Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம். Show all posts
Showing posts with label தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம். Show all posts

Thursday, January 19, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - 6


தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம்  - தொகுப்பு


தசா-புத்தி என்பது குறித்து நாம் ஆராய்ந்த வகையில் –

·         தசா-புத்தி என்பது காலமுறைக் கணிதம்

·         சாதகத்தில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நடப்பதற்கான வாய்ப்பு எப்போது நிகழும் என்பதை அறிய உதவும் கணக்கீடு

·         இதில் பல்வேறு வகையான கணக்கீடுகள், அதாவது ஐம்பதற்கும் மேற்பட்ட முறைகள் உள்ளன.

·         வராக மிகிரரின் முறையானது ஒப்பு நோக்கில் சிறப்புடையதாக இருந்தாலும், நடைமுறையில் கணிதம் செய்வதற்குக் கடினமாக இருப்பதால், தற்போது எந்த சோதிடரும் இந்த முறையினைப் பயன்படுத்துவது இல்லை.

·         வராக மிகிரரின் முறையில் காலக் கணிதமானது, அதிகபட்சமாக 120 ஆண்டுகள் – 5 நாட்கள் எனும் அளவில் உள்ளது.

·         அதில் எட்டு தசைகள் – அதாவது, இலக்கினம் மற்றும் ஏழு கோள்களின் தசைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

·         பராசரர் தமது பராசர ஓரையில் பல்வேறு முறைகளைப் பற்றி கூறினாலும், விம்சோத்திரி தசை முறையே சிறந்தது எனக் கூறுகிறார்.

·         விம்சோத்திரி தசை முறையில் மொத்தம் 120 ஆண்டுகள் குறிக்கப்படுகிறது.

·         பிறக்கும்போது சந்திரன் உள்ள விண்மீனின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

·         அசுவணி தொடங்கி ரேவதி வரையில் உள்ள விண்மீன்களின் அடிப்படையிலும், அவற்றின் அதிபதிகளான கேது தொடங்கி புதன் வரையில் உள்ள வரிசையின் அடிப்படையிலும் தசா ஆண்டுகள் தொகுக்கப்படுகின்றன.

·         மொத்த தசா ஆண்டுகள் 120 என்பது, வராகமிகிரரின் மொத்த தசா ஆண்டுகளோடு ஒத்து வருகிறது.

·         ஆனால், இராகு-கேது உட்பட ஒன்பது கோள்களுக்கான ஆண்டுகள் பகிர்ந்தளிக்கப்பட்டதில், கணித முறையினை தர்க்க முறையில் நிலை நிறுத்த முடியவில்லை.

·         தசா புத்தி என்பது, தசா – புத்தி – அந்தரம் – சூட்சமம் – பிராண அந்தரம் – தேக அந்தரம் என நுணுக்கமாக, கோள்களுக்கு உரிய விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்படுகிறது.

·         ஒவ்வொரு தசையும், அந்த குறிப்பிட்ட தசா கோளின் புத்தி, அந்தரம் என்பதில் தொடங்கி, அதற்கு அடுத்த கோளின் வரிசைப்படி, ஒரு ஒழுங்கு முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

·         விம்சோத்திரி தசைதான் நடைமுறையில் பெருமளவு ஒத்து வருகிறது என பெரும்பாலான சோதிட அறிஞர்கள் ஒப்புதல் செய்கின்றனர்.

·         அப்படி எனில், சில சமயங்களில் ஒத்து வரவில்லை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

·         தசா நாதனை விட புத்தி நாதனும், புத்தி நாதனை விட அந்தர நாதனும், அந்தர நாதனை விட சூட்சம நாதனும் பலமிக்கவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

·         எனவே எந்த ஒரு தசையும் முழு நற்பலனையோ அல்லது முழு கெடுபலனையோ கொடுப்பதில்லை என நிலை நிறுத்தப்படுகிறது.

·         தசா புத்திகளின் பலன் அறிதலை, உரிய நேரத்தில், உரிய பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அடுத்து … சட்பலம் -


Wednesday, January 18, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - 5



தசா - புத்தி - அந்தரம் - சூட்சமம் - பிராண அந்திரம் -  தேக அந்திரம்


தசாக் காலம் என்பது, மேலும் நுணுக்கமாக, தசா – புத்தி – அந்தரம் – சூட்சமம் என அமைக்கப்பட்டுள்ளது.


அதன்படி –

புத்தி என்பது –

ஒரு குறிப்பிட்ட கோளின் தசாக் காலத்தை, ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, இராகுவின் தசாக் காலம் 18 ஆண்டுகள் என்பதனை, மற்ற கோள்களுக்கு உரிய தசாக் கால ஆண்டுகளின் விகிதாச்சாரத்தில், ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். இங்கு கணித முறையை மட்டுமே விளக்க முற்படுகிறேன். எடுத்துக்காட்டாக, இராகு தசை – சூரிய புத்தி என்றால், 18 x 6/120 எனும் கணக்கீடு செய்ய வேண்டும். வரும் விடையானது 0.9 ஆண்டுகள் என்பதாகும். அதாவது 10 மாதங்கள் 24 நாட்கள் என வரும். [இதனை இன்னும் துள்ளியமாகக் கணக்கிட சூத்திரங்கள் இருக்கின்றன என்றாலும் அடிப்படைக் கணிதம் இதுதான்].

அந்தரம் என்பது –

ஒரு குறிப்பிட்ட கோளின் புத்திக் காலத்தை, ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, இராகு தசையில் – சூரிய புத்தியின் கால அளவான 10 மாதங்கள் 24 நாட்கள் என்பதை, ஒன்பது கோள்களுக்கும், தசாக் கால விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, சுக்கிர அந்திரம் எனக் கொள்வோம். கணிதமானது, 10மாதங்கள் 24 நாட்கள் x 20/120. விடையானது – 54 நாட்கள் என வரும் (1 மாதம் 24 நாட்கள்).

சூட்சமம் என்பது –

ஒரு குறிப்பிட்ட கோளின் அந்தரக் காலத்தை, ஒன்பது கோளிற்கும் பகிர்ந்து அளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, இராகு தசையில் – சூரிய புத்தியில் – சுக்கிரன் அந்திரமான  கால அளவு 54 நாட்கள் என்பதை, ஒன்பது கோள்களுக்கும், தசாக் கால விகிதாச்சார அடிப்படையில் பகிர்ந்தளிப்பதாகும். எடுத்துக் காட்டாக, செவ்வாய் சூட்சமம் எனக் கொள்வோம். கணிதமானது, 54 நாட்கள் x 7/120. விடையானது – 3 நாட்கள் 3 மணி 36 நிமிடங்கள் என வரும்.

இதனை இன்னும் நுணுக்கமாக, பிராண அந்திரம், தேக அந்திரம் எனவும் இது போலவே பிரிக்க முடியும் என சோதிட நூல்கள் கூறினாலும், அவை மணி, நிமிடத்திற்கு குறைவாக வருவதால், அதனை பொதுவில் தவிர்த்து விடுகின்றனர்.

ஆக தசாக் காலம் என்பது, தசா-புத்தி-அந்திரம்-சூட்சமம் எனும் உட்பிரிவுகளால், அதே நேரத்தில் அதனை ஒவ்வொரு கோளிற்கு அவற்றிற்கு உரிய தசாக் கால விகிதாச்சாரத்தின் அளவில் பிரித்து அளிக்கப்படுகிறது.

தசாக் கால பலன்கள் உரைப்பதில் பல்வேறு காரணிகளைக் கணக்கில் கொள்ள வேண்டும். அது பற்றி தசா-புத்தி பலன்களை ஆராய்கையில் காணாலாம்.

ஆனால் பொதுவாக, தசா-புத்தி பலன்கள் என்பதில், வலிமை என்பது, ஒரு குறிப்பிட்ட கோளின் தசா-புத்திக் காலத்தில் –

தசா நாதன் எனப்படும் தசாக் கோளினைக் காட்டிலும், புத்திக் கோளிற்கு வலிமை அதிகம் என்றும்;

புத்தி நாதன் எனப்படும் புத்தி கோளினைக் காட்டிலும், அந்திர கோளிற்கு வலிமை அதிகம் என்றும்;

அந்திர நாதன் எனப்படும் அந்திர கோளினைக் காட்டிலும், சூட்சம கோளிற்கு, அதாவது சூட்சம நாதனுக்கு வலிமை அதிகம் என்றும்;

சோதிட நூல்கள் கூறுகின்றன.

சுய தசை, சுய புத்தி, சுய அந்திரம், சுய சூட்சமம் என்பது சிறப்புடையது இல்லை எனவும் சோதிட நூல்கள் கூறுகின்றன.


இது பற்றி பின்னர் உரிய பதிவில் விவரமாகப் பார்க்கலாம்.

தொடரும்.....

Tuesday, January 17, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - 4


தசா ஆண்டுகள்


நாம் ஏற்கனவே பதிவிட்டபடி, ஒவ்வொரு விண்மீனும் ஒரு கோளிற்கு உரிமை உடையதாக இருக்கிறது. எடுத்துக் காட்டாக, அசுவனி என்பது கேது கோளிற்கும், பரணி என்பது வெள்ளி கோளிற்கும் உரிமை உடையது. அதாவது அந்த குறிப்பிட்ட விண்மீன்களுக்கு குறிப்பிட்ட கோள்கள் அதிபதி என்பதாகும். இதன் அடிப்படையில்தான் நட்சத்திர தசை கணக்கிடப்படுகிறது.

கோள்கள்
அக் கோளுக்கு உரிய விண்மீன்கள்
தசா ஆண்டுகள்
கேது
அசுவனி
மகம்
மூலம்
7
வெள்ளி
பரணி
பூரம்
பூராடம்
20
சூரியன்
கார்த்திகை
உத்திரம்
உத்திராடம்
6
சந்திரன்
ரோகிணி
அஸ்தம்
திருவோணம்
10
செவ்வாய்
மிருகசீரிசம்
சித்திரை
அவிட்டம்
7
இராகு
திருவாதிரை
சுவாதி
சதயம்
18
வியாழன்
புனர்பூசம்
விசாகம்
பூரட்டாதி
16
சனி
பூசம்
அனுசம்
உத்திரட்டாதி
19
புதன்
ஆயில்யம்
கேட்டை
ரேவதி
17

இதன்படி,ஒருவர் பிறப்பு சாதகத்தில், சந்திரன் எந்த விண்மீனின் இருப்புக் காலத்தில் இருக்கிறதோ, அந்த விண்மீனிற்கு உரிய கோளின் தசையே தொடக்க தசையாக இருக்கும். சாதகக் கணக்கின்படி, சந்திரன் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தினை எவ்வளவு தூரம் அல்லது கால அளவில் கடந்துள்ளாரோ அவற்றைக் கழித்து விட்டு, மீதம் உள்ளதை இருப்பு தசை எனக் கணக்கிடுகின்றனர். அதற்குரிய கணிதங்கள் இங்கு தேவையில்லை என்பதால் அதனைத் தவிர்த்து விடுகிறேன்.

பின்னர் அவரது ஆயுள் காலம் முழுமைக்கும், மேல் குறிப்பிட்ட வரிசைப்படி, தசாக் காலமானது கணக்கிடப்படுகிறது.

இந்த விம்சோத்திரி தசையில், இன்னும் விரிவாக, ஒவ்வொரு தசாக் காலத்தினையும், பகுத்து தரப்படுகிறது. அதாவது, ஒரு குறிப்பிட்ட கோளின் தசையானது, பிறக்கோள்களோடும் தொடர்பில் இருக்கிறது.

இதன்படி, எந்த ஒரு தசைக் காலமும் அக்குறிப்பிட்ட கோளின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்காது என்பதாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட கோளின் தசையில் மற்ற கோள்களுக்கும் பங்கு உண்டு என்பதாகும். பங்கு உண்டு என்பதைக் காட்டிலும், சாதகத்தில் அக் கோள்களின் வலிமையைப் பொருத்து, தசா நாதன் எனப்படும் குறிப்பிட்ட கோளின் வலிமையை விட அதிக வலிமையை பிற கோள்கள் எடுத்துக் கொள்ளும் என்பதே. அதாவது ஒன்றுடன் ஒன்று சார்ந்து இருத்தல் என்பதாகும். ஏறக் குறைய, நமது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஒப்பானதாக தசாக் கால கோள்களின் பங்களிப்பு இருக்கிறது. குடியரசுத் தலைவர் – பாராளுமன்றம் – சட்ட மன்றம் – நீதி மன்றம் – மற்ற அரசியல் சட்ட அமைப்புகள் என்பனவற்றில் யாருக்கு அதிகாரம் என்பது சூழ் நிலையைப் பொருத்து தீர்மானிக்கப்படுதல் போல, இங்கு தசாக் காலம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில், ஒரு கோளின் தசை என்பது, பிறக் கோள்களின் புத்தியைச் சார்ந்தும், ஒரு கோளின் புத்தி என்பது பிறக் கோள்களின் அந்தரத்தைச் சார்ந்தும், ஒரு கோளின் அந்தரம் என்பது பிறக் கோள்களின் சூட்சமத்தைச் சார்ந்தும் இருக்கிறது.



அதாவது, தசாக் காலம் என்பது, மேலும் நுணுக்கமாக, தசா – புத்தி – அந்தரம் – சூட்சமம் என அமைக்கப்பட்டுள்ளது.


புத்தி.. அந்தரம்... சூட்சமம்....

Saturday, January 7, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - 3


விம்சோத்திரி தசை எனும் நட்சத்திர தசை

விம்சோத்திரி எனும் வடமொழி சொல்லிற்கு “நூற்றி இருபது” என பொருள். அதாவது தசாக் காலத்தினை 120 ஆண்டுகள் கொண்டதாகக் கணக்கிடும் முறையாகும். இந்த முறையில், இலக்கினம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இராகு-கேது உட்பட ஒன்பது கோள்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு கோளிற்கும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் (fixed - மாறிலி) கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கோளின் தசை முடிந்த பின்பு அடுத்த தசையானது, அதற்குரிய வரிசைப்படிதான வரும்.

வரிசை என்பது, கேதுவில் ஆரம்பித்து புதனில் முடிவடைகிறது. (சூரியனில் ஆரம்பித்து சுக்கிரனில் முடிவடைகிறது என்பர் – விண்மீன்கள் வரிசைப்படி கேது – புதன் சரியானது). அதாவது, கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, வியாழன், சனி, புதன் என்பதாகும்.

வரிசை முறை என்பது, பூமி மையக் கொள்கைப்படி, புதன், வெள்ளி, சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், சனி வரிசைப்படுத்தப்பட்டு, பின்னர் இவைகளுக்கு இடையே இராகுவையும் கேதுவையும் இணைத்திருக்க வேண்டும். அதாவது புதன்-வெள்ளி இவைகளுக்கு இடையே கேதுவையும், செவ்வாய்-வியாழன் இவைகளுக்கு இடையே இராகுவையும் இணைத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கான முடிவான விளக்கம் எங்கும் கிடைக்கவில்லை.

இது, விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதால், முதல் விண்மீனான அசுவினி (கேது) தொடங்கி, ஆயில்யம் (புதன்) வரையிலான முதல் ஒன்பது விண்மீன்களுக்கு உரிய அதிபதிகளான கோள்களின் வரிசைப்படி அமைந்திருக்கிறது.

இவைகளுக்கு உரிய ஆண்டுகள் என்பது கீழ்வருமாறு:

கேது
7
சுக்கிரன்
20
சூரியன்
6
சந்திரன்
10
செவ்வாய்
7
இராகு
18
வியாழன்
16
சனி
19
புதன்
17
மொத்தம்
120

ஆக, தசாக் கால அளவு என்பது மொத்தம் 120 ஆண்டுகள். இந்த 120 ஆண்டுகள் என்பது, வராக மிகிரரின் ஆயுர்தயக் கால அளவான, அதாவது அதிகபட்ச அளவான 120 ஆண்டுகள் 5 நாட்கள் என்பதனையே ஒத்து வருகிறது. அதாவது, 5 நாட்கள் என்பது மீச்சிறு நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கலாம். எனவே, பராசரர் அல்லது அவருக்கு முந்தைய சோதிட அறிஞர்கள், வராக மிகிரரின் ஆயுர்தய முறையின் அடிப்படையில், கோள்களுக்கான மொத்த தசாக் கால அளவினைத் தீர்மானித்திருக்கலாம். இதுபற்றியதொரு விரிவான கணிதம் செய்து கொண்டிருக்கிறேன். விடைகண்ட பிறகு இதனை உறுதி செய்கிறேன்.


இது மொத்தம் 120 ஆண்டுகளைக் கொண்டது என்பதால் விம்சோத்திரி தசை என அழைக்கப்பட்டாலும், நட்சத்திர தசை என்பதே மிகப் பொருந்தும். ஏனெனில் இது சோதிடத்தில் பயன்படுத்தப்படும் 27 விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது.


தொடரும்…