Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, September 19, 2016

வீடுகளில் இராகு-கேதுவின் வலிமை-1

[பதிவுகளை தொடர்ச்சியாக எழுத முனைந்தாலும், தவிர்க்க முடியாத சில காரணங்களினால் தாமதப்பட்டுவிடுகிறது – இனி தாமதத்தை தவிர்க்க முயல்கிறேன்]






சோதிடத்தில் இராசி மண்டலக் கணக்கில் ஒன்பது கோள்கள் உள்ளதில், இராகுவும் கேதுவும் சூரிய-சந்திர பாதையின் வெற்றிட முனைகள் என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். எனவே இவை நிழல்கோள்கள் என அழைக்கப்படுவதையும் நாம் அறிவோம்.

ஒன்பது கோள்கள் என்று கூறினாலும், சோதிடத்தில் இராகு-கேதுவின் பயன்பாடு என்பது பிற்காலக் கணக்கில்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. வராக மிகிரரின் பிருகத் சாதகத்தில், இராகு-கேது பற்றி குறிப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. இராகு பற்றி ஐந்துக்கு குறைவாகவும், கேது பற்றி ஒரே ஒரு இடத்திலும் மட்டுமே வராக மிகிரர் குறிப்பிடுகிறார். திசை-புத்தியில் கூட தற்போது நடைமுறையில் உள்ள விம்சோத்திரி திசையை பயன்படுத்தாமல், மூல திசை எனும் முறையைப் பயன்படுத்தியதில், ஏழு கோள்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார். அதிலும் இராகு கேது காணப்படவில்லை. வராகமிகிரரின் காலம் என்பது கி.பி. ஆறாம் நூற்றாண்டு என்பதாகும். அதாவது இன்றைக்கு 1500 ஆண்டுகள் முற்பட்ட  காலமாகும். அவருக்கு முந்தைய காலத்தில் இராகு-கேது சோதிட பயன்பாட்டில் இருந்ததா என்பது தெரியவில்லை. ஆனால் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மந்திரேசுவரர் எழுதிய பலதீபிகாவில் இராகு-கேதுக்களின் பயன்பாடு கூறப்பட்டுள்ளது. அஸ்டவர்க்கக் கணிதம் எனும் எண்வகைக் கணிதத்தில் இராகு-கேதுகளுக்கு இடம் இல்லை. சட் வர்க்கக் கணிதத்திலும், பொதுவில் இராகு-கேது  ஆகியவைகளுக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை. இராகு-கேதுக்களின் பயன்பாடு என்பது பிற்காலத்தில்தான் வந்துள்ளது.


அதுமட்டுமின்றி, பன்னிரெண்டு இராசிகளில் இராகு-கேதுக்களின் வலிமை அல்லது நிலை என்பதைத் தீர்மானித்தலில் சிற்சில கருத்துவேறுபாடுகள் சோதிட நூல்களில் காணப்படுகின்றன. பிறக் கோள்களுக்கு ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், நீச்சம், நட்பு, பகை, சமம் என்பதில் சோதிட நூல்களுக்கிடையே பொதுவான கருத்து உள்ளது. அக்கருத்தினை விதிகளின் அடிப்படையிலும் நிறுவமுடிகிறது. ஆனால், இராகு-கேதுக்களுக்கு அவ்வாறு கூற முடியாத நிலையே இருக்கிறது. சில நூல்கள் இராகு மிதுனத்தில் உச்சம், தனுசுவில் நீச்சம், அதற்கு எதிர்மறையாக கேதுவின் நிலை என கூறுகின்றன. வேறு சில நூல்கள் இராகு துலாத்தில் உச்சம் விருச்சிகத்தில் நீச்சம், அதற்கு எதிர்மறையாக கேது என கூறுகின்றன. திரு மாதேசுவரன் அவர்கள் விருச்சிகத்தில் இராகுவும் கேதுவும் உச்சம் எனவும் ரிசபத்தில் அவை நீச்சமடைகின்றன எனவும் கூறுகிறார், அதுமட்டுமின்றி கேதுவிற்கு மூலத்திரிகோண வீடு உண்டு என்றும் கூறுகிறார். வேறு சில நூல்களில் மகரத்தில் கேதுவும், கடகத்தில் இராகுவும் உச்சமடைகின்றன எனவும் கூறுகின்றன. அண்ணாமலைப் பல்கலைக் கழக முதுகலை-சோதிடவியல் பாடத்தில், இராகு-கேதுவிற்கு உச்சவீடு-விருச்சிகம், நீச்ச வீடு-ரிசபம் என பதிவிடப்பட்டுள்ளது. ஆட்சி மற்றும் மூலத்திரிகோணவீடு இல்லை எனவும், இரு கோள்களுக்கும் நட்பு வீடு: மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் எனவும், பகைவீடு: மேசம், கடகம், சிம்மம் எனவும், சமம் எதுவுமில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.  ஆனால் வேறு சில நூல்களில் குரு சமம் எனக் கூறப்படுகிறது.


அதுபோல், கோள்களின் பார்வைகள் என்பதில், இராகு-கேதுவிற்கு 3, 7, 11 ஆகிய பார்வைகள் உள்ளன என கூறப்பட்டுள்ளது. சில நூல்களில் இராகு-கேதுவிற்கு 7-ம் பார்வை மட்டுமே என்றும், வேறு சில நூல்களில் இராகு கேதுவிற்கு பார்வையே இல்லை என்றும், அவை இருக்கும் இடத்திற்கு ஏற்பவே பலன் உரைக்க வேண்டும் என்றும் கூறுகின்றன. இதிலும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், 3, 7, 11 ஆகிய பார்வைகள் உள்ளன என்பது பொதுவில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.



இனி, இராகு-கேதுக்களின் நிலையினை, வான்கணித அடிப்படையில் ஆராய்வோம்

தொடர்ச்சி அடுத்த பதிவில்

No comments: