Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, April 2, 2017

வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் (5)




உலகம் முழுமைக்கும் ஒரே பஞ்சாங்கம்



நாம் சென்ற பதிவுகளில், வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் உள்ள மிக முக்கியமான, அடிப்படையான வேறுபாட்டினைக் கண்டோம். அதாவது, அயனாம்சம் எனப்படும் நகர்வின் அளவீடு. அயனாம்சக் கணக்கீடு இல்லாமல் இருப்பது வாக்கியம். அயனாம்ச கணக்கீட்டுடன் இருப்பது திருக்கணிதம்.


திருக்கணித முறையானது மிகச்சரியானக் கணிதமுறை என்றால், அனைத்து திருக்கணித பஞ்சாங்கங்களும் ஒரே அளவீட்டில் தயாரிக்கப்படுகின்றனவா எனும் கேள்வி எழுகிறது. அவ்வாறு இல்லை என்பதே உண்மை. திருக்கணித பஞ்சாங்கமானது லகிரி அயனாம்சம், இராமன் அயனாம்சம், கிருஷ்ணமூர்த்தி அயனாம்சம், சபேரியல் அயனாம்சம், . . .  என்று எது அவர்களுக்கு ஏற்புடையதாக இருக்கின்றதோ அந்த அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.


ஆக, திருக்கணித முறையிலேயே பஞ்சாங்கங்களில் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசத்தின் அளவு என்பது, மீச்சிறு அளவு என்றாலும், வித்தியாசம் என்பது வித்தியாசம் தானே. அந்த வித்தியாசத்தின் அளவீட்டினால், சாதகக் கணிப்பு என்பது துள்ளியமற்று போய்விடும் என்பது உண்மைதானே.


வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கு உள்ள வித்தியாசம் என்பது அயனாம்ச கணக்கீடுதான் எனும் நிலையில், திருக்கணித முறையினிலேயே வித்தியாசம் இருப்பது, வாக்கிய நிலைப்பாட்டில் இருப்பவர்களுக்கு ஆதரவான கருத்தாக இருக்கிறது. அதாவது, முதலில் உங்களிடையே அயனாம்ச அளவு பற்றி ஒத்தக் கருத்தினை உருவாக்கிக் கொண்டு, பின்னர் எங்களிடம் (வாக்கியம்) வாருங்கள் என்பதாக இருக்கிறது.


ஆனால் வாக்கியக்காரர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். திருக்கணித பஞ்சாங்கங்களில் இருக்கும் வித்தியாசம் என்பது மீச்சிறு (மிக மிகக் குறைவான வித்தியாசம்) வித்தியாசம்தான். ஆனால் வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திற்கும் இருக்கும் வித்தியாசம், மிகப் பெரும் அளவு அல்லவா? இதனால், ஒரு கோளின் நிலையானது வீடு விட்டு வீடு அல்லது இராசி விட்டு இராசி அல்லவா மாறுபடுகிறது. இதனால் கணிப்பு என்பது பெரும் தவறாகிப் போகும் அல்லவா?


அயனாம்ச வித்தியாசம் என்பது வானியல் வல்லுனர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. அதைத்தான் திருக்கணித முறையாளர்கள் பயன்படுத்துகின்றனர். புதியன புகுதலும் பழையன கழிதலும் வழுவல கால வகையினானே எனும் நன்னூல் சூத்திரத்தின்படி, காலத்திற்கேற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.


தொகுப்பாக:

சோதிட பலன் உரைத்தல் என்பது, கோள்களின் இருப்பு நிலையினைக் கொண்டு கணிக்கப்படுவது. கோள்களின் இருப்பு நிலை என்பது, பஞ்சாங்கங்களின் குறிப்புகளைக் கொண்டு கணிக்கப்படுவது. பஞ்சாங்கங்களிடையே வித்தியாசம் இருக்கும் நிலையில் கணிப்பு என்பது தவறாகப் போவதற்கு வாய்ப்புகள் நிறைய உண்டு. அதன் முடிவானது, சோதிடம் பொய் எனும் நிலைக்கு தள்ளப்படுகிறது.


வாக்கியத்தினைப் பொருத்தவரையில், தற்போதைய மாற்றங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். திருக்கணித முறை என்பது வராகமிகிரர் காலத்திலேயே பயன்பாட்டில் வந்துவிட்டது. அது இன்றைய காலத்திற்கேற்ப மேம்படுத்தப் (UPDATED)பட்டுள்ளது. அதற்கு காரணம் இன்றைய வான் அறிவியல் வளர்ச்சியும், கணிணிப் பயன்பாடும் மிகமுக்கியமானது. ஆனால் இப்போது எழும் கேள்வி எல்லாம்,  அது லகிரி முறையோ அல்லது கிருஷ்ணமூர்த்தி முறையோ எது சிறந்த முறை என்பதைத் தீர்மானிப்பதைக் காட்டிலும், அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய, உலகம் முழுமைக்கும் பொதுவான (universal acceptance) முறையாக இருக்க வேண்டும் என்பதுதான்.


அவ்வாறு பொதுவான முறையினை ஏற்றுக் கொள்ளும்போது, சோதிட அறிஞர்கள் ஒன்றுகூடி, அந்தக் கணிதமுறையில் கணிக்கப்படும் சாதகத்தில் கோள்களின் நிலையினைத் துள்ளியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு உறுதி செய்தபின், அதன் அடிப்படையில் பலன் உரைத்தல் என்பது துள்ளியமாக உள்ளதா என்பதனையும் உறுதி செய்து கொள்ள வேண்டும்.


வானியல் கோட்பாட்டின்படி செயற்கைக் கோள்களும், ராக்கெட்டுகளும் துள்ளியமாக வானில் செலுத்தும்போது, அதே கோட்பாட்டினை, பொதுக் கோட்பாடாக ஏன் சோதிடத்திற்கும் ஏற்றுக் கொள்ளக்கூடாது.


உலகம் முழுமைக்கும் ஒரே கணக்கீட்டின்படி உருவாக்கப்படும் பஞ்சாங்கம்தான் இப்போதைய தீர்வாக இருக்க வேண்டும். 


இல்லையெனில், சோதிடம் பொய்யாய் போவதற்கு பஞ்சாங்கம்தான் மிக முக்கியக் காரணியாக இருக்கும்.



[குறிப்பு: இந்தக் கட்டுரையில் அயனாம்சம் பற்றிய அடிப்படை விளக்கமும், வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டினையும் மட்டுமே விளக்கி உள்ளேன். வாக்கியத்தை மேம்படுத்தியதுதான் திருக்கணிதம். அதனால் திருக்கணித முறையே சரியானது என்பதில் தவறில்லை. ஆனாலும் திருக்கணித முறையும் இன்னும் மிகத் துள்ளியமாக, தற்போதைய வானியல் கணித அடிப்படையில் திருத்தம் செய்யப்பட்டு, உலகம் முழுமைக்கும் ஒரே பஞ்சாங்கம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே சரியான முடிவாக இருக்கும்].




No comments: