Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, October 23, 2014

பிருகத் ஜாதகா – தமிழில்-7
வராக மிகிரரின் பிருகத் ஜாதகா

திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்


அறிமுகம்…(தொடர்ச்சி)


இரண்டாம் நிலையின்படி – ஒரு மனிதனின் தலையெழுத்தின்படி அவனது எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்றால், நம்மால் எவ்வாறு அவனது தனித்துவம் பாதிக்கப்படுவதையும், சில நேரங்களில் அவன் அனுபவிக்கும் பலன்களையும் கணக்கிட முடிகிறது, அதாவது முன்னவன் எந்தவித பலன்களையும் அனுபவிக்க முடியாதபோது, பின்னவன் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஏற்றுக் கொள்ளக் கூடிய விளக்கம் யாதெனில், முன்னவர் முந்தைய கர்மாவின் விளைவினையும் பின்னவர் விதிப்பயனாக தமது அடுத்த பிறவியில் அதற்குறிய நன்மையையும் தீமையையும் அனுபவிப்பார். ஒரு மனிதனின் முழு வாழ்க்கையையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், நமது சொந்தக் கருத்தின்படி – மனிதனானவன் முந்தைய விதியின் விளைவாக அனுபவித்தலும், தன்னுடைய புதிய செயலின் காரணமாக அதன் பலன்களையும் – அதாவது எந்த விதத்திலும் முந்தைய கர்மாவிற்கு, தடைகள், செயலற்றதாக்குதல், மாற்றுதல் ஆகியவற்றை ஏற்படுத்தாவண்ணம், அனுபவிக்கின்றான். அதே நேரத்தில், தற்போதைய செயல்பாட்டினை நோக்கி செல்லும்போது, அவனால் எளிதாகவும் தடையின்றியும் செல்ல முடிகிறது. இது மூன்று காரணிகளால் ஏற்படுகிறது.. (1) எவ்வளவு திட்டமிட்டு நல்லவிதமாக செயல்பட்டாலும் தொடர்ந்து ஏற்படும் தோல்விகள் (2) அதிக முயற்சி இல்லாமல் எளிதில் கிடைக்கக் கூடிய வெற்றிகள் (3) உழைப்பின் பலனிற்கு ஏற்ப கிடைக்கும் வெற்றிகள். முதல் நிலையினைப் பொருத்தவரையில் அவனது முயற்சியானது தற்போதைய விதியின் போக்கிற்கு எதிராகச் செயல்படுகிறது; மற்றொன்று தற்போதைய போக்கிற்கு உட்பட்டு செயல்படுகிறது; மூன்றாவது தண்ணீரின் மீது செல்வது போன்றது, அதாவது எங்கெங்கெல்லாம் மனிதனின் செயல்பாடு செல்லுபடியாகின்றதோ அங்கெல்லாம் செல்வது.முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 - 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014
[ நிமித்திகன் வலைப்பூ தொடங்கி ஓராண்டு நிறைவு .. ஆதரவிற்கு நன்றி]


Friday, October 10, 2014

பூமி மையக் கொள்கை ஏற்புடையதா?

      நிலவு என்பது ஒவ்வொருவரின் குழந்தைப் பருவத்திலும் கைக்கோர்த்து நடந்து வரும் நண்பன். நிலவைக் காட்டிச் சோறு ஊட்டாத தாயே இல்லை எனக் கூறலாம். இப்போதைய அவசர உலகத்தில் சோற்றைக்கூட தாய் ஊட்டாத நிலை உள்ளது. அதை விடுங்கள். நாம் சிறிய வயதில் நடந்து செல்லும்போது நிலவு நம்முடனேயே தொடர்ந்து வரும். நாம் ஓடினாலும் நம்மை விடாது துரத்தி வரும். அல்லது நமக்கு முன்னே சென்று கொண்டிருக்கும்.

      தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருப்போம். வெளியே உள்ள தந்திக் கம்பங்கள் நம்மைக் கடந்து சென்றுகொண்டிருக்கும். மரங்கள் நகர்ந்து கொண்டிருக்கும்.

      இராஜதானி விரைவு வண்டியில் தில்லி நோக்கி பயணம் செய்துகொண்டிருப்போம். பக்கத்தில் உள்ள பயணி “விஜயவாடா எப்போது வரும்?” என்று கேட்பார்.

      உண்மையில், நிலவு நம்மைப் பின்தொடர்வதில்லை, அல்லது நம்மை விட்டு முன்னோக்கி ஓடுவதில்லை. அது அதன் இயல்பில் சுற்றிக் கொண்டு (நகர்ந்து கொண்டு) இருக்கிறது.

      தந்திக் கம்பங்களும், மரங்களும் நகராப் பொருட்கள் என்று நமக்குத் தெரிந்திருந்தாலும் நகர்வதாக நமக்கு தோன்றுகிறது.

      விஜயவாடா எப்போதும் நம்மிடம் வராது. நாம் செல்லும் வண்டிதான் விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

      ஆனாலும், மேலே சொன்னக் காட்சிகளை நாம் உண்மையென கற்பனைச் செய்துகொண்டிருக்கிறோம்.

      இதைத்தான் நம் முன்னோர்கள், கோள்களின் அசைவை, நகர்தலை, பூமியிலிருந்து பார்த்து, காட்சித் தோற்றத்தில் கணிதம் செய்தனர். வானியலின் தந்தை, திரிகோணக் கணிதத்தில் கரைகண்ட ஆர்யபட்டா-1 அவர்கள்கூட காட்சித் தோற்றத்தின் அடிப்படையில்தான், அதாவது பூமி மையக் கொள்கையின் அடிப்படையில்தான் கணிதம் செய்தார். நமது முன்னோர்களும் அவ்வாறே கணிதம் செய்தனர். கோள்களின் பெயர்ச்சியினைத் துள்ளியமாகக் கணக்கிட்டனர். முழு நிலவும், இருள் நிலவும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் (15 நாட்களுக்கு ஒரு முறை) வருதலைக் கணக்கிடுதலில் பெரிய சூத்திரம் தேவையில்லை என்றாலும், எப்போதோ ஏற்படக்கூடிய, அதுவும் முறையான குறிப்பிட்ட காலச் சுழற்சியில் ஏற்படாத சூரியக் கிரகணம், சந்திரக் கிரகணம் முதலியவற்றை எப்படிக் கணித்தனர். பூமி மையக் கொள்கைதான் அவர்களுக்கு அடிப்படைத் தத்துவம். தொலை நோக்கிகள், அறிவியல் கருவிகள் போன்றவை எதுவும் இன்றி, நிகழ் பதிவுகள் மற்றும் கணித சூத்திரங்கள் மூலமாகவே இவற்றைக் கண்டறிந்தனர் என்பது பெரும் வியப்பிற்கும் மதிப்பிற்கும் உரிய அறிவியலாகும். தாலமி கூட போகிற போக்கில் பூமி மையக் கொள்கையை வகுக்கவில்லை. பல்வேறு கணித சூத்திரங்கள், தேற்றங்கள் இவற்றின் மூலமே நிறுவி இருந்திருக்கிறார்.

      கோபர்னிகஸ் சூரியக் கொள்கையைக் கூறியபோது, கோள்கள் சூரியனை மையமாகக் கொண்டு வட்டப்பாதையில் சுற்றுவதாகத்தான் குறிப்பிட்டார். பின்னர் வந்த கெப்ளர் தான் நீள்வட்டப்பாதையில் சுற்றுவதாகக் கூறினார்.

      பூமி மையக் கொள்கைக்கும், சூரிய மையக் கொள்கைக்கும் உள்ள சுற்றுவட்டப்பாதையைக் கவனித்தால், கோள்களின் வரிசையில் எவ்வித மாற்றமும் இருப்பதில்லை. சூரியக் கொள்கையில் -  வெள்ளிக்கும் செவ்வாய்க்கும் இடையில் பூமி இருக்கும். பூமிக் கொள்கையில் -  வெள்ளிக்கும் செவ்வாய்க்கும் இடையில் சூரியன் இருக்கும். அவ்வளவுதான்.

      சில தகவல்களைத் திரட்டும்போது ஒரு செய்தி கிடைத்தது. விண்வெளிக்கு செயற்கை கோள்களை அனுப்பும்போது, பூமியின் புவியீர்ப்பு விசையை விட்டு செல்லும்வரை பூமி மையக்கொள்கைதான் பின்பற்றப்படுகிறதாம். புவியீர்ப்பு விசையை விட்டு விலகிச் சென்றவுடன் சூரிய மையக் கொள்கை பின்பற்றப்படுகிறதாம்.

      எந்தக் கொள்கையாக இருந்தாலும் சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைவதில் மாற்றமில்லை. கிரகணங்கள் கணிப்பதில் மாற்றமில்லை. கோள்களின் பெயர்ச்சியில் மாற்றம் இல்லை.

      நாம் பூமியில் இருந்து பார்ப்பதால் பூமி மையக் கொள்கையும், ஆகாயத்தில் இருந்து பார்த்தால் சூரிய மையக் கொள்கையும் சரியாகவே இருக்கும்.

      எனவே, சோதிடம் பற்றி கணிதம் செய்த முன்னோர்கள் பூமி மையக் கொள்கையைப் பின்பற்றியதில் தவறு ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது.


[இன்னமும் சில மதங்கள், பூமி நிலையானது என்றும், சூரியனும் மற்றக் கோள்களும் பூமியைச் சுற்றி வருகிறது என்றும் தங்களது மத நூல்களை மேற்கோள் காட்டி கூறிவருகின்றன. பூமி தட்டையானது எனும் கோட்பாடு உடைய மதமும் அதனைப் பின்பற்றுபவர்களும் இருப்பதாகவும் மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின்  கட்டுரை ஒன்றில் படித்திருக்கிறேன்.]Monday, October 6, 2014

சோதிடத்தில் வானியல் கோட்பாடுகள்                      அகலிடத் தார்மெய்யை அண்டத்து வித்தைப்
                                                புகலிடத் தென்றனைப் போதவிட் டானைப்
                                                பகலிடத் துமிர வும்பணிந் தேத்தி
                                                இகலிடத் தேஇருள் நீங்கிநின் றேனே.
-    திருமூலர்      வானியல் கோட்பாடுகள், பொதுவாக இரண்டு நிலைகளில் வகுக்கப்பட்டுள்ளன. ஒன்று பூமி மையக் கொள்கை, மற்றொன்று சூரிய மையக் கொள்கை.


      பூமி மையக் கொள்கையின்படி, சூரியக்குடும்பத்தில் உள்ள அனைத்துக் கோள்களும், பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்பதாகும். தொன்றுதொட்டு வெகு நாட்கள் வரையில், இந்தக் கொள்கையையே வானியல் அறிஞர்களும் கொண்டிருந்தனர். சுழன்றும் ஏர்பின்னது உலகம் எனும் வள்ளுவரின் வாக்கில், பூமி சுற்றிவருவதைப் பதிவு செய்துள்ளதைக் காணலாம். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க நாட்டைச் சார்ந்த பல்துறை வித்தகரும் வானியல் அறிஞருமான தாலமியும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்திய வானியல் அறிஞரும் கணித மேதையுமான ஆர்யபட்டாவும் இதேக் கருத்தைத்தான் கொண்டிருந்தார்.

 
தாலமியின் பூமி மையக் கொள்கை      சூரிய மையக் கொள்கையானது, இன்று வானியல் துறையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட, வானியல் அறிஞர்களால் பின்பற்றப்படும் கொள்கையாகும். இதன்படி, இந்த பிரபஞ்சத்தில் பால் வீதியில் நமது சூரியக்குடும்பம் உள்ளது. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும், சூரியனை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன. இக்கருத்து வெகுகாலந்தொட்டு, சரியாக நிருபிக்கப்பட முடியாமல் இருந்து வந்தது.  இந்தக் கொள்கையை பின்னர் 16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த போலந்து நாட்டைச் சார்ந்த நிக்கோலஸ் கோபர்னிகஸ் தனது கோட்பாட்டின் மூலம் நிரூபித்தார்.

கோபர்னிகஸின் சூரிய மையக் கொள்கை


      இவை இரண்டில் எந்தக் கொள்கை மெய்யானது?


பூமி மையம் -எதிர்(vs.)- சூரிய மையம்

      இரண்டுமே மெய்யானதுதான். எப்படி? ஒன்று காட்சித் தோற்றத்தின் அடிப்படையிலானது, பிரிதொன்று இயல் தோற்றத்தின் அடிப்படையிலானது. எப்படி?
Friday, October 3, 2014

சோதிடம் தோன்றியக் காலங்களும், சிலக் குறிப்புகளும்.              தெற்கு வடக்குக் கிழக்குமேற் குச்சியில்
                                அற்புத மானதோர் அஞ்சு முகத்திலும்
                                ஒப்பில்பே ரின்பத் துபய உபயத்துள்
                                தற்பரன் நின்று தனிநடஞ்ச் செய்யுமே

-திருமூலர்


பண்டையக் கால சோதிடக் குறிப்புகள்


      தமிழ்க் காப்பியங்களில் தலையாயது சிலப்பதிகாரம். ஏன் எனில் மற்ற காப்பியங்கள் எல்லாம், ஒன்று வடமொழி இலக்கியங்களை மறுவடிவு செய்தவை அல்லது கடவுள்களையும் அரசர்களையும் காப்பியத் தலைவர்களாகக் கொண்டு எழுதப்பட்டவை.  ஆனால் முற்றிலும் ஒரு புதியக் களத்தில் ஒரு எளிய வணிகனின் வாழ்வியலை, எளிய நடையில், அரசியல் பிழை, கற்புடை பெண்டிர் வாழ்வு, ஊழ்வினை ஆகிய மூன்று கருத்துக்களை மையப்படுத்தி எழுதப்பட்டது சிலப்பதிகாரம்.

      இதற்கும் சோதிடத்திற்கும் என்ன தொடர்பு? சேர மன்னனின் இரு புதல்வர்களில், இளையோனைக் கண்ட ஒரு நிமித்திகன், இவன் மன்னன் ஆவான் என்று நிமித்திகம் (சோதிடம் என்பதன் தூய தமிழ்ச் சொல்) சொல்ல, மூத்தவனின் முகம் போன போக்கைக் காண முடியாமல், இளையவன் வெகுண்டெழுந்து, ‘நிமித்திகனின் வாக்கைப் பொய்யாக்குவேன்’ என சபதமிட்டு, உடன் சமன முனிவர்களின் உடையனிந்து, துறவியானன். நிமித்திகன் அல்லது சோதிடனின் வாக்கை முதல் அடியிலேயே துவைத்து எடுத்துவன் பெயர்தான் இளங்கோ என்பது நம் அனைவருக்கும் தெரியும்.


பண்டையக் கால சோதிடக் குறிப்புகள்      இதில் சோதிடம் பொய்த்துப் போனது ஏன் என்பதைவிட, அன்றைய வாழ்வியலோடு சோதிடம் என்பது பின்னிப் பினைந்திருந்தது அறியவருகிறது. அதனினும் குறிப்பிடத்தக்கக் குறிப்பு என்னவெனில், இளங்கோ அடிகள் சமன மதத்தைச் சார்ந்தவர். எனவே மத வேறுபாடின்றி, அனைத்து மதத்தினரின் வாழ்வோடும் சோதிடம் இரண்டறக்கலந்து இருந்திருக்கிறது.

பண்டையக் கால சோதிடக் குறிப்புகள்


      சோதிடத்தின் வரலாறு என்பது புவியியல் சார்ந்தும், அதாவது விரிந்து பரந்து இந்த புவனம் முழுதும் பதியப்பட்டிருக்கிறது. மத வேறுபாடுகளையும் கடந்து சோதிடம் பயன்பாட்டில் இருந்துவந்துள்ளது.

      மிகச் சுருக்கமாக சிலவற்றைப் பதிவிடுகிறேன். தேவை ஏற்படும்போது, அதன் விரிவினைப் பின்னர் காண்போம்.


*       இராமயணம் – இராமர் கடக இலக்கினத்தில், புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் எனக் குறிப்பிடப்படுகிறது.

*       மகாபாரதம் – சூரியனையும் சந்திரனையும் ஒன்றாகச் சந்திக்கச் செய்து, அமாவாசையை முதல் நாளே கண்ணன் உண்டாக்கியதாக செய்தி.

*       கம்ப இராமயணத்தில், வெள்ளிக் கோள் ‘உசனன்’ எனக் குறிப்பிடப்படுகிறது.

*       பட்டினப்பாலை ‘வயங்கு வெண்மீன் திசை’ என வெள்ளிக் கோள் உதிக்கும் திசையைக் குறிக்கிறது.

*       இளங்கோ நிமித்திகனால் துறவியானதாகக் குறிப்பு உள்ளது.

*       சோதிடத்தின் ஒரு கருவான ஊழ்வினையைக் கூறுவது சிலப்பதிகாரம்.

*       சமனர்கள் சோதிடக்கலையைப் பயன்படுத்தியதை சினேந்திர மாலை எனும் நூல் குறிப்பிடுகிறது.

*       கிரேக்கர்கள் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே 365 நாட்களுக்கு ஆண்டுக்கணிதம் கணித்துள்ளனர்.

*       இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்தர் சோதிடத்தின் பெயரால் நடைபெற்ற மூடப்பழக்கவழக்கங்களைக் கண்டித்துள்ளார்.

*       இயேசு பிறக்க இருப்பதை வால் நட்சத்திரத்தின் வழிகாட்டுதலோடு துறவிகள் கண்டதாக பைபிள் கூறுகிறது.

*       ஏழ் உலகங்களைக் கடந்து (ஏழு கோள்கள்?) நபிநாயகம் இறைவனைக் கண்டதாக திருக்குரான் கூறுகிறது.

*       பரமபிதாவின் திருச்சபையில் சொர்க்கத்தில் ஏழு சோதிகள் (கோள்கள்) தெரிந்ததாக பைபிள் கூறுகிறது.

*       மாயன்கள் தங்கெளுக்கென நாட்காட்டி அமைத்து அதில் பலன்களையும் வரைந்துவைத்து பலன் கண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

*       சோதிடர்கள் இளங்கோவிற்குக் கூறியது போலவே, இயேசுவை தேவகுமாரன் யூத ராசா பிறந்திருக்கிறார் எனக் கூறியதால், அன்றைய யூத அரசனால் சிலுவையில் அறையப்பட்டார்.

*       சீனர்கள், விலங்குகளையும், பறவைகளையும் கொண்டு நாட்காட்டி அமைத்து பலன் சொல்லி வருகின்றனர்.

*       கிரேக்கர்களும், யவனர்களும் சோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டிருந்தனர்.

*       இப்போதும் மேல் நாட்டினர் எபிமெரிஸ் எனும் பஞ்சாங்கத் துணையுடன், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவற்றையும் கோள்களாகக் கொண்டு சோதிடம் கணித்து வருகின்றனர்.

பண்டையக் கால சோதிடக் குறிப்புகள்


      ஆக சோதிடம் என்பது காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. அதன் நம்பகத்தன்மை மட்டுமே, காலந்தோறும் விமர்சனத்திற்கு உள்ளாகி வந்துள்ளது.