Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, June 19, 2016

குரு (எ) வியாழன் – சோதிட வரையறை




சோதிடத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோளாகக் கொண்டாடப்படுவது குரு என்கிற வியாழன் ஆகும். கொண்டாடப்படுவது என சொல்லப்படுவதற்குக் காரணம் குரு ஒரு சுபக் கோள் எனும் கோட்பாடுதான். சோதிடப் பயன்பாட்டில் உள்ள ஒன்பது கோள்களில், வியாழனும் சுக்கிரனும் மட்டுமே சுபக் கோள்கள் எனும் தகுதிப்பட்டியலில் உள்ளன. அதிலும் சுக்கிரன் அசுர குரு எனும் அடைமொழிப்பெற்றதில், சற்று மாற்றுக் குறைவாகவே உள்ளது.


சூரியக் குடும்பத்தில் உள்ள எட்டு (ஒன்பது) கோள்களில் மிகப் பெரிய கோள் வியாழன். அது வெளிவட்டச் சுற்றுக் கோளாக உள்ளது. மிகப்பெரிய கோளாக இருந்தாலும், அது திடக் கோள் எனும் நிலையில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அது முற்றிலும் வாயுக் கோள் என்ற நிலையில் இருந்தாலும், திடப் பொருட்களையும் உள்ளடக்கிய கோள். பொதுவாக, வியாழனின் ஈர்ப்புவிசை அதிகம் என்றும், அதன் காரணமாக, சூரிய வட்டப்பாதைக்குள் வரும் அயல் பொருட்கள் அனைத்தையும் தன்னகத்தே ஈர்த்துக் கொள்ளும் தன்மை கொண்டது என்றும், அதனால் அவ்வாறான வேற்று பொருட்கள் சூரியக் குடும்பத்தின் பிறக் கோள்கள் மீது மோதுவது, குறிப்பாக பூமியின் மீது மோதுவது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது எனவும் வானியல் அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதனால்தான் என்னவோ, வியாழனை அதாவது குருவை சிறப்பான இடத்தில் சோதிடத்தில் வைத்திருக்கிறார்கள். சோதிடக் கட்டத்தில், வியாழன் இருக்கும் இடமும், அதன் பார்வைக்கு உள்ளாகும் இடங்களும் சிறப்புடையவையாகக் கருதப்படுகிறது.

சோதிடத்தில் வியாழனின் வரையறையைப் பார்ப்பதற்கு முன், அதன் வானியல் தன்மையினைப் பார்ப்போம்.

மதிப்பு மிக்க, சூரியக் குடுபத்தின் ஐந்தாவது கோள், வியாழன்தொலை நோக்கியின்றி இரவில் காணக்கூடியக் கோள்களில் இதுவும் ஒன்று. ஐந்தாவது கோள். இது வாயு நிலையில் உள்ள கோள். வாயு நிலை என்ற போதிலும், பாறைகளும் மிதக்கும். அதாவது திட-திரவ ஹட்ரஜன் பாறைகள் அதிகம்.

வியாழனில் 90% ஹைட்ரஜனும், மீதி 10% ஹீலியம் பெருமளவிலும், மீத்தேன், அம்மோனியா, நீராவி, பாறைகள் எனக் கலவையும் கொண்டது. அதே நேரத்தில் வளிமண்டலம் 75% ஹட்ரஜன் 25% ஹீலியம் என சூழ்ந்துள்ளது. பிறவாயுக்கள்ஹைட்ரஜன், மீத்தேன், அம்மோனியா, கரியமிலம், ஈதேன், ஹைட்ரஜன் சல்பேட், நியான், ஆக்சிஜன், பாஸ்பின், கந்தகம், பென்சீன், ஹைட்ரோகார்பன், போன்றவை. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றின் அளவு மற்றும் அழுத்தம், சூரியனின் நெபுலா போல் உள்ளது.

சூரியக் குழம்பில் முதலில் தோன்றியது வியாழன் எனும் கருத்தும் உண்டு.  திடக் கோள்களைக் காட்டிலும் வாயுக்கோள்கள் உயர்வேக காற்றழுத்தம் கொண்டவை என்பதில் வியாழன் முதலில் உள்ளது.

வியாழனின் நிறையைப் பொருத்தவரையில், சூரியனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கும், பிறக் கோள்களைப் பொருத்தவரையில், அவைகள் அனைத்தின் நிறையில் இரண்டரை மடங்கும் கொண்ட மிகப்பெரிய வாயுக்கோள்.

வியாழன், அது சூரியனிலிருந்து பெறும் ஆற்றலைக் காட்டிலும் அதிக ஆற்றலை விண்ணில் கதிரியக்கம் செய்கிறது. வியாழனின் உட்கருவானது 20,000K எனும் வெப்ப நிலையில் உள்ளது. பூமியைக் காட்டிலும், அதிக அளவிலான காந்தப் புலம் கொண்டது. அதன் வீச்சு அளவு 650 மில்லியன் கி.மீ.க்கு அப்பால் செல்லும் எனும் அளவில் உள்ளது.

பூமியைப்போல் அளவில் 11 மடங்கு பெரியதாக இருந்தாலும், அடர்த்தியில் பூமியைக் காட்டிலும் மிகக் குறைவு. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள மிகவும் குறைவான நேரமே எடுத்துக் கொள்கிறது. அதாவது ஒருநாள் என்பது வியாழனுக்கு 10 மணி நேரத்திற்கும் குறைவே.

வியாழனின் வெப்பம் மற்றும் அழுத்தம் அதன் உட்கருவிலிருந்து உருவாகின்றது. உட்கருவிலிருக்கும் ஹைட்ரஜன் அதன் நிலைக்குமீறி வெப்பபடைவதால் உலோகமாவதாகவும் அது 10,000கே எனும் அளவில் வெப்பம் அடைவதாகவும் கூறப்படுகிறது.

வியாழனின் அகன்ற காந்தப் புலமானது, பூமியின் காந்தப் புலத்தைக் காட்டிலும் 14 மடங்கு அடர்வு கொண்டது. திட-திரவ ஹட்ரஜன் குழம்பால் ஆன உட்கரு சுழல் நிலையில் உள்ள உலோகங்களின் சுழற்சியில் உந்தப்பட்டு காந்தப்புலத்தை உண்டாக்குகிறது. காந்தப்புலம் என்று சொல்லுவதைவிட காந்த அடுக்கினை உண்டாக்குகின்றன என்பதே உண்மை.

சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 11.86 ஆண்டுகள் ஆகும். [பூமி மையக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே ஆர்யபட்டர் 1500 ஆண்டுகளுக்கு முன்பே வியாழனின் கால அளவை 4332.2722 நாட்கள் அதாவது 11.86 ஆண்டுகள் என்று கணித்துள்ளார்] தனது அச்சில் 3.13 பாகை மட்டுமே சாய்வில் உள்ளதால், பருவ மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை.

வியாழனின் ஈர்ப்பு சக்தி அதீதமானது. பூமியைப் போல் மூன்று மடங்கு வலிமையான ஈர்ப்பு சக்தி. அந்த சக்தி தான் பிற விண் பொருட்கள் சூரியக் குடும்பக் கோள்களைத் தாக்காமல் தன்னகத்தே இழுத்து காக்கின்றது. ஒன்பது மணி 55 வினாடிகளில் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும். அதாவது வேகம்வேகம்.

மற்ற கிரகங்கள் சூரியனின் கதிரயக்கத்தை வாங்கி வெளியிடுகையில், வியாழன் தானே கதிரியக்கத்தை வெளிப்படுத்துகிறது. (சனியும் அந்தக் கணக்கில் வரும்).

 

சில பல தன்மைகள் கொண்டிருந்தாலும், வியாழனால் ஒரு கோளாகமட்டுமே ஆட்சி செய்ய முடியும். விண்மீனாக மாறமுடியாது என பெரும்பாலான வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 


வியாழனின் சோதிட வரையறை தொடரும்….

No comments: