Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, August 24, 2016

வீடுகளில் வெள்ளி எனும் சுக்கிரனின் வலிமை



அடுத்து வெள்ளி கோள் 12 வீடுகளில் இருக்கும் நிலையில் உள்ள அதன் வலிமை அல்லது திறனைப் பார்ப்போம்.


ஆட்சி:

வெள்ளி கோளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு வீடுகள் முறையே ரிசபமும் துலாமும் ஆகும். இந்த இரண்டு வீடுகளும் வெள்ளிக்கு ஒதுக்கப்பட்ட முறை குறித்து முன்பே பதிவு செய்துள்ளோம். அதாவது, உள்வட்டக் கோள்களில் புதனுக்கு அடுத்து வருவது வெள்ளி. எனவே, புதனின் வீடான மிதுனத்திற்கு அடுத்துள்ள வீடான ரிசபமும், கன்னிக்கு அடுத்துள்ள வீடான துலாமும், வெள்ளியின் ஆட்சி வீடுகள் ஆகும்



மூலத்திரிகோணம்:

மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க வேண்டும் என பார்த்தோம்.
1.   அக் கோளிற்கு சொந்த வீடாக இருக்க வேண்டும்
2.   அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
4.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக் கூடாது
5.   ஐந்து மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.

மேற்கூறிய விதிகளை ரிசபம் மற்றும் துலாம் ஆகிய இரண்டிற்கும் பொருத்திப்பார்ப்போம்.

ரிசபம்:

(1) வெள்ளியின் ஆட்சி வீடு. (2) ரிசபத்தில் சந்திரன் உச்சம். (3) ரிசபத்திற்கு முன் உள்ள வீடான மேசம் சமமாகவும் அடுத்துள்ள வீடான மிதுனமும் நட்பு நிலையிலும் உள்ளன. (4) எனவே, அடுத்துள்ள வீடுகளில் எதுவும் பகையாக இல்லை. (5) ரிசபத்திற்கு இரண்டாவது கோணமான 5-ம் வீடு சிம்மம் பகை வீடாகும், மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீடான மகரம் நட்பு எனும் நிலையில் உள்ளது.

துலாம்:

(1) வெள்ளியின் ஆட்சி வீடு. (2) துலாத்தில் சனி உச்சம் அடைகிறது (3) துலாமுக்கு முன் உள்ள வீடான கன்னியும், அடுத்துள்ள வீடான விருச்சிகமும் வெள்ளிக்கு நட்பு வீடுகள். (4) எனவே, அடுத்துள்ள வீடுகள் பகைவீடுகள் இல்லை. (5) துலாத்திற்கு இரண்டாவது கோணமான 5-ம் வீடு கும்பம் நட்பு வீடாகும், மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீடான மிதுனமும் நட்பு எனும் நிலையில் உள்ளது.

மேற்சொன்ன விதிமுறைகளில் ரிசபத்திற்கு இரண்டாம் கோண வீடான சிம்மம் பகை வீடு எனவே, விதி பொருந்தவில்லை. மேலும் மிக முக்கியமான ஒரு தகவல் என்னவென்றால், சந்திரனுக்கு மூலத்திரிகோண வீடு ரிசபம் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இரண்டு கோள்களுக்கு ஒரே வீடு மூலத்திரிகோணமாக இருக்க முடியாது. எனவே, ரிசபம் இந்தக் கணக்கில் இருந்து விலக்கப்படும் நிலையில் உள்ளது. ஆகவே, விதிகள் முற்றிலும் பொருந்திவரும் துலாம் இராசியே, வெள்ளி எனும் சுக்கிரனுக்கு மூலத்திரிகோண வீடாக உள்ளது. வெள்ளி துலாம் இராசியில் 0-பாகை முதல் 15-பாகை வரையில் மூலத்திரிகோணம் அடைகிறது.




உச்சம்:

உச்சம் என்பது மிகைத் திறன் கொண்டது. சூரிய மண்டலத்தில், உள்வட்டத்தில் புதனும் வெள்ளியும் இருப்பதையும், புதன் எவ்வாறு கன்னியில் உச்சம் அடைகிறது என்பதையும் சென்ற பதிவில் பார்த்தோம். புதனைப் போலவே வெள்ளியும் சூரியனுக்கு மிக அருகில் சுற்றிவரும் கோள் என்பதால், அதன் உச்ச நிலை என்பது சூரியனின் ஆட்சி வீடு அல்லது சூரியனின் உச்ச வீடுகளைத் தவிர்த்து அதன் அருகில் உள்ள வீடுகளில்தான் நிகழ முடியும். சூரியனின் வீடான சிம்மத்திற்கு அடுத்துள்ள வீடான கன்னியில் புதன் உச்சம் அடையும் நிலை உள்ளதால், அதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது. அதுபோல், சூரியன் உச்சம் அடையும் வீடான மேசத்திற்கு அடுத்துள்ள வீடுகளில், ரிசபத்தில் சந்திரன் உச்சம் அடைந்திருப்பதால் அதனைக் கணக்கில் கொள்ள முடியாது. எனவே, மேசத்திற்கு முன் உள்ள வீடான மீனத்தை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே அங்கு இன்னொரு உள்வட்டக் கோளான புதன் நீச்சம் அடைந்துள்ள நிலையில், வெள்ளியானது சூரியனின் முழு ஒளித்திறனையும், தனது கதிர்வீச்சுகளையும், மீனத்தில் முழுமையாக செலுத்தி, உச்ச நிலையினை அடைய முடியும் என்பது ஏற்புடையதாக உள்ளது. எனவே, வெள்ளியானது மீனத்தில் உச்சம் அடைகிறது என்பதை ஏற்புடையதே. வெள்ளி எனும் சுக்கிரன் மீனத்தில் 0-பாகை முதல் 27-பாகை வரையில் உச்சம் அடைகிறது என சோதிட நூல்கள் கூறுகின்றன.



நீச்சம்:

நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில் வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரான புதனின் வீடான கன்னியில் 0-பாகை முதல் 27-பாகை வரையில் வெள்ளியானது நீச்ச நிலையில் இருக்கும் என்பதும் ஏற்புடையதே.



நட்பு, சமம், பகை:

ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து, 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அதன்படி, வெள்ளி மூலத்திரிகோணம் அடைந்துள்ள துலாம் வீட்டிற்கு அடுத்துள்ள, 2-விருச்சிகம்(செவ்வாய்), 4-மகரம்(சனி), 5-கும்பம்(சனி), 8-ரிசபம்(வெள்ளி), 9-மிதுனம்(புதன்), 12-கன்னி(புதன்) ஆகிய நட்பு எனும் நிலை வருகிறது. இதில், ரிசபம்-ஆட்சி, கன்னி-நீச்சம் என்பதால் இவற்றை விலக்கிட வேண்டும். மீதமுள்ள விருச்சிகம், மகரம், கும்பம், மிதுனம் ஆகியவை நட்பு வீடுகளாகும்.

பகை வீடுகள் எனும்போது, 3-தனுசு(வியாழன்), 6-மீனம்(வியாழன்), 7-மேசம்(செவ்வாய்), 10-கடகம்(சந்திரன்), 11-சிம்மம்(சூரியன்) என வரும் நிலை உள்ளது. இங்கு வியாழனின் வீடான மீனத்தில் உச்சம் பெறுவதால், அதன் இன்னொரு வீடான தனுசுவை பகை எனக் கொள்ள முடியாது. எனவே தனுசு-சமம். அதேபோல் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் நட்பாக உள்ள நிலையில் செவ்வாயின் இன்னொரு வீடான மேசத்தை பகை எனக் கொள்ளமுடியாது. எனவே, மேசம்-சமம்.  மீனம் உச்ச வீடு எனும் நிலையில் விலக்கு பெறுகிறது. ஆகவே வெள்ளியின் பகை வீடுகள் முறையே கடகமும் சிம்மமும் மட்டுமே.

இதன்படி, வெள்ளியின் நட்பு வீடுகள்: விருச்சிகம், மகரம், கும்பம், மிதுனம்;  பகை வீடுகள்: கடகம், சிம்மம்;  சமம் வீடுகள்: தனுசு, மேசம் ஆகும்.


இங்கு வரையறை செய்த வகையில் இராசிகளில் வெள்ளியின் வலிமை அல்லது நிலை





கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.



கோள்களுக்கிடையேயான உறவுகள்:

கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக் கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல் முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள் எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள் பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. அத்தகைய முறைப்படி வெள்ளிக்கு நட்பு கோள்கள்: சனி, புதன்;  சமக் கோள்கள்: செவ்வாய், வியாழன்; பகைக் கோள்கள்: சூரியன், சந்திரன் ஆகும்.



மேலே கூறியவற்றின் அடிப்படையில் வெள்ளியின் வலிமை அல்லது நிலை பற்றிய தொகுப்பு



மேசம்
சமம்
துலாம்
ஆட்சி, மூலத்திரிகோணம்(0-15)
ரிசபம்
ஆட்சி
விருச்சிகம்
நட்பு
மிதுனம்
நட்பு
தனுசு
சமம்
கடகம்
பகை
மகரம்
நட்பு
சிம்மம்
பகை
கும்பம்
நட்பு
கன்னி
நீச்சம் (0-27)
மீனம்
உச்சம்(0-27)



கோள்களுடன் உறவு நிலை

நட்பு
சமம்
பகை
சனி
புதன்
செவ்வாய்
வியாழன்
சூரியன்
சந்திரன்



அடுத்து .. இராகு-கேதுவின் நிலை


Monday, August 22, 2016

வீடுகளில் புதனின் வலிமை



அடுத்து புதன் கோள் 12 வீடுகளில் இருக்கும் நிலையில் உள்ள அதன் வலிமை அல்லது திறனைப் பார்ப்போம்.


ஆட்சி:

புதன் கோளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு வீடுகள் முறையே மிதுனமும் கன்னியும் ஆகும். இந்த இரண்டு வீடுகளும் புதனுக்கு ஒதுக்கப்பட்ட முறை குறித்து முன்பே பதிவு செய்துள்ளோம். அதாவது, உள்வட்டக் கோள்களில் முதலில் வருவது புதன். எனவே, சூரியனுக்கு அடுத்துள்ள வீடான கன்னியும், சந்திரனுக்கு அடுத்துள்ள வீடான மிதுனமும், புதனின் வீடுகள் என்பதால் இவை இரண்டும் புதனின் ஆட்சி வீடுகள் ஆகும்.



மூலத்திரிகோணம்:

மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க வேண்டும் என பார்த்தோம்.
1.   அக் கோளிற்கு சொந்த வீடாக இருக்க வேண்டும்
2.   அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
4.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக் கூடாது
5.   ஐந்து மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.

மேற்கூறிய விதிகளை மிதுனம் மற்றும் கன்னி ஆகிய இரண்டிற்கும் பொருத்திப்பார்ப்போம்.

மிதுனம்:
(1) புதனின் ஆட்சி வீடு. (2) மிதுனத்தில் எந்த கோளும் உச்சம் பெறவில்லை. (3) மிதுனத்திற்கு முன் உள்ள வீடான ரிசபம் நட்பாகவும், அடுத்துள்ள வீடான கடகம் பகையாகவும் உள்ளன. (4) எனவே, அடுத்துள்ள வீடுகளில் கடகம் பகையாக உள்ளது. (5) மிதுனத்திற்கு இரண்டாவது கோணமான 5-ம் வீடு துலாம் நட்பு வீடாகும், மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீடான கும்பம் சமம் எனும் நிலையில் உள்ளது.


கன்னி:
(1) புதனின் ஆட்சி வீடு. (2) கன்னியில் புதனே உச்சம் அடைகிறது (விளக்கம் கீழே). (3) கன்னிக்கு முன் உள்ள வீடான சிம்மமு, அடுத்துள்ள வீடான துலாமும் புதனுக்கு நட்பு வீடுகள். (4) எனவே, அடுத்துள்ள வீடுகள் பகைவீடுகள் இல்லை. (5) கன்னிக்கு இரண்டாவது கோணமான 5-ம் வீடு மகரம் நட்பு வீடாகும், மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீடான ரிசபமும் நட்பு எனும் நிலையில் உள்ளது.

மேற்சொன்ன விதிமுறைகள்படி, மிதுனத்தில் எந்த கோளும் உச்சமில்லை என்பதுடன், கடகத்தில் பகையாகவும் உள்ளது. ஆனால், கன்னியில், புதன் தனது சொந்த வீட்டிலேயே உச்சம் அடைவது சிறப்புடையதாக இருக்கிறது. 5 மற்றும் 9-ம் கோண வீடுகளும் நட்பு நிலையில் இருப்பதால், புதனுக்கு கன்னி இராசியே, மூலத்திரிகோண வீடாகவும்  இருக்கிறது. புதன் கன்னியில் 15-பாகை முதல் 20-பாகை வரையில் மூலத்திரிகோண நிலையில் இருக்கிறது என சோதிட நூல்கள் கூறுகின்றன.




உச்சம்:

உச்சம் என்பது மிகைத் திறன் கொண்டது. சூரிய மண்டலத்தில், உள்வட்டத்தில் புதனும் வெள்ளியும், வெளி வட்டத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனியும் இருப்பதை அறிவோம். உள் வட்டத்தில் உள்ள புதனும் வெள்ளியும் சூரியனை மிக நெருக்கமாகச் சுற்றிவருவதை அறிவோம். அதுபோல், இராசிக் கட்டத்தில் புதன் எப்போதும் சூரியன் இருக்கும் வீடு அல்லது சூரியன் இருக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டில் மட்டுமே இருக்கும் என்றும் அது ஏன் என்றும் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அதாவது, புதன் சூரியனுக்கு மிக அருகிலேயே இருக்க வேண்டி இருப்பதால் அது தன் முழுக் கதிர்வீச்சினையும் செலுத்தும் வாய்ப்பானது, சூரியனுக்கு அடுத்துள்ள வீட்டில்தான் நிகழ முடியும். அதன்படி, அந்த வீடு சூரியன் உச்சமாக இருக்கும் மேசத்திற்கு முன்புறமுள்ள மீனம் அல்லது ரிசபமாக இருக்க வேண்டும். அல்லது சூரியனின் சொந்த வீடும் மூலத்திரிகோண வீடுமான சிம்மத்திற்கு முன் உள்ள கடகமும் அல்லது அடுத்துள்ள கன்னியாகவும் இருக்க வேண்டும். இங்கே, மீனம் சுக்கிரனின் உச்ச வீடாகவும், ரிசபம் சந்திரனின் உச்ச வீடாகவும், கடகம் வியாழனின் உச்ச வீடாகவும் இருக்கும் நிலையில், அதாவது ஒரே வீட்டில் இரண்டு கோள்கள் உச்ச நிலையில் இருக்க முடியாது எனும் யதார்த்த நிலையில், மீதம் இருக்கும் கன்னிதான் கணக்கில் வருகிறது. எனவே, சிம்மத்திற்கு அடுத்துள்ள கன்னியில் புதன் உச்சம் அடைகிறது என்பது ஏற்புடையதே. சோதிட நூல்களின் கருத்துப்படி, புதன், கன்னியில் 0-பாகை முதல் 15-பாகை வரையில் உச்சம் அடைகிறது.



நீச்சம்:

நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில் வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரான மீனத்தில் 0-பாகை முதல் 15-பாகை வரையில் நீச்ச நிலையில் இருக்கும் என்பதும் ஏற்புடையதே.


நட்பு, சமம், பகை:

ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து, 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அதன்படி, 2-துலாம்(வெள்ளி), 4-தனுசு(வியாழன்), 5-மகரம்(சனி), 8-மேசம்(செவ்வாய்), 9-ரிசபம்(வெள்ளி), 12-சிம்மம்(சூரியன்). பகைவீடுகள் எனும் கணக்கில், 3-விருச்சிகம்(செவ்வாய்), 6-கும்பம்(சனி), 7-மீனம்(வியாழன்), 10-மிதுனம்(புதன்), 11-கடகம்(சந்திரன்) என வருகிறது. இங்கு, விருச்சிகம் செவ்வாயின் வீடாக இருப்பதால், மேசத்தில் உள்ள செவ்வாய் நட்பாக இருக்கும் நிலையில், செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிகத்தை பகை எனக் கொள்ள முடியாது என்பதால், சமம் எனக் கொள்ள வேண்டும். அடுத்து மகரம்(சனி) நட்பாக இருக்கும் நிலையில், கும்பம்(சனி) பகை எனக் கொள்ள முடியாது என்பதால் சமம் எனக் கொள்ள வேண்டும். மீனத்தில் புதன் நீச்சம் என்பதால் அதனை விலக்கிவிட வேண்டும். மிதுனம் புதனின் வீடு என்பதால் அதனையும் பகையிலிருந்து நீக்கிட வேண்டும். ஆக, பகை வீடுகள் எனும்போது, கடகம் மட்டுமே வருகிறது. இதன்படி, நட்பு: துலாம், தனுசு, மகரம், மேசம், ரிசபம், சிம்மம்; பகை: கடகம்; சமம்: விருச்சிகம், கும்பம்.


இங்கு வரையறை செய்த வகையில் இராசிகளில் புதனின் வலிமை அல்லது நிலை



கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.


கோள்களுக்கிடையேயான உறவுகள்:

கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக் கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல் முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள் எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள் பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. அத்தகைய முறைப்படி புதனுக்கு நட்பு கோள்கள்: சூரியன், வெள்ளி;  சமக் கோள்: செவ்வாய், வியாழன், சனி; பகைக் கோள்: சந்திரன் ஆகும்.



மேல் கூறியவற்றின் அடிப்படையில் புதனின் வலிமை அல்லது நிலை பற்றிய தொகுப்பினைக் கீழே காண்போம்.



மேசம்
நட்பு
துலாம்
நட்பு
ரிசபம்
நட்பு
விருச்சிகம்
சமம்
மிதுனம்
ஆட்சி
தனுசு
நட்பு
கடகம்
பகை
மகரம்
நட்பு
சிம்மம்
நட்பு
கும்பம்
சமம்
கன்னி
ஆட்சி, மூலத்திரிகோணம்(15-20)
உச்சம்( 0-15)
மீனம்
நீச்சம் (0-15)



கோள்களுடன் உறவு நிலை

நட்பு
சமம்
பகை
வெள்ளி
சூரியன்
செவ்வாய்
வியாழன்
சனி
சந்திரன்

அடுத்து .. வெள்ளியின் நிலை




Saturday, August 20, 2016

வீடுகளில் சனியின் வலிமை



அடுத்து சனிக்கோள் 12 வீடுகளில் இருக்கும் நிலையில் உள்ள அதன் வலிமை அல்லது திறனைப் பார்ப்போம்.


ஆட்சி:

சனிக் கோளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு வீடுகள் மகரமும் கும்பமும் ஆகும். இரண்டு வீடுகளும் அடுத்தடுத்து அமைந்திருப்பது சிறப்பு. சூரிய மையக் கொள்கைப்படியும் பூமி மையக் கொள்கைப்படியும் சனியானது வெளிவட்டக் கோளின் கடைசியில் உள்ள கோளாகும். எனவே, சூரியனின் வீடான சிம்ம வரிசைப்படி கடைசியில் வருவது மகரம். சந்திரனின் வீடான கடக வரிசைப்படி கடைசியில் வருவது கும்பமாகும். கோள்களுக்கான இட ஒதுக்கீட்டில் இவ்விரண்டு வீடுகளும் சனிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அதன்படி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய இரண்டு வீடுகளும், சனியின் ஆட்சி வீடுகளாகும்.

மூலத்திரிகோணம்:

மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க வேண்டும் என பார்த்தோம்.

1.   அக் கோளிற்கு சொந்த வீடாக இருக்க வேண்டும்
2.   அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
4.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக் கூடாது
5.   ஐந்து மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.

மேற்கூறிய விதிகளை மகரம் மற்றும் கும்பம் ஆகிய இரண்டிற்கும் பொருத்திப்பார்ப்போம்.

மகரம்:
(1) மகரம் சனியின் ஆட்சி வீடு. (2) மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறது. (3) இருபுறமும் உள்ள வீடுகளான – 2-கும்பம் ஆட்சியாகவும், 12-தனுசு-நட்பு அல்லது சமம் எனும் நிலையிலும் உள்ளன. (4) எனவே, இருபுறமும் பகை வீடுகள் இல்லை. (5) ஐந்தாவது வீடான ரிசபமும் ஒன்பதாவது வீடான கன்னியும் நட்பாக உள்ளன.

கும்பம்:

(1) கும்பம் சனியின் ஆட்சி வீடு. (2) கும்பத்தில் எந்தக் கோளும் உச்ச நிலையில் இல்லை (3) இருபுறமும் உள்ள வீடுகளான – 2-மீனம் நட்பு வீடாகவும், 12-மகரம் ஆட்சி வீடாகவும் உள்ளன (4) எனவே, இருபுறமும் பகை வீடுகள் இல்லை. (5) ஐந்தாவது வீடான மிதுனம் நட்பாக உள்ளது. அதே வேளையில் ஒன்பதாவது வீடான துலாம், சனியின் உச்ச வீடாக உள்ளது.

மேற்சொன்ன விதிமுறைகள்படி, மகரம் அனைத்திலும் பொருந்திவருகிறது. அதே வேளையில், கும்பத்தில் எந்த கோளும் உச்ச மில்லை எனும் தகுதியைத் தவிர மற்ற விதிகள் பொருந்தி வருகின்றன. எனவே மகரம்தான் மூலத்திரிகோணமாக இருக்க வேண்டும். ஆனால் சோதிட நூல்கள், கும்பத்தினை சனியின் மூலத்திரிகோண வீடாகக் குறிப்பிடுகின்றன. இங்கு மிக முக்கியத் தகவல் என்னவென்றால், கும்பத்திற்கு மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீட்டில், சனி உச்சம் பெறுதல் சிறப்புடையதாக உள்ளது. இதே போன்ற நிலை சூரியனுக்கும் இருப்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். ஒருவேளை மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீட்டில் சனி உச்சம் பெறும் சிறப்பைக் கருதி, சனியின் மூலத் திரிகோண வீடாக  கும்பத்தைக் குறிப்பிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆக, சனியின் மூலத் திரிகோண வீடாக கும்பம் என குறிப்பிடப்படுவதையும் அது 0-பாகை முதல் 20-பாகை வரையில் மூலத்திரிகோண அளவில் இருப்பதையும் ஏற்க வேண்டியுள்ளது.

உச்சம்:

உச்சம் என்பது மிகைத் திறன் கொண்டது. சூரிய மண்டலத்தில், உள்வட்டத்தில் புதனும் வெள்ளியும், வெளி வட்டத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனியும் இருப்பதை அறிவோம். சனியானது, சூரியனிடமிருந்து மிக அதிகத் தூரத்தில் இருப்பதால் சூரியனின் வெப்பத்தாக்கம் மிகவும் குறைவு என்பதால், இது பனிக் கோள் என அழைக்கப்படுகிறது. எனவே அதன் முழுக் கதிர்வீச்சானது, இந்த பூமியின் மீது தாக்குதல் செய்வதற்கு சூரியன் தடையாக இருக்கக் கூடாது. அதவாது சூரியனின் வலிமை குறைவாக இருக்கும் நிலை வேண்டும். நாம் ஏற்கனவே பதிவு செய்த வகையில் சூரியனானது ஐப்பசி மாதத்தில் வெப்பம் குறைவாக இருக்கும் என்பதும், அது அத்தகைய கால அளவில் துலா இராசியில் இருக்கும் என்பதையும், அவ்வாறு துலா இராசியில் இருக்கும்போது ஆற்றல் குறைவாக இருக்கும் நிலையில் நீச்சமாக இருக்கும் என்றும் பார்த்தோம். ஆக, சூரியன் வலுக் குறைந்து அல்லது நீச்ச நிலையில் இருக்கும்போது மட்டுமே, சனியால் முழுத் தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். அதாவது அப்போதுதான் சனியானது முழு உச்ச நிலையில் இருக்க முடியும். ஆகவே, சனியானது துலாத்தில் உச்சம் அடையும் என்பது ஏற்புடையதாக இருக்கிறது. சோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டவாறு, சனியானது துலா இராசியில் 0-பாகை முதல் 20 பாகை வரையில் மிகை உச்சம் அடைகிறது.



நீச்சம்:

நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில் வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரானதும் சூரியன் உச்சமாக இருக்கும் இடமான மேச இராசியில், சனியானது 0-பாகை முதல் 20-பாகை வரையில் நீச்ச நிலையில் இருக்கும் என்பதும் ஏற்புடையதே.

நட்பு, சமம், பகை:

ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து, 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். 2-மீனம்(வியாழன்), 4-ரிசபம்(வெள்ளி), 5-மிதுனம்(புதன்), 8-கன்னி(புதன்), 9-துலாம்(வெள்ளி), 12-மகரம்(சனி) என இருக்கும் நிலையில், 9வது வீடான துலாத்தில் உச்சமும், 12வது வீடான மகரத்தில் ஆட்சியும் பெறும் நிலையினை விலக்கிவிட்டால், சனியின் நட்பு வீடுகள்: மீனம், ரிசபம், மிதுனம், கன்னி ஆகியவையாகும், பகை வீடுகள் எனும்போது, 3-மேசம்(செவ்வாய்), 6-கடகம்(சந்திரன்), 7-சிம்மம்(சூரியன்), 10-விருச்சிகம்(செவ்வாய்), 11-தனுசு(வியாழன்). இங்கு, மேசத்தில் நீச்சம் அடைவதால், அதனை விலக்கிவிடவேண்டும். அதேபோல், தனுசு பகைவீடு எனும் நிலையில் இருந்தாலும், வியாழனின் இன்னொரு வீடான மீனம் நட்பாக இருப்பதால், இதனைப் பகை எனக் கொள்ளாமல், சமம் எனக் கொள்வதே முறையாகும். ஆக, சனியின் பகை வீடுகள் முறையே, கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகியவையாகும். சமம் எனும் நிலையில் மீனம் இருக்கிறது.


இங்கு வரையறை செய்த வகையில் இராசிகளில் சனியின் வலிமை அல்லது நிலை



கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.


கோள்களுக்கிடையேயான உறவுகள்:

கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக் கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல் முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள் எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள் பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. அத்தகைய முறைப்படி  சனிக்கு நட்பு கோள்கள்: வெள்ளி, புதன்;  சமக் கோள்: வியாழன்; பகைக் கோள்கள்: சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகும்.

மேல் கூறியவற்றின் அடிப்படையில் சனியின் வலிமை அல்லது நிலை பற்றிய தொகுப்பினைக் கீழே காண்போம்.



மேசம்
நீச்சம் (0-20)
துலாம்
உச்சம் (0-20)
ரிசபம்
நட்பு
விருச்சிகம்
பகை
மிதுனம்
நட்பு
தனுசு
சமம்
கடகம்
பகை
மகரம்
ஆட்சி
சிம்மம்
பகை
கும்பம்
ஆட்சி; மூலத்திரிகோணம்(0-20)
கன்னி
நட்பு
மீனம்
நட்பு


கோள்களுடன் உறவு நிலை

நட்பு
சமம்
பகை
புதன்
வெள்ளி
வியாழன்
சூரியன்
சந்திரன்
செவ்வாய்




அடுத்து .. புதனின் நிலை