Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, January 18, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - 5



தசா - புத்தி - அந்தரம் - சூட்சமம் - பிராண அந்திரம் -  தேக அந்திரம்


தசாக் காலம் என்பது, மேலும் நுணுக்கமாக, தசா – புத்தி – அந்தரம் – சூட்சமம் என அமைக்கப்பட்டுள்ளது.


அதன்படி –

புத்தி என்பது –

ஒரு குறிப்பிட்ட கோளின் தசாக் காலத்தை, ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, இராகுவின் தசாக் காலம் 18 ஆண்டுகள் என்பதனை, மற்ற கோள்களுக்கு உரிய தசாக் கால ஆண்டுகளின் விகிதாச்சாரத்தில், ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். இங்கு கணித முறையை மட்டுமே விளக்க முற்படுகிறேன். எடுத்துக்காட்டாக, இராகு தசை – சூரிய புத்தி என்றால், 18 x 6/120 எனும் கணக்கீடு செய்ய வேண்டும். வரும் விடையானது 0.9 ஆண்டுகள் என்பதாகும். அதாவது 10 மாதங்கள் 24 நாட்கள் என வரும். [இதனை இன்னும் துள்ளியமாகக் கணக்கிட சூத்திரங்கள் இருக்கின்றன என்றாலும் அடிப்படைக் கணிதம் இதுதான்].

அந்தரம் என்பது –

ஒரு குறிப்பிட்ட கோளின் புத்திக் காலத்தை, ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, இராகு தசையில் – சூரிய புத்தியின் கால அளவான 10 மாதங்கள் 24 நாட்கள் என்பதை, ஒன்பது கோள்களுக்கும், தசாக் கால விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, சுக்கிர அந்திரம் எனக் கொள்வோம். கணிதமானது, 10மாதங்கள் 24 நாட்கள் x 20/120. விடையானது – 54 நாட்கள் என வரும் (1 மாதம் 24 நாட்கள்).

சூட்சமம் என்பது –

ஒரு குறிப்பிட்ட கோளின் அந்தரக் காலத்தை, ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, இராகு தசையில் – சூரிய புத்தியில் – சுக்கிரன் அந்திரமான  கால அளவு 54 நாட்கள் என்பதை, ஒன்பது கோள்களுக்கும், தசாக் கால விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, செவ்வாய் சூட்சமம் எனக் கொள்வோம். கணிதமானது, 54 நாட்கள் x 7/120. விடையானது – 3 நாட்கள் 3 மணி 36 நிமிடங்கள் என வரும்.

இதனை இன்னும் நுணுக்கமாக, பிராண அந்திரம், தேக அந்திரம் எனவும் இது போலவே பிரிக்க முடியும் என சோதிட நூல்கள் கூறினாலும், அவை மணி, நிமிடத்திற்கு குறைவாக வருவதால், அதனை பொதுவில் தவிர்த்து விடுகின்றனர்.

ஆக தசாக் காலம் என்பது, தசா-புத்தி-அந்திரம்-சூட்சமம் எனும் உட்பிரிவுகளால், அதே நேரத்தில் அதனை ஒவ்வொரு கோளிற்கு அவற்றிற்கு உரிய தசாக் கால விகிதாச்சாரத்தின் அளவில் பிரித்து அளிக்கப்படுகிறது.

தசாக் கால பலன்கள் உரைப்பதில் பல்வேறு காரணிகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பற்றி தசா-புத்தி பலன்களை ஆராய்கையில் காணாலாம்.

ஆனால் பொதுவாக, தசா-புத்தி பலன்கள் என்பதில், வலிமை என்பது, ஒரு குறிப்பிட்ட கோளின் தசா-புத்திக் காலத்தில் –

தசா நாதன் எனப்படும் தசாக் கோளினைக் காட்டிலும், புத்திக் கோளிற்கு வலிமை அதிகம் என்றும்;

புத்தி நாதன் எனப்படும் புத்தி கோளினைக் காட்டிலும், அந்திர கோளிற்கு வலிமை அதிகம் என்றும்;

அந்திர நாதன் எனப்படும் அந்திர கோளினைக் காட்டிலும், சூட்சம கோளிற்கு, அதாவது சூட்சம நாதனுக்கு வலிமை அதிகம் என்றும்;

சோதிட நூல்கள் கூறுகின்றன.

சுய தசை, சுய புத்தி, சுய அந்திரம், சுய சூட்சமம் என்பது சிறப்புடையது இல்லை எனவும் சோதிட நூல்கள் கூறுகின்றன.


இது பற்றி பின்னர் உரிய பதிவில் விவரமாகப் பார்க்கலாம்.

தொடரும்.....

No comments: