Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, July 15, 2016

1000 ஆண்டுகள் வாழ்பவர் சாதகம் - பிருகத் ஜாதகா – 78



வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா

பகுதி   -  ஏழு

ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)


14. ஒருவர் பிறக்கும்போது உதய இராசி கடகமாக இருக்க, அந்த உதய இராசியில் குருவும் சந்திரனும் இருக்க, புதனும் சுக்கிரனும் கேந்திரத்தில் இருக்க, மற்ற கோள்கள் 11வது, 6வது 3வது வீட்டில் இருந்தால், அவரின் வாழ்நாள் என்பது சாதரன கணக்கிற்கு உட்படாது, ஆனால் அது சாதரன மனிதனின் அதிகபட்ச உயிர்வாழ்நாட்களை விட அதிகமாக இருக்கும்(1).


குறிப்பு:(திரு. சிதம்பரம்)

(1)  அதாவது, ஒரு மனிதனின் வாழ்நாளைத் தீர்மானிக்கும் முறையான சாதரன ஆயுர்தய முறைகள் இங்கே கூறப்பட்ட சாதகத்திற்கு பொருந்தாது. இது தொடர்பான மேலும் விவரங்கள் பகுதி-9-ன் குறிப்புகளில் வழங்கப்படும்.

--
குறிப்பு:(நிமித்திகன்)

கீழ்வரும் குறிப்புகளில் 1000, 2000, ஒரு யுகம் வாழக்கூடிய சாதக அமைப்புகளைத் திரு. சிதம்பரம் அய்யர் அவர்கள் தொகுத்து வழங்கியுள்ளார். யதார்த்த உலகில் 120 ஆண்டுகளுக்கு மேல் உயிர்வாழ்தல் என்பது அரிதிலும் அரிதாகவே உள்ளது. எனவே 1000, 2000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்பது கற்பனைப் பாத்திரங்களாக இருக்கலாமே தவிர உண்மையில் இருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் இதனை வேறு கோணத்தில் ஆராய்ந்தால், வாழ்தல் என்பது புகழுடன் வாழ்தல் எனும் பொருள் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, கரிகால் சோழன், இராசஇராசன் போன்ற மன்னர்கள் இன்றும் புகழோடு பேசப்படுவதை கருத்தில் கொள்ளலாம். ஆக உயிர் உடல் என்பதைக் காட்டிலும், புகழுடலை கணக்கில் கொண்டால், இந்தக் கூற்று உண்மையாக இருக்கலாம். எனவே அவ்வாறான அமைப்புள்ள சாதகர்களின் புகழோ அல்லது அவர்தம் வரலாறோ நீண்ட ஆண்டுகள், அதாவது 1000, 2000 ஆண்டுகள் நிலைத்திருக்கும் எனக் கணக்கில் கொள்ளலாம். இதுவே சரியானது என்பதே எனது கருத்து.


குறிப்புகள்:(திரு. சிதம்பரம்)

கடைசி பத்தியில் கூறப்பட்ட சாதாரன ஆயுர்தயா முறைகள் மூலம் ஒருமனிதனின் வாழ்நாளைத் தீர்மானிக்க முடியாத சில சிறப்பு வாய்ந்த சில சாதகங்களைக் காண்போம். இத்தகைய சாதகங்கள், பல நூற்றாண்டுகள் வாழ்ந்த புகழ் மிக்க சில பெரியோர்களின் சாதகங்கள் ஆகும்.

1.   சிம்மம் உதய இராசியாகவும், அதில் குரு இருக்க, சுக்கிரன் கடகத்தில் இருக்க, புதன் இரண்டாம் வீடான கன்னியில், மற்ற அசுபக் கோள்கள், உபச்சய இடங்களில் முறையே, 3வது, 6வது, 10வது, 11வது வீடுகளில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறந்த ஒருவர் 1000 ஆண்டுகள் உயிர்வாழ்வார்.

2.   இலக்கினத்திலிருந்து, 4வது வீட்டில் சூரியனும் புதனும் இருக்க, சனி உதய இராசியில் இருக்க, இராகு 12வது வீட்டில் இருக்க, மற்ற கோள்கள் 8வது வீட்டில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறந்த ஒருவர் 2000 ஆண்டுகள் உயிர்வாழ்வார்.

3.   மேசம் உதய இராசியாக இருக்க, அதில் சூரியன் இருக்க, சனியானது 4வது அல்லது 9வது வீட்டில் இருக்க, செவ்வாய் 7வது வீட்டில் இருக்க, வலிமையான சந்திரன் 12வது வீட்டில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறந்த ஒருவர் மருந்துகளின் வலிமையால் 2000 ஆண்டுகள் உயிர்வாழ்வார்.

4.   உதய இராசி தனுசு அல்லது மீனமாக இருக்க அதில் வியாழன் இருக்க, மிதுன இராசியில் கோள்கள் இல்லாமல் இருக்க, சுக்கிரன் ஏதேனும் ஒரு கேந்திரத்தில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறந்த ஒருவர் மருந்துகளின் வலிமையால் மிகப்பெரும் ஆண்டுகள் உயிர்வாழ்வதுடன், இந்திர பதவியையும் அடைவார்.

5.   அனைத்து கோள்களும் ஒரே வீட்டில் அல்லது திரிகோணத்தில் அல்லது கேந்திரத்தில் இருக்க, மேற்படி யோகத்தில் ஒரு மனிதன் பிறந்தால், ஒன்று அவர் உடனே இறந்துவிடுவார் அல்லது மந்திரங்களின் வலிமையால் ஒரு யுகம் வாழ்வார்.

6.   திரிகோணத்தில் அசுபக் கோள்கள் இல்லாமலும், சுபக் கோள்கள் கேந்திரத்தில் இல்லாமலும், 8வது வீட்டில் எவ்வித அசுபக் கோளும் இல்லாமலும் இருக்கும் யோகத்தில் ஒருமனிதன் பிறந்தால், அவர் தேவராக வாழ்வார்.

7.   உதய இராசி ரிசபமாக இருக்க, அதில் சுக்கிரன் இருக்க, வியாழன் ஏதேனும் ஒரு கேந்திர வீட்டில் இருக்க, மற்றக் கோள்கள் 3வது, 6வது, 11வது வீட்டில் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், மருந்துகள் மற்றும் மந்திரங்களின் வலிமையால் அவர் தேவராக வாழ்வார்.

8.   உதய இராசி கடகமாக இருக்க, சனியானது துலாத்திலும், வியாழன் மகரத்திலும், சந்திரன் ரிசபத்திலும் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், மருந்துகள் மற்றும் மந்திரங்களின் வலிமையால் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்து, பிரம்ம நிலையை அடைவார்.

9.   உதய இராசி கடகமாக இருக்க, கடகமே உதய நவாம்சமாகவும் இருக்க, வியாழன் ஏதேனும் ஒரு கேந்திரத்தில் இருக்க, செவ்வாய் 7வது வீட்டில் இருக்க, சுக்கிரன் சிம்மாசன அம்சத்தில்(1) இருப்பது.  மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், மருந்துகளின் வலிமையால் நீண்ட ஆண்டுகள் வாழ்வார்.
[(1) இத்தகைய அம்சங்களின் விளக்கம் அல்லது கோள்களின் நிலையானது, இக்குறிப்புகளின் இறுதியில் விளக்கப்படும்].

10.  உதய நவாம்சமானது கன்னியின் கடைசி நவாம்சமாக இருக்க, அதில் புதன் இருக்க, வியாழன் 7வது வீட்டில் கோபுராம்சத்திலும், அல்லது சனி மிருதுவம்சத்திலும் இருப்பது. மேற்படி யோகத்தில் பிறக்கும் ஒரு மனிதன், முடிவில்லாத ஆண்டுகள் வாழ்வார்.


………ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடரும்)


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16

No comments: