Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, February 21, 2016

மூன்று கோள்கள் – சோதிட வரையறை



சூரியனின் வரையறையைப் பார்ப்பதற்கு முன்னால், யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவற்றின் வரையறைகள் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். சோதிடத்தில் ஒவ்வொரு கோளிற்கும் சில தனித்த வரையறைகளைச் சோதிட நூல்கள் வழங்குகின்றன. தொடக்க நிலைகளில் ஏழு கோள்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளன. பின்னர் நிழற்கோள்கள் அல்லது சூரிய சந்திர சுற்றுப்பாதையின் வெட்டுபுள்ளிகள் எனப்படும் இராகுவும் கேதுவும் கோள்களின் கணக்கில் கொண்டுவரப்பட்டு, ஒன்பது கோள்கள் சோதிடக் கணித முறைக்குப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மாந்தி போன்ற துணைக் கோள்களும் சோதிடப்பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டன. அதன் பின்னர், புதிய வான்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கோள்களும் சோதிடக் கணித முறைக்கு சிலரால் கொண்டுவரப்பட்டன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கோள்களும் மேற்கத்திய கோள்கள் என குறிப்பிடப்பட்டு, அவற்றை பயன்படுத்துவது சரியல்ல எனும் வாதமும் எழுத் தொடங்கியது. நம் முன்னோர் வகுத்துக் கொடுத்த வரையறையைத் தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் நமது நாட்டின் சோதிட அறிஞர்கள் கொள்கையாகக் கொண்டிருந்ததால், அத்தகைய மூன்று கோள்களையும் பயன்பாட்டில் இருந்து விலக்கினர். ஆனால் ஒரு சிலர் அவைகளையும் கணக்கில் கொண்டு இன்றும் சோதிட பலன் உரைத்து வருகின்றனர். இருப்பினும், திடீரென்று, புளூட்டோ என்பது கோள்களின் கணக்கில் வராது என தற்போதைய வானியல் அறிஞர்கள் அறிவித்து அதனைக் குறுங்கோள் எனும் கணக்கில் கொண்டு வந்துள்ளனர். அதனால் புளோட்டோவை சோதிடக் கணக்கில் இருந்து விலக்கினர். யுரோனசும் நெப்டியூனும் சிலரால் இன்னும் பயன் பாட்டில் கொண்டுவரப்பட்டு பலன் உரைக்கின்றனர். மேலை நாட்டு சோதிட முறையில் யுரோனசும் நெப்டியூனும் தவிர்க்க முடியாத கோள்கள் ஆகிவிட்டன.

இத்தகைய சூழலில், நாம் யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய மூன்று கோள்களுக்கும் சோதிட வரையறையை ஆய்வு செய்ய வேண்டுமா என்பது கேள்விக்கு உடையதாக உள்ளது.

இந்த மூன்று கோள்களும், தற்போதைய காலத்தில் (கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்குள்) கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதால் விட்டுவிடலாம் என்பது சரியான செயல் அல்ல. அதே நேரத்தில் அந்த கோள்களின் இயல் தன்மையை ஒப்பு நோக்குவோம். சோதிடக் கணக்கின்படி தூரம் என்பது ஒரு பொருட்டல்ல. ஏனெனில் கோள்களில் இருந்து அல்லது கோள்களில் எதிர்பட்டு வரும் கதிர் வீச்சு என்பது பூமிக்கு வந்து சேரும் எனும் கோட்பாடே சோதிடத்தின் அடிப்படை. ஆனால் கால அளவு என்பது தான் கருத்தில் கொள்ள வேண்டும். அது ஏன் என்பதைக் காண்போம்.

யுரோனஸ்:
யுரோனஸ் சூரியனிடமிருந்து 287.10 கோடி கி.மீ, தொலைவில் உள்ளது.  தனது பாதையில் அது சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது 84.30 ஆண்டுகள். அதனை 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளித்தால் ஏழு ஆண்டுகள் மூன்று மாதம் என்ற கணக்கில் ஒவ்வொரு இராசியிலும் இருக்கும். இதன்படி, இராசி சக்கரத்தில் ஒரு முழு சுற்றினைப் பூர்த்தி செய்வதற்கு 84 ஆண்டுகள் ஆகும். அதாவது மிகப்பெரும்பாலான சாதகர்களின் வாழ்வில் அது நிகழாமலேயே போய்விடும்.


நெப்டியூன்:
நெப்டியூன் சூரியனிடமிருந்து 450.40 கோடி கி.மீ, தொலைவில் உள்ளது.  தனது பாதையில் அது சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது 164.79 ஆண்டுகள். அதனை 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளித்தால் 12 ஆண்டுகள் ஒன்பது மாதம் என்ற கணக்கில் ஒவ்வொரு இராசியிலும் இருக்கும். இதன்படி, இராசி சக்கரத்தில் ஒரு முழு சுற்றினைப் பூர்த்தி செய்வதற்கு 165 ஆண்டுகள் ஆகும். அதாவது சாதகர்களின் வாழ்வில் அது நிகழவே முடியாது. மேலும், இதன் சுற்றுவட்டப்பாதை நியூட்டனின் விதிப்படி இல்லை எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

புளூட்டோ:
புளூட்டோ சூரியனிடமிருந்து 2274 கோடி கி.மீ, தொலைவில் உள்ளது.  தனது பாதையில் அது சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது 248 ஆண்டுகள். அதனை 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளித்தால் 20 ஆண்டுகள் எட்டு மாதம் என்ற கணக்கில் ஒவ்வொரு இராசியிலும் இருக்கும். இதன்படி, இராசி சக்கரத்தில் ஒரு முழு சுற்றினைப் பூர்த்தி செய்வதற்கு 248 ஆண்டுகள் ஆகும். இதுவும் சாதகர்களின் வாழ்வில் நிகழவே முடியாது. மேலும், இது தற்போது கோள்களின் தகுதியையும் இழந்து விட்டது.

எனவே கோள்கள் இராசிகளைக் கடக்கும் கணக்குகள் இந்த மூன்று கோள்களுக்கும் பொதுவில் பொருந்த வில்லை. மேலும் இது நமது பண்டைய வானியல் மற்றும் நமது சோதிட அறிஞர்களால் கண்டறியப்படாதவை. எனவே இவற்றை தற்போது நாம் சோதிடக் கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை. இருப்பினும்,  இவற்றின் தன்மைகள், தாக்கங்கள் குறித்து நிகழ்வுகள் பதிவு செய்யப்படும்போது, பின்னொரு காலங்களில் நமது சோதிடக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படலாம். நிகழ்தகவின் அடிப்படையில் அவை நிரூபிக்கவும் படலாம். அல்லது இக்கோள்களின் தேவை எழாமலும் போகலாம். இப்போதைக்கு நாம் இவற்றிற்கு வரையறை கொடுக்க இயலவில்லை என்பதே உண்மை.


அடுத்து சூரியன்

No comments: