Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label சோதிட ஆய்வு-61-70. Show all posts
Showing posts with label சோதிட ஆய்வு-61-70. Show all posts

Monday, February 22, 2016

சூரியன் – சோதிட வரையறை



சோதிடத்தின் பயன்பாட்டில் உள்ள ஒன்பது கோள்களில் முதன்மையானது சூரியன். நாம் வாழும் பூமியும் மற்றக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சோதிட விதிப்படி, பூமி மையக் கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது. அதாவது பூமியை மையமாகக் கொண்டு சூரியன் உட்பட அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன என்பதே. பூமி மையக் கொள்கை சரியா என்பது பற்றி ஏற்கனவே நாம் பதிவு செய்துவிட்டோம். அதன்படி பூமி மையக் கொள்கையும் சரியே என பதிவு செய்துள்ளோம்.  சூரிய மையக் கொள்கை அல்லது பூமி மையக் கொள்கை இவற்றில் எதுவாக இருப்பினும், சூரியன் இன்றி இந்த பூமி சுழலாது என்பது உண்மை. சூரியன் இன்றி எந்தக் கோளும் சுழலாது என்பதும் உண்மை. எனவே சூரியன் இன்றி பூமியில் அணுவும் அசையாது என்பது உண்மை.


இதனைக் கருத்தில் கொண்டே சோதிடத்தில் சூரியனுக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதாவது சூரியன், ஆத்ம காரகன் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. மறுமொழியில் சொல்வதென்றால் ஒரு சாதகரின் உயிர்ப்பினை முன்னிறுத்துவது சூரியனே. இதனை சூரியனின் இயல் தன்மையோடு ஒப்பு நோக்குவோம்.


சூரியனின் இயல் தன்மை என்பது –

சூரியன் மிகப் பெரிய விண்மீன். ஏறக்குறைய 1.40 மில்லியன் கிலோமீட்டர் விரிவும், அதன் மேற்பரப்பில் 109 பூமிகளை பரப்பக்கூடிய அளவும், அது ஒரு வெற்றிடப் பந்தாக இருந்தால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூமிகளை நிரப்பக் கூடிய ஒரு பெரிய பந்தாகவும் உள்ளது. இந்த நெருப்புப் பந்து வெளிப்புறத்தில் 10,000 ஃபாரன்ஹீட்டாகவும், உட்கருவில் 2,80,00,000 ஃபாரன்ஹீட்டாகவும் வெப்பத்தை கொண்டிருக்கிறது. ஏனிந்த வெப்பம். கொஞ்சம் வேதியியல். அணுக்களில் பிளவு ஏற்படும்போதும் (fission), அணுக்களில் சேர்க்கை ஏற்படும்போதும் (fusion) அளப்பறிய வெப்பம் உண்டாகும். அந்த அடிப்படையில்தான் அணு உலைகள் செயல்படுகின்றன. இதை அணுக்கரு இயற்பியலில் (Nuclear Physics) விரிவாக படிப்பார்கள். சூரியனின் உட்கருவானது, ஏராளமான ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டுள்ளது. அவை அணுக்கரு இணைவு விளைவில் ஒன்றிணைந்து ஹீலியம் அணுக்களாக மாற்றம் பெறுகின்றன. (ஹைட்ரஜனின் அணு எண் ஒன்று – ஹீலியத்தின் அணு எண் இரண்டு). அவ்வாறு இணையும்போது ஏற்படும் வெப்பம்தான் எரிசக்தியையும் உற்பத்தி செய்கிறது. ஒளித்துகள்கள் எனும் போட்டான்கள் அந்த சக்தியை உள்ளிருந்து சூரியனின் மேற்பரப்பிற்கு கொண்டுவருகின்றன. அந்த வெப்பம்தான் பூமிக்கும் கடத்தப்படுகின்றது.  

Ø  நமது பால்வீதியில் 100 பில்லியன்களுக்கும் மேலான சூரியன்கள் உள்ளன. அதில் நமது சூரியனும் ஒன்று.
Ø  சூரியனின் விட்டம் : 13,90,000 கி.மீ.
Ø  நிறை: 1.989e30 கி.கி.
Ø  சூரியக் குடும்பத்தில் 99.80% நிறையை சூரியன் மட்டுமே கொண்டுள்ளது.
Ø  மற்றக் கிரகங்களும் துணைக்கோள்களும் 0.20% அளவே உள்ளன.
Ø  70% ஹைட்ரஜனும், 28% ஹீலியமும் 2% மற்ற தனிமங்களும் கொண்டது.
Ø  அணு இணைவு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனில் ஹட்ரஜனே இருக்காது. ஹீலியத்தை மட்டுமே கொண்டிருக்கும்.
Ø  சூரியனும் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. (25 – 36 நாட்கள்)
Ø  சூரியனின் மையக்கருவின் தின்மம் நீரைவிட 150 மடங்கு அதிகம்.
Ø  சூரியன் 386 பில்லியன் மெகாவாட் சக்தியை உற்பத்தி செய்கிறது.
Ø  கதிரியக்கம் மற்றும் காமா கதிர்களை வெளியிடுகிறது.
Ø  இதன் காந்தப் புலம் மிகவும் சக்தி வாய்ந்தது. புளூட்டோவையும் தாண்டி செல்கிறது.
Ø  வெப்பம் மற்றும் வெளிச்சம் மட்டுமின்றி குறைந்த அடர்த்திக் கொண்ட (எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களைக் கொண்ட) சூரியக் காற்றினையும் வீசுகிறது.
Ø  சூரியன் தோன்றி 4.50 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 5.00 பில்லியன் ஆண்டுகளுக்கு கவலையில்லை.

ஏற்கனவே சூரியன் பற்றிய பதிவில் பதிவு செய்யப்பட்டதையே இங்கு மறு பதிவு செய்துள்ளேன்.


இங்கு முதன்மையாகக் கவனிக்க வேண்டியது – சூரியனில் உள்ள வேதிப் பொருட்கள். அதாவது சூரியனின் மொத்த அளவில் 70% ஹைட்ரஜனும், 28% ஹீலியமும் 2% மற்ற தனிமங்களும் உள்ளன. உலகில் உள்ள அனைத்து பொருட்களையும், அதாவது, திட, திரவ, வாயு மற்றும் பிளாஸ்மா நிலையில் உள்ள அனைத்து பொருட்களையும் 118 தனிமங்களாக வகைப்படுத்த முடியும். அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட தனிமங்களே ஒன்றிணைந்து, பொருட்களாக மாறுகின்றன. பொருட்கள் என்பதில், மனிதனும் அடக்கம். அதாவது மனித உடலும் இந்த  தனிமங்களின் சேர்மங்களே.



சூரியன் – சோதிட வரையறை – தொடரும்

Sunday, February 21, 2016

மூன்று கோள்கள் – சோதிட வரையறை



சூரியனின் வரையறையைப் பார்ப்பதற்கு முன்னால், யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவற்றின் வரையறைகள் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். சோதிடத்தில் ஒவ்வொரு கோளிற்கும் சில தனித்த வரையறைகளைச் சோதிட நூல்கள் வழங்குகின்றன. தொடக்க நிலைகளில் ஏழு கோள்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளன. பின்னர் நிழற்கோள்கள் அல்லது சூரிய சந்திர சுற்றுப்பாதையின் வெட்டுபுள்ளிகள் எனப்படும் இராகுவும் கேதுவும் கோள்களின் கணக்கில் கொண்டுவரப்பட்டு, ஒன்பது கோள்கள் சோதிடக் கணித முறைக்குப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மாந்தி போன்ற துணைக் கோள்களும் சோதிடப்பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டன. அதன் பின்னர், புதிய வான்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கோள்களும் சோதிடக் கணித முறைக்கு சிலரால் கொண்டுவரப்பட்டன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கோள்களும் மேற்கத்திய கோள்கள் என குறிப்பிடப்பட்டு, அவற்றை பயன்படுத்துவது சரியல்ல எனும் வாதமும் எழுத் தொடங்கியது. நம் முன்னோர் வகுத்துக் கொடுத்த வரையறையைத் தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் நமது நாட்டின் சோதிட அறிஞர்கள் கொள்கையாகக் கொண்டிருந்ததால், அத்தகைய மூன்று கோள்களையும் பயன்பாட்டில் இருந்து விலக்கினர். ஆனால் ஒரு சிலர் அவைகளையும் கணக்கில் கொண்டு இன்றும் சோதிட பலன் உரைத்து வருகின்றனர். இருப்பினும், திடீரென்று, புளூட்டோ என்பது கோள்களின் கணக்கில் வராது என தற்போதைய வானியல் அறிஞர்கள் அறிவித்து அதனைக் குறுங்கோள் எனும் கணக்கில் கொண்டு வந்துள்ளனர். அதனால் புளோட்டோவை சோதிடக் கணக்கில் இருந்து விலக்கினர். யுரோனசும் நெப்டியூனும் சிலரால் இன்னும் பயன் பாட்டில் கொண்டுவரப்பட்டு பலன் உரைக்கின்றனர். மேலை நாட்டு சோதிட முறையில் யுரோனசும் நெப்டியூனும் தவிர்க்க முடியாத கோள்கள் ஆகிவிட்டன.

இத்தகைய சூழலில், நாம் யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய மூன்று கோள்களுக்கும் சோதிட வரையறையை ஆய்வு செய்ய வேண்டுமா என்பது கேள்விக்கு உடையதாக உள்ளது.

இந்த மூன்று கோள்களும், தற்போதைய காலத்தில் (கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்குள்) கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதால் விட்டுவிடலாம் என்பது சரியான செயல் அல்ல. அதே நேரத்தில் அந்த கோள்களின் இயல் தன்மையை ஒப்பு நோக்குவோம். சோதிடக் கணக்கின்படி தூரம் என்பது ஒரு பொருட்டல்ல. ஏனெனில் கோள்களில் இருந்து அல்லது கோள்களில் எதிர்பட்டு வரும் கதிர் வீச்சு என்பது பூமிக்கு வந்து சேரும் எனும் கோட்பாடே சோதிடத்தின் அடிப்படை. ஆனால் கால அளவு என்பது தான் கருத்தில் கொள்ள வேண்டும். அது ஏன் என்பதைக் காண்போம்.

யுரோனஸ்:
யுரோனஸ் சூரியனிடமிருந்து 287.10 கோடி கி.மீ, தொலைவில் உள்ளது.  தனது பாதையில் அது சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது 84.30 ஆண்டுகள். அதனை 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளித்தால் ஏழு ஆண்டுகள் மூன்று மாதம் என்ற கணக்கில் ஒவ்வொரு இராசியிலும் இருக்கும். இதன்படி, இராசி சக்கரத்தில் ஒரு முழு சுற்றினைப் பூர்த்தி செய்வதற்கு 84 ஆண்டுகள் ஆகும். அதாவது மிகப்பெரும்பாலான சாதகர்களின் வாழ்வில் அது நிகழாமலேயே போய்விடும்.


நெப்டியூன்:
நெப்டியூன் சூரியனிடமிருந்து 450.40 கோடி கி.மீ, தொலைவில் உள்ளது.  தனது பாதையில் அது சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது 164.79 ஆண்டுகள். அதனை 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளித்தால் 12 ஆண்டுகள் ஒன்பது மாதம் என்ற கணக்கில் ஒவ்வொரு இராசியிலும் இருக்கும். இதன்படி, இராசி சக்கரத்தில் ஒரு முழு சுற்றினைப் பூர்த்தி செய்வதற்கு 165 ஆண்டுகள் ஆகும். அதாவது சாதகர்களின் வாழ்வில் அது நிகழவே முடியாது. மேலும், இதன் சுற்றுவட்டப்பாதை நியூட்டனின் விதிப்படி இல்லை எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

புளூட்டோ:
புளூட்டோ சூரியனிடமிருந்து 2274 கோடி கி.மீ, தொலைவில் உள்ளது.  தனது பாதையில் அது சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது 248 ஆண்டுகள். அதனை 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளித்தால் 20 ஆண்டுகள் எட்டு மாதம் என்ற கணக்கில் ஒவ்வொரு இராசியிலும் இருக்கும். இதன்படி, இராசி சக்கரத்தில் ஒரு முழு சுற்றினைப் பூர்த்தி செய்வதற்கு 248 ஆண்டுகள் ஆகும். இதுவும் சாதகர்களின் வாழ்வில் நிகழவே முடியாது. மேலும், இது தற்போது கோள்களின் தகுதியையும் இழந்து விட்டது.

எனவே கோள்கள் இராசிகளைக் கடக்கும் கணக்குகள் இந்த மூன்று கோள்களுக்கும் பொதுவில் பொருந்த வில்லை. மேலும் இது நமது பண்டைய வானியல் மற்றும் நமது சோதிட அறிஞர்களால் கண்டறியப்படாதவை. எனவே இவற்றை தற்போது நாம் சோதிடக் கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை. இருப்பினும்,  இவற்றின் தன்மைகள், தாக்கங்கள் குறித்து நிகழ்வுகள் பதிவு செய்யப்படும்போது, பின்னொரு காலங்களில் நமது சோதிடக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படலாம். நிகழ்தகவின் அடிப்படையில் அவை நிரூபிக்கவும் படலாம். அல்லது இக்கோள்களின் தேவை எழாமலும் போகலாம். இப்போதைக்கு நாம் இவற்றிற்கு வரையறை கொடுக்க இயலவில்லை என்பதே உண்மை.


அடுத்து சூரியன்

Tuesday, February 16, 2016

கோள்களின் சோதிட வரையறைகள் - முன்னுரை





சோதிடம் என்பதே கோள்களின் அசைவினை வைத்து கணிக்கப்படுவதுதான். சாதகம் என்பது இராசிக் கட்டத்தினை அடிப்படையாக வைத்து கணக்கிடுவதுதான் என்றாலும், அந்த இராசிக் கட்டத்தில் கோள்கள் எவ்வாறு அமையப் பெற்றிருக்கின்றன என்றும் அவைகளுக்கிடையேயான தொடர்புகள் பற்றியும் அலசி ஆராய்ந்து தொகுத்து பலன் உரைப்பதுதான் சோதிடக் கணிதம் ஆகும். இங்கு கோள்கள் என்பன எவை எவை என்பது பற்றி நாம் ஏற்கனவே விளக்கிவிட்டோம்.


சோதிடத்தில், விண்மீனாகிய சூரியனும் கோள்தான், பூமியின் துணைக் கோளான சந்திரனும் கோள்தான், கற்பனை முனைகளான இராகுவும் கேதுவும் கோள்கள்தான். ஆனால், பூமியை நாம் கோள்களின் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. அதுபற்றி நாம் ஏற்கனவே விளக்கி விட்டோம். ஆகவே சோதிட விதிகளின்படி கோள்கள் என்பன முறையே – சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, இராகு மற்றும் கேது எனும் ஒன்பது கோள்கள் ஆகும்.


வானியல் (Astronomy) கோட்பாட்டின்படி – சூரியன் மற்றும் அதன் கோள்களான சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவற்றின் இயல் தன்மைகள் பற்றியும் நிமித்திகனின் ஆரம்ப தொடர்களிலேயே விளக்கி விட்டோம். அதாவது, மேற்சொன்ன கோள்களின் இயற்பியல் தன்மைகள் – எடை, நிறை, அளவு, தூரம் போன்றவையும், வேதியியல் தன்மைகள் – தனிமங்கள், வாயுக்கள் போன்றவையும் குறித்து ஓரளவு தொகுத்துள்ளோம்.


அத்தகைய இயற்பியல், வேதியியல் தன்மைகள் எந்த அளவிற்கு சோதிட வரையறைகளுடன் ஒத்து போகின்றன அல்லது சோதிடத் தன்மைகளை அவற்றோடு ஒப்பிட முடியுமா என்பன பற்றியெல்லாம் நாம் ஆராய வேண்டியுள்ளது.


எனவே, மேற்சொன்ன ஒன்பது கோள்களுக்கும் உரிய சோதிட வரையறைகளை அவற்றின் இயல் தன்மைகளோடு ஒப்பிட்டு ஆராய முயலவேண்டும். எடுத்துக்காட்டாக, சனிக் கோளானது சோதிட வரையறைப்படி, கால தாமதத்திற்கு காரணமாக இருக்கிறது. அதன் இயல் தன்மையின் படி, சூரியக் குடும்பக் கோள்களில் மிக நீண்ட தொலைவிலும், ஒருமுறை சூரியனைச் சுற்றிவருவதற்கு மற்றக் கோள்களைவிட அதிக நாட்கள், அதாவது 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்வதையும் கணக்கில் கொண்டால், தாமதம் என்பது சோதிட விதியோடு பொருந்தி வருவதை அறிய முடியும். அதுபோல் சோதிட வரையறையின்படி, சூரியன் உயிர் நிலைக்கு காரணம் எனவும், சூரியனின் வேதியியல் விதியானது, ஒரு அணு எண் கொண்ட ஹைட்ரஜன் நிறைய இருப்பதும், அது வேதிவினைப்படி இணைந்து இரு அணு எண்கள் கொண்ட ஹீலியமாக மாற்றம் அடைவதும், அதாவது ஆரம்ப உயிர்நிலை எனும் கருத்தோடு ஒன்றிப்போவதையும் ஒப்பிட முடிகிறது. இதுபோலவே கோள்களுக்கான மற்ற சோதிட வரையறைகளும் பொருந்துகிறதா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.


இனி, தொடர்ந்து ஒவ்வொரு கோளினையும் அதன் சோதிட வரையறைகளை, அவற்றின் இயல் தன்மையோடு ஒப்பிட்டு காண முயல்வோம்.


முதலில் …..சூரியன்

Wednesday, February 3, 2016

மூன்றாம் வீடு முதல் பன்னிரண்டாம் வீடு வரை – முன்னோர் வகுத்த வரையறைகள்




இனி, மூன்றாம் வீடு முதல் பன்னிரண்டாம் வீடு வரை, அவற்றின் பொது வரையறைகளைத் தொகுத்துக் காண்போம். இங்கு கொடுக்கப்பட்ட பொது வரையறைகள் என்பன, பல்வேறு சோதிட நூல்களில் பொதுவில் காணப்படும் வரையறைகள் ஆகும். இவை மட்டுமின்றி வேறு பல வரையறைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை சிலவற்றோடு மாறுபட்டும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தாயார் குறித்த வரையறை என்பது நான்காம் வீடு என பொதுவில் அனைத்து சோதிட நூல்கள் கூறினாலும், மகாக்கவி காளிதாசரின் உத்திர காலாமிர்தத்தில், பத்தாம் வீட்டில் தாயார் பற்றி அறியலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதுபோலவே, பல்வேறு நூல்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் பல்வேறு வரையறைகளை வகைப்படுத்திக் கொடுத்திருந்தாலும், சில வரையறைகள் அனைத்து நூல்களிலும் பொதுவில் உள்ளன. எனவே அவற்றை மட்டுமே பொதுவரையறையாகக் கொடுத்துள்ளேன், மேலும், அத்தகைய வரையறையில் உள்ளவையின் விரிவையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக எட்டாம் வீட்டில் ‘நட்டம்’ என்றும் பதினொன்றாம் வீட்டில் ‘இலாபம்’ என்று இருந்தாலும், அவற்றின் எதிர்மறைக் கருத்துக்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அமைப்பு நிலை சரியில்லை என்றால் இலாபம் என்பது நட்டமாகவும் மாறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

       மீண்டும், சென்ற பதிவில் கூறியதை ஞாபகப்படுத்துகிறேன். இந்த பொது வரையறை என்பது அந்தந்த வீட்டின் பொது வரையறைதான். இவற்றின் நிலை என்பது, அது சார்ந்த இராசி, அதிலுள்ள கோள்கள், பார்வைகள், பலங்கள் ஆகியவற்றைப் பொருத்தே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

மூன்றாம் வீட்டின் பொது வரையறைகள் –

       உடன் பிறந்தவர்கள், வீரம், காது-மூக்கு-தொண்டை, சிறு பயணங்கள், பணியாட்கள் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

நான்காம் வீட்டின் பொது வரையறைகள் –

       தாயின் நிலை, கல்வித்திறன் (வித்தை), வாகனம், வீடு, நிலபுலன்கள் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஐந்தாம் வீட்டின் பொது வரையறைகள் –

       குழந்தைப் பேறு, பாட்டான், நல்வினைகள், மனத்திறன் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஆறாம் வீட்டின் பொது வரையறைகள் –

       உடல் நோய்கள், பகைவர்கள், பயம், தாய் வழி உறவினர்கள், சிறைப்படல் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஏழாம் வீட்டின் பொது வரையறைகள் –
       திருமணம், வாழ்க்கைத் துணை, நண்பர்கள், கூட்டு முயற்சி, வாழ்க்கை இன்பம் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

எட்டாம் வீட்டின் பொது வரையறைகள் –

       ஆயுட்காலம், பொருள் நட்டம், நெடுநாள் பிணிகள், பகை, கவலை, துன்பம் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஒன்பதாம் வீட்டின் பொது வரையறைகள் –

       தந்தை, குலப் பெருமை, தர்மச் சிந்தனைகள், வாழ்க்கை நலன் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

பத்தாம் வீட்டின் பொது வரையறைகள் –

       தொழில், வணிகம், பதவி-அதிகாரம், பெரும்புகழ் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

பதினொன்றாம் வீட்டின் பொது வரையறைகள் –

       மிகை செல்வம் (இலாபம்), எதிர்பாரா செல்வம், தமையன், ஆதாயம் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

பன்னிரண்டாம் வீட்டின் பொது வரையறைகள் –

       அயல் நாட்டு பணிகள், பயணங்கள், இழி செயல்கள், செல்வ விரையங்கள், தூக்கம் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்


       மேலே கூறப்பட்டவைகளின் வரையறைகளை எவ்வாறு தீர்மானித்தார்கள் என்பதற்கு எவ்வித கணிதம் சார்ந்த விளக்கமும் இல்லை.  முதல் வீடு என்பது தன்னிலை, இரண்டாம் வீடு என்பது தன் வாழ்வு என வகைப்படுத்திய வகையில் சரியெனக் கொண்டால், அடுத்து தாய், தந்தை, உடன்பிறந்தோர், உறவினர், வித்தை, தொழில், வாழ்க்கைத்துணை, இல்லற வாழ்வு, குழந்தைப்பேறு, செயல்பாடுகள், ஆயுள் என ஒரு வரிசையில் வகைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இங்கு மூன்றாம் வீடு – உடன் பிறந்தோன், நான்காம் வீடு – தாய், ஐந்தாம் வீடு – குழந்தை, ஆறாம் வீடு – நோய்நொடி, ஏழாம் வீடு – வாழ்க்கைத் துணை, எட்டாம் வீடு – ஆயுள், ஒன்பதாம் வீடு – தந்தை, பத்தாம் வீடு – தொழில், பதினொன்றாம் வீடு – மிகைச் செல்வம், பன்னிரண்டாம் வீடு – மிகைச் செலவு என பொதுவில் வரையறுத்துள்ளனர். இதில் ஏழாம் வீடு – வாழ்க்கைத்துணை என்பது மட்டும் மிக்க பொருத்தாமாய், அதாவது தன்னிலை என்பது வாழ்க்கைத் துணையோடு இணையும்போது தம் நிலை என மாறுவதால், அதாவது ஒன்றிற்கு நேர் எதிரான ஏழாம் வீடு (180 பாகை நேர்க்கோடு) என்பதில் அமைந்திருப்பதில் பொருத்தம் உள்ளது. மற்றவை அனைத்தும், ‘முன்னோர்கள் தம் அனுபவத்தை பதிவு செய்துள்ளார்கள் – நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம்’ எனும் நிலையில்தான் ஏற்க வேண்டியுள்ளது. அதனால்தான், அவரவர் அனுபவத்தினை (கற்றது – கேட்டது) பதிவு செய்ததில் சிற்சில கருத்துகளில் முரண் நிலைகள் உள்ளன. எனவே, இந்த பன்னிரெண்டு வீடுகளுக்குமான வரயறைகளுக்கான ‘விவாதத்தை நிலுவையில் வைத்துவிட்டு (Pending discussion)’ பொதுவில் வைக்கப்பட்ட வரையறைகளை, ‘நிகழ்தகவு’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வோம்.



அடுத்து – கோள்களின் வரையறைகள்