Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, January 30, 2016

இரண்டாம் வீடு – இது தான் வாழ்க்கை


      ஒன்று முதல் 12 வரையிலான வீடுகளின் வரையறை விளக்கத்தில் எவ்வித கோள்களின் நிலையினையும் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வீடு உள்ள இராசி, அந்த வீட்டில் உள்ள கோள்கள், அவற்றின் தன்மைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல், வீடுகளின் தனித்துவமான வரையறைகளை மட்டுமே இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்கிறேன். முதலில் இவற்றின் தனி இயல்புகளை வரையறை செய்துவிட்டு, பின்னர் அவற்றின் ‘இருப்பு’ நிலையினை ஆராய்வதே முறை என்பதால், 12 வீடுகளின் தனி இயல்புகளை வரையறை செய்வோம்.

அடுத்து நாம் இரண்டாம் வீட்டின் வரையறையினைப் பார்ப்போம். முதல் வீடு தனி மனித இயல்புகளை வரையறுப்பதாகக் கூறினோம். இரண்டாம் வீடு என்பது ஒரு சாதகரின் வாழ்க்கை நிலையினை உரைப்பதாக வரையறுத்துள்ளனர். வாழ்க்கை நிலை என்பது – கல்வி, குடும்பம், செல்வம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதால் அவை தொடர்புடைய செய்திகளைத் தொகுத்து அளித்துள்ளனர். இங்கும், பல்வேறு சோதிட நூல்கள் பல்வேறு இயல்புகளைத் தெரிவித்தாலும், சில இயல்புகளில் ஒன்றுபட்டும், சில இயல்புகளில் மாறுபட்டும் இருக்கின்றன. பொதுவில் ஒன்றுபட்டு இருப்பவை – கல்வி, குடும்பம், செல்வம் ஆகிய மூன்றில் மட்டுமே. எனவே இவற்றின் விரிவுகளையே நாம் இரண்டாம் வீட்டின் இயல்புகளாகக் கொள்ள வேண்டும்.

கல்வி எனும் நிலையில் – மொழி, பேச்சு, வாக்கு, கல்வி நிலை

குடும்பம் எனும் நிலையில் – வாழ்க்கை நிலை, இன்ப துன்பங்கள், மன நிலை

செல்வம் எனும் நிலையில் – பொன், பொருள், வாழ்விற்கான செல்வ நிலை

ஆக, இவை தொடர்பான நிலைகளையும், இவற்றின் நீட்சியையும் உள்ளக்கியதே இரண்டாம் வீட்டின் இயல்புகள் என வரையறுக்கப்பட்டுள்ளன. நீட்சி எனும்போது – எடுத்துக்காட்டாக – எழுத்து, அறிவு, கணிதம், பேச்சுத் திறன் போன்றவற்றை கல்வியோடு தொடர்பு படுத்திக் கூறுவதாகும். கல்வி என்பது படிப்பறிவும் பட்டறிவும் இணைந்ததே.

      இந்த இரண்டாம் வீட்டின் இயல்புகளை எவ்வாறு வரையறுத்துள்ளனர் என்பதை, இலக்கின வரையறையில் கூறியதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் நிகழ்தகவு எனும் கணிதம்.

…. அடுத்து மூன்றாம் வீடு


      

Thursday, January 14, 2016

இலக்கினத்தின் தன்மைகள்



பொதுவாக இலக்கினத்தின் இயல்புகள் என சோதிட நூல்களில் குறிப்பிடப்படுவது, முந்தைய பதிவில் கூறிய அனைத்து இயல்புகளையும் உள்ளடக்கியே உள்ளது.

சாதகரின் பிறப்புஇறப்பு; புகழ்ச்சி-இகழ்ச்சி; மகிழ்ச்சி-துயரம்; செல்வம்-வறுமை; தலை,  உடல், அங்க அடையாளங்கள் ஆகிய அனைத்தோடும் தொடர்புடைய செய்திகள்.

பிறப்பு என்ற நிலையில், சாதகர் எவருக்கு பிறப்பார், எங்கு பிறப்பார், பிறப்பில் ஏற்படும் சாதக பாதகங்கள் ஆகியவற்றைப்பற்றியும்; இறப்பு என்ற நிலையில், எந்த சூழல், எவ்வளவு ஆண்டுகள் போன்ற தகவல்களையும்; புகழ்ச்சி-இகழ்ச்சி எனும் நிலையில், அவரின் புகழ்பட வாழ்தல் நிலையும்; இகழ்ச்சி எனும் நிலையில் அதற்கு நேரிடையாக வாழ்தல் நிலையும்; மகிழ்ச்சி எனும் நிலையில், மகிழ்ச்சிகரமான வாழ்வு அமையும் சூழல்களும், இகழ்ச்சி எனும் நிலையில் அதற்கு நேரிடையான சூழல் நிகழ்வுகளும்செல்வம் எனும்போது, வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள், செல்வ நிலை அடையும் வகைகள்; வறுமை எனும்போது, வாழ்க்கையில் ஏற்படும் வறுமைத் துயரங்கள்; உடலமைப்பு பற்றிய பொதுவானத் தகவல்கள்; என அனைத்தும், அதாவது ஒவ்வொன்றிலும் ஏற்படும் உயர்வு தாழ்வுகள் அனைத்தும் இலக்கினத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பதே இதன் பொருள்.

மொத்தத்தில் ஒரு சாதகரின் வாழ்வு தொடங்கி மறைவு வரையில் உள்ள அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள உதவுவது இலக்கினமே. அதாவது, ஒரு சாதகரின்தாய், தந்தை, பிறப்பு, வாழ்க்கை, வீரம், கல்வி, செல்வம், வேலை, வாழ்க்கைத்துணை, குழந்தைபேறு, நற்பேறு, மறைவு, ஆகிய அனைத்து விவரங்களையும் இலக்கினத்தின் துணையுடனேயே அறிந்துகொள்ள முடியும் என்பது சோதிட விதி. இந்த அனைத்தும் என்பது நன்மை தீமை இரண்டும் சேர்ந்த கலவைதான்.

மேற்கூறியவைகளில், பலவற்றிற்கு ஏனைய வீடுகள் (2-12) தனித்தனியே துறைகள் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த தலைமை என்பது இலக்கினமே.

அதே வேளையில், இலக்கினத்தின் வலிமையைக் கொண்டுதான் மற்ற பலன்களைத் தீர்மானிக்க வேண்டும். அதாவது, இலக்கினம் - இலக்கினாதிபதிஇலக்கினம் இருக்கும் இராசியின் தன்மைகள்இலக்கினத்தில் இருக்கும் கோள்கள் –  இலக்கினத்திலிருந்து விலகியிருக்கும் கோள்கள் - அவற்றின் பார்வைகள்பலங்கள்பிற வீடுகளில் இருக்கும் கோள்களின் இலக்கினப்பார்வைஇது போன்று பல்வேறு தகவல்களை உள்ளடக்கியே பலன்களைத் தீர்மானிக்க முடியும் என்பதால், இலக்கினத்தின் இயல்பு என்பது ஒரு வரையறைக்குள் வகுக்க முடியாது எனும் வரையறையில் வருகிறது.

சரி, இலக்கினத்தின் இயல்புகள் என மேலேக் குறிப்பிடப்பட்டனவற்றை எதை வைத்துக் கொண்டு தீர்மானித்தார்கள் என்பது விவரிக்க முடியா தன்மையுடனேயே உள்ளது. எடுத்துகாட்டாக, உடல் அமைப்பு, தலை, புகழ் என்பனவற்றை எடுத்துக் கொள்வோம். ஏன் அல்லது எப்படி இவற்றை இலக்கினத்தின் இயல்பாகத் தீர்மானித்தார்கள் என்பதற்கு போதிய விளக்கம் இல்லாமலேயே உள்ளது.

இலக்கினம் என்பது பிறக்கும் நேரத்தினை வைத்து தீர்மானிக்கப்படுவதால், பிறப்பு-இறப்பு பற்றி குறிப்பிடுவது என வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், அதனை எவ்வித அறிவியல் விளக்கத்திற்கும் உட்படுத்தமுடியவில்லை. இதுபோலவே பிற இயல்புகளையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

அதே வேளையில், அந்த இயல்புகளைச் சாதகங்களில் சோதித்துப் பார்க்கும்போது பெரும்பாலும் இயல்பாகப் பொருந்துவதை உணரமுடிகிறது.

இது எப்படி எனில், தொடர் நிகழ்வுகளின் பதிவுகள், ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி, தரவுகளாக்கி, புள்ளியியல் கணிதம் செய்தால் கிடைக்கும் விடைபோலவே மெய்ப்பிக்கபட்டிருப்பதால், இந்தக் கணிதம் மெய்யென எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு எளிய எடுத்துக்காட்டாககார்த்திகை தீபம் அன்று மழைபெய்யும் அல்லது சிறு தூறலாவது இருக்கும் என்பது பொதுவாக அதைக் கொண்டாடும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல். இது பெரும்பாலும் மெய்ப்பிக்கப்பட்டே வருகிறது. சில சமயங்களில் மழைபெய்யும் நிகழ்வு இல்லாமலும் இருக்கும். இருப்பினும் அதிக அளவில் நிகழப்படும் நிகழ்தகவினால் இது மெய்யென்று நிரூபிக்கப்படுகிறது. இது மிக எளிமையான எடுத்துகாட்டு அவ்வளவுதான்.

இதுபோலவே, இலக்கினத்தின் இயல்புகளும் தொன்றுதொட்டும் இன்றும் நிகழ்வில் பெருமளவு ஏற்புடையதாக இருப்பதால், இந்த இயல்புகளே இலக்கினத்தின் வரையறைகள் எனக் கொள்ளலாம். 

ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அல்லது இன்னும் விளக்கமான தகவல் இருந்தால், தாராளமாகத் தெரிவிக்கலாம்.


அடுத்துஇரண்டாம் வீடு