Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, January 30, 2017

பிருகத் ஜாதகா – தமிழில்-28


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஒன்று (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[இராசி மண்டலம்]


7.         ஐந்து, ஐந்து, எட்டு, ஏழு மற்றும் ஐந்து பாகங்கள் (பாகைகள்) முறையே செவ்வாய், சனி, வியாழன், புதன் மற்றும் வெள்ளி என ஒற்றைப்படை இராசிகளில் வரும். இரட்டை இராசிகளில் இவை தலைகீழாகும். கடகம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகியவற்றின் (கடைசி நவாம்சம்) இறுதி என்பவை ரிக்ஷ சந்திகள் ஆகும்.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

            இந்த பத்தியானது திரிம்சாம்சம் மற்றும் அதன் அதிபதிகளைக் குறிக்கிறது. ஏற்கனவே பார்த்தவாறு, திரிம்சாம்சம் என்பது ஒரு இராசியை முப்பது பாகங்களாக, ஒவ்வொன்றும் ஒரு பாகை என பிரிக்கப்பட்டதாகும். ஒற்றைப்படை இராசிகள் என்பனமேசம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு மற்றும் கும்பம் ஆகும். இரட்டைப்படை இராசிகள் ரிசபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் மற்றும் மீனம் ஆகும்.

            ஒற்றைப்படை இராசிகளில், திரிசாம்சத்தின் முதல் ஐந்து பாகைகள் செவ்வாய், அடுத்த ஐந்து சனி, அடுத்த எட்டு வியாழன், அடுத்த ஏழு என்பது புதன்; அதன் கடைசி ஐந்து என்பது வெள்ளி ஆகும். இரட்டைப்படை இராசியில், முதல் ஐந்தானது வெள்ளி, அடுத்த ஏழு புதன், அடுத்த எட்டு வியாழன், அடுத்த ஐந்து என்பது சனி; கடைசி ஐந்து என்பது செவ்வாய். பெண்களின் சாதகம் எனும் பகுதியில் ஆசிரியர் திரிம்சாம்சம் பிரிவுகளைப் பயன்படுத்துகிறார்.



8.         கிரியா(Kriya), தவுரி(Tavuri), ஜிதுமா(Jituma), குளிரா(Kulira), லேயா(Leya), பதோனா(Pathona), ஜூகா(Juka), கௌர்ப்பி(Kourpi), தௌக்ஷிகா(Toukshika), அகோகேரா(Akokera), ஹிரித்ரோகா(Hridroga), அந்துயுபா(Antyabha) என்பன இராசிசக்கரத்தில் உள்ள இராசிகளின் இதர பெயர்கள் ஆகும்.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

            குளிரா, அந்துயுபா என்பனவற்றைத் தவிர இதர பெயர்கள் அனைத்தும் கிரேக்கப் பெயர்கள் ஆகும்இதன்படி, இந்திய அறிஞர்களுக்கும், கிரேக்க அறிஞர்களுக்கும் இடையே ஆச்சரியப்படத்தக்க வகையில் உள்ள தொடர்பு தெரியவருகிறது.



9.         ஒரு கோள் வர்க்கத்தில் இருக்கிறது என்றால், அது திரேக்காணம், ஹோரை, நவாம்சம், திரிம்சாம்சம், துவதசாம்சம் மற்றும் ஷேத்திரத்தில் இருக்கிறது என்று பொருள். ஹோரை என்பதன் பதமானது, இராசி சக்கரத்தில், உதய ராசி மற்றும் ஒரு இராசியின் பாதி என்பதாகும்.


குறிப்புகள் (சிதம்பரம் அய்யர்)

            இந்தப் பதம் (பத்தி 6-ல்) ஏற்கனவே விளக்கப்பட்டுவிட்டது.
ஷேத்திரம் என்றால், வீடு அல்லது இராசி ஆகும். ஹோரைப் பிரிவின் பெயர் மற்றும் அதிபதிகள் முறையே பத்தி 11-ல் கூறியவாறு.


குறிப்புகள் (நிமித்திகன்)

            வராகமிகிரர் இராசிகளின் அடிப்படை விதிகளையும் வரையறைகளையும் சமஸ்கிருதத்தில் செய்யுளாகப் படைத்துள்ளார். சிதம்பரம் அய்யர் அவர்கள் அதனை ஆங்கில மொழியாக்கம் செய்துள்ளார் என்பதுடன், மிகச்சிறந்த உரை ஆசிரியராகவே அதனை மொழிபெயர்த்துள்ளார். சிதம்பரம் அவர்களின் குறிப்புரைகள் இல்லையெனில் நம்மால் இதனை எளிதில் புரிந்துகொள்ள முடியாது என்பது நிச்சயம்.

            எடுத்துக்காட்டாக, பத்தி 7 நாம் படிக்க முயலும்போது, குழப்பமாக இருக்கிறது. ஆனால் சிதம்பரம் அவர்களின் விளக்கத்திற்குப் பிறகுதான் அது, திரிம்சாம் பற்றியது என்பது புரியவருகிறது.

            உரை ஆசிரியர் சொல்வதுபோல் பல்வேறு பதங்கள், கிரேக்க பதங்களாக இருப்பதைப் பார்க்கும்போது, சோதிடம் என்பது அன்றையக் காலக் கட்டத்திலேயே இந்தியாவில் மட்டுமின்றி, உலகெங்கும் பரவி இருந்திருக்கிறது என்பதுடன், கருத்துப் பரிமாற்றங்களும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான் கிரேக்க சொற்கள் நமது இந்திய சோதிடத்திலும் புழக்கத்தில் இருந்திருக்கின்றன.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15




No comments: