Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, July 22, 2015

ஒரே நேரத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகளின் சாதகங்கள் ஒன்றுபோல் இருக்குமா? (இரண்டு).




            சென்ற பதிவில், ஒரே நேரத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகளின் சாதகம் ஒன்றுபோல் இருக்குமா என்பதில், (1) இருவேறு தாய்களுக்கு ஒரே நேரத்தில் பிறப்பது, (2) ஒரே தாய்க்கு ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகள் பிறப்பதுஎன இரண்டு வாய்ப்புகள் இருப்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

            பொதுவாக இரட்டைக் குழந்தைகளாக இருந்தாலும், இரு தாய்க்கு பிறந்திருந்தாலும் ஒரே நேரத்தில் பிறந்தால் சாதகக் கட்டங்கள் என்பது ஒன்றுபோலத்தான் இருக்கும். ஒன்று போலத்தான் இருக்க வேண்டும். இது கணித உண்மை. அப்படியென்றால், பலன்களும் ஒன்றுபோல்தான் இருக்க வேண்டும். ஆனால் இருப்பதில்லயே ஏன்?

            புள்ளியியல் தகவல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம். ஏற்கனவே நாம் பதிவிட்டபடி, ஒரே நேரம் என்பது, புவியியல் அடிப்படையில்(அட்ச-தீர்க்க கோடுகள்) நிச்சயம் மாறுபடக் கூடும். ஆனால் புவியியல் அடிப்படையும், நேரமும் மாறுபாடின்றி இருக்குமானால், எடுத்துக்காட்டாக, புதுச்சேரியில் இரு குழந்தைகள் பிறப்பதாகக் கொண்டால், இருவரின் சாதகமும் ஒன்றாகத்தான் இருக்கும்ஆனால் குழந்தை பிறப்பு குறித்த தகவல்கள் என்ன சொல்கின்றன என்பதைப் பார்ப்போம்.

            முன்பெல்லாம் மருத்துவமனைகளில் குழந்தைப் பிறப்பது என்பது தவிர்க்கப்பட்டு, வீடுகளிலேயே குழந்தைகள் பிறந்தன. (நானே வீட்டில் தான் பிறந்திருக்கிறேன்) அவ்வாறான நாட்களில் ஒரு ஊரில் ஒரே நாளில் இரு குழந்தகைகள் பிறந்த சம்பவம் என்பது மிகவும் அரிதான செயல் மட்டுமின்றி, அவ்வாறக பிறந்த குழந்தைகளுக்கு இடையேயான நேரம் என்பது பல மணி நேர இடைவெளியில்தான் இருந்திருக்கிறது. ஆனால், இப்போது குழந்தை பிறப்பு என்பது 99.99% மருத்துவமனையில்தான் பிறக்கின்றன. அதனால் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பிறக்கும் குழந்தைகள் என்பது வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

            நான் சேகரித்த தகவல்களின்படி புதுச்சேரியில் மகப்பேறு மருத்துவமனைகள் பத்திற்கு மேற்பட்டு இருந்தாலும், அரசு மருத்துவமனையில் தான் அதிகக் குழந்தைகள் பிறக்கின்றன. புதுச்சேரியில் ஒரு நாளில் பதிவாகும் பிறப்பு விகிதம் என்பது 16 20, என்று ஒரு தகவலும், 40-50 என ஒரு தகவலும் தெரிவிக்கின்றது. [மருத்துவமனை தளத்தில் மிகப்பழைய தகவல் உள்ளது;   பிறப்பு- இறப்பினை பதிவு செய்யும் உள்ளாட்சி துறைக்கு தளமே இல்லை] மருத்துவமனையில் பணிபுரியும் எனது நண்பரிடமிருந்து பெற்ற தகவலின்படி ஒரு நாளைக்கு ஏறக்குறைய நாற்பதிலிருந்து ஐம்பது குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது சராசரியாக அரைமணி நேர வித்தியாசத்தில் ஒரு குழந்தை பிறக்கிறதுசெவிலியராகப் பணியாற்றும் ஒரு தோழியிடம் கேட்டபோது, மிகச் சரியாக ஒரே நேரத்தில் இரு குழந்தைகள் பிறப்பதில்லை என்றும், ஒருவர் வலியால் துடித்து ‘பிறப்பு அறைக்கு’ அழைத்து செல்லும்போது, அதைப் பார்க்கும் மற்றொருவரும் அந்த சம்பவத்தால் உந்தப்பட்டு, மன அளவில் மாற்றம் ஏற்பட, உடல் அளவிலும் ஆயத்தம் ஆகி, குழந்தையைப் பெற்றெடுக்கத் தயார் ஆகிறார் என்று விளக்கம் சொன்னார். ஆக, ஒரு குழந்தைக்கும், இன்னொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் 10 நிமிட இடைவெளியாவது கண்டிப்பாக இருக்கும் என்று மேலும் சொன்னார். இது பற்றி மருத்துவ/அறிவியல் பூர்வமான தகவல்களை நண்பர்கள் வழங்கினால் உதவியாக இருக்கும்.

             எனவே ஒரே நேரத்தில், அதாவது, வினாடித் துள்ளியமாக, அல்லது நிமிடத் துள்ளியமாக இரு குழந்தைகள் ஒரே இடத்தில் (அருகருகே) பிறக்க வாய்ப்பு இல்லை என்றே தெரியவருகிறது.


      சரி, இரட்டைக் குழந்தைகளின் கால இடைவெளி எப்படி என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

No comments: