Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, May 26, 2016

ஒன்பதாவது கோளின் கண்டுபிடிப்பும் சோதிட ஆதார கருத்துருவும்



வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களைச் சந்திக்கிறேன். ஒருவழியாக தேர்தல் பணி முடிவிற்கு வந்து, நானும் அதிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். பெரிய பணிச்சுமை இருந்த போதிலும், மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவை நடத்தியதில் எனது பங்களிப்பும் இருந்ததில் மகிழ்ச்சி. இனி நிமித்திகன் பதிவுகள் தொடரும்.

நிமித்திகன் தொடங்கும்போது, சோதிடம் உண்மை என்று நிரூபிக்க, கருத்துரு கொள்கை (Hypothesis) எனும் கோட்பாட்டின் அடிப்படையிலேயே நிரூபிக்க முயல்வது என்று தேர்வு செய்தேன். பெரும்பாலான அறிவியல் தேற்றங்கள் (theory) இந்த அடிப்படையில்தான் முதலில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இன்றும் பிரபஞ்சம் மற்றும் நமது சூரியக் குடும்ப தோற்றங்கள் குறித்த அறிவியல் உண்மைகள் இந்த அடிப்படையில்தான் மெய்ப்பிக்கப்பட்டு வருகின்றன.

எனது அடிப்படை கருத்துரு என்பது, ஒவ்வொரு கோளும் தமக்கென தனிப்பட்ட அலைவரிசைகளைக் கொண்ட நமக்கு இன்னமும் தெரியவராத சில கதிர்வீச்சினை இந்த பூமிப் பந்தின் மீது செலுத்தி வருகின்றன என்பதும், அவற்றின் தாக்கம் இந்த பூமியில் வாழும் உயிரினங்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதும் தான். நான் வான் அறிவியல் படித்தவன் இல்லை என்றாலும், நிமித்திகனில் எழுதுவதற்காக அத்தகைய கட்டுரைகளைப் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவ்வாறு படித்த போது இந்த சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் தமக்கென தனிப்பட்ட காந்தப்புலத்தினைக் கொண்டுள்ளது எனத் தெரியவந்தது. அந்த காந்தப் புலத்தின் அலைவரிசையும், அவை வெளியிடும் ரேடியோ அலைவரிசை போன்றதொரு அலைவரிசையும் நிச்சயம் நம்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் எனது கருத்துரு கொள்கை. ஆனால் இதனை எப்படி மெய்ப்பிப்பது என்பது எனக்கு சற்று கடினமாகவே இருந்தது, இருக்கிறது.

இந்த சூழலில்தான், எனது தேர்தல் பணியின்போது, மிகச் சரியாக சொல்வதென்றால் 16.05.2016 தேர்தல் நாள் அன்று காலை 6.00 மணியளவில் எனது தேர்தல் பணி அலுவலகத்தில் வந்திருந்த நாளிதழ்களை நுனிப்புல் மேய்ந்தபோது, தினத்தந்தியில் வந்த ஒரு கட்டுரை, என்னை ஆச்சரியப்பட வைத்தது. கோள்கள் ஒருவித கதிர்களை வெளியிடுகின்றன என்பதே அது. தேர்தல் பணி முடிந்த பின் மீண்டும் படித்து அது பற்றி நிமித்திகனில் பதிவு செய்வோம் என்று நினைத்து பணியில் மூழ்கி விட்டேன்.

நேற்று இது பற்றி ஞாபகம் வந்ததும் அந்த செய்தியைத் தேடியபோது, அது என்றைய தேதியில் வந்தது எந்த நாளிதழில் வந்தது என்பது மறந்து போய்விட்டது. ஆனால் தினத்தந்தியில் வந்தது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். மே 1 முதல் உள்ள தினத்தந்தி இ-இதழில் அதனைத் தேடத்தொடங்கி, ஒருவழியாக மே 16 தேதியிட்ட இதழில் ‘கம்ப்யூட்டர் ஜாலம்’ எனும் பகுதியில் அதனைக் கண்டுபிடித்தேன். ஒரு புதிய கோளைக் கண்டுபிடித்த உற்சாகம். அதற்கேற்றவாறு அந்தக் கட்டுரையின் தலைப்பும் “ஒன்பதாவது கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்பதுதான். அந்த கட்டுரையை கீழே கொடுத்துள்ளேன். [அந்த நாளிதழைத் தந்து உதவிய எதிர் வீட்டு நண்பருக்கும் அப்பகுதியை ஊடுநகல் (scanned copy) செய்து கொடுத்த என் மகளுக்கும் நன்றி].
நன்றி: தினத்தந்தி நாளிதழ் - 16.05.2016


இதில் கவனிக்கத் தக்க செய்தி –

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பருப்பொருட்களும் கருப்பொருள் கதிர் வீச்சு என்றழைக்கப்படும் ஒருவகை கதிர்களை வெளியிடுகின்றனவாம். இதன் மூலம் சூடான பொருட்கள் அதிக ஆற்றல் கொண்ட ஒளியையும், குளிர்ச்சியான பொருட்கள் குறைவான ஆற்றல் கொண்ட ஒளியையும் வெளிப்படுத்துகின்றன . . .  என்றும் கூறப்படுகின்றன.

ஒன்பதாவது கோள் வெளியிடும் கருப்பொருள் கதிர்வீச்சு தொடர்பான . . . . . .


ஆக சுய ஒளி இல்லாத ஒவ்வொரு கோளும், சூரியனிலிருந்து ஒளியை வாங்கி பிரதிபலிக்கின்றன என்றபோதிலும், அவை தமக்கே உரித்தான தத்தமது கருப்பொருள் கதிர்வீச்சினை வெளியிடுகின்றன என்றும், சூடான கோள்கள் அதிக ஆற்றல் கொண்ட கதிர்வீச்சினையும், குளிர்வான கோள்கள் குறைந்த ஆற்றல் கொண்ட கதிர்வீச்சினையும் வெளியிடுகின்றன என்றும் ஒன்பதாவது கோள் பற்றிய இந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் சூரியனின் ஒளியை உள்வாங்கி பிரதிபலிப்பதுடன், தாமாகவும் கருப்பொருள் கதிர்வீச்சினை வெளியிடுகின்றன என்பதும் தெரியவருகிறது.

எனவே, ஒவ்வொரு கோளும் தத்தமது அக மற்றும் புற பருப்பொருள் கோட்பாட்டின்படி, வெவ்வேறு அளவில் கதிர்வீச்சினை வெளியிடுகின்றன என்பதும், அவற்றின் தாக்கமானது இந்த பூமியின் மீதும் அதில் வாழும் உயிரினங்களின் மீதும் ஏற்படுத்தும் என்பதும் எனது கருத்துரு கொள்கை (Hypothesis theory). அதுவே சோதிட தேற்றத்திற்கு (Theory) அடிப்படை என்பதும் எனது கொள்கை.


எந்த ஒரு கொள்கையும் நமக்கு புரியவில்லை என்பதற்காக பொய் என்று கூறிவிட முடியாது. அதே வேளையில் அந்த கொள்கையை நாம் கையிலெடுத்தால், அதனை அறிவியல் அடிப்படையில் நிரூபித்துக் காட்டுவதும் நமது கடமை. சோதிடமும் அப்படித்தான். நிரூபிக்க முயல்வோம்.