Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, February 22, 2015

இராசிகளில் உடல் ஒதுக்கீடு - கால புருசத் தத்துவம்



            இனி அடுத்தப் பிரிவான கால மகன் தேற்றம் (கால புருசத் தத்துவம்) என்பதில் இராசிகள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.

            அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பது ஒரு பொதுவான சொற்றொடர். இந்த அண்டத்தின் மீச்சிறு வடிவம் (miniature) நமது உடல் என்பது இதன் பொருள். இந்த அண்டம் ஐம்பூதங்களால் ஆனது எனில், இந்த உடலும் ஐம்பூதங்களால் ஆனது என்பது ஆன்மீகக் கருத்துமட்டுமல்ல, அறிவியல் கருத்தும் என்று படித்திருக்கிறேன்.

            எனவே சோதிட அறிஞர்கள் அண்டத்தின் தத்துவத்தை இராசிச் சக்கரத்தில் பிரித்து வைத்தது போல், பிண்டத்தின் தத்துவத்தையும் இராசிச் சக்கரத்தில் பிரித்து வைத்துள்ளனர். அதாவது நமது உடலின் பாகங்களை பன்னிரெண்டு இராசிகளுக்கும் பகிர்ந்து அளித்துள்ளனர்.

            இதற்கு ஏதேனும் அறிவியல் அடிப்படை உள்ளதா என்பது தெளிவறத் தெரியாத நிலையே உள்ளது. இருப்பினும், இதற்கு கால புருசத் தத்துவம் எனும் வகையினைப் பயன்படுத்தியுள்ளனர்.

            இராசிச் சக்கரமானது 360 பாகைகள் கொண்டது என்பது நாம் அறிவோம். அதனை 12 சம பிரிவுகளாகப் பிரித்துள்ளதையும் அறிவோம். சக்கரம் என்பது ஆரம்பமும் முடிவும் இல்லா நிலைக் கொண்டது. ஆனால் கணித வகைக்காக, அதன் ஆரம்பப் புள்ளி  அதாவது 0 பாகை என்பது மேசத்தில் ஆரம்பித்து, 360 பாகை என்பது மீனத்தில் முடிவடைகிறது. ஒவ்வொரு இராசியும் 30 பாகைகள் எனும் சம அளவில் உள்ளன.

            பிண்டம் என்பது நமது உடல் என்பதால், நமது உடலின், உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து பாகங்களையும், பன்னிரெண்டு இராசிகளுக்கும் பிரித்து அளித்துள்ளனர். அதாவது, தொடக்கம் என்பது மேசத்தில் ஆரம்பித்து, முடிவு என்பது மீனத்தில் முடிவடைகிறது. அதுபோல், தொடக்கம் என்பது உச்சியில் ஆரம்பித்து, முடிவு என்பது பாதத்தில் முடிவடைகிறது. கீழே உள்ள படத்தினைப் பாருங்கள்.




            இதில், ஒரு மனிதனின் உடலானது, அவனது தலை முதல் கால் வரையில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. இது அறிவியல் அல்லது கணித முறைமைகளில் வகைப்படுத்தப்படவில்லை என்றாலும், தர்க்க முறையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

            தலை, முகம், மார்பு, இதயம் என வரிசைப்படுத்தியவர்கள், சிந்தனைக்கு மூலக் காரணமான, மூளையைக் கணக்கில் கொள்ளாததில் வியப்புத் தெரிகிறது. அதாவது, இந்த வகைப்படுத்துதலில், மூளை என்பது இல்லை.
           
            இந்த வகைப்படுத்துதல் என்பது, சோதிடம் தோன்றியக் காலங்களில் வகைப்படுத்தப்பட்டது. அதாவது இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையக் காலம். அன்றையக் காலக் கட்டத்தில், மூளை என்பதோ அல்லது அதன் மிக முக்கியத்துவமோ அறிந்திருக்கவில்லை. மனம் என்பது இதயம் சார்ந்த செயல்பாடு என்றே வெகுகாலம் வரையில் நம்பப்பட்டு வந்தது. சிந்தனை என்பது இதயம் சார்ந்தது என்றே நினைத்திருந்த காலம் அது. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குறளில் கூட, ‘நெஞ்சம்என்ற சொல்தான் பயன்பாட்டில் இருந்துள்ளது. மனம் என்ற சொல்லும் நெஞ்சம் என்பதற்கு ஈடான சொல்லாகவே பயன்பாட்டில் உள்ளது. தலை என்பது பயன்பட்டிருப்பினும் மூளை என்பது பயன்படுத்தப்படவில்லை. இது திருக்குறளின் தவறல்ல. ஏனெனில், மூளை என்பதன் முக்கியத்துவம் தெரியாத காலம் அது. ஏறக்குறைய பதினைந்தாம் நூற்றாண்டில்தான் மூளையின் பயன்பாடு தெரியவந்தது. எனவே தான், இந்த வகைப்படுத்துதலில், மூளை இடம்பெறவில்லை. அதேபோல், உள் உறுப்புகளில் இதயம் மட்டுமே முதன்மைப் படுத்தப்பட்டுள்ளது. அதற்கு, மேலே சொன்ன விளக்கங்களே காரணம்.

     எனவே, வெளி உறுப்புகளை வகைப்படுத்தியவர்கள், மனமே அனைத்திற்கும் காரணம் என்பதால் உள் உறுப்பான இதயத்தையும் அதனுடன் இணைத்துள்ளனர். அதே நேரத்தில், வெளி உறுப்பான கைகளை வகைப்படுத்தவில்லை. அது ஏன் என்றும் தெரியவில்லை.

            ஆக, மனிதனின் உடல் உறுப்புகளையும், இராசிகளுக்கு பகிர்ந்தளித்துள்ளனர். அதாவது, ஆரம்ப புள்ளிக்கு தலையில் தொடங்கி, முடிவுப் புள்ளிக்கு பாதத்தில் முடித்துள்ளனர். அதாவது, மேசத்தில் தலையும், தொடர்ந்து பிற உறுப்புகள் பிற இராசிகள் எனவும், இறுதியாக மீனத்தில் பாதத்தினையும் பிரித்தளித்துள்ளனர். இவ்வாறு பிரித்ததற்கு அறிவியல் காரணங்கள் இல்லையென்றாலும், தர்க்கமுறையில் வரிசைப்படுத்தியுள்ளனர். இதுவே கால புருசத் தத்துவம் எனப்படுகிறது.


மீனம்
பாதம்
மேசம்
தலை
ரிசபம்
முகம்
மிதுனம்
மார்பு
கும்பம்
கணுக்கால்
இராசிகளில் உடல் ஒதுக்கீடு
கால புருசத் தத்துவம்
கடகம்
இதயம்
மகரம்
முழங்கால்
சிம்மம்
வயிறு
தனுசு
தொடை
விருச்சிகம்
பாலின உறுப்புகள்
துலாம்
அடிவயிறு
கன்னி
இடுப்பு



            மேலும் பிரிவுகளை பின்வரும் பதிவுகளில் தொடர்வோம்.



No comments: