Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, August 14, 2016

வீடுகளில் சந்திரனின் வலிமை



அடுத்து சந்திரன் 12 வீடுகளில் இருக்கும் நிலையில் உள்ள வலிமை அல்லது திறனைப் பார்ப்போம்.




ஆட்சி:

சந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு கடகம் ஆகும். அதாவது இராசி மண்டலத்தில் 91 பாகை முதல் 120 பாகைவரை உள்ள பகுதியாகும். அது எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே நாம் பதிவு செய்துவிட்டோம். கடகம் மட்டுமே சந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதுவே சந்திரனின் ஆட்சி வீடாகும்..



மூலத்திரிகோணம்:

மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்.
1.   அக் கோளிற்கு சொந்த வீடாக இருக்க வேண்டும்
2.   அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
4.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக் கூடாது
5.   ஐந்து மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.

முதல் விதியான சொந்த வீடு என்பது சந்திரனுக்கு கடகம் மட்டுமே. அடுத்து அந்த வீட்டில் வியாழன் உச்சம் பெற்றிருக்கிறது. அதற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளான மிதுனமும் சிம்மமும்  நட்பு நிலையிலேயே இருக்கின்றன. ஆனால் ஐந்தாவது விதிப்படி ஐந்து மற்றும் ஒன்பதாவது கோண வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும். இங்கு ஒன்பதாவது வீடு சமம் எனும் நிலையில் இருக்கும். ஆனால் தமது ஐந்தாவது வீடான விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் எனும் நிலையில் இருக்கும். ஐந்தாவது கோணம் வலிமையாக இருக்க வேண்டும் எனும் விதிப்படி, நீச்ச நிலையில் உள்ளதைத் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கடக வீடானது சந்திரனுக்கு மூலத் திரிகோணம் எனும் நிலையில் இருப்பதில் தகுதி இழப்பினை பெறுகிறது.

சந்திரனுக்கு ஆட்சி வீடு ஒரு வீடுதான் எனும் நிலையில், இன்னொரு வலிமையான வீட்டினைத் தேர்வு செய்ய வேண்டிய நிலையில், அது சந்திரனின் உச்ச வீடான ரிசபம் மட்டுமே. எனவே விதிவிலக்காக, ரிசப இராசியைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. மேற்கூறிய ஐந்து விதிகளில், ஆட்சி வீடு எனும் நிலையினைத் தவிர, பிற தகுதிகள் அனைத்தும் இதற்கு பொருந்திவருவதால், ரிசபத்தினையே சந்திரனின் மூலத் திரிகோண வீடாகக் கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, ரிசபத்தில் சந்திரன் 3 பாகை முதல் 30 பாகை வரையில் மூலத் திரிகோணம் பெறுகிறது. அதாவது, இராசி மண்டலத்தில், 330வது பாகை முதல் 600வது பாகை வரையில் மூலத் திரிகோணம் அடைகிறது.



உச்சம்:

உச்சம் என்பது மிகைத் திறன் கொண்டது. சந்திரனைப் பொருத்தவரையில், சூரியனின் ஒளிக்கதிர்களையே பிரதிபலிக்கிறது. முழு ஒளியைப் பிரதிபலிக்கும் காலம் முழுநிலவுக் காலம் எனவும், ஒளியை முற்றிலும் இழக்கும் காலம் இருள் நிலவுக் காலம் எனவும் வழங்குகிறோம். சித்திரையில்தான் சூரியனின் முழு ஒளிக்கதிர்கள் பூமியில் வெப்ப மிகுதியோடு கிடைக்கிறது என முன்பதிவில் பார்த்தோம். அத்தகைய சூழலில்தான், அதன் முழு ஒளிக்கதிரையும் சந்திரன் பெற்று பூமியின்மீது பிரதிபலிக்க முடியும்.  அதுவும் குறிப்பாக அக்னி நட்சத்திரக்காலம் எனப்படும் கால அளவில் அதன் வெளிப்பாடு அதிகமாக இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டவாறு, அது பரணியின் 3-ல் தொடங்கி கார்த்திகை முழுமைக்கும் இருக்கும் என பார்த்தோம். அதன்படி, கார்த்திகையின் 2, 3, 4வது பாகங்கள் ரிசபத்தில் இருக்கும் கால அளவில் அதன் கதிர்வீச்சினை முழுமையாகப் பெற முடியும். மேலும், சோதிட கணக்கீட்டின்படி, கார்த்திகை விண்மீனுக்கு அதிபதி சூரியன் ஆகும். அக்னியின் நடுப்பகுதியான கார்த்திகை இரண்டாம் பாகத்தில் சந்திரனானது, சூரியனிடமிருந்து பெற்ற கதிர்வீச்சினை முழுமையாக இப்புவியின் மீது செலுத்தும் நிலை உள்ளது. அதுவே, சந்திரனின் உச்ச நிலையாகும். அந்த உச்ச நிலை என்பது ரிசப இராசியில் 0-பாகை முதல் 3-பாகவரை மிக உச்ச நிலையில் இருக்கும். எனவே, சந்திரன் உச்சம் அடையும் இராசியாக ரிசபம் இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய வரையறையாகும்.



நீச்சம்:

நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில் வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரான விருச்சிக வீடானது, சந்திரனுக்கு நீச்ச வீடாக இருக்கும். பாகை அளவு என்பது, உச்ச நிலைக் கணக்கின்படியே, 0-முதல் 3-பாகை வரையில் இருக்கும்.



நட்பு, சமம், பகை:

ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து, 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இங்கு, சந்திரனுக்கு மூலத் திரிகோண வீடானது ரிசபமாகும். 2-மிதுனம்(புதன்), 4-சிம்மம்(சூரியன்), 5-கன்னி(புதன்), 8-தனுசு(வியாழன்), 9-மகரம் (சனி), 12-மேசம் (செவ்வாய்) ஆகியவை நட்பு வீடுகளாக வருகின்றன. பகைவீடுகள் எனும் நிலையில் 3-கடகம்(சந்திரன்), 6-துலாம்(வெள்ளி), 7-விருச்சிகம்(செவ்வாய்), 10-கும்பம்(சனி), 11-மீனம்(வியாழன்) என வருகிறது.  இதனை அப்படியே எடுத்துக் கொள்வதற்கு முன்பு, சிற்சில வரையறைகள் செய்ய வேண்டியுள்ளது. அதன்படி, ரிசபம்- சந்திரனுக்கு உச்சம் மற்றும் மூலத் திரிகோணம் என்பதால், ரிசபத்தின் அதிபதியான சுக்கிரன் இருக்கும் மற்றொறு வீடான துலாம் பகை எனும் நிலையில் இருக்க முடியாது அதனை சமம் எனக் கொள்ள வேண்டும். மிதுனமும் கன்னியும் நட்பு எனும் நிலையில் மாற்றம் தேவை இல்லை. கடகம் சந்திரனுக்கு ஆட்சி வீடு. சிம்மம் நட்பு. அடுத்து,  விருச்சிகம் சந்திரனுக்கு நீச்சம். தனுசு நட்பு எனும் நிலையில், வியாழனை அதிபதியாகக் கொண்ட மீனத்தை பகை எனக் கொள்வது சரியில்லை என்பதால், மீனம்- சமம் எனும் நிலையில் கொள்ள வேண்டும். அதேபோல், மகரம் நட்பு எனும் நிலையில் இருப்பதால், அதன் அதிபதியான சனி இருக்கும் கும்பம் பகை எனக் கொள்வதும் சரியில்லை என்பதால், கும்பத்தினை சமம் எனும் நிலையிலேயே வைக்க வேண்டியுள்ளது. இதன்படி – சந்திரனுக்கு நட்பு வீடுகள்: மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம், மேசம் ஆகும். சந்திரனுக்கு சமம் வீடுகள்: துலாம், கும்பம், மீனம் ஆகும். மேற்கூறிய அமைப்பில் ஒரு முக்கிய நிலை என்னவெனில், சந்திரனுக்கு எந்த ஒரு வீடும் பகை எனும் அமைப்பில் வரவில்லை.


இங்கு வரயறை செய்த வகையில் இராசிகளில் சந்திரனின் வலிமை அல்லது நிலை





கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.



கோள்களுக்கிடையேயான உறவுகள்:

கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக் கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல் முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள் எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள் பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. அதன்படி, சந்திரனுக்கு நட்புக்கோள்கள் – சூரியன் மற்றும் புதன் ஆகியவை; பகைக் கோள்கள் – எதுவும் இல்லை சம நிலையில் உள்ள கோள்கள்- செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை. இராகு-கேது பற்றி தனியே ஆய்வு செய்வோம்.  

மேல் கூறியவற்றின் அடிப்படையில் சந்திரனின் வலிமை அல்லது நிலை பற்றிய தொகுப்பினைக் கீழே காண்போம்.

மேசம்
நட்பு
துலாம்
சமம்
ரிசபம்
உச்சம் (0-3)
மூலத்திரிகோணம்(3-30)
விருச்சிகம்
நீச்சம் (0-3)
மிதுனம்
நட்பு
தனுசு
நட்பு
கடகம்
ஆட்சி
மகரம்
நட்பு
சிம்மம்
நட்பு
கும்பம்
சமம்
கன்னி
நட்பு
மீனம்
சமம்


கோள்களுடன் உறவு நிலை


நட்பு
சமம்
பகை
சூரியன்
புதன்
செவ்வாய்
வியாழன்
வெள்ளி
சனி
-



அடுத்து .. செவ்வாயின் நிலை


No comments: