Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, August 24, 2016

வீடுகளில் வெள்ளி எனும் சுக்கிரனின் வலிமை



அடுத்து வெள்ளி கோள் 12 வீடுகளில் இருக்கும் நிலையில் உள்ள அதன் வலிமை அல்லது திறனைப் பார்ப்போம்.


ஆட்சி:

வெள்ளி கோளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு வீடுகள் முறையே ரிசபமும் துலாமும் ஆகும். இந்த இரண்டு வீடுகளும் வெள்ளிக்கு ஒதுக்கப்பட்ட முறை குறித்து முன்பே பதிவு செய்துள்ளோம். அதாவது, உள்வட்டக் கோள்களில் புதனுக்கு அடுத்து வருவது வெள்ளி. எனவே, புதனின் வீடான மிதுனத்திற்கு அடுத்துள்ள வீடான ரிசபமும், கன்னிக்கு அடுத்துள்ள வீடான துலாமும், வெள்ளியின் ஆட்சி வீடுகள் ஆகும்



மூலத்திரிகோணம்:

மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க வேண்டும் என பார்த்தோம்.
1.   அக் கோளிற்கு சொந்த வீடாக இருக்க வேண்டும்
2.   அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
4.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக் கூடாது
5.   ஐந்து மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.

மேற்கூறிய விதிகளை ரிசபம் மற்றும் துலாம் ஆகிய இரண்டிற்கும் பொருத்திப்பார்ப்போம்.

ரிசபம்:

(1) வெள்ளியின் ஆட்சி வீடு. (2) ரிசபத்தில் சந்திரன் உச்சம். (3) ரிசபத்திற்கு முன் உள்ள வீடான மேசம் சமமாகவும் அடுத்துள்ள வீடான மிதுனமும் நட்பு நிலையிலும் உள்ளன. (4) எனவே, அடுத்துள்ள வீடுகளில் எதுவும் பகையாக இல்லை. (5) ரிசபத்திற்கு இரண்டாவது கோணமான 5-ம் வீடு சிம்மம் பகை வீடாகும், மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீடான மகரம் நட்பு எனும் நிலையில் உள்ளது.

துலாம்:

(1) வெள்ளியின் ஆட்சி வீடு. (2) துலாத்தில் சனி உச்சம் அடைகிறது (3) துலாமுக்கு முன் உள்ள வீடான கன்னியும், அடுத்துள்ள வீடான விருச்சிகமும் வெள்ளிக்கு நட்பு வீடுகள். (4) எனவே, அடுத்துள்ள வீடுகள் பகைவீடுகள் இல்லை. (5) துலாத்திற்கு இரண்டாவது கோணமான 5-ம் வீடு கும்பம் நட்பு வீடாகும், மூன்றாவது கோணமான ஒன்பதாம் வீடான மிதுனமும் நட்பு எனும் நிலையில் உள்ளது.

மேற்சொன்ன விதிமுறைகளில் ரிசபத்திற்கு இரண்டாம் கோண வீடான சிம்மம் பகை வீடு எனவே, விதி பொருந்தவில்லை. மேலும் மிக முக்கியமான ஒரு தகவல் என்னவென்றால், சந்திரனுக்கு மூலத்திரிகோண வீடு ரிசபம் என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். இரண்டு கோள்களுக்கு ஒரே வீடு மூலத்திரிகோணமாக இருக்க முடியாது. எனவே, ரிசபம் இந்தக் கணக்கில் இருந்து விலக்கப்படும் நிலையில் உள்ளது. ஆகவே, விதிகள் முற்றிலும் பொருந்திவரும் துலாம் இராசியே, வெள்ளி எனும் சுக்கிரனுக்கு மூலத்திரிகோண வீடாக உள்ளது. வெள்ளி துலாம் இராசியில் 0-பாகை முதல் 15-பாகை வரையில் மூலத்திரிகோணம் அடைகிறது.




உச்சம்:

உச்சம் என்பது மிகைத் திறன் கொண்டது. சூரிய மண்டலத்தில், உள்வட்டத்தில் புதனும் வெள்ளியும் இருப்பதையும், புதன் எவ்வாறு கன்னியில் உச்சம் அடைகிறது என்பதையும் சென்ற பதிவில் பார்த்தோம். புதனைப் போலவே வெள்ளியும் சூரியனுக்கு மிக அருகில் சுற்றிவரும் கோள் என்பதால், அதன் உச்ச நிலை என்பது சூரியனின் ஆட்சி வீடு அல்லது சூரியனின் உச்ச வீடுகளைத் தவிர்த்து அதன் அருகில் உள்ள வீடுகளில்தான் நிகழ முடியும். சூரியனின் வீடான சிம்மத்திற்கு அடுத்துள்ள வீடான கன்னியில் புதன் உச்சம் அடையும் நிலை உள்ளதால், அதனைத் தவிர்க்க வேண்டியுள்ளது. அதுபோல், சூரியன் உச்சம் அடையும் வீடான மேசத்திற்கு அடுத்துள்ள வீடுகளில், ரிசபத்தில் சந்திரன் உச்சம் அடைந்திருப்பதால் அதனைக் கணக்கில் கொள்ள முடியாது. எனவே, மேசத்திற்கு முன் உள்ள வீடான மீனத்தை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. ஏற்கனவே அங்கு இன்னொரு உள்வட்டக் கோளான புதன் நீச்சம் அடைந்துள்ள நிலையில், வெள்ளியானது சூரியனின் முழு ஒளித்திறனையும், தனது கதிர்வீச்சுகளையும், மீனத்தில் முழுமையாக செலுத்தி, உச்ச நிலையினை அடைய முடியும் என்பது ஏற்புடையதாக உள்ளது. எனவே, வெள்ளியானது மீனத்தில் உச்சம் அடைகிறது என்பதை ஏற்புடையதே. வெள்ளி எனும் சுக்கிரன் மீனத்தில் 0-பாகை முதல் 27-பாகை வரையில் உச்சம் அடைகிறது என சோதிட நூல்கள் கூறுகின்றன.



நீச்சம்:

நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில் வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரான புதனின் வீடான கன்னியில் 0-பாகை முதல் 27-பாகை வரையில் வெள்ளியானது நீச்ச நிலையில் இருக்கும் என்பதும் ஏற்புடையதே.



நட்பு, சமம், பகை:

ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து, 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். அதன்படி, வெள்ளி மூலத்திரிகோணம் அடைந்துள்ள துலாம் வீட்டிற்கு அடுத்துள்ள, 2-விருச்சிகம்(செவ்வாய்), 4-மகரம்(சனி), 5-கும்பம்(சனி), 8-ரிசபம்(வெள்ளி), 9-மிதுனம்(புதன்), 12-கன்னி(புதன்) ஆகிய நட்பு எனும் நிலை வருகிறது. இதில், ரிசபம்-ஆட்சி, கன்னி-நீச்சம் என்பதால் இவற்றை விலக்கிட வேண்டும். மீதமுள்ள விருச்சிகம், மகரம், கும்பம், மிதுனம் ஆகியவை நட்பு வீடுகளாகும்.

பகை வீடுகள் எனும்போது, 3-தனுசு(வியாழன்), 6-மீனம்(வியாழன்), 7-மேசம்(செவ்வாய்), 10-கடகம்(சந்திரன்), 11-சிம்மம்(சூரியன்) என வரும் நிலை உள்ளது. இங்கு வியாழனின் வீடான மீனத்தில் உச்சம் பெறுவதால், அதன் இன்னொரு வீடான தனுசுவை பகை எனக் கொள்ள முடியாது. எனவே தனுசு-சமம். அதேபோல் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் நட்பாக உள்ள நிலையில் செவ்வாயின் இன்னொரு வீடான மேசத்தை பகை எனக் கொள்ளமுடியாது. எனவே, மேசம்-சமம்.  மீனம் உச்ச வீடு எனும் நிலையில் விலக்கு பெறுகிறது. ஆகவே வெள்ளியின் பகை வீடுகள் முறையே கடகமும் சிம்மமும் மட்டுமே.

இதன்படி, வெள்ளியின் நட்பு வீடுகள்: விருச்சிகம், மகரம், கும்பம், மிதுனம்;  பகை வீடுகள்: கடகம், சிம்மம்;  சமம் வீடுகள்: தனுசு, மேசம் ஆகும்.


இங்கு வரையறை செய்த வகையில் இராசிகளில் வெள்ளியின் வலிமை அல்லது நிலை





கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.



கோள்களுக்கிடையேயான உறவுகள்:

கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக் கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல் முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள் எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள் பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. அத்தகைய முறைப்படி வெள்ளிக்கு நட்பு கோள்கள்: சனி, புதன்;  சமக் கோள்கள்: செவ்வாய், வியாழன்; பகைக் கோள்கள்: சூரியன், சந்திரன் ஆகும்.



மேலே கூறியவற்றின் அடிப்படையில் வெள்ளியின் வலிமை அல்லது நிலை பற்றிய தொகுப்பு



மேசம்
சமம்
துலாம்
ஆட்சி, மூலத்திரிகோணம்(0-15)
ரிசபம்
ஆட்சி
விருச்சிகம்
நட்பு
மிதுனம்
நட்பு
தனுசு
சமம்
கடகம்
பகை
மகரம்
நட்பு
சிம்மம்
பகை
கும்பம்
நட்பு
கன்னி
நீச்சம் (0-27)
மீனம்
உச்சம்(0-27)



கோள்களுடன் உறவு நிலை

நட்பு
சமம்
பகை
சனி
புதன்
செவ்வாய்
வியாழன்
சூரியன்
சந்திரன்



அடுத்து .. இராகு-கேதுவின் நிலை


No comments: