Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, July 31, 2016

நட்பு - பகை - சமம்



வான் மண்டல சுற்றுப்பாதையை பன்னிரெண்டு இராசிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டு, இராகு கேது எனும் புனைக் கோள்கள் தவிர்த்து, மீதமுள்ள ஏழு கோள்களுக்கும் அந்த வீடுகளைப் பகிர்ந்து அளித்துள்ளதும், அவ்வாறு பகிர்ந்து அளிக்கப்பட்டபின், அவைகள் மூலத் திரிகோணம், உச்சம் நீச்சம் அடையும் முறைகளை, பொது வரையறையாக சென்ற பதிவுகளில் பார்த்தோம்.

சோதிட அமைப்பில், அவ்வாறான கோள்கள், சில இராசிகளில் நட்பாகவும், சில இராசிகளில் பகையாகவும், சில இராசிகளில் சமமாகவும் இருப்பதாக சோதிட நூல்கள் கூறுகின்றன.

இதுபற்றிய பொது வரையறைகளைப் பார்ப்போம்.

கோள்கள் தமக்குறிய சொந்த வீடுகளில் இருப்பது ஆட்சி வீடு. பிற வீடுகளில் அவைகளின் நிலை பொருத்து, நட்பு, பகை, சமம் என வகைப்படுத்தப்படுகின்றன. இதற்கு அடிப்படையாக இரு கோள்களுக்கு இடையே உள்ள இயல்தன்மையைக் கணக்கில் கொண்டுள்ளனர். எடுத்துக் காட்டாக, சூரியன் மிகவும் வெப்பமான கோள். அதற்கு நேர் எதிராக, வெகு தொலைவில் உள்ள சனியானது, குளிர்ச்சி மிகுந்த பனிக் கோள். வெப்பமும் குளிர்ச்சியும் வெவ்வேறான இயல்தன்மைகளைக் கொண்டிருப்பதால், அவை இரண்டும் பகைக் கோள்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, சூரியனுக்குத் தொடர்புடைய அல்லது அத்தகைய இயல்தன்மை உடைய கோள்களை ஆட்சி வீடாகக் கொண்ட இராசிகள், சனிக் கோளுக்கு பகை வீடாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஒத்த இயல் தன்மைகொண்ட கோள்களின் வீடுகள், அத்தகையக் கோள்களுக்கு நட்பு வீடுகள் என வரையறை செய்யப்பட்டுள்ளன. இரண்டு நிலைகளும் இன்றி பொதுவான இயல்தன்மைகள் கொண்ட கோள்களின் வீடுகள், அத்தகையக் கோள்களுக்கு சமம் எனும் நிலையினை வரையறை செய்துள்ளனர்.

இதில் பொது விதியாக, ஒரு கோளின் மூலத் திரிகோண வீட்டிற்கு இருபுறமும் உள்ள வீடுகள் நட்பு வீடுகளாக வரையறை செய்துள்ளனர். அதுபோலவே, திரிகோண வீடுகளான ஐந்தாம் வீடு, ஒன்பதாம் வீடு ஆகியவையும் நட்பு வீடுகளாக வரையறை செய்துள்ளனர். முன்பே கூறியதுபோல், மூலத் திரிகோணம், முதல் கோணம், ஐந்தாம் வீடு இரண்டாவது கோணம், ஒன்பதாவது வீடு மூன்றாவது கோணம் என்பதோடு மட்டுமின்றி அத்தகைய இடங்கள் வலிமைமிக்க இடங்கள் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதையடுத்து, கேந்திரங்கள் எனப்படும் நாற்கரத்தின் இரண்டாவது செங்கோணம், அதாவது இரண்டாவது கேந்திரமான நான்காவது வீட்டினையும் நட்பு வீடாக வகைப்படுத்தியுள்ளனர். மூலத் திரிகோணம் என்பது முக்கோணத்தின் முதல் கோணம் என்பது மட்டுமின்றி, முதல் செங்கோணம் அல்லது முதல் கேந்திரம் என்பதையும் நினைவில் கொள்க. மூன்றாவது (7வது வீடு) மற்றும் நான்காவது (10வது வீடு) செங்கோணங்கள், பெரும்பாலும் நட்பு அல்லது சமம் எனும் கணக்கிலேயே வருகின்றன. விதிவிலக்காக, 8வது வீடானது நட்பு எனும் வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அது ஏன் என்பதை, ஒவ்வொரு கோளையும் வகைப்படுத்தும்போது, விரிவாகப் பார்க்கலாம்.

ஆக, பொதுவில், ஒரு கோள் தனது மூலத் திரிகோண வீட்டிற்கு, அடுத்துள்ள 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பு நிலையிலேயே வகைப்படுத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள 3, 6, 7, 10, 11 ஆகிய வீடுகள், சில விதிமுறைகளுக்கு உட்பட்டு, சமம் அல்லது பகை எனும் நிலையில் உள்ளன.



தனித்தனியாக ஒவ்வொரு கோளையும் வரையறை செய்யும்போது, விளக்கமாகக் காண்போம்.


அடுத்து … கோள்களின் பார்வைகள்

Tuesday, July 26, 2016

உச்சமும் நீச்சமும்



ஒவ்வொரு கோளும் இராசி மண்டலத்தில் உள்ள 12 இராசிகளில் ஏதேனும் ஒரு வீட்டில் உச்ச நிலையை அடையும் என்பது சோதிட விதி. உச்சம் என்பது தன் நிலையில் அதிகபட்சமாக உயர்ந்து நிற்பது எனவும் பொருள் கொள்ளலாம். அதாவது உச்ச நிலையில் அக் குறிப்பிட்ட கோள் அதிபட்சத் திறனோடு இருக்கும்.

      வான் வெளிச் சுற்றுப் பாதையில் சுற்றி வரும் கோள்கள் தமது கதிரியக்கத்தை அல்லது காந்த வீச்சினை அல்லது ஒளிப் பிரதிபலிப்பை அல்லது சுய ஒளியை பரப்புகின்றன என்பது வான் அறிவியல் உண்மை. அவ்வாறு பரவல் செய்யப்படும் ‘வீச்சுகள்’ பூமியின்மீதும் விழும் என்பதும் வான் அறிவியல் உண்மை. ஆனால் அவ்வாறன ‘வீச்சானது’ எப்பொழுதும் ஒரே அளவில் இருக்குமா எனும் கேள்விக்கு இல்லை என்பதே பதில். ஏனெனில், பூமியின் சுற்றுப்பாதை, குறிப்பிட்ட கோளின் சுற்றுப்பாதை, இவைகளுக்கிடையே உள்ள கோண விகிதங்கள் ஆகியவையே, அத்தகைய பரவலின் வலிமையைத் தீர்மானிக்கின்றன.

ஆக, கோள்களின்  கதிர் வீச்சானது,   ஒரு குறிப்பிட்ட கோண அளவில் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் கோள்கள் இருக்கும்போது அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கின்றன.

அதிகமாக இருக்கும் நிலையினை உச்சம் என்றும் குறைவாக அல்லது மறைவாக இருக்கும் நிலையினை நீச்சம் என்றும் சோதிட நூல்கள் கூறுகின்றன.

கோள்கள் தமது உச்ச, நீச்ச நிலைகளை தம்முடைய சொந்த வீட்டில் அடைவதில்லை [புதன் விதிவிலக்கு] என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சோதிட அறிஞர்கள், மிகத் துள்ளியமாக, கோள்கள் எத்தனை பாகையில் உச்ச நிலையில் இருக்கின்றன, எத்தனை பாகையில் அவை நீச்ச நிலையில் இருக்கின்றன என்று வகுத்துள்ளனர்.

உச்ச நிலையில் உள்ள ஒவ்வொரு கோளும், அதற்கு நேரெதிரான 180 பாகையில் நீச்ச நிலையில் இருப்பதாகப் பதிவு செய்துள்ளனர்.

ஆக கோள்களின் உச்சம் என்பது, முழுக் கதிர்வீச்சினைப் பூமியின் மீது பாய்ச்சும் இருப்பிட நிலை என்றும், அதற்கு நேரெதிராக கதிர்வீச்சின் தாக்கம் மிகக் குறைவாக பாய்ச்சும் இருப்பிட நிலை  நீச்சம் என்றும் வகுத்துரைக்கலாம்.


... அடுத்து நட்பு-பகை

Thursday, July 21, 2016

மூலத் திரிகோணம்




இராசியில் ஒவ்வொரு கோளும் தமக்குரிய மூலத் திரிகோணத்தைக் கொண்டிருக்கின்றன. மூலத் திரிகோணம் என்பது மூலம் + திரி + கோணம் என வட மொழிச் சொல்லால் ஆனது. [சோதிடத்தில் 80% சொற்கள் வடமொழிச் சொற்களால்தான் ஆளப்படுகின்றன].  மூலம் என்பதனைத் தொடக்கம் எனவும், திரி என்பதனை மூன்று எனவும் பொருள் கொண்டால், மூன்று கோணங்கள் கொண்ட ஒரு முக்கோணத்தின் ஆரம்பப் புள்ளி எனலாம். எனவே மூலத் திரிகோணம் என்பது ஒரு கோள், இராசி மண்டலத்தில் ஒரு முக்கோண வடிவத்தினை உருவாக்குவதற்கான ஆரம்பப் புள்ளியைக் கொண்ட முதல் கோணம் எனலாம்.





பொதுவாக இராசியில் திரிகோண வீடுகள் என்பன சிறப்புடையவையாகக் கருதப்படுகின்றன. அதாவது, இலக்கினம் முதல் வீடு எனில், அது முதல் திரிகோணம் எனவும், ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது திரிகோண வீடுகள் எனப்படுகின்றன. அதனால்தான் இலக்கினம், ஐந்தாவது மற்றும் ஒன்பதாம் வீட்டின் அதிபதிகளுக்கு மிக முக்கியத்துவம் தருகிறார்கள்.

அதுபோலவே, கோள்களைக் கொண்டும் கோண வீடுகளைக் காண்பதற்கு, மூலத் திரிகோணத்தை அடிப்படையாகக் கொள்கிறார்கள். மூலத் திரிகோணம் என்பது, ஒரு கோள் தனக்குரிய ஒரு வீட்டில் அடிப்படையாக இருந்து கொண்டு, கோணங்களை உருவாக்குவதுதான்.

அவ்வாறு கோள்களுக்குரிய மூலத் திரிகோண வீட்டினை அமைத்ததில் சில நுணுக்கங்களைப் பின்பற்றியுள்ளனர். ஒவ்வொரு கோளிற்கும் இரண்டு வீடுகள் உள்ளன என்பதும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் மட்டும் ஒரு வீடு மட்டுமே என்பது நமக்குத் தெரியும். ஆக இவற்றில் எந்த வீடுகளை அக்கோள்களுக்கு உரிய மூலத் திரிகோண வீடுகளாக  குறிப்பது என்பதில் சில சிறப்பு அம்சங்களைக் கணக்கில் எடுத்துள்ளனர். இதுபற்றி தெளிவான விளக்கங்கள் சோதிட நூல்களில் இல்லை என்றாலும், கோள்கள் அக்குறிப்பிட்ட இராசியில் எவ்வளவு பாகை வரையில் மூலத்திரிகோணத்தில் இருக்கின்றன எனும் விளக்கங்கள் உள்ளன. அதாவது எந்த கோளும் ஒரு இராசியில் முழுமையாக 30 பாகையிலும் மூலத் திரிகோணமாக இருப்பதில்லை.   

நான் அறிந்தவரையில், கீழ்வரும் சிறப்பு அம்சங்களைக் கொண்டே மூலத் திரிகோணம் வரையறை செய்யப்பட்டுள்ளது.

1.   அக் கோளிற்கு சொந்த வீடாக இருக்க வேண்டும்

2.   அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்

3.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.

4.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக் கூடாது

5.   ஐந்து மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.


இந்த சிறப்பு அம்சங்கள் நான் தொகுத்து அளித்திருப்பவை. இது அனைத்து கோள்களின் மூலத் திரிகோண வீடுகளுக்கும் பொருந்தி வருகிறது. இதில் சிறு விதிவிலக்காக சந்திரன் மட்டுமே உள்ளது. ஆனாலும் அதற்கும் சரியான காரணம் இருக்கிறது.

மூலத் திரிகோண வீடுகளைக் கொண்டுதான், வீடுகளின் நட்பு, பகை, சமம் எனும் நிலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. மூலத்திரிகோண வீட்டிலிருந்து, 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகள் எப்போதும் நட்பாகவே இருக்கும் எனும் விதியும் இருக்கிறது. எனவே, மூலத்திரிகோண வீடு ஒரு சிறப்புடனேயே சோதிடத்தில் பயன்படுகிறது.

ஏற்கனவே ஆட்சி வீட்டின் பலம் பற்றி முந்தைய பதிவில் பார்த்தோம். மூலத்திரிகோண வீடு எப்போதும் ஆட்சி வீட்டில்தான் இருக்கும் என்பதால், ஆட்சி + மூலத்திரிகோணம் என்பது சற்று பலம் மிகுந்ததாகவே கணக்கிடப்படுகிறது. எனவே முன்பு கூறியவாறு, மூலத்திரிகோண வீடானது ஆட்சி நிலைக்கும் உச்ச நிலைக்கும் இடைப்பட்ட நிலையில் இருப்பதால், இதன் பலம் 75% எனும் அளவில் இருப்பதாக கணக்கிடப்படுகிறது. இந்தக் கணக்கீடானது, சட்பலத்தில் மட்டுமே சரியாக வரையறை செய்ய முடியும்.

அடுத்து… உச்சம்



Wednesday, July 20, 2016

வீடுகளில் கோள்களின் நிலை - ஆட்சி

வீடுகளில் கோள்களின் நிலை (அ) வலிமை


இராசி மண்டலத்தினை மேசம் முதல் மீனம் வரை பன்னிரெண்டு இராசிகளாகப் பிரித்து, ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு கோளினை அவ்வீட்டிற்கு உரிய அதிபதிகளாகப் பிரித்திருப்பதை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம். அதில், ஒவ்வொரு கோளிற்கும் இரண்டு வீடுகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளதையும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் மட்டும் முறையே சிம்மம் மற்றும் கடகம் என ஒரே ஒரு வீடுமட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும், அவ்வாறக கோள்கள் பிரிக்கப்பட்டதிற்கான வானியல் சார்ந்த விளக்கங்களையும் பதிவு செய்துள்ளோம்.

இனி, சோதிடப் பயன்பாட்டில் ஒவ்வொரு வீட்டிலும் கோள்களின் வலிமை எப்படி பார்க்கப்படுகிறது என்பதைப் பார்க்கலாம்.

முதலில், வீடுகளோடு கோள்களுக்கு உள்ள சார்புகளைக் காண்போம். பின்னர் தனித்தனியே கோள்களோடு ஒப்புமை செய்வோம். பொதுவாக இவ்வகை நிலைப்பாட்டினை ஏழு வகையாக முறைப்படுத்தியுள்ளனர். அவைகள் முறையே:

1.   ஆட்சி

2.   மூலத் திரிகோணம்

3.   உச்சம்

4.   நீச்சம்

5.   நட்பு

6.   பகை

7.   சமம்

இந்த ஏழுவகைச் சார்புகளின் பொதுவான விதிமுறைகளை ஒவ்வொன்றாகப் பார்த்துவிட்டு பின்னர் அவற்றை கோள்களோடும் அவைகளுக்குரிய வீடுகளோடும் ஒப்பீடு செய்வோம்.


ஆட்சி:


அதிபதி என்பது அந்தந்த வீட்டிற்கு உரிய கோள்கள். இது பற்றி ஏற்கனவே விரிவாகப் பதிவு செய்துவிட்டோம். ஆட்சி என்பது ஒரு வீட்டின் அதிபதி அதற்கு உரிய வீட்டில் இருப்பது. எடுத்துக் காட்டாக – செவ்வாய் கோளானது தமக்குரிய வீடுகளான மேசம் அல்லது விருச்சிகத்தில் இருப்பது.  ஒரு வீட்டின் அதிபதி தமது சொந்த வீட்டில், அதாவது தமக்கு உரிய இராசியில் இருந்தால் அது பலமிக்கதாக இருக்கும் என்பது சோதிட விதி. அதாவது அக்கோள் மற்ற இடங்களில் இருப்பதைக்காட்டிலும் பலமிக்கதாக இருக்கும். ஒரு கோளின் பலம் என்பது அது இருக்கும் இடத்தைச் சார்ந்தே இருக்கும் என்பதால், இங்கு அத்தகைய கோளானது அதற்குரிய இட ஒதுக்கீட்டில் இடம்பெறும்போது வலிமையுடன் இருக்கும் என்பது ஏற்புடையதாகவே உள்ளது. அதே வேளையில், அதன் வலிமையின் சதவிகிதம் என்பது முழுமையாக இருப்பதில்லை. அதாவது 100% வலிமையாக இருப்பதில்லை. பொதுவாக சொந்த வீட்டில் அதாவது ஆட்சியில் இருக்கும் கோள்கள் 50% வலிமையுடனேயே இருக்கும் என சோதிட நூல்கள் கூறுகின்றன.

இதனை வேறொரு கோணத்தில் பார்க்கலாம். அதாவது ஒரு கோள் அதிக பட்சமாக வலிமையுடன் இருப்பது அது தமது உச்ச நிலையில் இருக்கும்போதுதான். எனவே ஒரு கோள் தனது சொந்த வீட்டில் இருப்பது என்பது உச்ச நிலையினை ஒப்பு நோக்கும்போது பாதியளவே வலிமையுடன் இருக்கும் என்பதே உண்மை. ஏனெனில் ஆட்சிக்கும் உச்சத்திற்கு இடையில் மூலத்திரிகோணம் எனும் நிலை உள்ளது. எனவே இது ஏற்புடைய விளக்கமும்கூட. இது ஒரு பொது விளக்கம் மட்டுமே.

இங்கு ஒரு முக்கியமான தகவலைக் கூறவேண்டியுள்ளது. ஒரு கோள் ஆட்சி நிலையில் இருந்தாலும், அதற்குரிய வலிமையை முழுமையாக பெறமுடியாது எனும் கணிதமும் உள்ளது. ஏனெனில் ஒரு கோளின் உண்மையான பலத்தினை சட்பலம் கணக்கிடுவதன் மூலம் மட்டுமே அறிய முடியும். [ஒரு கோள் மிகச்சரியாக எவ்வளவு பலமுடன் இருக்கிறது என்பதை கணக்கிடும் முறைக்கு சட்பலம் என்பது பெயர். அதில் பல்வேறு கணக்கிடு முறைகள் இருக்கின்றன. அது பற்றி பின்னர் பார்ப்போம்].

எனவே, ஒரு கோள் ஆட்சி நிலையில் இருக்கிறது என்றால் அது தமக்குரிய வீட்டில், அதிபதியாக இருக்கிறது என்பது பொருள். பொது விதியாக அதன் பலம் 50% சதவீதமாக இருக்கும் எனக் கொள்ளலாம்.


அடுத்து.. மூலத்திரி கோணம்


Monday, July 18, 2016

ஆயுர்தயம் அம்சங்களின் விளக்கம்…. தொடர்ச்சி - பிருகத் ஜாதகா – 81




வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்



பிருகத் ஜாதகா

பகுதி   -  ஏழு

ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ் நாட்களைத் தீர்மானித்தல் (தொடர்ச்சி)


சஷ்டியாம்சம் என்பது இராசி மண்டலத்தில் உள்ள ஒரு இராசியை 60 பாகங்களாகப் பிரிப்பது. 60 பாகங்களின் ஒற்றைப்படை இராசிகள் என்பன:

1.
கோரன்
21.
பத்மா
41.
காளினாசன்
2.
இராட்சசன்
22.
இலட்சுமி
42.
முக்யம்
3.
தேவன்
23.
வாகீசன்
43.
வம்சக்சயன்
4.
குபேரன்
24.
திகம்பரன்
44.
உபதகன்
5.
இரக்ஷோகனம்
25.
தேவன்
45.
காலரூபன்
6.
கின்னரன்
26.
அர்தரன்
46.
சௌமியா
7.
ப்ரஷ்டா
27.
காளினாசன்
47.
மிருதன்
8.
குலக்னன்
28.
க்ஷித்தீஸ்வரன்
48.
சுசிதலன்
9.
கரலன்
29.
கமலகரன்
49.
தம்ஷத்ரகரலா
10.
அக்னி
30.
மண்டத்மஜன்
50.
இந்துமுகன்
11.
மாயன்
31.
மிருத்யூ
51.
ப்ரவீணா
12.
பிரெதுபுரீசன்
32.
காலன்
52.
கலஞி
13.
அபம்பதி
33.
தேவாக்னி
53.
தண்டாயுதா
14.
தேவகணேசன்
34.
கோரன்
54.
நிர்மலா
15.
காலன்
35.
அமயன்
55.
சுபா
16.
அகி
36.
கண்டகன்
56.
அசுபா
17.
அம்ரிதம்சன்
37.
சுதா
57.
அதிசிதலா
18.
சந்திரன்
38.
அம்ரிதன்
58.
சுதா
19.
மிருதன்
39.
பூர்ணசந்திரன்
59.
பயோதிபிராமனன்
20.
கோமளா
40.
விஷப்ரதிகா
60.
இந்துரேகா


மேலும், 60 பாகங்களின் இரட்டைப்படை இராசிகள் என்பன மேலே குறிப்பிடப்பட்டதின் இறங்கு வரிசையாகும்; அதாவது இந்துரேகாவில் தொடங்கி, கோராவில் முடிவடையும்.

இப்போது, ஒரு கோளானது, அதனுடைய குறிப்பிட்ட வீட்டில், நவாம்சத்தில், துவதசாம்சத்தில், திரிம்சாம்சத்தில், முதலியனவற்றில்  இருந்தால், அது வர்க்கத்தில் இருப்பதாக கருதப்படும். ஒரு கோள் இரண்டு வர்க்கங்களில் இருந்தால், அது பாரிஜாத அம்சம் எனப்படும்; அது மூன்று வர்க்கங்களில் இருந்தால், அது உத்தம அம்சம் எனப்படும்; நான்கு வர்க்கங்களில் இருந்தால், கோபுர அம்சம்; ஐந்து வர்க்கங்களில் இருந்தால் சிம்மாசன அம்சம்; ஆறில் இருந்தால் பரவத அம்சம்; ஏழு அல்லது எட்டில் இருந்தால் தேவலோக அம்சம்; ஒன்பதில் இருந்தால் ஐராவத அம்சம்; அது பத்தில் இருந்தால் வைசேஷிக அம்சம் எனப்படும்.


"ஆயுர்தயம் அல்லது உயிர்வாழ்நாட்களைத் தீர்மானித்தல்" முடிவுற்றது

அடுத்து … பகுதி-8 - தசா மற்றும் அந்தர தசாக்கள்



முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-16