Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label சோதிட ஆய்வு-1-10. Show all posts
Showing posts with label சோதிட ஆய்வு-1-10. Show all posts

Wednesday, November 20, 2013

புதன் எனும் குட்டிக் கோள்


புதன்


     சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய குட்டிக் கோள். சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளும் இதுதான். தற்போதைய கணக்கின்படி உள்ள எட்டுக் கோள்களில் நான்கு கோள்கள் திட நிலையில் உள்ளவை. செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் நமது பூமி ஆகிய நான்கும் திட நிலையில் உள்ளவை.

    இது சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் மற்றக் கோள்களைவிட வெப்பம் அதிகம். மெர்குரி எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பாதரசம் என்பது பொருள் திரவ நிலையில் உள்ள உலோகம் பாதரசம். ஆனால் நமது புதனோ ஒரு இரும்புப் பந்துபோல் திட நிலையில் உள்ளது.

   பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. புதனோ தன்னைச் சுற்றிக் கொள்ள 59 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அவ்வளவு பொறுமை. அதனால், ஒரு புறம் வெகு வெப்பமாகவும் மறுபுறம் வெகு குளிராகவும் உள்ளது. அதாவது 30 நாட்கள் பகலாகவும் 30 நாட்கள் இரவாகவும் உள்ளது. அதன் சூழலில் உயிர்வாயும், சோடியமும், ஹைட்ரஜனும், ஹீலியமும், பொட்டாசியமும் நிரவி உள்ளன. உயிர்வாயுவான ஆக்சிஜன் இருந்தாலும் அங்கு எதுவும் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறு இல்லை. காரணம் அதிக வெப்பம் அதிக குளிர்.


புதனின் மேற்பரப்பு
சில குறிப்புகள்:

  • ·         புதன் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்.
  • ·         மிகச்சிறிய கோள். சந்திரனை விட சற்றே பெரியது.
  • ·         சூரியனிலிருந்து 58 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
  • ·         அதன் ஆரம் 2439 கி.மீ (ஏறக்குறைய சென்னை – தில்லி தூரம்)
  • ·         அதன் நிறை 3.30e23 கி.கி.
  • ·         தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 59 நாட்கள்
  • ·         சூரியனைச் சுற்றிவர 88 நாட்கள்
  • ·         அதன் சூழல் சூரியக் காற்றாலும், நுண்ணலைக் கதிர்களாலும் எப்போதும் தாக்குதலுக்குள்ளாகி சூழப்பட்டுள்ளது
  • ·         இதற்கு துணைக் கோள்கள் எதுவும் கிடையாது
  • ·         பகல் நேர வெப்பம் 430 செல்சியஸ்; இரவு வெப்பம் (-180) செல்சியஸ்
  • ·         உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை.
  • ·         புதனிலிருந்து சூரியனைப் பார்த்தால், பூமியிலிருந்து பார்ப்பதைப்போல் மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.
  • ·         புதனிலும் காந்தப் புலம் உண்டு
  • ·         புதன் கற்பாறைகளும் இரும்புப் பாறைகளும் சேர்ந்த ஒரு உலோகப் பந்தாய் சுற்றி வருகிறது. பாறை 30 சதமும், பெரும்பகுதி இரும்புடன் சேர்ந்த உலோகக் கலவையாக 70 சதவீதமாகவும் உள்ளது.
  • ·         மற்ற திடக் கோள்களில் இது நேர்மாறாக இருப்பதால், இதன் தோற்றம் பற்றி மாற்றுக் கருத்துக்களும் உள்ளன.
  • ·         புதன் வேறு ஒரு கேலக்சியில் உருவாகி, பின்னர் வான் மண்டலத்தில் மிதந்து, தற்போது உள்ள இடத்திற்கு வந்திருக்கலாம் எனவும் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
  • ·         சூரியனின் கோணத்தில் 28.3 டிகிரியில் புதன் இருப்பதால், சூரியனின் வெளிச்சம் காரணமாக இதனை பெரும்பாலும் பூமியிலிருந்து பார்க்க முடிவதில்லை.



…….அடுத்து சுக்கிரன் எனும் வெள்ளிக் கோள்
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)
அவன் - இவன்
அவன் :
புதனைப் பார்க்க முடியாமல் போவது இருக்கட்டும், இவரையே பத்து நாளா பார்க்க முடியலயே.
இவன் :
எங்கயோ வெளியூர் போயிருக்கிறாராம். இதைக் கூட வெளியூரிலிருந்துதான் பதிவு செஞ்சாராம்.



Tuesday, November 12, 2013

சூரியக் குடும்பமும் நமது பூமியும் - சூரியன்


    My Very Educated Mother Just Showed Us Nine Planets. இது குழந்தைகளுக்கு ஒன்பது கோள்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள சொல்லித் தரப்படும் ஒரு வாக்கியம். முதல் எழுத்துக்கள் அந்தந்தக் கோள்களின் ஆரம்ப எழுத்துக்கள்.



    நேற்றையக் கருத்து இன்று பொய்த்துப் போகலாம், இன்றையக் கருத்து நாளை பொய்த்துப் போகலாம் எனும் கருத்துப்படி, 1930-ல் அறியப்பட்ட ஒரு கோள் 2006-ல் நீக்கப்பட்டு, இன்று எட்டு முதன்மைக் கோள்களும், பல துணைக்கோள்களும், குறுங்கோள்களும், தலைமைப் பொறுப்பில் இருக்கும் நமது சூரிய விண்மீனைச் சுற்றி வருகின்றன. விண்மீன்களுக்கும் கோள்களுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு – விண்மீன்கள் ஒளியை உமிழும் – கோள்கள் ஒளியைப் பிரதிபலிக்கும்

சூரியன்



    
      இது ஒரு விண்மீன். மனிதன் முதன் முதலில் கண்டு பயந்த நெருப்புப் பந்து. இந்த நெருப்புப் பந்தைத்தான் சூரியக் குடும்பத்தின் கோள்கள் அனைத்தும் கடிகார எதிர் சுற்றில் சுற்றி வருகின்றன.

     சூரியன் மிகப் பெரிய விண்மீன். ஏறக்குறைய 1.40 மில்லியன் கிலோமீட்டர் விரிவும், அதன் மேற்பரப்பில் 109 பூமிகளை பரப்பக்கூடிய அளவும், அது ஒரு வெற்றிடப் பந்தாக இருந்தால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூமிகளை நிரப்பக் கூடிய ஒரு பெரிய பந்தாகவும் உள்ளது.

     இந்த நெருப்புப் பந்து வெளிப்புறத்தில் 10,000 ஃபாரன்ஹீட்டாகவும், உட்கருவில் 2,80,00,000 ஃபாரன்ஹீட்டாகவும் வெப்பத்தை கொண்டிருக்கிறது.
ஏனிந்த வெப்பம். கொஞ்சம் வேதியியல். அணுக்களில் பிளவு ஏற்படும்போதும் (fission), அணுக்களில் சேர்க்கை ஏற்படும்போதும் (fusion) அளப்பறிய வெப்பம் உண்டாகும். அந்த அடிப்படையில்தான் அணு உலைகள் செயல்படுகின்றன. இதை அணுக்கரு இயற்பியலில் (Nuclear Physics) விரிவாக படிப்பார்கள்.

     சூரியனின் உட்கருவானது, ஏராளமான ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டுள்ளது. அவை அணுக்கரு இணைவு விளைவில் ஒன்றிணைந்து ஹீலியம் அணுக்களாக மாற்றம் பெறுகின்றன. (ஹைட்ரஜனின் அணு எண் ஒன்று – ஹீலியத்தின் அணு எண் இரண்டு). அவ்வாறு இணையும்போது ஏற்படும் வெப்பம்தான் எரிசக்தியையும் உற்பத்தி செய்கிறது. ஒளித்துகள்கள் எனும் போட்டான்கள் அந்த சக்தியை உள்ளிருந்து சூரியனின் மேற்பரப்பிற்கு கொண்டுவருகின்றன. அந்த வெப்பம்தான் பூமிக்கும் கடத்தப்படுகின்றது.

சூரியன் - சில குறிப்புகள்:

  • Ø  நமது பால்வீதியில் 100 பில்லியன்களுக்கும் மேலான சூரியன்கள் உள்ளன. அதில் நமது சூரியனும் ஒன்று.

  • Ø  சூரியனின் விட்டம் : 13,90,000 கி.மீ.

  • Ø  நிறை: 1.989e30 கி.கி.

  • Ø  சூரியக் குடும்பத்தில் 99.80% நிறையை சூரியன் மட்டுமே கொண்டுள்ளது.

  • Ø  மற்றக் கிரகங்களும் துணைக்கோள்களும் 0.20% அளவே உள்ளன.

  • Ø  70% ஹைட்ரஜனும், 28% ஹீலியமும் 2% மற்ற தனிமங்களும் கொண்டது.

  • Ø  அணு இணைவு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனில் ஹட்ரஜனே இருக்காது. ஹீலியத்தை மட்டுமே கொண்டிருக்கும்.

  • Ø  சூரியனும் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. (25 – 36 நாட்கள்)

  • Ø  சூரியனின் மையக்கருவின் தின்மம் நீரைவிட 150 மடங்கு அதிகம்.

  • Ø  சூரியன் 386 பில்லியன் மெகாவாட் சக்தியை உற்பத்தி செய்கிறது.

  • Ø  கதிரியக்கம் மற்றும் காமா கதிர்களை வெளியிடுகிறது.

  • Ø  இதன் காந்தப் புலம் மிகவும் சக்தி வாய்ந்தது. புளூட்டோவையும் தாண்டி செல்கிறது.

  • Ø  வெப்பம் மற்றும் வெளிச்சம் மட்டுமின்றி குறைந்த அடர்த்திக் கொண்ட (எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களைக் கொண்ட) சூரியக் காற்றினையும் வீசுகிறது.

  • Ø  சூரியன் தோன்றி 4.50 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 5.00 பில்லியன் ஆண்டுகளுக்கு கவலையில்லை.



அடுத்து… புத்திக்காரகன் புதன்….
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)


அவன் - இவன்
அவன் :
கொர்……….கொர்…………….கொர்………….
இவன் :
எழுந்திரு அவனே எழுந்திரு…. வகுப்பு முடிஞ்சிடுச்சு…

Friday, November 8, 2013

பால் வீதி (Milky Way – Galaxy)

     நான் உங்களை மிகப் பெரிய வான் அறிவியல் பள்ளிக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. நான் அத்தகைய அறிவியலாளனும் இல்லை. ஆனால் இந்தப் பிரபஞ்சம் என்பது என்ன? விண்மீன் தொகுதி என்பது என்ன? நமது சூரியக் குடும்பம் எப்படி வந்தது? அதில் நமது பூமி எங்குள்ளது? என்பது போன்ற அடிப்படைத் தகவல்களை – இந்த உலகம் பொதுவாக ஏற்றுக் கொண்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அது இந்த வலைப்பூவின் நோக்கத்தை செம்மைப் படுத்தும்.
அண்டம் அல்லது பிரபஞ்சம் விரிய ஆரம்பித்தவுடன், எண்ணற்ற விண்மீன் தொகுதிக் கூட்டங்கள் உருவாகி உள்ளன. அவற்றை கேலக்ஸி என விண் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு கேலக்ஸியிலும் எண்ணற்ற விண்மீன்கள், கோள்கள், குறுங்கோள்கள், தூசுகள் என விரவிக் கிடக்கின்றன.


     நமது கேலக்ஸியை, MILKY WAY அதாவது பால் வீதி எனும் பெயரால் அழக்கின்றனர். நாமும் அப்படியேதான் அழைகின்றோம். நமது பால் வீதியில் விண்மீன் கூட்டங்களின் தொகுதி, கம்பிவலைச் சுருள் போல் உள்ளன. பால் வீதி ஒரு நீள் வட்டமாக இருக்க, அதன் விட்டம் ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஒளியாண்டு இருக்கக் கூடும் என இயற்பியலாளர்கள் கூறுகின்றனர். அதில் 10000 முதல் 40000 கோடி (100-400 பில்லியன்கள்) விண்மீன்கள் இருக்கக் கூடும் என்றும், அவற்றிற்கு உறுதுணையாக எண்ணிலடங்கா கோள்களும் இருக்கக் கூடும் என்றும் கூறுகின்றனர்.

    ஒவ்வொரு விண்மீனும் தத்தமது கோள்களுடன் கோலோட்சி வருவகின்றன, நமது சூரியக் குடும்பமும் அதில் ஒன்று. நமது பால்வீதியில், நம் சூரியக்குடும்பம், பால்வீதியின் மையத்திலிருந்து ஏறக்குறைய 27,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.

     இந்தக் காணொளிக் காட்சியைப் பாருங்கள். நமது பால் வீதியும் சூரியக் குடும்பமும் எவ்வளவு அற்புதம்.




                      .....அடுத்த பதிவில், சூரியக் குடும்பமும் நமது பூமியும்.


அவன் - இவன்
அவன் :
அப்பாடா, ஒரு வழியாய் பால் வீதி முடிச்சிட்டார்
இவன் :
அவரசப்படாதே, சோதிடப் பாடம் எப்ப ஆரம்பிப்பார்னு பார்ப்போம்.

Sunday, November 3, 2013

பிரபஞ்சம்




    
    “O” அதாவது பூச்சியம் என்ற எண்ணை இந்தியர்கள் உலகிற்கு தந்ததாக சொல்லுவார்கள். பூச்சியத்தில் இருந்துதான் அனைத்து எண்களும், இடப்புறம் –n வரையிலும் வலப்புறம் +n வரையிலும் செல்வதாகக் கணிதம் சொல்கிறது. அந்த n முடிவில்லாதது.


     அதுபோன்றுதான் இந்த பிரபஞ்சமும். பூச்சியம் போன்றது. ஆரம்பமும் முடிவும் இல்லாதது. “விரிந்தது சுருங்கும் சுருங்கியது விரியும்” எனும் இயற்பியல் தத்துவத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

     இயற்பியல் அறிஞர்களின் கருத்துப்படி, நிறைய பிரபஞ்சங்கள் இருக்கக் கூடும். அதில் ஒன்றுதான் நாமிருக்கும் பிரபஞ்சம். பிரபஞ்சங்கள் எப்படித் தோன்றின அல்லது யார் படைத்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

     ஆரம்பம் முதல் மிக நிறைய பக்கங்களைக் காணமுடியாததால், இயற்பியலாளர்கள் ‘சரி இங்கிருந்து வைத்துக் கொள்வோம்’ என நடுவிலிருந்து தொடங்கிய கதைதான் “பிக் பாங்க் தியரி” எனும் “பெரு வெடிப்புக் கொள்கை”.

     தற்போதைய பெரு வெடிப்புக் கொள்கையின்படி, அணுக்கள் திரண்டு மிக மிக அடர்த்தியுடன் சிறு உருண்டையாக இருந்ததாகவும் (Planck epoch) பிளாங்க் யுகத்தில் பெரும் அழுத்தம் பெரும் வெப்பம் என 10 முதல் 32 வினாடி நேரத்தில் அதன் கருப் பொருள் மாபெரும் வெடிப்பாக வெடித்து, அந்தக் கருப்பொருள் பல கோடிக்கணக்கான துகள்களாக விரிந்து விரிந்து, அணுக்கள், விண்மீன்கள், விண்மீன் தொகுதிகள், கறுப்புப் பொருட்கள், கறுப்புச் சக்தி என தற்போதைய நிலையை அடைந்ததாக கூறப்படுகிறது.இந்த பிரபஞ்சத்தில் உள்ளவை 5% பொருட்கள் (Materials) – அணுக்கள், விண்மீன்கள், விண்மீன் தொகுதிகள்; 25% - கறுப்புப் பொருட்கள்( Dark Matter); 70% - கறுப்புச் சக்தி (Dark Energy) என இயற்பியலாளர்கள் கொள்கை வகுத்துள்ளனர்.

      5% அளவே உள்ள பொருட்களில் தான் எண்ணற்ற விண்மீன்களும், விண்மீன்கூட்டங்களும், கேலக்ஸி எனப்படும் விண்மீன்தொகுதிகளும் உள்ளன.  எத்தனை கேலக்ஸிகள் உள்ளன என்று கேட்டால், பல ஆயிரம் கேலக்ஸிகள் இருக்கக் கூடும் என அனுமானிக்கிறார்கள்.

    அதில் ஒன்றுதான் “பால் வீதி” (Milky Way)  எனப்படும் நமது சூரியக் குடும்பமும் உள்ளடங்கிய கேலக்ஸி ஆகும்.

பெரு வெடிப்புக் கொள்கை
    
   அனைத்து கேலக்ஸிகளும் நமது பிரபஞ்சத்தை நீள்வட்டத்தில் சுற்றுவதாகக் கூறுகிறார்கள். நமது பிரபஞ்சம் தோன்றி ஏறக்குறைய 14 பில்லியன் ஆண்டுகள் (13.798 ± 0.037 billion years) ஆவதாகவும், நமது பால் வீதி முதல் சுற்று முடித்து இரண்டாவது சுற்றில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.


மீண்டும்….



அவன் - இவன்

அவன் :
சோதிடத்தைப் பற்றி எழுத சொன்னால், பிரபஞ்சம், பெரு வெடிப்பு –ன்னு எழுதறாரு.
இவன் :
அது ஒன்னுமில்ல, இப்பதான தீபாவளி முடிஞ்சுது, அதான் வெடியைப் பத்தி எழுதறாரு.

Tuesday, October 29, 2013

முன்னுரை-7


     இந்த ஆய்விற்கு, முதலில் சென்ற களம், வலை தளம் தான். அதில் சோதிடம் பற்றிய நிறைய தகவல்கள் கிடைத்தாலும், இரண்டு முக்கிய வலைப்பூக்களைச் சொல்லியே ஆகவேண்டும். பின்னர் இது தொடர்பான புத்தகங்கள், தகவல்கள், நண்பர்கள் என்று நீண்டு கொண்டே செல்கின்றது. மெய்யென்று சொன்ன தளங்கள் மட்டுமின்றி, பொய்யென்று சொல்லும் தகவல்களையும் தேடத்தொடங்கினேன்.

    ஓரளவு தகவல்கள் திரட்டிய பின்பே, இந்த வலைப்பூவைத் தொடங்க தலைப்பட்டேன்.

   தகவல்கள் திரட்டலுக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்தாலும், கீழ் வருபவர்கள் முதன்மையானவர்கள்.

விலையில்லாமல் வழங்கியவர்கள்

1.   கூகுள் தேடு தளம்
2.   வலைப்பூ - தமிழோவியம் – சோதிட ரத்தினா திரு S. சந்திரசேகர் அவர்களின் “நீங்களும் சோதிடராகலாம்” எனும் பதிவுகள்
3.   வலைப்பூ – வகுப்பறை 2007 – திரு சுப்பையா வீரப்பன் (வகுப்பறை வாத்தியார்) அவர்களின் சோதிட பாடங்கள்
4.   பிருகத் ஜாதகா – வராகமிகிரர் – ஆங்கில மொழிபெயர்ப்பு திரு N. சிதம்பரம் அய்யர் அவர்கள் (1885)
5.   பிருகத் சம்கிதா – வராகமிகிரர் – ஆங்கில மொழிபெயர்ப்பு திரு V. சுப்ரமணிய சாஸ்த்திரி அவர்கள் (1946)
6.   பல தீபிகா – மந்திரேஸ்வரர் – ஆங்கில மொழிபெயர்ப்பு திரு Dr. G.S.  கபூர் அவர்கள்
7.   ஜெகனாத ஹோரா – PVR நரசிம்மராவ் அவர்கள்
8.       THE MATHEMATICS OF ASTROLOGY - DOES HOUSE DIVISION MAKE SENSE?- By Kevin Heng Ser Guan, Department of Physics, National University of Singapore
9.       மேலத்தாணியம் ஆசாத் – பிளாக் தொடங்கும் வழிமுறைகள்
10.  மற்றும் இதர வலை தளங்கள் (எதிர் தளங்களும்).


வாங்கிய புத்தகங்கள்(விலைகொடுத்து)

11.  சோதிட ஆராய்ச்சித் திரட்டு – மூன்று பாகங்கள் – திரு மு. மாதேஸ்வரன் அவர்கள்
12.  ஜாதக அலங்காரம் – கீரனூர் நடராசன் – மூலமும், உரையும் விரிவுரையும் – திருமதி சி. மகாலட்சுமி அவர்கள்
13.  உத்திர காலாமிர்தம் – மகாக்கவி காளிதாசர் – மூலமும் உரையும் – எஸ்.எம். சதாசிவம் அவர்கள்
14.  வரகமிகிரரின் பிருகத் ஜாதகச் சாரம் – மணிமேகலைப் பிரசுரம்
15.  உங்களின் ஜாதகப்படி நிகழும் திசாப் புத்தி பலன்கள் – மணிமேகலைப் பிரசுரம்
16.  ஜோதிடக் கலைக் களஞ்சியம் – எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள்
17.  மகரிஷி ஜெயமினி ஜோதிட விளக்கம் – எஸ்.பி. சுப்பிரமணியன் அவர்கள்
18.  பாவக பலன் – கீழவளவு K. சுப்ரமணியம் அவர்கள்
19.  லக்கினப்பலன் – விதியும் விதிவிலக்கும் - கீழவளவு K. சுப்ரமணியம் அவர்கள்
20.  12 லக்கினபாவ பலன்கள் – மு. மாதேஸ்வரன் அவர்கள்
21.  அஷ்டவர்க்க கணிதமும் பலன்களும் – திரு. மு. மாதேஸ்வரன் அவர்கள்
22.  ஜாதகத்தில் நோய்கள் அறியும் முறை – திரு மு. மாதேஸ்வரன் அவர்கள்.
23.  குடும்ப ஜோதிடம் – லிப்கோ பதிப்பகம்
24.  கடவுள் தோன்றியது எப்படி – கிராண்ட் ஆலன் – தமிழாக்கம் – திரு சி. வெள்ளயன், அவர்கள்
25.  நான் நாத்திகன் ஏன்? – தோழர் கே, பகத்சிங் அவர்கள்
26.  சோதிட ஆராய்ச்சி – தந்தை பெரியார் அவர்கள்
27.   இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல் வாதமும் – நியூ சென்சுரி புத்தகப் பதிப்பு


பாடங்கள்

28.  முதுகலை – சோதிடவியல் - பாடங்கள் – அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – சோதிட ஆசிரியர்-ஒருங்கிணைப்பாளர் – திரு K.R.  சுப்பிரமணியன் அவர்கள்


நண்பர்கள்

29.  திரு சு. குமாரவேல்
30.  திரு வீ. கனகராஜ்

    தொலைக்காட்சி

 31.   மெகா தொலைக்காட்சியில் காலம் நம் கையில் வழங்கி வரும் திரு. கோவர்த்தன் அவர்கள் 



    எதுவும் தேவையின் பொருட்டு கொஞ்சம் கற்பதுதான், ஆனால் அனைத்திலும் நிபுணத்துவம் பெறுதல் கடினம் என்பதை அனுபவம் உணர்த்தும் என்பது முற்றிலும் உண்மை. நானும் தேவையின் பொருட்டு கொஞ்சம் கற்றுக் கொண்டுவருகிறேன்.

    நான் படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். உங்களின் கருத்துகளையும் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள். நல்ல ஆரோக்கியமான ஆய்வினைச் செய்வோம்.

     எங்கிருந்து தொடங்குவது?



                                                      …. முன்னுரை முடிந்தது.

                           சற்றே இளைப்பாரலுடன் மீண்டும் வருகிறேன்.

Monday, October 28, 2013

முன்னுரை-6




     எனக்கு முதலில் சோதிடத்தில் கொஞ்சமும் ஆர்வம் கிடையாது. நம்பிக்கையும் கிடையாது. மகாக்கவி பாரதியார்கூட, சோதிடம் தனை இகழ்”. என்று தனது புதிய ஆத்திச்சூடியில் எழுதியிருப்பார். தந்தைப் பெரியாரைப் பின்பற்றுபவர்கள், சோதிடத்தைத் இகழ்வார்கள், கூடவே, பாரதியாரையும் இகழ்வார்கள், மகாக்கவி அந்த வரியை எழுதியிருந்தபோதும். ஆனால் தந்தை பெரியார் நிதர்சனமான ஒரு உண்மையைச் சொல்லியிருப்பார். நீ ஒரு கொள்கையில் மாற்றுக் கருத்து கொண்டிருந்தாலும், அது நிரூபிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே.


“உண்மை” இதழில் படித்தபோது, பெரியாரின் பதில் ஒன்றைப் படித்தேன்.

ஒருவர்:     “கடவுள் இல்லையென்று சொல்லுகின்றீரே, திடீரென கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன சொல்வீர்?”

பெரியார்:    சட்டென்று “இருக்குதுன்னு சொல்லிட்டுப் போறேன்”.



இந்த மன நிலை எல்லோருக்கும் வேண்டும்.


     “சோதிடம் இகழ்ந்திருந்த” எனக்கு, மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சோதிடம் பற்றிய நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்க நேர்ந்தது. இரு பிரிவு. ஒன்று சோதிடம் உண்மை, மற்றொன்று சோதிடம் பொய்.

     முதலில் பெயரில்லாத, பிறந்த தகவல்கள் இல்லாத ஒரு சாதகம் கொடுக்கப்பட்டு, இது யாருடையது எனக் கேட்க, அங்கு அமர்ந்திருந்த சோதிடர்கள், அது ஒரு அரசியல்வாதியின் சாதகம் என கணித்துச் சொன்னார்கள் (பெயர் வேண்டாம்). அதில் வியப்படைவதற்கு ஒன்றும் இல்லை. ஏனெனில், அது பெரும்பாலன சோதிடர்கள் (தேர்தலின்போது) பார்த்து ஆராய்ந்து கொண்டிருக்கும் சாதகம்.

    பின்னர், சோதிடத்தை மறுக்கும் பிரிவிலிருந்து ஒரு பெண் ஒரு சாதகத்தைக் கொடுத்து ஆராயச் சொன்னார். ‘ஷெல்வி’’ (என்று நினைக்கிறேன்) என்ற அந்த சோதிடர், அந்த சாதகத்தை ஆராய்ந்து பார்த்துவிட்டு, இந்த சாதகக்காரர், திருமணத்தில் தோற்று போயிருப்பார். விவாகரத்து வரை போயிருக்கும், என்று சொன்னார். முதலில் மறுத்த அந்தப் பெண், பின்னர், ஆம் தற்போது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது என்றும், அது தன்னுடைய சாதகம்தான் என்றும் கூறினார்.

    நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருப்பவர், திரு கோபிநாத். இதில் ஏதும் பொய் பித்தலாட்டம் நடந்திருக்க வாய்ப்பில்லை. பின்னர் எப்படி அவ்வளவு துல்லியமாக அந்த சோதிடரால், முன்பின் பார்த்திராத ஒருவரின் வாழ்க்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வினைக் கூறமுடிந்தது?

    அந்த நிகழ்வுதான், என்னை சோதிட ஆய்வின் பக்கம் திருப்பியது.


…. முன்னுரை தொடரும்