Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, December 15, 2013

இது நம்ம பூமி


     “பெரிது பெரிது புவனம் பெரிது, புவனமோ நான்முகன் படைப்பு” என்று அவ்வையார் பாட்டு சொல்கிறது. நான்முகன் படைத்தாரா என்பதைக் காட்டிலும், புவனம் (பூமி) பெரிது என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள்.

இது நம்ம பூமி

     நம் முன்னோர்கள் தங்கள் பதிவுகளில் புராண இதிகாசங்களுக்கும் இலக்கியத்திற்கும் சமய நம்பிக்கைகளுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தினை தாங்கள் அறிந்த அறிவியல்  நிகழ்வுகளுக்குக் கொடுக்கவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. உலகம் தட்டையானது என தாலமி தவறான கொள்கை வகுப்பதற்கு முன்பே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகம் உருண்டை அது சுழல் தன்மைக் கொண்டது என தனது குறளில் போகிறபோக்கில் சொல்லிச் சென்றவர் திருவள்ளுவர். “சுழன்றும் ஏர்பின்னது உலகம்” எனும் அவரது குறள் அதனைச் சொல்லும். ஆனால் உலகம் உருண்டை என கலிலியோதான் முதன் முதலில் சொன்னதாக நமது பள்ளி பாடங்களில் படிக்கும்போது, நமது முன்னோர்களின் வானியல் அறிவு சரியாகப் பதியப்படவில்லை என்பதே உண்மை. பதியப்பட்ட பதிவுகளும், பின்னர் சமயக் கடவுள்களுடன் பிணைக்கப்பட்டு, உருமாற்றம் அடைந்தன. அதாவது அறிவியலும் ஆன்மீகமும் இரண்டறக் கலந்து, ஆன்மீகமானது அறிவியல் உண்மைகளை தன்வசப் படுத்திக் கொண்டது. எளிதில் புரிந்துகொள்ள கையாளப்பட்ட உவமைகள் கருப் பொருளாயின. கருப் பொருள் மறைந்து போயிற்று. சுழன்றும் ஏர் பின்னதில், உலகம் சுற்றுகிறது என்பது அன்றைய காலத்தில் அனைவருக்கும் தெரிந்த உண்மை. அதனால் தான் அதை எடுத்துக்காட்டாக வள்ளுவன் சொல்லியிருக்கிறார். அப்படி என்றால், அவர் காலத்திற்கும் பல நூறு ஆண்டுகளுக்கும் முன்பாகவே அந்தக் கருத்து வழக்கில் இருந்திருக்க வேண்டும். எனவே உலகம் உருண்டை, அது சுழல்கிறது என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே நமது முன்னோர்கள் தெரிந்து வைத்துள்ளனர் என்பதை நாம் தெரியாமல் உள்ளோம் என்பதே உண்மை.

சரி, பூமியைப் பற்றி பார்ப்போம்.

     பொதுவாக நமது சூரியக் குடும்பத்தின் கோள்களுக்கு வைக்கப்பட்ட பெயர்கள் கிரேக்கம் அல்லது ரோமன் வார்த்தைகளிலிருந்து வைக்கப்பட்டவை. ஆனால் “எர்த்” எனும் ஆங்கில வார்த்தை மட்டும் ஜெர்மனியிலிருந்து வந்த வார்தை என்று படித்ததாக ஞாபகம்.

  நீல பளிங்குக் கோள் எனப்படும் பூமி, சூரியனிலிருந்து மூன்றாவது கோள். எட்டு (ஒன்பது) கோள்களில் ஐந்தாவது பெரிய கோள். வெள்ளியைவிட சற்றே பெரியது. திட நிலையில் உள்ள நான்கு கோள்களில் பூமிதான் மிகப் பெரியது. உயிரினம் வாழக் கூடிய சூழல் உள்ள ஒரே கோள் நமது பூமிதான் என்பது தற்போதையக் கருத்து.

     பூமி சுமார் 4.54 பில்லியன் ஆண்டுகளுக்கு உருவாகி இருக்கக்கூடும் என வானியலாளர்கள் கூறுகின்றனர். ஆனால் பாறைகளும் மலைகளும் 3.50 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் உருவாகியிருக்கக் கூடும் என புவியியலாளர்கள் கூறுகிறார்கள்.

     பூமி திடக்கோள் என்றாலும், 71% நீராலும் 29% நிலப்பரப்பாலும் அமையப் பெற்றுள்ளது. கடினப் பாறைகள், நெகிழ்வுப் பாறைகள், பாறை அடுக்குகள் என கடினப்பட்டு இருந்தாலும், பூமியின் மையப் பகுதியானது நெருப்புக் குழம்பாய் உள்ளது. ஆனால் பூமியின் வட தென் துருவங்கள் பனிப் பாறைகளால் அமையப் பெற்றுள்ளது.

     பூமியின் காற்று மண்டலம், 77% நைட்ரஜனும், 21% ஆக்சிஜனும் மற்ற வாயுக்கள் 2% சூழ்ந்த நிலையில் உள்ளது.  பூமியில் உள்ள தாதுக்களில் இரும்பு பெருமளவில் உள்ளது. சிலிகான் எனும் மணல், மெக்னீசியம், நிக்கல், கந்தகம், டைட்டானியம் அடுத்த நிலையில் உள்ளது.

     புவியின் ஈர்ப்பு விசையானது, வான் மண்டலத்தின் பிற பொருட்களின் மீது தாக்குதலை ஏற்படுத்துகிறது என்பர். அதே போல், பிற பொருட்களின் ஈர்ப்பு விசையும் பூமியின் மீது தாக்குதலை உண்டாக்குகிறது என்பர்.

பூமி - சில தகவல்கள்:

 • -    சூரியனிலிருந்து 14,96,00,000 கி.மீ. தொலைவில் உள்ளது.
 • -    விட்டம் 12756 கி.மீ., நிறை 5.98e24 கி.கி.
 • -    தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது (24.00 மணி நேரம்)
 • -    சூரியனையும் சுற்றி வருகிறது (365.26 நாட்கள்)
 • -    மேற்கிலிருந்து கிழக்காக சுற்றி வருகிறது
 • -    உருண்டையானது என்று சொன்ன போதிலும், மேலும் கீழும் சிறிது தட்டி வைத்த களிமண் உருண்டை என்பதே சரியான வடிவம்.
 • -    பூமியின் பெரும் பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது.
 • -    பூமியின் மையம் நெருப்புக் குழம்பாய் உள்ளது. அதன் வெப்பம், சூரியனின் மேற்பரப்பு வெம்மையைக் காட்டிலும் அதிகம்.
 • -    உயிர் வாழக்கூடிய ஆக்சிஜன் அளவு பூமியில் மட்டுமே உள்ளது
 • -    உயிரினங்கள் மூன்று பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கக்கூடும் என உயிரியிலாளர் கூறுகின்றனர்.
 • -    இன்னமும் கண்டுபிடிக்காத கடல் உயிரினங்களும் தாவரங்களும் ஐந்து மில்லியனுக்கும் கூடுதலாக இருக்கக் கூடும் என்கின்றனர்.
 • -    பூமிக்கு சந்திரன் ஒரு துணைக்கோள் என்றாலும், ஆஸ்ட்ராய்டுகள் எனும் விண்பொருட்களும் பூமியைச் சுற்றி வருகின்றன.
 • -    பூமி தனது (கற்பனை) அச்சிலிருந்து 23.4 பாகை சாய்வாக இருப்பதால், பருவநிலை மாற்றங்கள் ஏற்படுகிறது. 
 • -    பூமியின் சுழற்சியாலும், பூமியில் உள்ள நிக்கல்-இரும்பின் அடுக்குகளாலும், காந்தப் புலம் ஏற்படுகிறது,
 • -    காந்தப்புலம், சூரியக் காற்றினால் தாக்கப்படுவதால், இருபுறமும் ஒரு கவிழ்ந்த வலைப்பின்னலில் உள்ளது.
 • -    காந்தப்புலம் வட தென் துருவங்கள் எனும் அமைப்பில் உள்ளது.
 • -    பவுர்னமி அமாவாசையின் போது சந்திரனாலும், சூரியனாலும் தாக்குதலுக்கு உள்ளாவது கடல் மட்டுமல்ல நிலப் பரப்பும் என்பது அறிவியல் உண்மை.அடுத்து – பூமியின் துணைக்கோள் - சந்திரன்
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)

அவன் - இவன்
அவன் :
அடுத்து எப்போது? இன்னும் பத்து நாள் ஆகுமா?
இவன் :
வராது ஆனா வரும்Tuesday, December 3, 2013

விடி வெள்ளி


     இது சூரியக் குடும்பத்தில் இரண்டாவது கோள். மாலுமிகளின் நம்பிக்கை நட்சத்திரம். இது விடியலிலும் மாலை நேர இரவிலும் வானில் தெரியும் ஒரு வழி காட்டி. சூரியன் உதிப்பதற்கு முன்பே வெள்ளி முளைப்பதால், இதனை விடிவெள்ளி என்று அழைப்பர். 

     ஏறக்குறைய பூமியின் அளவு உள்ள கோள். அதனால் இதனை பூமியின் தங்கை என்றும் அழைப்பர். இது ஒரு திடக் கோள். கரியமில வாயுவால் சூழப்பட்ட சுற்றுச் சூழல். எரிமலைக் குழம்பின் காயங்கள் காய்ந்த வடுக்களாக பரவிக் கிடக்கும் மேற்பரப்பு. 

    கிழக்கிலிருந்து மேற்காக தன்னைச் சுற்றிக் கொள்வதால், சூரியன் மேற்கில் உதிக்கும். அயல் வான் குடும்ப தின்ம பொருட்கள் மோதியதால், இது தன் சுழல் தன்மையில் மாறியிருக்கக் கூடும் எனும் கருத்தும் உண்டு.வெள்ளியின் மேற்பரப்பு

வெள்ளி - சில குறிப்புகள்:

 • ·         சூரியனிலிருந்து ஏறக்குறைய 108 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
 • ·         தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 243 நாட்கள் ஆகும். ஒரு நாள் போவது ஒரு யுகம் போவதுபோல் என்பது வெள்ளியில் பொருந்தும்.
 • ·         சூரியனைச் சுற்றிவர 225 நாட்கள் ஆகும்.
 • ·         துணைக்கோள்கள் எதுவும் கிடையாது.
 • ·         கரியமிலவாயு, நைட்ரஜன் மற்றும் கந்தக சாம்பல் கொண்டது.
 • ·         480 செல்சியஸ் வெப்பம் நிலவும். ஈயம் எளிதில் உருகும் வெப்ப நிலை.
 • ·         சூரியக் குடும்பத்திலேயே அதிக வெளிச்சம் தரும் கோள். [சந்திரன் அதிக வெளிச்சம் தந்தாலும் அது கோள் அல்ல]
 • ·         சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ளதால் இதுவும் சூரிய கிரகணத்தை ஏற்படுத்தும், ஆனால் சிறு புள்ளியாக.
 • ·         ஒரு காலத்தில் நீர் இருந்திருக்கலாம் எனவும், அது அதீத வெப்பம் காரணமாக ஆவியாகி இருக்கக்கூடும் என வான் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
 • ·         புதனைப் போல் வெள்ளியும் இரும்பின் கூழினை உட்கருவாகக் கொண்டிருக்கிறது.
 • ·         பூமியைப் போல் பெரிய அளவில் காந்தப்புலம் இல்லையென்றாலும், இதற்கும் காந்தப்புலம் உண்டு.
 • ·         கரியமிலமும் கந்தகமும் உள்ள சூழலில் உயிரினம் வாழ்தல் சாத்தியமில்லை என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.


……. அடுத்து நம்ம பூமி
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)அவன் - இவன்
அவன் :
ஊருக்கு போனவர் திரும்பி வந்திட்டாரா ? அப்ப தினமும் பதிவு உண்டுன்னு சொல்லு.
இவன் :
கண்டிப்பா வாரம் ரெண்டு உண்டாம். அதில்லாமல் வராகமிகிரரின் பிருகத் ஜாதகா தமிழாக்கமும் விரைவில் பதியப் போகிறாராம்.

Wednesday, November 20, 2013

புதன் எனும் குட்டிக் கோள்


புதன்


     சூரியக் குடும்பத்தின் மிகச்சிறிய குட்டிக் கோள். சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோளும் இதுதான். தற்போதைய கணக்கின்படி உள்ள எட்டுக் கோள்களில் நான்கு கோள்கள் திட நிலையில் உள்ளவை. செவ்வாய், புதன், வெள்ளி மற்றும் நமது பூமி ஆகிய நான்கும் திட நிலையில் உள்ளவை.

    இது சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் மற்றக் கோள்களைவிட வெப்பம் அதிகம். மெர்குரி எனும் ஆங்கிலச் சொல்லுக்கு பாதரசம் என்பது பொருள் திரவ நிலையில் உள்ள உலோகம் பாதரசம். ஆனால் நமது புதனோ ஒரு இரும்புப் பந்துபோல் திட நிலையில் உள்ளது.

   பூமி தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் எடுத்துக் கொள்கிறது. புதனோ தன்னைச் சுற்றிக் கொள்ள 59 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. அவ்வளவு பொறுமை. அதனால், ஒரு புறம் வெகு வெப்பமாகவும் மறுபுறம் வெகு குளிராகவும் உள்ளது. அதாவது 30 நாட்கள் பகலாகவும் 30 நாட்கள் இரவாகவும் உள்ளது. அதன் சூழலில் உயிர்வாயும், சோடியமும், ஹைட்ரஜனும், ஹீலியமும், பொட்டாசியமும் நிரவி உள்ளன. உயிர்வாயுவான ஆக்சிஜன் இருந்தாலும் அங்கு எதுவும் உயிர் வாழ்வதற்கான சாத்தியக் கூறு இல்லை. காரணம் அதிக வெப்பம் அதிக குளிர்.


புதனின் மேற்பரப்பு
சில குறிப்புகள்:

 • ·         புதன் சூரியனுக்கு அருகில் உள்ள கோள்.
 • ·         மிகச்சிறிய கோள். சந்திரனை விட சற்றே பெரியது.
 • ·         சூரியனிலிருந்து 58 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
 • ·         அதன் ஆரம் 2439 கி.மீ (ஏறக்குறைய சென்னை – தில்லி தூரம்)
 • ·         அதன் நிறை 3.30e23 கி.கி.
 • ·         தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 59 நாட்கள்
 • ·         சூரியனைச் சுற்றிவர 88 நாட்கள்
 • ·         அதன் சூழல் சூரியக் காற்றாலும், நுண்ணலைக் கதிர்களாலும் எப்போதும் தாக்குதலுக்குள்ளாகி சூழப்பட்டுள்ளது
 • ·         இதற்கு துணைக் கோள்கள் எதுவும் கிடையாது
 • ·         பகல் நேர வெப்பம் 430 செல்சியஸ்; இரவு வெப்பம் (-180) செல்சியஸ்
 • ·         உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் எதுவும் இல்லை.
 • ·         புதனிலிருந்து சூரியனைப் பார்த்தால், பூமியிலிருந்து பார்ப்பதைப்போல் மூன்று மடங்கு பெரிதாக இருக்கும்.
 • ·         புதனிலும் காந்தப் புலம் உண்டு
 • ·         புதன் கற்பாறைகளும் இரும்புப் பாறைகளும் சேர்ந்த ஒரு உலோகப் பந்தாய் சுற்றி வருகிறது. பாறை 30 சதமும், பெரும்பகுதி இரும்புடன் சேர்ந்த உலோகக் கலவையாக 70 சதவீதமாகவும் உள்ளது.
 • ·         மற்ற திடக் கோள்களில் இது நேர்மாறாக இருப்பதால், இதன் தோற்றம் பற்றி மாற்றுக் கருத்துக்களும் உள்ளன.
 • ·         புதன் வேறு ஒரு கேலக்சியில் உருவாகி, பின்னர் வான் மண்டலத்தில் மிதந்து, தற்போது உள்ள இடத்திற்கு வந்திருக்கலாம் எனவும் ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
 • ·         சூரியனின் கோணத்தில் 28.3 டிகிரியில் புதன் இருப்பதால், சூரியனின் வெளிச்சம் காரணமாக இதனை பெரும்பாலும் பூமியிலிருந்து பார்க்க முடிவதில்லை.…….அடுத்து சுக்கிரன் எனும் வெள்ளிக் கோள்
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)
அவன் - இவன்
அவன் :
புதனைப் பார்க்க முடியாமல் போவது இருக்கட்டும், இவரையே பத்து நாளா பார்க்க முடியலயே.
இவன் :
எங்கயோ வெளியூர் போயிருக்கிறாராம். இதைக் கூட வெளியூரிலிருந்துதான் பதிவு செஞ்சாராம்.Tuesday, November 12, 2013

சூரியக் குடும்பமும் நமது பூமியும் - சூரியன்


    My Very Educated Mother Just Showed Us Nine Planets. இது குழந்தைகளுக்கு ஒன்பது கோள்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள சொல்லித் தரப்படும் ஒரு வாக்கியம். முதல் எழுத்துக்கள் அந்தந்தக் கோள்களின் ஆரம்ப எழுத்துக்கள்.    நேற்றையக் கருத்து இன்று பொய்த்துப் போகலாம், இன்றையக் கருத்து நாளை பொய்த்துப் போகலாம் எனும் கருத்துப்படி, 1930-ல் அறியப்பட்ட ஒரு கோள் 2006-ல் நீக்கப்பட்டு, இன்று எட்டு முதன்மைக் கோள்களும், பல துணைக்கோள்களும், குறுங்கோள்களும், தலைமைப் பொறுப்பில் இருக்கும் நமது சூரிய விண்மீனைச் சுற்றி வருகின்றன. விண்மீன்களுக்கும் கோள்களுக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடு – விண்மீன்கள் ஒளியை உமிழும் – கோள்கள் ஒளியைப் பிரதிபலிக்கும்

சூரியன்    
      இது ஒரு விண்மீன். மனிதன் முதன் முதலில் கண்டு பயந்த நெருப்புப் பந்து. இந்த நெருப்புப் பந்தைத்தான் சூரியக் குடும்பத்தின் கோள்கள் அனைத்தும் கடிகார எதிர் சுற்றில் சுற்றி வருகின்றன.

     சூரியன் மிகப் பெரிய விண்மீன். ஏறக்குறைய 1.40 மில்லியன் கிலோமீட்டர் விரிவும், அதன் மேற்பரப்பில் 109 பூமிகளை பரப்பக்கூடிய அளவும், அது ஒரு வெற்றிடப் பந்தாக இருந்தால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூமிகளை நிரப்பக் கூடிய ஒரு பெரிய பந்தாகவும் உள்ளது.

     இந்த நெருப்புப் பந்து வெளிப்புறத்தில் 10,000 ஃபாரன்ஹீட்டாகவும், உட்கருவில் 2,80,00,000 ஃபாரன்ஹீட்டாகவும் வெப்பத்தை கொண்டிருக்கிறது.
ஏனிந்த வெப்பம். கொஞ்சம் வேதியியல். அணுக்களில் பிளவு ஏற்படும்போதும் (fission), அணுக்களில் சேர்க்கை ஏற்படும்போதும் (fusion) அளப்பறிய வெப்பம் உண்டாகும். அந்த அடிப்படையில்தான் அணு உலைகள் செயல்படுகின்றன. இதை அணுக்கரு இயற்பியலில் (Nuclear Physics) விரிவாக படிப்பார்கள்.

     சூரியனின் உட்கருவானது, ஏராளமான ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டுள்ளது. அவை அணுக்கரு இணைவு விளைவில் ஒன்றிணைந்து ஹீலியம் அணுக்களாக மாற்றம் பெறுகின்றன. (ஹைட்ரஜனின் அணு எண் ஒன்று – ஹீலியத்தின் அணு எண் இரண்டு). அவ்வாறு இணையும்போது ஏற்படும் வெப்பம்தான் எரிசக்தியையும் உற்பத்தி செய்கிறது. ஒளித்துகள்கள் எனும் போட்டான்கள் அந்த சக்தியை உள்ளிருந்து சூரியனின் மேற்பரப்பிற்கு கொண்டுவருகின்றன. அந்த வெப்பம்தான் பூமிக்கும் கடத்தப்படுகின்றது.

சூரியன் - சில குறிப்புகள்:

 • Ø  நமது பால்வீதியில் 100 பில்லியன்களுக்கும் மேலான சூரியன்கள் உள்ளன. அதில் நமது சூரியனும் ஒன்று.

 • Ø  சூரியனின் விட்டம் : 13,90,000 கி.மீ.

 • Ø  நிறை: 1.989e30 கி.கி.

 • Ø  சூரியக் குடும்பத்தில் 99.80% நிறையை சூரியன் மட்டுமே கொண்டுள்ளது.

 • Ø  மற்றக் கிரகங்களும் துணைக்கோள்களும் 0.20% அளவே உள்ளன.

 • Ø  70% ஹைட்ரஜனும், 28% ஹீலியமும் 2% மற்ற தனிமங்களும் கொண்டது.

 • Ø  அணு இணைவு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனில் ஹட்ரஜனே இருக்காது. ஹீலியத்தை மட்டுமே கொண்டிருக்கும்.

 • Ø  சூரியனும் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. (25 – 36 நாட்கள்)

 • Ø  சூரியனின் மையக்கருவின் தின்மம் நீரைவிட 150 மடங்கு அதிகம்.

 • Ø  சூரியன் 386 பில்லியன் மெகாவாட் சக்தியை உற்பத்தி செய்கிறது.

 • Ø  கதிரியக்கம் மற்றும் காமா கதிர்களை வெளியிடுகிறது.

 • Ø  இதன் காந்தப் புலம் மிகவும் சக்தி வாய்ந்தது. புளூட்டோவையும் தாண்டி செல்கிறது.

 • Ø  வெப்பம் மற்றும் வெளிச்சம் மட்டுமின்றி குறைந்த அடர்த்திக் கொண்ட (எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களைக் கொண்ட) சூரியக் காற்றினையும் வீசுகிறது.

 • Ø  சூரியன் தோன்றி 4.50 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 5.00 பில்லியன் ஆண்டுகளுக்கு கவலையில்லை.அடுத்து… புத்திக்காரகன் புதன்….
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)


அவன் - இவன்
அவன் :
கொர்……….கொர்…………….கொர்………….
இவன் :
எழுந்திரு அவனே எழுந்திரு…. வகுப்பு முடிஞ்சிடுச்சு…

Friday, November 8, 2013

பால் வீதி (Milky Way – Galaxy)

     நான் உங்களை மிகப் பெரிய வான் அறிவியல் பள்ளிக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. நான் அத்தகைய அறிவியலாளனும் இல்லை. ஆனால் இந்தப் பிரபஞ்சம் என்பது என்ன? விண்மீன் தொகுதி என்பது என்ன? நமது சூரியக் குடும்பம் எப்படி வந்தது? அதில் நமது பூமி எங்குள்ளது? என்பது போன்ற அடிப்படைத் தகவல்களை – இந்த உலகம் பொதுவாக ஏற்றுக் கொண்ட கருத்துக்களை இங்கு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். அது இந்த வலைப்பூவின் நோக்கத்தை செம்மைப் படுத்தும்.
அண்டம் அல்லது பிரபஞ்சம் விரிய ஆரம்பித்தவுடன், எண்ணற்ற விண்மீன் தொகுதிக் கூட்டங்கள் உருவாகி உள்ளன. அவற்றை கேலக்ஸி என விண் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு கேலக்ஸியிலும் எண்ணற்ற விண்மீன்கள், கோள்கள், குறுங்கோள்கள், தூசுகள் என விரவிக் கிடக்கின்றன.


     நமது கேலக்ஸியை, MILKY WAY அதாவது பால் வீதி எனும் பெயரால் அழக்கின்றனர். நாமும் அப்படியேதான் அழைகின்றோம். நமது பால் வீதியில் விண்மீன் கூட்டங்களின் தொகுதி, கம்பிவலைச் சுருள் போல் உள்ளன. பால் வீதி ஒரு நீள் வட்டமாக இருக்க, அதன் விட்டம் ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் ஒளியாண்டு இருக்கக் கூடும் என இயற்பியலாளர்கள் கூறுகின்றனர். அதில் 10000 முதல் 40000 கோடி (100-400 பில்லியன்கள்) விண்மீன்கள் இருக்கக் கூடும் என்றும், அவற்றிற்கு உறுதுணையாக எண்ணிலடங்கா கோள்களும் இருக்கக் கூடும் என்றும் கூறுகின்றனர்.

    ஒவ்வொரு விண்மீனும் தத்தமது கோள்களுடன் கோலோட்சி வருவகின்றன, நமது சூரியக் குடும்பமும் அதில் ஒன்று. நமது பால்வீதியில், நம் சூரியக்குடும்பம், பால்வீதியின் மையத்திலிருந்து ஏறக்குறைய 27,000 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.

     இந்தக் காணொளிக் காட்சியைப் பாருங்கள். நமது பால் வீதியும் சூரியக் குடும்பமும் எவ்வளவு அற்புதம்.
                      .....அடுத்த பதிவில், சூரியக் குடும்பமும் நமது பூமியும்.


அவன் - இவன்
அவன் :
அப்பாடா, ஒரு வழியாய் பால் வீதி முடிச்சிட்டார்
இவன் :
அவரசப்படாதே, சோதிடப் பாடம் எப்ப ஆரம்பிப்பார்னு பார்ப்போம்.

Sunday, November 3, 2013

பிரபஞ்சம்
    
    “O” அதாவது பூச்சியம் என்ற எண்ணை இந்தியர்கள் உலகிற்கு தந்ததாக சொல்லுவார்கள். பூச்சியத்தில் இருந்துதான் அனைத்து எண்களும், இடப்புறம் –n வரையிலும் வலப்புறம் +n வரையிலும் செல்வதாகக் கணிதம் சொல்கிறது. அந்த n முடிவில்லாதது.


     அதுபோன்றுதான் இந்த பிரபஞ்சமும். பூச்சியம் போன்றது. ஆரம்பமும் முடிவும் இல்லாதது. “விரிந்தது சுருங்கும் சுருங்கியது விரியும்” எனும் இயற்பியல் தத்துவத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.

     இயற்பியல் அறிஞர்களின் கருத்துப்படி, நிறைய பிரபஞ்சங்கள் இருக்கக் கூடும். அதில் ஒன்றுதான் நாமிருக்கும் பிரபஞ்சம். பிரபஞ்சங்கள் எப்படித் தோன்றின அல்லது யார் படைத்தார்கள் என்பது எவருக்கும் தெரியாது.

     ஆரம்பம் முதல் மிக நிறைய பக்கங்களைக் காணமுடியாததால், இயற்பியலாளர்கள் ‘சரி இங்கிருந்து வைத்துக் கொள்வோம்’ என நடுவிலிருந்து தொடங்கிய கதைதான் “பிக் பாங்க் தியரி” எனும் “பெரு வெடிப்புக் கொள்கை”.

     தற்போதைய பெரு வெடிப்புக் கொள்கையின்படி, அணுக்கள் திரண்டு மிக மிக அடர்த்தியுடன் சிறு உருண்டையாக இருந்ததாகவும் (Planck epoch) பிளாங்க் யுகத்தில் பெரும் அழுத்தம் பெரும் வெப்பம் என 10 முதல் 32 வினாடி நேரத்தில் அதன் கருப் பொருள் மாபெரும் வெடிப்பாக வெடித்து, அந்தக் கருப்பொருள் பல கோடிக்கணக்கான துகள்களாக விரிந்து விரிந்து, அணுக்கள், விண்மீன்கள், விண்மீன் தொகுதிகள், கறுப்புப் பொருட்கள், கறுப்புச் சக்தி என தற்போதைய நிலையை அடைந்ததாக கூறப்படுகிறது.இந்த பிரபஞ்சத்தில் உள்ளவை 5% பொருட்கள் (Materials) – அணுக்கள், விண்மீன்கள், விண்மீன் தொகுதிகள்; 25% - கறுப்புப் பொருட்கள்( Dark Matter); 70% - கறுப்புச் சக்தி (Dark Energy) என இயற்பியலாளர்கள் கொள்கை வகுத்துள்ளனர்.

      5% அளவே உள்ள பொருட்களில் தான் எண்ணற்ற விண்மீன்களும், விண்மீன்கூட்டங்களும், கேலக்ஸி எனப்படும் விண்மீன்தொகுதிகளும் உள்ளன.  எத்தனை கேலக்ஸிகள் உள்ளன என்று கேட்டால், பல ஆயிரம் கேலக்ஸிகள் இருக்கக் கூடும் என அனுமானிக்கிறார்கள்.

    அதில் ஒன்றுதான் “பால் வீதி” (Milky Way)  எனப்படும் நமது சூரியக் குடும்பமும் உள்ளடங்கிய கேலக்ஸி ஆகும்.

பெரு வெடிப்புக் கொள்கை
    
   அனைத்து கேலக்ஸிகளும் நமது பிரபஞ்சத்தை நீள்வட்டத்தில் சுற்றுவதாகக் கூறுகிறார்கள். நமது பிரபஞ்சம் தோன்றி ஏறக்குறைய 14 பில்லியன் ஆண்டுகள் (13.798 ± 0.037 billion years) ஆவதாகவும், நமது பால் வீதி முதல் சுற்று முடித்து இரண்டாவது சுற்றில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.


மீண்டும்….அவன் - இவன்

அவன் :
சோதிடத்தைப் பற்றி எழுத சொன்னால், பிரபஞ்சம், பெரு வெடிப்பு –ன்னு எழுதறாரு.
இவன் :
அது ஒன்னுமில்ல, இப்பதான தீபாவளி முடிஞ்சுது, அதான் வெடியைப் பத்தி எழுதறாரு.