Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, March 9, 2016

புதன் – சோதிட வரையறை – தொடர்ச்சி



சோதிட நூல்கள் பொதுவாக புதனை சிறப்பித்தே கூறுகின்றன. முக்கியமாக ஒருவர் சோதிடத்தில் திறன் பெற்று இருக்க வேண்டுமெனில் அவருக்கு புதன் நன்றாக இருக்க வேண்டும் என்பர். அதாவது, புதன் நன்றாக இருந்தால் அவருக்கு தர்க்க முறையும் கணித வழியும் தன் வசப்படும் என்பதே காரணம்.

புதனின் சோதிட பொது வரையறைகள் என்பன:

சிந்தனைத் திறன்

புத்திக் கூர்மை

கல்வி

பேச்சு

எழுத்தாற்றல்

தாய் மாமன்

அலி தன்மை


இங்கு பொது வரையறையில் – சிந்தனைத் திறன், புத்திக் கூர்மை, கல்வி, பேச்சு, எழுத்தாற்றல் ஆகிய அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. அதாவது சிந்தனைத் திறன் இல்லாமல் புத்திக் கூர்மை கிடையாது – புத்திக் கூர்மை இல்லாமல் கல்வி கிடையாது – கல்வி இல்லாமல் பேச்சாற்றலும் எழுத்தாற்றலும் கிடையாது. கல்வி என்பது புத்தகக் கல்வி மட்டுமல்ல, கற்றுணர்தல் அனைத்துமே கல்விதான். எனவே, இவை அனைத்துமே, மூளையின் செயல்திறனால் விளைவது தான். எனவே, மூளை, நரம்புகள், நாக்கு ஆகிய உறுப்புகள் மற்றும் அவற்றின் தொடர்புடைய அனைத்திற்கும் புதன் காரகன் எனப்படுகிறது.

அடுத்து, புதனின் முக்கியக் காரகமாக தாய் மாமன் உறவு வருகிறது. அதாவது தொன்றுதொட்டே நமது பண்பாட்டில் தாய்மாமன் உறவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாய் இருந்து வந்துள்ளது. இன்று தனிக் குடும்பம், ஒரு குழந்தைத் திட்டம் ஆகியவற்றை ஏற்படுத்திக் கொண்டபின் தாய்மாமன் எனும் உறவு விரைவில் இல்லாமலும் போகலாம். ஆனால் அன்றையக் காலத்தில் தாய்மாமன் என்பவர் ஒரு குழந்தைக்கு தந்தையைக் காட்டிலும் மிகமுக்கியமானவர் எனும் கருத்தில் சோதிடத்தில் தனியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அது புதன் கோளின் காரகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், இதனை தர்க்க முறையில் எவ்வாறு ஒப்புமைப் படுத்துவது என்பது தெரியவில்லை.

புதன் அலித் தன்மைக்கும் காரகன் என சோதிட நூல்கள் கூறுகின்றன. புதன் பிறக் கோள்களில் இருந்து மாறுபட்டிருப்பதை சென்ற பதிவில் குறிப்பிட்டோம். அதாவது பொது விதிகளிலிருந்து மாறுபட்டிருக்கும் மனிதர்கள் ‘அலி’ எனப்படுவது போல், புதனும் அலி எனும் தன்மைக்குக் காரகனாக இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட பொதுவரையறையில் உள்ள அறிவு மற்றும் கல்வித்தன்மைக்கு புதனின் இயல்தன்மையோடு ஒப்பு நோக்க முடியவில்லை. புதனின் இயல்தன்மையில் அது இரும்புப் பாறைகளால் ஆன, சூரியனுக்கு அருகில் உள்ள, வெப்பமும் குளிரும் மிக அதிகமுள்ள ஒரு கோள். அவ்வளவுதான். அதில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் எனும் பொதுத் தனிமங்கள் மட்டுமின்றி, ஆக்சிஜன், சோடியம், பொட்டாசியம் ஆகிய தனிமங்கள் அதிகம் உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆக்சிஜனும் சோடியமும் மூளைத்திறனுக்கு மிகமுக்கியத்துவம் வாய்ந்தவை என அறிவியல் நூல்கள் கூறுகின்றன. அவ்வளவுதான். இதைக் கொண்டு, புதன் மூளைத் திறனுக்கு காரணமாக இருக்கிறது என நிர்ணயிக்க முடியவில்லை. அறிவியல் அல்லது தர்க்க முறையில் இதை ஒப்பீடு செய்யமுடியும் என யாராவது நினைத்தால் அதனைத் தெரிவியுங்கள். அதற்கேற்றவாறு பதிவில் திருத்தம் மேற்கொள்ளப்படும்.

ஆனால், சோதிடக் கணக்கீட்டில் புதனைக் கொண்டு ஆராயும்போது புதனின் பொது வரையறைகளும் அவற்றின் நீட்சிகளும் பெரும்பாலும் பொருந்தி வருவதைக் காண முடிகிறது.

புதன் அலித் தன்மை கொண்ட கோள் என வரையறுக்கப்பட்டதால், பிறக் கோள்களைச் சார்ந்தே அதன் வரையறையைச் சோதிடநூல்கள் தீர்மானிக்கின்றன. எடுத்துக் காட்டாக – 

 புதனுடன் இணைந்த -

சூரியன் – பெரும் அறிவு

சந்திரன் – கற்பனை

செவ்வாய் – தர்க்கம்

குரு – நல்ல சிந்தனை

சுக்கிரன் – உணர்ச்சிகரமான சிந்தனை

சனி – ஆழ்ந்த சிந்தனை


புதன் அது சேர்ந்திருக்கும் கோளைப் பொருத்து நல்ல தீய பலன்களைத் தரும் என்று சோதிட அறிஞர்கள் கூறியுள்ளனர். அதனால்தான் புதனை – அரை சுபக் கோள் என்கின்றனர்.

ஆக, இங்கு புதனின் சோதிட வரையறையை முழுமையாக தர்க்கமுறையில் ஒப்பீடு செய்யமுடியவில்லை என்றாலும், சோதிடக் கணக்கீட்டில் பொருந்திவருவதை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.


அடுத்து வியாழன்…

No comments: