Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, March 22, 2015

பிருகத் ஜாதகா – தமிழில்-39 – கோள்கள் – நட்பும் எதிரியும் - கணிதமுறை


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  இரண்டு (தொடர்ச்சி)

வரையறையும்  அடிப்படைக் கொள்கைகளும்
[கோள்கள்]


15. சிலரின் கருத்துப்படி, வியாழன் சூரியனின் நண்பன்; வியாழனும் புதனும் சந்திரனின் நண்பர்கள்; சுக்கிரனும் புதனும் செவ்வாயின் நண்பர்கள். சந்திரன், செவ்வாய், வியாழன், சனி ஆகியவை புதனின் நண்பர்கள்; செவ்வாய், புதன் வியாழன், சனி ஆகியவை சுக்கிரனின் நண்பர்கள்; புதன், வியாழன், சுக்கிரன் ஆகியவை சனியின் நண்பர்கள்(1); ஆனால் சத்யாச்சாரியரின் கருத்துப்படி, ஒரு கோளின் நண்பர்கள் என்பவர்கள் அதன் மூலத்திரிகோண வீட்டிலிருந்து, 2வது, 12வது, 5வது, 9வது, 8வது, 4வது ஆகிய வீடுகளின் அதிபதிகளும், அதேபோல், மேற்படி வீடுகளில் உச்சமடைந்த கோள்களும் ஆவர், இருப்பினும் அவை மற்ற வீடுகளில் அந்த கோளிற்கு முரண்பாடுடைய கோள்களாக இருக்கக் கூடாது(2).


குறிப்புகள் (சிதம்பரம்)

(1)  மற்ற கோள்கள் அதன் எதிரிகள்

(2)  அதனை மேலும் விளக்குவது என்றால்: மற்ற வீடுகளின் அதிபதிகள் அந்த கோளிற்கு எதிரிகள், அதே நேரத்தில் அவை மேற்சொன்ன ஏழு வீடுகளின் அதிபதிகளுடன் முரண்பாட்டுடன் இருக்கக் கூடாது. இவை இரண்டினையும் இணைத்து பார்க்கையில் கீழ்காணும் முடிவுகள் கிடைக்கும்:
(1)  அத்தகைய ஏழு வீடுகளின் அதிபதிகள், அதே நேரத்தில் இதர வீடுகளின் அதிபதிகளாக இல்லாது இருப்பின், அவை அந்தக் கோளிற்கு நண்பர்கள்.
(2)  தற்போது சொன்ன வீடுகளின் அதிபதிகள், அவை முன்பு சொன்ன வீடுகளுக்கு அதிபதிகளாக இல்லாது இருப்பின், அவை அந்த கோளிற்கு நண்பர்கள்.
(3)  அவை இரண்டிற்கும் அதிபதிகளாக இருந்தால், அவை அந்த குறிப்பிட்ட கோளிற்கு நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.

மேற்படி விதியின்படி, ஆசிரியர் ஒவ்வொரு கோளின் நண்பன், எதிரி மற்றும் சமம் ஆகியவற்றினை, கீழ்வரும் இரண்டு பத்திகளில் தொகுத்து வழங்குகிறார்.


16. சூரியனுக்கு சனியும் சுக்கிரனும் எதிரிகள், புதன் அதன் சமம், மீதம் உள்ளவை நண்பர்கள்.
   சந்திரனின் நண்பர்கள் சூரியனும் புதனும், மற்றவை அதன் சமம் (1).
   செவ்வாய்க்கு நண்பர்கள் சூரியன், சந்திரன் மற்றும் வியாழன் ஆகியவை, புதன் அதன் எதிரி, சுக்கிரனும் சனியும் சமம்.
   புதனுக்கு, சூரியனும் சுக்கிரனும் நண்பர்கள்; சந்திரன் எதிரி, மற்றவை அதற்கு சமம்.


17. வியாழனுக்கு எதிரிகள் புதனும் சுக்கிரனும்; சனி அதற்கு சமம், மற்றவை அதற்கு நண்பர்கள்.
   சுக்கிரனுக்கு புதனும் சனியும் நண்பர்கள்; செவ்வாயும் வியாழனும் அதற்கு சமம், மற்றவை அதற்கு எதிரிகள்.
   சனிக்கு சுக்கிரனும் புதனும் நண்பர்கள்; வியாழன் அதற்கு சமம், மற்றவை அதற்கு எதிரிகள்(2).
  இதன்படி, சத்யாச்சாரியரின் கருத்தினை நான் இங்கு விரிவுபடுத்தி, கோள்களுக்கிடையேயான, இயல்நிலை அல்லது நிரந்தர நண்பர்கள், எதிரிகள் மற்றும் சமம் ஆகியவற்றை கூறியுள்ளேன்.



குறிப்புகள் (சிதம்பரம்)

(1)  சந்திரனுக்கு எதிரிகள் இல்லை.

(2)  மேற்சொன்ன இரண்டு பத்திகளின் மூலம் ஆசிரியர் மூன்று முடிவுகளை எப்படி அளித்தார் என்பதை நாம் ஆராய்வோம். சூரியனை எடுத்துக் கொள்வோம். அதன் மூலத் திரிகோண வீடு சிம்மம் (பத்தி 14-ன்படி). சிம்மத்திற்கு 2வது, 12வது, 5வது, 9வது, 8வது மற்றும் 4வது வீடுகள் முறையே, கன்னி, கடகம், தனுசு, மேசம், மீனம் மற்றும் விருச்சிகம். சூரியன் உச்சமடையும் வீடு மேசம். மேற்படி வீடுகளின் அதிபதிகள் முறையே, புதன், சந்திரன், வியாழன், செவ்வாய், வியாழன் மற்றும் செவ்வாய், இதில் இருமுறை வருவதை நீக்கினால், நமக்கு கிடைப்பது புதன், சந்திரன், வியாழன் மற்றும் செவ்வாய். இதன் ஏழு வீடுகளில், மேசம் இருமுறை வருகிறது, எனவே ஆறு வீடுகளை எடுத்துக்கொள்வோம். இராசி மண்டலத்தின் இதர ஆறு வீடுகள் முறையே, சிம்மம், துலாம், மகரம், கும்பம், ரிசபம், மிதுனம் ஆகும். அவைகளின் அதிபதிகள் முறையே, சூரியன், சுக்கிரன், சனி, சனி, சுக்கிரன், புதன் ஆகியவை, அதில் இருமுறை வருவதில் ஒன்றையும், சூரியனையும் நீக்கினால், நமக்கு கிடைப்பது சுக்கிரன், சனி மற்றும் புதன். முந்தய வீடுகளான, புதன், சந்திரன், வியாழன் மற்றும் செவ்வாய் ஆகியவற்றுடன் இவைகளை ஒப்பு நோக்குவோம். இதில் புதன் மட்டுமே இரண்டு பட்டியலிலும் வருகிறது. எனவே அது சூரியனுக்கு சமம். சுக்கிரனும் சனியும் எதிரிகள், சந்திரன், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகியவை நண்பர்கள். இது போலவே மற்றக் கோள்களும் கணக்கிடப்பட வேண்டும்.


குறிப்பு: (நிமித்திகன்)

      மூல நூல் ஆசிரியரின் காலத்திலேயே சோதிட அறிஞர்களுக்கிடையே, கோள்களுக்கிடையேயான நட்பு, எதிரி, சமம் என்பதில் சிற்சில கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதை அறிய முடிகிறது. இருப்பினும் ஆசிரியர் சோதிட அறிஞர் சத்வாச்சாரியாரின் கருத்தினையே பின்பற்றுகிறார். அதன்படி, மூலத் திரிகோணம் எனும் புள்ளி மிக முக்கியத்துவம் பெறுகிறது. இதில் சில முரண்களும் உண்டு. எடுத்துக்காட்டாக – சந்திரனுக்கு புதன் நண்பன். ஆனால், புதனுக்கு சந்திரன் எதிரி. அதாவது எனக்கு நீங்கள் நண்பனாக இருந்தால், உங்களுக்கு நான் நண்பனாகத்தானே இருக்க முடியும். எப்படி எதிரியாக இருக்க முடியும்?. சில சமயங்களில் இருக்க முடியும். காந்திக்கு அனைவருமே நண்பர்கள் – கோட்சே உட்பட. ஆனால் கோட்சேவிற்கு காந்தி எதிரி. முரண்பாடு அல்லவா.


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-15


No comments: