Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, August 20, 2016

வீடுகளில் சனியின் வலிமை



அடுத்து சனிக்கோள் 12 வீடுகளில் இருக்கும் நிலையில் உள்ள அதன் வலிமை அல்லது திறனைப் பார்ப்போம்.


ஆட்சி:

சனிக் கோளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு வீடுகள் மகரமும் கும்பமும் ஆகும். இரண்டு வீடுகளும் அடுத்தடுத்து அமைந்திருப்பது சிறப்பு. சூரிய மையக் கொள்கைப்படியும் பூமி மையக் கொள்கைப்படியும் சனியானது வெளிவட்டக் கோளின் கடைசியில் உள்ள கோளாகும். எனவே, சூரியனின் வீடான சிம்ம வரிசைப்படி கடைசியில் வருவது மகரம். சந்திரனின் வீடான கடக வரிசைப்படி கடைசியில் வருவது கும்பமாகும். கோள்களுக்கான இட ஒதுக்கீட்டில் இவ்விரண்டு வீடுகளும் சனிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அதன்படி, மகரம் மற்றும் கும்பம் ஆகிய இரண்டு வீடுகளும், சனியின் ஆட்சி வீடுகளாகும்.

மூலத்திரிகோணம்:

மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க வேண்டும் என பார்த்தோம்.

1.   அக் கோளிற்கு சொந்த வீடாக இருக்க வேண்டும்
2.   அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
4.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக் கூடாது
5.   ஐந்து மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.

மேற்கூறிய விதிகளை மகரம் மற்றும் கும்பம் ஆகிய இரண்டிற்கும் பொருத்திப்பார்ப்போம்.

மகரம்:
(1) மகரம் சனியின் ஆட்சி வீடு. (2) மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறது. (3) இருபுறமும் உள்ள வீடுகளான – 2-கும்பம் ஆட்சியாகவும், 12-தனுசு-நட்பு அல்லது சமம் எனும் நிலையிலும் உள்ளன. (4) எனவே, இருபுறமும் பகை வீடுகள் இல்லை. (5) ஐந்தாவது வீடான ரிசபமும் ஒன்பதாவது வீடான கன்னியும் நட்பாக உள்ளன.

கும்பம்:

(1) கும்பம் சனியின் ஆட்சி வீடு. (2) கும்பத்தில் எந்தக் கோளும் உச்ச நிலையில் இல்லை (3) இருபுறமும் உள்ள வீடுகளான – 2-மீனம் நட்பு வீடாகவும், 12-மகரம் ஆட்சி வீடாகவும் உள்ளன (4) எனவே, இருபுறமும் பகை வீடுகள் இல்லை. (5) ஐந்தாவது வீடான மிதுனம் நட்பாக உள்ளது. அதே வேளையில் ஒன்பதாவது வீடான துலாம், சனியின் உச்ச வீடாக உள்ளது.

மேற்சொன்ன விதிமுறைகள்படி, மகரம் அனைத்திலும் பொருந்திவருகிறது. அதே வேளையில், கும்பத்தில் எந்த கோளும் உச்ச மில்லை எனும் தகுதியைத் தவிர மற்ற விதிகள் பொருந்தி வருகின்றன. எனவே மகரம்தான் மூலத்திரிகோணமாக இருக்க வேண்டும். ஆனால் சோதிட நூல்கள், கும்பத்தினை சனியின் மூலத்திரிகோண வீடாகக் குறிப்பிடுகின்றன. இங்கு மிக முக்கியத் தகவல் என்னவென்றால், கும்பத்திற்கு மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீட்டில், சனி உச்சம் பெறுதல் சிறப்புடையதாக உள்ளது. இதே போன்ற நிலை சூரியனுக்கும் இருப்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். ஒருவேளை மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீட்டில் சனி உச்சம் பெறும் சிறப்பைக் கருதி, சனியின் மூலத் திரிகோண வீடாக  கும்பத்தைக் குறிப்பிட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. ஆக, சனியின் மூலத் திரிகோண வீடாக கும்பம் என குறிப்பிடப்படுவதையும் அது 0-பாகை முதல் 20-பாகை வரையில் மூலத்திரிகோண அளவில் இருப்பதையும் ஏற்க வேண்டியுள்ளது.

உச்சம்:

உச்சம் என்பது மிகைத் திறன் கொண்டது. சூரிய மண்டலத்தில், உள்வட்டத்தில் புதனும் வெள்ளியும், வெளி வட்டத்தில் செவ்வாய், வியாழன் மற்றும் சனியும் இருப்பதை அறிவோம். சனியானது, சூரியனிடமிருந்து மிக அதிகத் தூரத்தில் இருப்பதால் சூரியனின் வெப்பத்தாக்கம் மிகவும் குறைவு என்பதால், இது பனிக் கோள் என அழைக்கப்படுகிறது. எனவே அதன் முழுக் கதிர்வீச்சானது, இந்த பூமியின் மீது தாக்குதல் செய்வதற்கு சூரியன் தடையாக இருக்கக் கூடாது. அதவாது சூரியனின் வலிமை குறைவாக இருக்கும் நிலை வேண்டும். நாம் ஏற்கனவே பதிவு செய்த வகையில் சூரியனானது ஐப்பசி மாதத்தில் வெப்பம் குறைவாக இருக்கும் என்பதும், அது அத்தகைய கால அளவில் துலா இராசியில் இருக்கும் என்பதையும், அவ்வாறு துலா இராசியில் இருக்கும்போது ஆற்றல் குறைவாக இருக்கும் நிலையில் நீச்சமாக இருக்கும் என்றும் பார்த்தோம். ஆக, சூரியன் வலுக் குறைந்து அல்லது நீச்ச நிலையில் இருக்கும்போது மட்டுமே, சனியால் முழுத் தாக்கத்தினை ஏற்படுத்த முடியும். அதாவது அப்போதுதான் சனியானது முழு உச்ச நிலையில் இருக்க முடியும். ஆகவே, சனியானது துலாத்தில் உச்சம் அடையும் என்பது ஏற்புடையதாக இருக்கிறது. சோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டவாறு, சனியானது துலா இராசியில் 0-பாகை முதல் 20 பாகை வரையில் மிகை உச்சம் அடைகிறது.



நீச்சம்:

நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில் வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரானதும் சூரியன் உச்சமாக இருக்கும் இடமான மேச இராசியில், சனியானது 0-பாகை முதல் 20-பாகை வரையில் நீச்ச நிலையில் இருக்கும் என்பதும் ஏற்புடையதே.

நட்பு, சமம், பகை:

ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து, 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். 2-மீனம்(வியாழன்), 4-ரிசபம்(வெள்ளி), 5-மிதுனம்(புதன்), 8-கன்னி(புதன்), 9-துலாம்(வெள்ளி), 12-மகரம்(சனி) என இருக்கும் நிலையில், 9வது வீடான துலாத்தில் உச்சமும், 12வது வீடான மகரத்தில் ஆட்சியும் பெறும் நிலையினை விலக்கிவிட்டால், சனியின் நட்பு வீடுகள்: மீனம், ரிசபம், மிதுனம், கன்னி ஆகியவையாகும், பகை வீடுகள் எனும்போது, 3-மேசம்(செவ்வாய்), 6-கடகம்(சந்திரன்), 7-சிம்மம்(சூரியன்), 10-விருச்சிகம்(செவ்வாய்), 11-தனுசு(வியாழன்). இங்கு, மேசத்தில் நீச்சம் அடைவதால், அதனை விலக்கிவிடவேண்டும். அதேபோல், தனுசு பகைவீடு எனும் நிலையில் இருந்தாலும், வியாழனின் இன்னொரு வீடான மீனம் நட்பாக இருப்பதால், இதனைப் பகை எனக் கொள்ளாமல், சமம் எனக் கொள்வதே முறையாகும். ஆக, சனியின் பகை வீடுகள் முறையே, கடகம், சிம்மம், விருச்சிகம் ஆகியவையாகும். சமம் எனும் நிலையில் மீனம் இருக்கிறது.


இங்கு வரையறை செய்த வகையில் இராசிகளில் சனியின் வலிமை அல்லது நிலை



கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.


கோள்களுக்கிடையேயான உறவுகள்:

கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக் கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல் முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள் எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள் பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. அத்தகைய முறைப்படி  சனிக்கு நட்பு கோள்கள்: வெள்ளி, புதன்;  சமக் கோள்: வியாழன்; பகைக் கோள்கள்: சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகும்.

மேல் கூறியவற்றின் அடிப்படையில் சனியின் வலிமை அல்லது நிலை பற்றிய தொகுப்பினைக் கீழே காண்போம்.



மேசம்
நீச்சம் (0-20)
துலாம்
உச்சம் (0-20)
ரிசபம்
நட்பு
விருச்சிகம்
பகை
மிதுனம்
நட்பு
தனுசு
சமம்
கடகம்
பகை
மகரம்
ஆட்சி
சிம்மம்
பகை
கும்பம்
ஆட்சி; மூலத்திரிகோணம்(0-20)
கன்னி
நட்பு
மீனம்
நட்பு


கோள்களுடன் உறவு நிலை

நட்பு
சமம்
பகை
புதன்
வெள்ளி
வியாழன்
சூரியன்
சந்திரன்
செவ்வாய்




அடுத்து .. புதனின் நிலை

No comments: