Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, January 6, 2017

தசாபுத்திகள் அல்லது கால முறைக் கணிதம்-2



வராக மிகிரரின் முறை


இவரது கணக்கீட்டின்படி, தசா புத்தியானது எட்டு தசா பிரிவுகளையே கொண்டிருக்கிறது. அதாவது, இலக்கினம் மற்றும் சூரியன் முதல் சனி வரை உள்ள ஏழு கோள்களின் தசைகள் மட்டுமே. இதில் இராகு-கேது தசைகளுக்கு இடமில்லை. நாம் முன்பே பதிவு செய்தபடி, வராக மிகிரரின் காலத்தில் சாதகக் கணிதங்களில் இராகு-கேதுக்களின் பங்களிப்பு என்பது இல்லை. எனவே அவற்றை நீக்கிவிட்டே கணிதம் செய்கிறார்.


இந்தக் கணித முறைப்படி, இலக்கினம், சூரியன், சந்திரன் இவற்றில் எது வலிமையானதோ அதன் திசையே முதலில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பிறகு மேற்கூறிய மூன்றில் வலிமை உள்ளதற்கு (இலக்கினம், சூரியன், சந்திரன்) கேந்திரத்தில் உள்ள கோள்களின் திசை கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்பிறகு பணபரத்தில் உள்ள கோள்களின் திசை கணக்கில் கொள்ளப்படுகிறது. அடுத்து ஆபோக்லிமத்தில் உள்ள கோள்களின் திசை கணக்கில் கொள்ளப்படுகிறது. அதன்பிறகு, இவைகள் தவிர்த்து பிற இடங்களில் உள்ள கோள்களின் திசை கணக்கில் கொள்ளப்படுகிறது. கோள்களுக்கான தசாக் காலத்தினைப் பொருத்தவரையில், ஆயுர்தய முறையில் கோள்களுக்கான ஆண்டுகள் எவ்வளவோ, அந்தக் கால அளவுதான் கணக்கில் கொள்ளப்படுகிறது. அது அனைத்து சாதகத்திற்கும் ஒரே அளவாக இருப்பதில்லை. எடுத்துக் காட்டாக, சூரியனின் தசையானது அதன் வலிமையைப் பொறுத்து ஒவ்வொரு சாதகத்திற்கும் மாறுபடுகிறது. அதிகபட்சமாக தசாக் காலத்தின் மொத்த கால அளவு 120 ஆண்டுகள் 5 நாட்கள் என்பதாகும். தசா கணக்கீடுகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பது குறித்து கணக்கீட்டு முறைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


எனவே, இந்த முறையிலான கணிதம் செய்வதற்கு, நுட்பமான கணிதம் அறிவும், சோதிட நுணுக்கங்களும் தெரிந்திருக்க வேண்டியது அவசியமாகிறது. கணிதம் தவறானால், கணிப்பும் பெருமளவு பிழையாவதற்கான வாய்ப்புகள் நிறைய ஏற்படுகிறது. ஏனெனில் எது வலிமையான கோள் என்பதைத் தீர்மானிக்கவே, மிக நுண்ணிய சோதிட அறிவு தேவைப்படுகிறது. ஆகவே, கடினத்தை மனதில் கொண்டு, இந்த முறையினை காலப்போக்கில் சோதிடர்கள் தவிர்த்து விட்டிருக்கலாம். அது மட்டுமின்றி, வராக மிகிரரின் காலத்திற்கு பிறகு சோதிட கணக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்ட இராகு-கேதுவையும் தசாக் காலத்தில் உட்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஒரு புதிய முறைக் கணிதம் உருவாகத் தொடங்கி இருக்க வேண்டும். அதுதான், விம்சோத்திரி தசை எனும் நட்சத்திர தசையாகும்.


முன்பே கூறியவாறு, தற்போது நடைமுறையில் இருப்பது, விம்சோத்திரி தசை எனும் நட்சத்திர தசை. எனவே, இதனையே நமது ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.


வராக மிகிரருக்குப் பிறகு, சோதிடத்தில் பல்வேறு சோதிட அறிஞர்கள் பல்வேறு சோதிட நூல்களை எழுதியிருந்தாலும், மாமுனிவர் பராசரரின் பராசர ஹோர சாஸ்திரம் எனும் நூல் பிருகத் சாதகம் போலவே சிறப்பு பெற்றது. இன்றும் பலராலும் எடுத்தாளப்படும் சோதிட பொருளகராதியாகவே இருக்கிறது. பராசரர், தமது நூலில் தசா புத்தி கால அளவைக் குறிப்பிடும்போது, வழக்கத்தில் உள்ள பல்வேறு முறைகளைக் குறிப்பிட்டாலும், அவற்றில் நடைமுறைக் கணிப்பில் பெரிது பொருந்தி வருவது “விம்சோத்திரி தசை” என குறிப்பிடுகிறார்.



அடுத்து ….விம்சோத்திரி தசை – ஒரு விளக்கம் ….

No comments: