Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, February 12, 2017

சட்பலம் - நைசர்க்கிக பலம் (அ) இயல்பில் வலிமை


நைசர்க்கிக பலம் (அ) இயல்பில் வலிமை

சட்பலத்தில் அடுத்து பார்க்க இருப்பது, நசர்க்கிக பலம் எனப்படும் இயல்பில் அல்லது இயற்கையில் கோள்கள் பெற்றிருக்கும் வலிமையாகும்.

சோதிட நூல்களில் கோள்களின் இயல்பான வலிமையாக தெரிவிக்கப்பட்டிருப்பது – 

சனியை விட செவ்வாய் வலிமை

செவ்வாயை விட புதன் வலிமை

புதனை விட வியாழன் வலிமை

வியாழனை விட வெள்ளி வலிமை

வெள்ளியை விட சந்திரன் வலிமை

சந்திரனை விட சூரியன் வலிமை

ஆக, அனைத்து கோள்களிலும் வலிமை மிக்கதாக சூரியனும் அதற்கு அடுத்து சந்திரனும் வரிசைப்படுத்தப் படுகின்றன.

இயல்பில் வலிமை என்பது அக்கோள்களின் ஒளிர் தன்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இதுவும் சஷ்டியாம்சம் எனும் அளவீட்டின் அடிப்படையினிலேயே கணக்கிடப்படுகிறது.

இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது யாதெனில், நைசர்க்கிக வலிமையானது, கோள்கள் இருக்கும் இராசிகள் அல்லது பாவகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை.

மிக எளிமையாக, சூரியனுக்கு 60 சஷ்டியாம்சம், அதாவது ஏழு கோள்களில் முழுவலிமையாக, கொடுக்கப்படுகிறது.

ஏழு கோள்களின் வலிமையின் விகிதத்தில் பிறக்கோள்களுக்கு வலிமை கணக்கிடப்படுகிறது.

அதாவது சூரியனுக்கு 7 பங்கு – 60 சஷ்டியாம்சம், எனில் சந்திரனுக்கு 6/7 x 60 சஷ்டியாம்சம் எனவும், மற்றவைகளுக்கு மேலே குறிப்பிட்ட வரிசைப்படி, வெள்ளி 5/7, வியாழன் 4/7, புதன் 3/7, செவ்வாய் 2/7, சனி 1/7 எனும் பகிர்வின்படி, X 60 சஷ்டியாம்சம் என பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இந்த அளவானது, மாறிலி எனும் அடிப்படையில் எப்போதும், எந்த சாதகத்திற்கும், மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி, சட்பலக் கணக்கீட்டில் ஒரு கோளிற்கு மற்ற வலிமைகள் குறைந்தாலும், அல்லது அதிகரித்தாலும், இந்த மாறிலி அளவானது அதனைச் சரிசெய்துவிடுகிறது.

வழக்கம்போல், நைசர்க்கிக பலம் பெற்ற கோள், நல்ல பலன்களை சாதகருக்கு வழங்கும் என சோதிட நூல்கள் கூறுகின்றன.

நசர்க்கிக பலத்தின் வரிசையானது, சற்று ஆய்வுக்கு உரியதாக உள்ளது. அதாவது, நாம் ஏற்கனவே, பதிவிட்டபடி, சூரியன் ஒளி மிகுந்த கோள், எனவே முதலில் உள்ளது, அதுபோலவே சந்திரன் இரண்டாம் இடத்தில் உள்ளது. நைசர்க்கிக அல்லது இயல்பில் வலிமை என்பது, கோள்களின் ஒளிர் தன்மையில் வரிசைப்படுத்தப்படுவதால், வெறுங்கண்ணால் நாம் பார்க்கும் கோள்களின் வரிசையில் வகைப்படுத்தப்பட்டால் – வெள்ளி, செவ்வாய், வியாழன், புதன், சனி என வருவதுதான் முறை. ஆனால், இந்த முறையானது, நைசர்க்கிக கணக்கீட்டில் சற்று வரிசை மாற்றம் அடைந்து இருக்கிறது. அவ்வளவுதான். இதனை எந்த அடிப்படையில் அமைத்தார்கள் என்பது, அன்றைய சோதிட/வானியல் அறிஞர்களுக்குத்தான் தெரியும். உங்களுக்கும் தெரியும் என்றால், விளக்கமுடன் தெரிவியுங்கள், ஏற்றுக் கொள்ளப்படும்.

அடுத்து … திருக் அல்லது பார்வையின் வலிமை


No comments: