Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Monday, July 7, 2014

முன் கதைச் சுருக்கம்


                ஒரு சுபயோக சுப தினத்தில் இந்த வலைப் பூவைத் தொடங்கி, ஆனால் தடங்கித் தடங்கி எழுதி வருகிறேன். ஏறக்குறைய 30 பதிவுகள் பதிந்துள்ளேன். எதை நோக்கி இந்த பயணம் தொடங்கியதோ அந்த பாதையிலேயேதான் சென்று கொண்டிருக்கிறேன். இதுவரை எழுதியதை நானே ஞாபகப்படுத்திக் கொள்ளவும், நீங்கள் தொடர்ந்திடுவதற்கு ஏதுவாகவும், ஒரு முன் கதைச் சுருக்கம் பதிய நினைத்தேன். சிலப்பதிகாரத்தை ஒருவரியில் கவிக்கோ சொன்னதாக வழக்குரைஞரும் பட்டிமன்றப் பேச்சாளரும் ஆகிய திரு இராமலிங்கம் அவர்கள் கம்பன் விழவில் கூறக்கேட்டிருக்கிறேன்.

                                கண்ணகியால், கால் நகையால், தன் கழுத்து நகை இழந்த கதை

அற்புதமான கவித்துவம். அதுபோன்ற சுருங்கச் சொல்லக்கூடிய கவித்துவம் என்னிடம் கிடையாது. ஒரு வழிப்போக்கன் தான் கண்டதைச் சத்திரத்தின் சுவற்றில் கரியால் கிறுக்கும் பாங்குதான் என்னிடம் உள்ளது.   சுருக்கம் இனி

(1)     சோதிடம் என்பது வானியல் சார்ந்த நிகழ்வுகளை, வாழ்வின் நிகழ்வுகளேடு தொடர்புபடுத்தி, விளக்கக்கூடிய ஒரு அறிவியல் என்று அதைத் தொடர்பவர்களாலும்,

(2)     இயற்பியல் தத்துவத்தில் உள்ள வானியல் கோட்பாடுகளை, ஆன்மீகக் கோட்பாடுகளுடன் இணைந்துள்ள சோதிடத்துடன் தொடர்புபடுத்துவதே மிகப் பெரிய முட்டாள்தனம் என்று அதை மறுப்பவர்களாலும்,

சோதிடம் பந்தாடப்படுகிறது.

       எதையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் கூடாது, எதிர்க்கவும் கூடாது என்பதோடு, சர்ச்சைக்குரிய பொருளாக இருக்கும் சோதிடத்தின் நம்பகத் தன்மையை விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டும்

                எனவே, வானியல் கோட்பாடுகளையும், அண்டக் கோட்பாடுகளையும் ஆராய்ந்து, அதனை சோதிடக் கோட்பாடுகளுடன் ஒப்பாய்ந்து பார்க்க முயலும் பதிவுகள்தான், நிமித்திகன் எனும் இந்த வலைப்பூ.

                அறிவியல் என்பது அறிவுசார்ந்த கொள்கை. அது இயற்பியலாகவும் இருக்கலாம், கணிதமாகவும் இருக்கலாம், வரலாறாகவும் இருக்கலாம், மொழியாகவும் இருக்கலாம், ஏன் கடவுள் நம்பிக்கையாகவும் கூட இருக்கலாம். ஆனால் எதுவும் நிரூபிக்கப்பட வேண்டும். நிரூபிப்பதற்கு, ஆதாரங்கள் வேண்டும்.

                வானியல் நிகழ்வுகளுடன் சோதிடம் தொடர்புபடுத்தப்படுவதால், வானியல் பற்றியும் கொஞ்சம் ஆதார அறிவு வேண்டும்பெரும்பான்மையாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் கருத்தே ஆதாரம் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், பின் நாட்களில் அதிலும் மாறுதல் ஏற்பட்டு ஆதாரம் செல்லாமல் போய், புதிய ஆதாரம் முளைக்கின்றது. தாலமியின் கொள்கையை ஒரு உதாரணத்திற்குச் சொல்லலாம். எனவே, பிரபஞ்சத்திலிருந்து தொடங்கி ஆதாரங்களைத் தேட முயற்சிக்கிறேன்.                இந்த பிரபஞ்சம் பூச்சியம் போன்று ஆரம்பமும் முடிவும் இல்லாதது. “விரிந்தது சுருங்கும் சுருங்கியது விரியும்எனும் இயற்பியல் தத்துவத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இயற்பியல் அறிஞர்களின் கருத்துப்படி, நிறைய பிரபஞ்சங்கள் இருக்கக் கூடும். அதில் ஒன்றுதான் நாமிருக்கும் பிரபஞ்சம். பிரபஞ்சங்கள் எப்படித் தோன்றின அல்லது யார் படைத்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

                தற்போதைய பெரு வெடிப்புக் கொள்கையின்படி, அணுக்கள் திரண்டு மிக மிக அடர்த்தியுடன் சிறு உருண்டையாக இருந்த கருப் பொருள் மாபெரும் வெடிப்பாக வெடித்து, அந்தக் கருப்பொருள் பல கோடிக்கணக்கான துகள்களாக விரிந்து விரிந்து, அணுக்கள், விண்மீன்கள், விண்மீன் தொகுதிகள், கறுப்புப் பொருட்கள், கறுப்புச் சக்தி என தற்போதைய நிலையை அடைந்ததாக கூறப்படுகிறது.

பெரும் வெற்றிடமான பிரபஞ்சத்தில்,  5% அளவே உள்ள பொருட்களில் தான் பல ஆயிரம் கேலக்ஸிகள் இருக்கிறது. அதில் ஒன்றுதான்பால் வீதி” (Milky Way)  எனப்படும் நமது சூரியக் குடும்பமும் உள்ளடங்கிய கேலக்ஸி ஆகும். நமது பிரபஞ்சம் தோன்றி ஏறக்குறைய 14 பில்லியன் ஆண்டுகள்  ஆவதாகவும், நமது பால் வீதி இரண்டாவது சுற்றில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

                நமது பால் வீதியில் 10000 முதல் 40000 கோடி விண்மீன்கள் இருக்கக் கூடும் என்றும், அவற்றிற்கு உறுதுணையாக எண்ணிலடங்கா கோள்களும் இருக்கக் கூடும் என்றும் கூறுகின்றனர். ஒவ்வொரு விண்மீனும் தத்தமது கோள்களுடன் கோலோட்சி வருவகின்றன, நமது சூரியக் குடும்பமும் அதில் ஒன்று. நமது பால்வீதியில், நம் சூரியக்குடும்பம், பால்வீதியின் மையத்திலிருந்து ஏறக்குறைய 27,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது. விண்மீன்களுக்கும் கோள்களுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடுவிண்மீன்கள் ஒளியை உமிழும்கோள்கள் ஒளியைப் பிரதிபலிக்கும்

சூரியன்
                சூரியன் மிகப் பெரிய விண்மீன். ஏறக்குறைய 1.40 மில்லியன் கிலோமீட்டர் விரிவும், அதன் மேற்பரப்பில் 109 பூமிகளை பரப்பக்கூடிய அளவும், அது ஒரு வெற்றிடப் பந்தாக இருந்தால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூமிகளை நிரப்பக் கூடிய ஒரு பெரிய பந்தாகவும் உள்ளது. இந்த நெருப்புப் பந்து வெளிப்புறத்தில் 10,000 ஃபாரன்ஹீட்டாகவும், உட்கருவில் 2,80,00,000 ஃபாரன்ஹீட்டாகவும் வெப்பத்தை கொண்டிருக்கிறது. அணுக்களில் பிளவு ஏற்படும்போதும் (fission), அணுக்களில் சேர்க்கை ஏற்படும்போதும் (fusion) அளப்பறிய வெப்பம் உண்டாகும். சூரியனின் உட்கருவானது, ஏராளமான ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டுள்ளது. அவை அணுக்கரு இணைவு விளைவில் ஒன்றிணைந்து ஹீலியம் அணுக்களாக மாற்றம் பெறுகின்றன. அவ்வாறு இணையும்போது ஏற்படும் வெப்பம்தான் எரிசக்தியையும் உற்பத்தி செய்கிறது. ஒளித்துகள்கள் எனும் போட்டான்கள் அந்த சக்தியை உள்ளிருந்து சூரியனின் மேற்பரப்பிற்கு கொண்டுவருகின்றன. அந்த வெப்பம்தான் பூமிக்கும் கடத்தப்படுகின்றது

புதன்
       சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய குட்டிக் கோள். சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் மற்றக் கோள்களைவிட வெப்பம் அதிகம். தன்னைச் சுற்றிக் கொள்ள 59 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. உயிர்வாயுவான ஆக்சிஜன் இருந்தாலும் அங்கு எதுவும் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறு இல்லை. காரணம் அதிக வெப்பம் அதிக குளிர்.

வெள்ளி
                இது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கோள். ஏறக்குறைய பூமியின் அளவு உள்ள கோள். இது ஒரு திடக் கோள். கரியமில வாயுவால் சூழப்பட்ட சுற்றுச் சூழல். எரிமலைக் குழம்பின் காயங்கள் காய்ந்த வடுக்களாக பரவிக் கிடக்கும் மேற்பரப்பு. கிழக்கிலிருந்து மேற்காக தன்னைச் சுற்றிக் கொள்வதால், சூரியன் மேற்கில் உதிக்கும். அயல் வான் குடும்ப தின்ம பொருட்கள் மோதியதால், இது தன் சுழல் தன்மையில் மாறியிருக்கக் கூடும் எனும் கருத்தும் உண்டு.

பூமி
                நீல பளிங்குக் கோள் எனப்படும் பூமி, சூரியனிலிருந்து மூன்றாவது கோள். எட்டு (ஒன்பது) கோள்களில் ஐந்தாவது பெரிய கோள். வெள்ளியைவிட சற்றே பெரியது. திட நிலையில் உள்ள நான்கு கோள்களில் பூமிதான் மிகப் பெரியது. உயிரினம் வாழக் கூடிய சூழல் உள்ள ஒரே கோள் நமது பூமிதான் என்பது தற்போதையக் கருத்து. பூமி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு உருவாகி இருக்கக்கூடும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பாறைகளும் மலைகளும் 3.50 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவாகியிருக்கக் கூடும் என புவியியலாளர்கள் கூறுகிறார்கள். உயிர் வாழக்கூடிய ஆக்சிஜன் அளவு பூமியில் மட்டுமே உள்ளது. உயிரினங்கள் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கக்கூடும் என உயிரியிலாளர் கூறுகின்றனர்.

சந்திரன்
                நிலா என்று அழைக்கப்படும் சந்திரன், பூமியின் துணைக் கோள். வானியலாளர்கள் சந்திரன் தோன்றியதைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கிறார்கள்.
-    (1) பூமியின் சுழற்சியில் உடைந்து திரிந்த பந்து
-    (2) சூரியக் குடும்பத்தில் மற்றக் கோள்கள் உருவான போதே சந்திரனும் உண்டாகி விட்டது
-    (3) சூரியக் குடும்பத்தில் ஒன்றான சந்திரன் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு மிக அருகில் வந்த போது, பூமியால் இழுக்கப் பட்டு, அதன் சுற்றுப்பாதைக்குல் வந்துவிட்டது.
-    (4) செவ்வாயின் அளவு உள்ள ஒருகோள் பூமியைத் தாக்கியதில், அதன் மிச்சம் மீதிகள் சந்திரனாக மாறி இந்த பூமியைச் சுற்றுகின்றன. (இதுவே பொதுவாக தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டக் கொள்கை)
சந்திரனின் ஈர்ப்பு விசையால் தான், பூமியில் கடலில் அலைகளின் ஆர்ப்பரிப்பு என்றும் சொல்லுகிறார்கள். அதுமட்டுமின்றி பூமியின் கால அளவில் மாற்றத்தையும் அது ஏற்படுத்துகிறது.

செவ்வாய்

     செவ்வாய் ஒரு இளஞ்சிவப்புக் கோள். செவ்வாய், சூரியக் குடும்பத்தின் வரிசையில் நான்காவது திடக் கோள். பூமியில் நிலப்பரப்பு எவ்வளவோ அவ்வளவு நிலப்பரப்பு செவ்வாயிலும் உள்ளது. எப்போதும் புழுதிப் புயல். இரும்பு ஆக்சிடுகள் அதிகம் இருப்பதால் சிவப்பாகத் தெரிகிறது.

வியாழன் 
   சூரியக் குடுபத்தின் ஐந்தாவது கோள். தொலை நோக்கியின்றி இரவில் காணக்கூடியக் கோள்களில் இதுவும் ஒன்று. முதல் நான்கு கோள்களும் திடனிலைக் கோள்கள் எனும் நிலையில் இது வாயு நிலையில் உள்ள கோள். சூரியக் குழம்பில் முதலில் தோன்றியது வியாழன் எனும் கருத்தும் உண்டுவியாழன், சூரியனிலிருந்து பெறும் ஆற்றலைக் காட்டிலும் அதிக ஆற்றலை விண்ணில் கதிரியக்கம் செய்கிறது. பூமியைப்போல் அளவில் 11 மடங்கு பெரியதாக இருந்தாலும், அடர்த்தியில் பூமியைக் காட்டிலும் மிகக் குறைவு.

சனி
                சூரியக்குடும்பத்தின் வரிசையில் ஆறாவது கோளும் இரண்டாவது பெரிய கோளும் சனியாகும். இது ஒரு வாயுக்கோளாகும். சூரியனை மிகப் பொறுமையாக. 29.45 ஆண்டுகளில் சுற்றி வருகிறதுசூரியனிடமிருந்து மிக அதிகத் தூரத்தில் சனி இருப்பதால் சூரியனின் வெப்பத்தாக்கம் மிகவும் குறைவு என்பதால், இது பனிக் கோள் என அழைக்கப்படுகிறது. சனி கருப்பு என்று சொன்னாலும், உண்மையில், மேற்புறம் வெளிர் மஞ்சள் நிறம் கொண்டது.

யுரோனஸ்
    சூரியக் குடும்பத்தில் ஏழாவது கோள். 1781 வாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. இது புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றைப் போல் கண்ணால் காணக்கூடியதாக இருந்தாலும், வெகு காலம் வரை இது ஒரு விண்மீன் என்றே தவறாக அறியப்பட்டிருந்தது. காரணம், இதன் மெல்லிய வெளிச்சம் மற்றும் இதன் மிக மெதுவாக சூரியனைச் சுற்றி வரும் இயற்பியல் தன்மை.யுரோனஸ் நீலப்பச்சை வண்ணம் கொண்டது. இது சூரியனைச் சுற்றிவர 84.30 ஆண்டுகள் ஆகிறது.
நெப்டியூன்
     இது சூரியக் குடும்பத்தின் எட்டாவது கோள். இது 1846-ல் கண்டுபிடிக்கப்பட்ட கோள். இந்தக் கோளைப் பொருத்தவரையில் இது தொலை நோக்கியால் கண்டுபிடிக்கப்படுமுன் கணித சமன் பாடுகளின் படி உறுதி செய்யப்பட்டக் கோள். இது கலிலியோவால் 1613 வாக்கில், ஒரு விண்மீன் என கருதப்பட்டது. இது சூரியனிலிருந்து 450.40 கோடி கி.மீ தொலைவில் உள்ளது. இதன் சுற்றுப்பாதை நியூட்டனின் விதிப்படி இல்லை என வானியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒருமுறை சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 164.79 ஆண்டுகள்.
புளூட்டோ
       இது 1930-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சூரியக் குடும்பத்தின் ஒன்பதாவது கோள். புளூட்டோ ஒரு பணிக்கட்டிக் கோள். 1977 வாக்கில் நிறைய பணிக்கட்டிக் குறுங்கோள்கள் நமது சூரியனைச் சுற்றி வருவதைக் கண்டுபிடித்த அறிவியலாளர்கள், அவற்றை ஒப்பு நோக்குகையில், புளூட்டோவும் ஒரு குறுங்கோள் எனும் முடிவுக்கு வந்தனர். இது சூரிய சுற்றுவட்டப்பாதைக்கு வெளியில் செல்வதாகவும் உறுதிசெய்ததின் விளைவு, 2006-ல் இதன் கோள் தகுதியை நீக்கிவிட்டனர். 

அடுத்து…. சோதிடத்தில் கோள்கள்