற்கு ஒரு முறை சுற்றிவரும் நிலையில், எப்போதும் அதன் அருகிலேயே (அதிகபட்சம் ஒரு கட்ட நகர்வு) புதன் நகர்ந்து வருகிறது. அதன்படி புதனும் ஏறக்குறைய இராசி மண்டலத்தைக் கடக்க ஓர் ஆண்டுகாலமே எடுத்துக் கொள்வதுபோல் உள்ளது.


கோள்களின் வக்கிரம் தொடரும்….

No comments: