Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, November 8, 2016

அஷ்டகவர்க்கம் – கோள்கள் கொடுக்கும் புள்ளிகள்



அஷ்டக வர்க்க கணிதம் என்பது ஒவ்வொரு கோளும், பிற கோள்களுடன் அக்கோள்கள் இருக்கும் இடத்திலிருந்து எந்தந்த வீடுகளில் கோச்சாரம் அல்லது கோள்களின் நகர்வின்போது நற்பலனைக் கொடுக்கும் என்பதைக் கண்டறிவதாகும். எடுத்துக்காட்டாக, ஒரு சாதகத்தில் இருக்கும் சூரியனானது,  அந்த சாதகத்தில் செவ்வாய்  இருக்கும் இடத்திலிருந்து 1, 2, 4, 7, 8, 9, 10, 11 ஆகிய வீடுகளில் தனது நகர்வின்போது (அ) கோச்சாரத்தின் போது, நற்பலன்களைக் கொடுக்கும் என்பதாகும். அவ்வாறெனில், பிற வீடுகளான 3, 5, 6, 12 ஆகிய வீடுகளில் நற்பலனைக் கொடுக்காது என்பதாகும். அஷ்டக வர்க்க பலன் என்பது ஒரு குறிப்பிட்ட கோள் குறிப்பிட்ட வீட்டில் பலமுடன் இருக்கிறதா என்பதை அறிய உதவுவதுடன் அக்குறிப்பிட்ட கோள் கோச்சாரம் அல்லது நகர்வின் போது எத்தகைய பலனை அளிக்கும் என்பதையும் அறிய உதவும் என்பதே சோதிட நூல்களின் விளக்கமாகும்.


இங்கு நாம் அஷ்டக வர்க்கம் எவ்வாறு அமைப்பது என கொஞ்சம் தெரிந்து கொள்வதுடன், அது ஏன் அவ்வாறு அமைக்கப்பட வேண்டும், அந்தக் கணித முறை எதன் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்வதே முறையாகும்.


பொதுவாக, ஒருவரின் பிறப்பு சாதகம் என்பது அவருடைய வாழ்வின் முழு விவரங்களைப் பதிவு செய்த புத்தகம் என்றால், அவருடைய வாழ்வில் நடைபெறும் நிகழ்வுகள் எப்போது நடைபெறும் என்பதை தசாபுத்திக் காலங்களைக் கொண்டும், கோச்சரம் அல்லது கோள்நகர்வு நிலையை கொண்டும் கணிக்க முடியும். அவ்வாறு கணிப்பதற்கு கூடுதலாக பயன்படுத்தப்படும் கருவிதான் அஷ்டக வர்க்கம். எடுத்துகாட்டாக, குரு எனும் வியாழன் ஒன்பதாம் இடத்தில் வருவது சிறப்பான பலனைத் தரும் என்பது சோதிட விதி. ஆனால், வியாழன் தனது அஷ்டக வர்க்கத்தில் ஒன்பதாம் இடத்தில் மிகக் குறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தால், பலன் என்பது சிறப்பானதாக இருக்காது என அதே சோதிட விதி தெரிவிக்கிறது. இந்த நிலையினை அஷ்டக வர்க்கத்தினை வைத்துதான் கணிக்க வேண்டும். ஆக, அஷ்டக வர்க்கமும் சோதிட பயன்பாட்டில் தனக்குரிய பங்கினை வகிக்கிறது என்பதே உண்மை.


இனி அஷ்டகவர்க்கம் அமைப்பதற்கான அடிப்படை விதிகளைப் பார்ப்போம். அஷ்டக வர்க்கத்திற்கு சூரிய-சந்திர பாதையின் வெட்டுப் புள்ளிகளான இராகுவும் கேதுவும் கணக்கில் வராது என முன்பே கூறிவிட்டோம். ஆக, அவை நீங்களாக, மீதம் உள்ள ஏழு கோள்களும் கணக்கிடப்படுகின்றன. ஒரு சாதகம் என்பது 12 இராசிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் இலக்கினமே முதன்மையானது என்பதை நாம் அறிவோம். இலக்கினம் இருக்கும் இடத்திலிருந்து மற்ற கோள்கள், அவைகள் பிறப்பின்போது வானில் இருக்கும் இராசிகளுக்கு ஏற்ப அமைந்திருக்கும். இவ்வாறு அமைந்திருக்கும் ஏழு கோள்களும் (இராகு-கேது நீங்களாக), தாம் இருக்கும் இடத்திலிருந்து, சில குறிப்பிட்ட வீடுகளில் நற்புள்ளிகளைக் கொடுக்கும். மீதம் உள்ள வீடுகளில் கெடு புள்ளிகளைக் கொடுக்கும். அதுமட்டுமின்றி, அந்த குறிப்பிட்ட கோள், இலக்கினத்திலிருந்தும், குறிப்பிட்ட வீடுகளில் நற்புள்ளிகளைக் கொடுக்கும். மீதம் உள்ள வீடுகளில் கெடு புள்ளிகளைக் கொடுக்கும். அதுபோலவே, அந்த குறிப்பிட்ட கோள், பிற கோள்களுக்கும் அவை இருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட வீடுகளில் நற்புள்ளிகளைக் கொடுக்கும். மீதம் உள்ள வீடுகளில் கெடு புள்ளிகளைக் கொடுக்கும். சுருக்கமாக, ஒரு கோள், இலக்கினம் மற்றும் ஏழு கோள்களுக்கும் அவை இருக்கும் இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வீடுகளில் நற்புள்ளிகளையும், பிற இடங்களில் கெடு புள்ளிகளையும் கொடுக்கும். இவ்வாறு கொடுக்கும் நற் புள்ளிகளை அந்தந்த வீடுகளில் குவித்து, அதன் எண்ணிக்கையைக் கணக்கிட்டால், அந்த குறிப்பிட்ட கோளின் அஷ்டகவர்க்கம் கிடைக்கும். இவ்வாறே, பிற கோள்களுக்கும் கணக்கிட்டால், அக் கோள்களின் அஷ்டவர்க்கம் கிடைக்கும். இதில் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவெனில், ஏழு கோள்களும் இலக்கினத்திற்கு புள்ளிகளைக் கொடுக்கும். ஆனால் இலக்கினம் எந்த கோள்களுக்கும் புள்ளிகளைக் கொடுக்காது. அதன்படி, ஏழு கோள்களுக்கும் தனித்தனியாக வர்க்கக் கட்டங்கள் தயாரிக்கப்படுகிறது. பின்னர் ஏழு பிரிவுகளையும் ஒன்றினைத்து முழுமையான அஷ்டவர்க்கம் தயாரிக்கப்படுகிறது. அதாவது, எட்டு பிரிவுகளில் (ஏழு கோள்கள் + அவற்றின் கூடுதல்) அஷ்டகவர்க்கம் தயாரிக்கப்படுகிறது. இதனால் இது அஷ்டகவர்க்கம் (அ) எட்டுவகைப் பிரிவு என அழைக்கப்படுகிறது. [இலக்கினமும் புள்ளிகளைத் தருவதாக சில நூல்கள் கூறுகின்றன. அதன்படி, இலக்கினத்திற்கும் வர்க்கப்பட்டியல் தயாரிக்கப்படுவதுண்டு. அது வேறு வகையான சோதிட முறைக்கு பயன்படுகிறது].

ஒவ்வொரு கோளும், தமக்கும், இலக்கினம் மற்றும் பிற கோள்களுக்கும் கொடுக்கும் நற்புள்ளிகள் என சோதிட நூல்கள் கூறுவது:

      சூரியன்     - 48

      சந்திரன்     - 49

      செவ்வாய்   - 39

      புதன்        - 54

      வியாழன்    - 56

      வெள்ளி     - 52

      சனி         - 39

      மொத்தம்    - 337

      [இலக்கினம் – 49]

[இலக்கினத்தைப் பொதுவாகக் கணக்கில் கொள்வதில்லை. ஒரு சில சோதிட நூல்கள் இலக்கினம் கொடுக்கும் புள்ளிகளையும் கணக்கில் கொள்வதுடன், இலக்கினத்திற்கும் அஷ்டவர்க்கம் செய்கிறது – பிருகத் சாதகத்தில் இலக்கினம் புள்ளிகள் கொடுப்பதாக தகவல்கள் இல்லை. அதுமட்டுமின்றி, 337 புள்ளிகள் என்பது ஏழு கோள்கள் கொடுக்கும் புள்ளிகள் மட்டுமே].


 அஷ்டகவர்க்கம் தொடரும்….

No comments: