Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label சோதிட ஆய்வு-131-140. Show all posts
Showing posts with label சோதிட ஆய்வு-131-140. Show all posts

Wednesday, December 25, 2019


ஒரே இராசியில் ஒன்றிற்கு மேற்பட்ட கோள்கள் – விளக்கம்

சோதிடம் என்பது permutation and combination மற்றும் probability அடிப்படையில் கணிக்கப்பெறுவது.

ஒரு சாதகக் கட்டங்களில் இருக்கும் கோள்களின் நிலைபோல் மீண்டும் அதேபோல், இருப்பதற்குரிய நிகழ்தகவு (probability) அதாவது இரண்டு சாதகங்கள் ஒன்றுபோல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன தெரியுமா, ஏறக்குறைய 1/53,00,00,000 ஆகும். அதாவது 53 கோடி சாதகத்தில் ஒரு சாதகம் ஒன்றுபோல் இருக்கக்கூடும்.(இதுபற்றிய விரிவான விவரங்கள் நிமித்திகனின் பிருகத் சாதகம் தொகுப்பினில் காணவும்).

தற்போது விவாதப் பொருளாய் இருக்கும் ஒரே இராசியில் ஆறு கோள்கள் என்பது 25.12.2019 முதல் 27.12.2019 வரையிலான கால அளவில் இருக்கும் நிலையில், சோதிட பலன் குறித்து பல்வேறு அறிஞர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறினாலும், பொதுவான கருத்தாக, இந்த அமைப்பு அனைத்து இராசிகளுக்கும் அவ்வளவு நல்லதல்ல என்பதாகவே பதியப்பட்டு வருகின்றன.

இந்த குறிப்பிட்ட நாட்களில் இராசிக் கட்ட அமைப்பு இருக்கும் நிலையானது (திருக்கணித அடிப்படையில்):



இராகு

இராசி

சுக்கிரன்

சனி
புதன்
குரு
சூரியன்
சந்திரன்
கேது
செவ்வாய்





மேற்கண்ட அமைப்பில் கோள்கள் வரும் நிலையில், 12 இராசிக்காரர்களும் பாதிப்படைவார்கள் எனக் கூறினால் பின்பு யார்தான் பலன் அடைவார்கள்? அல்லது இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் பாதிப்படைவார்களா?

இது சற்று மிகைப்படுத்தப்பட்டக் கணிப்பு என்பதே எனது கருத்தாகும்.

முதலில் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஒரு சாதகத்தின் பலன் என்பது, 50-60 சதவீதம் பிறப்பு சாதக அமைப்பினாலும், 20-30 சதவீதம் தசாபுத்தி பலன்களைச் சார்ந்தும், மீதமுள்ள 10-20 சதவீதம் மட்டுமே கோச்சார பலன் எனப்படும் சந்திர இராசியினாலும் அமையும். அதாவது, தற்போது பேசப்படும் அல்லது பதிவிடப்படும் இராசிபலன்கள் என்பது 10-20 சதவீதம் மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும். இது அனைத்து அறிவார்ந்த சோதிடர்களுக்கும் தெரியும் என்றாலும், தற்போதைய வணிகச் சந்தையில் மக்களைக் கவர்வதற்காக இராசிபலனை வெளியிட்டு வருகிறார்கள்.

ஒருவரின் பிறப்பு சாதகமும், தசாபுத்தியும் நல்ல நிலையில் அமைந்திருந்தால், எவ்வித கோச்சார பலனும், அதாவது, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, இராகு-கேது பெயர்ச்சி ஆகியற்றால் ஏற்படக்கூடிய எவ்வித தீய தாக்கமும் ஒன்றும் செய்துவிட முடியாது. அதுபோலவே எவ்வித நல்ல தாக்கமும், அடிப்படை சாதக அமைப்பு கெட்டிருந்தால், அதன் பலன் கிடைப்பதும் கடினம்.

ஆக, தற்போது பேசப்பட்டுவரும் ஆறு கோள்களின் சேர்க்கை என்பது அவரவர் சாதக அமைப்பினைப் பொறுத்தே நல்ல/தீய பலன்களைக் அளிக்கக்கூடும். இதுபற்றி எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. சோதிட பலனிற்காக பரிகாரம் என்பதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. ஏனெனில் அது மனம் சார்ந்த செயல். சோதிடத்திற்கும் பரிகாரத்திற்கும் தொடர்பில்லை என்பதே என் தீர்க்கமான முடிவு.

அடுத்து, ஒரு கேள்வி எழக்கூடும். அடிப்படை சாதக அமைப்பிலேயே ஒரு வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கோள்கள் இருந்தால், குறிப்பாக 25-12-19 முதல் 27-12-19 வரையில் பிறக்கும் குழந்தைகளுக்கு சாதக அமைப்பு எப்படி இருக்கக் கூடும். ஒரே வீட்டில் ஆறு கோள்கள் இருக்கும் நிலையில் பிறக்கும் குழந்தையின் எதிர்காலம் எப்படி இருக்கக் கூடும் எனும் வினா எழும்.

இதுபற்றி சோதிட நூல்கள் – பிருகத் சாதகம், சாதக பாரிசாதம், இன்னும் பிற, என்ன கூறியுள்ளன என்பதன் தொகுப்பினைக் காண்போம்.
ஒரே வீட்டில்
பிற வீடுகளில்
பலன்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், இராகு (அ) கேது
சனி,
இராகு (அ) கேது
காடுகளிலும் மலைகளிலும் வசிப்பார். மனைவி குழந்தை உண்டு, சொத்துக்கள் உண்டு, அறிவியல் நூல்கள் எழுதுவார்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி, இராகு (அ) கேது
சுக்கிரன்,
இராகு (அ) கேது
திருட்டுத் தொழில், பெண்களின் மீது இச்சை, உறவினரால் வெறுக்கப்படுதல், முட்டாள், குழந்தையின்மை, வெளிநாட்டில் சுற்றுதல்
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனி, இராகு (அ) கேது
குரு,
இராகு (அ) கேது
தாழ்ந்த பிறப்பு, அடிமைத் தொழில், குடிப்பழக்கம், பிறரால் வெறுக்கப்படுதல்
சூரியன், சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு, சனி, இராகு (அ) கேது
புதன்,
இராகு (அ) கேது
அமைச்சர் பதவி, மனைவி மக்கள் அமைதல், சொத்து சுகம்
சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், குரு, சனி, இராகு (அ) கேது
செவ்வாய்,
இராகு (அ) கேது
தலைவலி, மனநிலை பிறழ்தல், மக்கள் வசிக்காத இடங்களில் வாழ்தல், வெளிநாட்டில் சுற்றுதல்
சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, இராகு (அ) கேது
சந்திரன்,
இராகு (அ) கேது
அறிவார்ந்த சுற்றுப்பயணம், அறிவாளி
சுக்கிரன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சனி, இராகு (அ) கேது
சூரியன்,
இராகு (அ) கேது
வசதிமிக்கவர், ஆன்மீக பயனம் மேற்கொள்பவர்

ஆனால், பொதுவான கருத்து என்னெவெனில், ஒரு சாதகத்தில் ஒரே வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கோள்கள் இருந்தால், அதாவது ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் இருந்தால் அந்த சாதகர், பிச்சைக்காரனாகவும், காடு மேடுகளில் சுற்றுபவனாகவும் இருப்பார். இது எப்போதும் உண்மையா?

இவ்வாறு அமைப்புள்ள சாதகத்தில் பிறந்த ஒருவரின் சாதகத்தினைத் தற்போது பார்க்கலாம்.

ஒரே வீட்டில் ஒன்றிற்கு மேற்பட்ட கோள்கள் இருக்கும் நிலை என்பது 57 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1962-ம் ஆண்டும் பிப்ரவரி மாதம் 1 – 3 ஆகிய நாட்களில் நிகழ்ந்துள்ளது.

நாம் இங்கு 01-02-1962-ல் பிறந்த ஒருவரின் சாதகத்தினை ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம்.





செவ்வாய்
சனி

சூரியன்

இராசி
இராகு

இராகு
சந்திரன்
அம்சம்
சுக்கிரன்
செவ்வாய்
சனி
சூரியன் (புதன்) சுக்கிரன்
கேது



கேது
குரு
இலக்கினம்
சந்திரன்




இலக்கினம்

(புதன்)

தனுசு இலக்கினம், விருச்சிக இராசி. 12-ம் வீட்டில்  சந்திரன், இராகு தவிர்த்து அனைத்து கோள்களும் உள்ளன.

சுருக்க ஆய்வு:
தனுசு இலக்கினம். முன்னும் பின்னும் பாவக் கோள்கள் – பாவகர்த்தாரி தோசம் – உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைவு
சந்திரன் – 12-ல் நீச்சம் – தாயின் ஆதரவு அற்ற நிலை
குரு – 2-ல் நீச்சம் – அறிவில் குறைபாடு, செல்வ நிலையில் ஏழ்மை
செவ்வாய் – 2-ல் உச்சம் – கோபம் கொப்பளிக்கும்
சனி – 2ல் - வறுமை
புதன் – 2-ல் வக்கிரம் – கல்வியில் குறைபாடு, பேச்சுக் குறைபாடு
சூரியன் – 2-ல் பிற கோள்கள் அஸ்தங்கம் – பிறகோள்கள் கொடுக்கும் பலன்கள் கெடும்
ஏழு கோள்கள் – 2-ல் - கோள்கள் யுத்தம் - பிறகோள்கள் கொடுக்கும் பலன்கள் கெடும்
இராகு – 8-ல் – உடற்பிணி, வம்பு வழக்குகள், ஆயுள் குறைபாடு
ஏழு கோள்கள் ஒரே வீட்டில் – பிச்சைக்காரர், காடு மேடுகளில் சுற்றுபவர்.

ஆக, இந்த சாதகம் சிறப்பான சாதகம் இல்லை என்பதுடன், மிக மோசமான சாதகம் என்றும் கூறலாம். செவ்வாய் மட்டுமே உச்சம் என்றாலும், இரண்டில் உச்சம் பெறுதல் சிறப்பல்ல என்று சோதிட நூல்கள் கூறுகின்றன.

பாவகர்த்தாரி தோசத்துடன் பிறந்த இந்த சாதகர் பிறக்கும்போது உயிருடன் பிறப்பாரா என்பதே கேள்விக்குறி.

மேலும், ஏழு கோள்கள் ஒரே வீட்டில் இருப்பதால், பிச்சைக்காரனாகவும், காடு மேடுகளில் சுற்றுபவராகவும் இருக்க வேண்டும்.

பொதுவாக அனைத்து சோதிடர்களும் இப்படித்தான் கணிப்பார்கள்.

ஆனால் இந்த சாதகர் தற்போதும் நலமுடன் உள்ளார். நிறைந்த கல்வி, ஆய்வுத் திறன், பேச்சாற்றல், அரசில் உயர் அதிகாரி, மனைவி மக்கள் பேறு, நடுத்தர வாழ்வு என வாழ்க்கை நிலையில் உள்ளார்.

எவ்வாறு இப்படி?

இந்த சாதகத்தினை வேறு விதமாக சுருக்க ஆய்வு செய்வோம்.
1.   தனுசு இலக்கினம் – நேர்மையான எண்ணம் கொண்ட இராசி
2.   இரண்டில் செவ்வாய் உச்சம் – ஆட்சித் திறன்.
3.   செவ்வாய் 2-ல் உச்சம் பெற்றதால், உடன் உள்ள குருவின் நீச்ச நிலையானது, நீச்சபங்க இராஜயோகமானது.
4.   செவ்வாய் 2-ல் உச்சம் பெற்றதால், 12-ல் செவ்வாயின் வீட்டில் உள்ள நீச்ச சந்திரன் நீச்சபங்கம் பெற்றது.
5.   இரண்டில் உள்ள சுக்கிரன் போதுமான செல்வ நிலையினை வழங்கியுள்ளது.
6.   பத்தாம் இடத்து அதிபதி புதன், ஒன்பதாம் இடத்து சூரியனுடன், 2-ம் வீட்டில் புத ஆதித்ய யோகத்தில் அமைந்து அரசு பணியை வழங்கியுள்ளது.
7.   இரண்டில் உள்ள கேது, தர்க்க ஆய்வுக் கல்வியை வழங்கியுள்ளது
8.   சனி இரண்டில் இருந்தாலும், அதன் சொந்த வீட்டில் உள்ளதால் பாதிப்பு இல்லை என்பதுடன் பலன் மட்டும் சற்று காலம் தாழ்ந்து கிடைக்கச் செய்யும்
9.   எட்டில் உள்ள இராகு கடகத்தில் இருந்தாலும், கடக இராகுவும் மகர கேதுவும் சிறப்பிற்குரியவை.
ஆக அனைத்தும், அதாவது எவையெல்லாம் குறை என்று கண்டுணரப்பட்டதோ அவையெல்லாம் நிறை என கணிக்கப்பட்டுள்ளது,

சரி, இந்த சாதகருக்கு குறை பலன்கள் அல்லது தீய பலன்கள் இல்லையா என்றால், எந்த சாதகமும் தீய பலன்களையும் கொடுக்கத்தான் செய்யும், இங்கு இது முக்கியமில்லை, மிக மோசமான சாதகம் என கணிக்கப்பட்ட ஒரு சாதகம் எப்படி நல்ல நிலையில் உள்ளது என்பதை மட்டுமே விளக்கியுள்ளேன். [தனிநபர் சுதந்திரம் கருதி வேறு சில தகவல்கள் இங்கு விளக்கப்படவில்லை].

இன்னும் கூர்மையாக ஆய்வு செய்வதென்றால், இலக்கினம், இராசி, அதிபதிகள், அவை அமைந்த நட்சத்திர அதிபதிகள், தசாபுத்திகள் ஆகிய அனைத்தையும் கணக்கில் கொண்டே ஒரு சாதகத்தின் பலனை அறிய வேண்டும்.

பொத்தம் பொதுவான பலன் என்பது எப்போதும் 10% வீதம் கூட பலன் அளிக்காது என்பதே உண்மை.

அவரவர் சாதகம் அவரவர்க்கு. பொதுப்பலன் என்பதை மறந்து விடுங்கள். குறிப்பாக நாளிதழ், வார இதழ், தொலைக்காட்சிகளில் வரும் இராசி பலனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

எனவே, ஆறு கோள்கள் ஒரே வீட்டில் உள்ளது என்பதால் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இந்த நாட்களில் பிறக்கும் குழந்தைகளுக்கும் எவ்வித தீங்கும் நேர்வதற்கும் வாய்ப்பில்லை.

நன்றிது தேர்ந்திடல் வேண்டும், இந்த ஞானம் வந்தால் பின் நமக்கெது வேண்டும்

அன்புடன்
நிமித்திகன்


Sunday, January 21, 2018

சோதிடக் கணிதத்தில் இடர்பாடுகள்




சோதிடப் பலன் உரைத்தலில் அறிவியற்கணிதமான சோதிடம் எவ்வாறெல்லாம் இடர்பாடுகளைச் சந்திக்கிறது என்பதை சற்று கவனமாகவே விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டியுள்ளது.


சோதிடம் என்பது இரண்டு அடிப்படைக் கூறுகளைக் கொண்டது என்பதில் சோதிடர்களிடையே மாற்றுக் கருத்து இருப்பதில்லை. அவை,
1.   சாதகம் கணித்தல்
2.   பலன் உரைத்தல்

ஆனால் இந்த அடிப்படைக் கூறுகள் மிகச் சரியாக பயன்படுத்தப்படுகின்றனவா என்பதில் பல்வேறு முரண்கள் இருக்கின்றன.


முதலில் சாதகம் கணிதல் என்பதை எடுத்துக் கொள்வோம். சாதகம் கணித்தல் என்பது நேரத்தினை அடிப்படையாகக் கொண்டது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இருப்பினும், எந்த நேரத்தினை எடுத்துக் கொள்வது எனும் போது முரண்கள் உருவாகின்றன.

1.   கரு உண்டாகும் நேரம்
2.   பிறக்கும் நேரம்
3.   தலை வெளியில் வரும் நேரம்

இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தேர்வு செய்தால், அடுத்து வரும் கேள்வி, எந்த பஞ்சாங்கத்தின் அடிப்படையில் கணிப்பது

1.   வாக்கியம் பஞ்சாங்கம்
2.   திருக்கணிதம் பஞ்சாங்கம்
3.   மேலை நாட்டு கணிதம்

இன்னும் தொடர்ந்தால், எந்த அயனாம்சத்தைக் கணக்கில் கொள்வது

1.   சூரிய சித்தாந்தம்
2.   லஹிரி
3.   கே.பி.
4.   இராமன்
5.   இது போன்ற இன்னும் பலவற்றில் ஒன்று

ஆக சாதகக் கணிதத்தின் அடிப்படைக் கணக்கிலேயே எதைத் தேர்வு செய்வது என்பதில் மாற்றுக் கருத்துக்களும், குழப்பங்களும் விரவிக் கிடக்கின்றன.

இதனை முடித்து அடுத்தக் கட்ட நகர்வான பலன் உரைத்தல் எனும் கணிதத்திற்கு வரும்போது அது இன்னும் சிக்கலான நிலையினை அடைகிறது. பலன் உரைத்தல் எனும் நிலைக்கு எதனை அடிப்படையாகக் கொள்வது எனும் கேள்வி. அதாவது, நமது முன்னோர்களும் சோதிட மேதைகளும் எழுதிவைத்துச் சென்ற பதிவுகளில் எதனைப் பயன்படுத்துவது.

1.   வராகமிகிரர்
2.   பராசரர்
3.   மந்திரேஸ்வரர்
4.   புலிப்பாணி
5.   கீரனூர் நடராசன்
6.   மற்றும் அக்கால சோதிட அறிஞர்கள்
7.   கிருஷ்ணமூர்த்தி, இராமன், கடலங்குடி சாஸ்திரி போன்ற சென்ற நூற்றாண்டின் அறிஞர்கள்
8.   அல்லது சோதிட நூல்கள் எழுதிவரும் தற்போதையவர்கள்
என பட்டியல் வெகுவாக நீள்கிறது.

அப்படியே யாரேனும் ஒருவரை எடுத்துக் கொண்டால் மற்றவர்கள் தகுதியற்றவர்களா? அல்லது அந்த ஒருவரின் நூல் முழுமையான நூலாக உள்ளதா? அது போதுமானதா?

ஆக, இவற்றையெல்லாம் ஆராய வேண்டியுள்ளது. இவற்றை ஆராய முற்படும்போது, அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் அது இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது. விருப்பு வெறுப்பின்றி ஆராய முற்படும்போது, சில உண்மைகளை அல்லது கருத்துக்களை பொதுவில் வைக்க வேண்டும் நிலை ஏற்படும். எதிர் கருத்தில் சிலருக்கு உடன்பாடு இல்லாமலும் போகும். ஏற்றுக் கொள்ளப்படும் கருத்து நம்பகத்தன்மையினை மேம்படுத்த வேண்டும்.

இனி வரும் பதிவுகளில் இவற்றை விவரமாக ஆராய்வோம்.

இன்னும் தொடர்வோம்.


Sunday, January 14, 2018

சோதிடத்தின் நம்பகத்தன்மை.. தொடர்ச்சி (2)



சோதிடத்தின் நம்பகத்தன்மை என்பது அதன் கணிப்பு எந்த அளவு மெய்ப்பிக்கப்படுகிறது எனும் நிலையினைப் பொருத்து உள்ளது. நம்பகத்தன்மை குறையும்போது அது அறிவியல் கணிதம் இல்லை எனும் கற்பிதம் தோன்றிவிடுகிறது.


ஆனால் இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், கணிதம் எப்போதும் பொய்யாவதில்லை. கணித முறைகளிலும் அதைக் கையாள்வதிலும் பிழை நேரிடும்போது கணித விடைகள் தவறாகிப் போகின்றன. கணித விடைகள் தவறாகிப் போவதால், கணிப்புகளும் தவறாகிப் போகிறது. கணிப்புகள் தவறாகிப் போவதால், சோதிடம் அதன் நம்பகத் தன்மையினை இழந்து விடுகிறது. நம்பகத் தன்மை இழந்து விடுவதால் சோதிடம் பொய் எனும் கற்பிதம் உருவாகிறது.


      இவ்வாறான பிழைகள் நேரிட யார் காரணம் அல்லது எது காரணம் என ஆராயத் தொடங்கும்போது விருப்பு வெறுப்பு இன்றி ஆராய வேண்டும். அது சில சமயம் சோதிடக் கொள்கையின் அடிப்படையினைக்கூட ஆட்டிப் பார்க்கும்.


நான், நிமித்திகன் பதிவிடத் தொடங்கியபோது விருப்பு வெறுப்பு இன்றி ஆராய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். இன்னமும் இருக்கிறேன். எனவே சோதிடம் அறிவியல் கணிதம் என்பதனை மெய்ப்பிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளுடனேயே ஆராய வேண்டும். அவ்வாறு மெய்ப்பிக்க முற்படும்போது சில நம்பிக்கைகளை நாம் புறந்தள்ள வேண்டும். தாலமியின் கொள்கை புறந்தள்ளப்பட்டுதான் கலீலியோவின் கொள்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது.


இந்தியாவின் நூறாவது செயற்கைக் கோள் 12.01.2018 அன்று விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. அதனைச் செலுத்துவதற்கு முன்பு, இஸ்ரோவின் தலைவராக நாளை (15.01.2018) பொறுப்பேற்க உள்ளவரும் தமிழருமான திரு.சிவம் அவர்கள், தமது ஊரில் உள்ள குலதெய்வ காளிக் கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்துள்ளார். இதற்கு முன்னர் இருந்த திரு.இராதகிருஷ்ணன் அவர்களும் ஒவ்வொருமுறை செயற்கைக் கோள்கள் செலுத்தும்போதும் திருப்பதி ஏழுமலையானை வணங்கிட்டு வருவார். அவர்களுக்குத் தெரியும் கடவுள் நம்பிக்கை என்பது வேறு வான்அறிவியல் என்பது வேறு என்று. அவர்கள் கடவுளையும் வானியலையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்ளவில்லை. கடவுள் நம்பிக்கையும் அறிவியலும் என்பது வேறு வேறு என்பதில் தெளிவாக உள்ளனர். இது சோதிட அறிவியலுக்கும் பொருந்தும் அல்லது பொருந்த வேண்டும் அல்லவா? என்ன அடிப்படை கொஞ்சம் ஆட்டம் காண்பதுபோல் இருக்கிறதல்லவா? அது என் பிழையில்லை.


உங்கள் நம்பிக்கைகளை எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் சோதிடத்தினைப் பொருத்தவரையில் கோள்களைக் கோள்களாக மட்டுமே பாருங்கள். ஏனெனில் சோதிடம் என்பது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். பொதுவானதாக இருந்தால் மட்டுமே அதனைப் பொதுவில் வைக்க முடியும். பொதுவில் வைக்கும்போது மட்டுமே அதனை எவ்வித கணித ஆய்விற்கும் உட்படுத்த முடியும். கணித ஆய்வுகள் மெய்ப்பிக்கப்படும்போது அதற்கான வரையறைகள் வகுக்கப்பட முடியும். அவ்வாறான வரையறைகளே அதனை அறிவியல் நிலைக்கு கொண்டு செல்லும். அப்போதுதான் நமது பண்டைய கணித அறிவியலான சோதிடம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் நிலை வரும்.


அறிவியல் இன்றி அனுமானம் இல்லை. அனுமானம் மட்டுமே அறிவியல் ஆக முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இனி சோதிடப் பலன் உரைத்தலில் அறிவியற்கணிதமான சோதிடம் எவ்வாறெல்லாம் இடர்பாடுகளைச் சந்திக்கிறது என்பதை சற்று கவனமாகவே விருப்பு வெறுப்பின்றி ஆராய்வோம்.

இன்னும் தொடர்வோம்