Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, June 19, 2015

இலக்கினம் - வான் கணித விளக்கம்



            இராசி சக்கரம் அமைக்கப்பட்ட விதம் அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட கோள்கள், தன்மைகள், பிரிவுகள், வகைகள் என  இதுவரையில் பார்த்தோம். இராசி சக்கரம் என்பது நமது வசதிக்காக செவ்வக வடிவில் பன்னிரெண்டு சிறு கட்டங்களால் வரையப்பட்டாலும், அது உண்மையில் ஒரு நீள் வட்டம் என்பது நமக்குத் தெரியும்.

            வட்டம் என்று சொன்னால், மையப்புள்ளியும், சுற்று வட்டமும் கொண்டிருக்க வேண்டும். இங்கு மையப்புள்ளி என்பது நமது பூமி எனக் கொள்கிறோம். வட்டம் என்பது ஆரம்பமும் முடிவும் இல்லாதது. ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் ஆரம்பித்து அந்த புள்ளியிலேயே மீண்டும் இணைவதுதான் வட்டம். அப்படியானால் வட்டத்தின் ஆரம்பப் புள்ளி எது எனும் கேள்வி எழுகிறது அல்லவா? அந்த ஆரம்பப் புள்ளியின் பெயர்தான் இலக்கினம்.

            இலக்கினம் என்பது முதற்புள்ளி. அதாவது பன்னிரெண்டு வீடுகள் கொண்ட இராசி சக்கரத்தில் முதல் வீடு. அதைத் தொடர்ந்து இரண்டாவது, மூன்றாவது, நான்காவது. . . . . . பன்னிரெண்டாவது, மீண்டும் முதலாவது என சக்கரம் சுழல்கிறது.

            இலக்கினம் எனும் முதற்புள்ளியை எவ்வாறு தீர்மானிப்பது?

            இது பற்றி நிறைய சோதிட நூல்களில் படித்தபோது சில சமயம் குழப்பமாகவும் இருந்தது. பெரும்பாலான சோதிடத் தகவல்களில்பூமியை பன்னிரெண்டு பாகங்களாகப் பிரித்து, மேசம் முதல் மீனம் வரை பெயரிட்டு, பிறக்கும்போது அந்த இடம் எங்குள்ளது எனக் கணிக்கச் சொல்லின. வேறு சில, ஒரு நாளின் 24 மணி நேரத்தை, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு இராசி என, சூரியனிலிருந்து கணக்கிட்டு, இலக்கினத்தைக் கண்டுபிடிக்கச் சொல்லின.

            இதனை எளிய முறையில், வான் கணித அடிப்படையில் கணிக்கலாம் என்பதை ஏனோ பலரும் சொல்ல மறந்துவிட்டனர்.


            இலக்கினம் என்பது இராசி வட்டத்தின் ஆரம்பப் புள்ளி என்றாலும், அதனை எவ்வாறு நிறுவுவது என்பதில் பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. இதற்கு முழுமையாக துணைபுரிவது பஞ்சாங்கம் எனும் முன் கணக்கீட்டு பட்டியல் (Pre-calculated Statement)  ஆகும். நடைமுறையில் பல்வேறு பஞ்சாங்க முறைகள் இருக்கின்றன. அது பற்றி பின்னர் விவாதிப்போம். உதயாதி நாழிகை, இருப்பு, பிறந்த நேரம், ஊர் என பல்வேறு கணக்கீடுகளைக் கொண்டு இலக்கினம் கணிக்கப்படுகிறது. ஆனால் இலக்கினம் பற்றிய தேற்றங்கள் அவ்வளவு தெளிவாக விவரிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. இதனை எளிமையாக, ஆனால் அதே நேரத்தில் புவி-வான் கணித முறையில் இங்கே விளக்க முற்படுகிறேன்.

            பொதுவாக இலக்கினம் என்பது ஒருவர் பிறக்கும்போது, அவர் பிறந்த இடத்திற்கும், சூரியனுக்கும் இடையே உள்ள இடைவெளி வித்தியாசத்தின் ஆரம்பப் புள்ளிதான் இலக்கினம்.

            வான் மண்டலம் அல்லது இராசி மண்டலம் என்பது ஒரு நீள் வட்டப் பாதை என்பதையும், அது 30 பாகைகள் கொண்ட பன்னிரெண்டு இராசிகளாக பிரிக்கப்பட்டிருப்பதையும், அதில் ஒன்பது கோள்களும் தத்தமது சுழற்சியின் வேகத்திற்கு ஏற்ப விரவிக் கிடப்பதையும் விரிவாக முன்பே பார்த்திருக்கிறோம். இலக்கினத்தைப் பொருத்தவரையில் புவியும் சூரியனுமே காரணிகள் என்பதால் அவற்றின் சுழற்சியைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

            பூமி மையக் கொள்கைப்படி, சூரியன் இந்த வான் மண்டலத்தை, 365 நாட்களில் சுற்றி வருகிறது. மேசம் அதன் ஆரம்பப் புள்ளி எனக் கொண்டால், அது ஒவ்வொரு மாதமும் ஒரு இராசி எனும் கணக்கில் 12 மாதங்களில், 12 இராசிகளில் பயனம் செய்து, மீண்டும் மேசத்தை வந்து சேரும். மறுமொழியில் சொல்வதென்றால், ஒரு இராசிக்கு ஒரு மாதம் என பயணம் செய்கிறது. அதாவது பூமியை மையமாகக் கொண்ட நீள்வட்டப்பாதையில் சூரியன் சுற்றி வருகிறது. எனவே, அந்த வட்டப் பாதைக்கு பூமிதான் மையப் புள்ளி. அதே நேரத்தில் பூமியும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இரவு பகலை உண்டாக்கிக் கொள்கிறது.

            இலக்கினப் புள்ளியினை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் விளக்குவோம். ஆடி மாதம் சூரியன் காலை 6.00 மணியளவில், ஒரு குறிப்பிட்ட புள்ளியில்(X0), அதாவது 102 பாகையில் (கடகத்தின் 12 பாகையில்) இருப்பதாகக் கொள்வோம். அதே நேரத்தில் (காலை 6.00 மணியளவில்) பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தின் புள்ளி(Y) சூரியனுக்கு நேர் எதிரே இருப்பதாகக் கொள்வோம். பூமியின் அந்த குறிப்பிட்ட (Y) புள்ளி, பூமியின் சுழற்சி காரணமாக, சூரிய புள்ளியிலிருந்து(X) விலகி, மீண்டும் சூரிய புள்ளிக்கு நேர் எதிரே வருவதற்கு 24 மணி நேரம்(ஒரு நாள்) ஆகும். அதாவது தனது அச்சில் 360 பாகையினை 24 மணி நேரத்தில் சுற்றிக் கொள்கிறது. மறுமொழியில், ஒரு பாகை நகர்வதற்கு 4 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது. ஒரு பாகை சுழல்வதின் மூலம் (Y) புள்ளியானது, X1 எனும் புள்ளிக்கு நேர் எதிரே வருகிறது. 40 நிமிடங்களில் X10 எனும் புள்ளிக்கு நேர் எதிரே வருகிறது. 80 நிமிடங்களில் X20 எனும் புள்ளிக்கு நேர் எதிரே வருகிறது. இவ்வாறே, X359 எனும் புள்ளிக்கு வர 23 மணி – 56 நிமிடங்கள் ஆகிறது. 24 மணி ஆகும்போது மீண்டும் கடகத்தின் 102 பாகையில்  (X360) () (X0) எனும் புள்ளிக்கு நேரே வருகிறது.


            இங்கு, X1, X2, X3, X4, ..... ..... ..... ..... X356, X357, X358, X359, X360()0 என்பவை 24 மணி நேரத்தில் சூரிய புள்ளியான (X0) –யிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால அளவில் விலகியிருக்கும் புள்ளிகள் ஆகும். அதாவது, பூமியின் (Y) புள்ளியானது ஒரு குறிப்பிட்ட கால அளவில், மேற்சொன்ன புள்ளிகளுக்கு நேர் எதிரே இருந்து கொண்டிருக்கிறது. அந்த நேர்-எதிர் புள்ளிகளே இலக்கின புள்ளிகள் எனப்படும். அத்தகைய இலக்கினப் புள்ளிகள் இராசி மண்டலத்தில் எந்த இராசியில் இருக்கின்றதோ, அதுவே இலக்கின வீடு (உதய இராசி) ஆகும்.

     கீழே உள்ள படங்களில், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும், இலக்கினப் புள்ளிகள் இருக்கும் நிலையினைப் பார்க்கலாம்.








            எனவே, ஒருவர் பிறக்கும்போது, பூமியில் அவர் பிறந்த இடம், அந்த குறிப்பிட்ட நேரத்தில், சூரியனுக்கு நேர் எதிரே இருந்து எவ்வளவு தூரம் (பாகைகள்) விலகி இருக்கின்றதோ, அந்த குறிப்பிட்ட தூரத்தின்(பாகையின்) புள்ளியே, அவர் பிறந்த இலக்கினம் ஆகும். அந்த குறிப்பிட்ட புள்ளி இருக்கும் இராசியே, இலக்கின இராசி அல்லது உதய இராசி ஆகும்.

      முழுமையாகப் படித்தால் மட்டுமே புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் என்பதால் இப்பதிவு சற்று நீண்டு விட்டது. கணக்கிடும் முறைகளை பின்னர் விரிவாகக் காண்போம்.


      அடுத்த பதிவில் – இராசி சக்கரம் எனும் சாதகக் கட்டம் ஒரே நேரத்தில் பிறந்த இரண்டு பேருக்கு ஒரே மாதிரியாக இருக்க வாய்ப்பு உண்டா என்பதை ஆராய்வோம்.

No comments: