Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, December 31, 2017

சோதிடம் என்பது கணித அறிவியல் இல்லையா?சோதிடம் அறிவியலா எனும் கேள்வி எழும்போது, அது இரண்டாக பிரிக்கப்பட்டு விடுகிறது. (1) சோதிடக் கணிதம், (2) பலன் உரைத்தல்.


சோதிடம் பொய்யென்று சொல்பவர்கள்கூட, அதன் கணித முறையினை, அதாவது வானியல் கணித முறையினை ஏற்றுக் கொள்கிறார்கள். அடிப்படையில் சூரிய மையக் கொள்கை, பூமி மையக் கொள்கை எனும் வேறு பாட்டினை அவர்கள் முன் வைத்தாலும், கணித்து வரும் விடையானது இரண்டு மையக் கொள்கையிலும் ஒன்றாகவே வருவதால் அவ்வளவாக அதனை மறுப்பதில்லை. பூமி மையக் கொள்கை என்பது நமது நாட்டில் பன்னெடுங்காலமாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. அதுதான் சோதிடக் கணிதத்தின் அடிப்படை. மேலை நாட்டிலும், கலிலியோவிற்கு முன்பு வரையில் தாலமியின் கொள்கையான பூமி மையக் கொள்கையே பின்பற்றப்பட்ட வந்துள்ளது. இதுபற்றி நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம்.


ஆக சோதிடக் கணக்குகளும், சோதிடக் கட்டங்களும் வானியலின் வரையறைக் கணிதத்தில் அடங்கி விடுகின்றன. அந்தக் கணிதத்தினை, அடிப்படைக் கணித அறிவும், தொகுத்தளிக்கப்பட்ட தரவுகளும்(pre-defined data), அதாவது பஞ்சாங்கம் போன்றவற்றின் உதவியோடு யாரும் கணித்துவிடலாம். அனைவருக்கும் விடை ஒன்றேதான் வரும். அதாவது, ஒருவரின் பிறந்த நேரத்தினைக் கொடுத்து, குறிப்பிட்ட பஞ்சாங்கத்தினையும் (வாக்கியம் அல்லது திருக்கணிதம்) கொடுத்து, இருவேறு சோதிடர்களிடம் சாதகம் கணிக்கச் சொன்னால், இருவருமே, ஒரே மாதரிதான் கணித்து தருவார்கள். அதாவது, இருவரின் கணிப்பு சாதகமும் ஒன்றாகவே இருக்கும்.


ஆனால், ஒருவரின் சாதகத்தினை நகல் எடுத்து, இரண்டு சோதிடர்களிடம் கொடுத்து பலன் உரைக்க சொன்னால், நிச்சயம் இருவரின் பலன் உரைத்தலும் மாறுபட்டுத்தான் இருக்கும். பொதுத்தகவல்கள் வேண்டுமானால் ஓரளவு ஒத்துபோகலாம், ஆனால் பெரும்பாலன கணிப்புகள் வேறுபாட்டுடனேயே இருக்கும். இது அனைத்து சோதிடருக்கும் பொருந்தும்.


இதைத்தான் அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கின்றார்கள். அவர்கள் முன்வைக்கும் காரணம், சோதிடம் அறிவியற்கணிதம் என்றால், எவர் கணித்தாலும் விடை ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் ஏன் மாறுபடுகிறது என்பதுதான் அவர்களின் வாதம். இது நியாயமான வாதமும்கூட. அப்படி என்றால், பலன் உரைக்கும் கணித முறை தவறானதா? சோதிடம் என்பது கணித அறிவியல் இல்லையா?


இன்று 31.12.2017. இன்றைய தினம் நான்கு நாளிதழ்களில் வெளிவந்த இராசிபலனில், மேச இராசிக்கு உரிய பலனைக் கீழே தந்துள்ளேன்.

இதில் பணவரவு என்பது மட்டும், மூவரின் பலனில் ஒத்துப் போகிறது. மற்றவை சற்று மாறுபட்டு உள்ளது. இதனைக் கணித்தவர்கள் சோதிட அறிவாற்றல் உடையவர்கள்தான். ஆனால் கணிப்பு ஏன் மாறுபடுகிறது என்பதுதான் கேள்வி.


சரி, இன்று மழை வருமா? யாரைக் கேட்கலாம்? நுங்கம்பாக்கம் வானியல் நிலையம்? வெதெர்மேன்? நார்வே மெட்ரோலாஜிகல்? நாசா? எவர் சொன்னால் துள்ளியமாக இருக்கும்?பலன் உரைத்தல் தொடரும்…


Tuesday, December 19, 2017

சோதிடம்- வரையறைக்குள் அடங்காத வரையறைக் கணிதம் .. தொடர்ச்சி(2)
அது என்ன வரையறைக்குள் அடங்காத வரையறைக் கணிதம்? எளிமையான ஒரு கணக்கினைப் பார்ப்போம். ஒன்று கூட்டல் ஒன்று, விடை என்ன? என்று கேட்டால் சட்டென்று இரண்டு என்று பதில் வரும். ஆனால், நான் அந்த ஒன்றை என்னவாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைப் பொறுத்து அதன் விடை மாறும். ஒன்று கூட்டல் ஒன்றிற்கு என்னிடம் நிறைய விடைகள் இருக்கின்றன. இந்த மூன்று விடைகளைப் பாருங்கள்.
1 + 1 = 2
1 + 1 = 0
1 + 1 = -2


இதில் முதலில் வந்த விடையினை நீங்கள் கூறியிருந்தால் அது சரியான விடை. இரண்டாவது விடையான ‘0’ என்பதைக் கூறியிருந்தாலும் சரியான விடை, மூன்றாவதான ‘-2’ எனக் கூறியிருந்தாலும் அதுவும் சரியான விடைதான்.


கொஞ்சம் அடிப்படைக் கணிதம் காண்போம். எண்களை, இயல் எண்கள், மெய்யெண்கள், முழு எண்கள், பகு எண்கள், பகா எண்கள், பின்ன எண்கள், இவை போன்று பல்வேறு வகையாக பிரித்துள்ளனர். ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு தன்மை உண்டு. அதை விடுங்கள், நம்முடைய கணிதத்திற்கு வாருங்கள்.


நான் கூறிய ஒன்று என்பது இயல் எண்ணாக இருந்தால், விடை இரண்டு என்பது சரி. அது மெய்யெண்ணாக இருந்து அதன் குறியீடு (-) என இருக்கும் எனில் விடையானது “-2” என வரும். ஒன்று மெய்யெண்ணின் (+) ஆகவும் மற்றொன்று மெய்யெண்ணின் (-) ஆகவும் இருக்கும் எனில், விடையானது ‘0’ என வரும். இது போன்று பிற எண் வகையினில், நான் ‘ஒன்றினை’ எவ்வாறு வரையறை செய்துள்ளேன் என்று உங்களுக்கு தெரியாதவரையில் உங்களின் விடை தவறாகிப் போகும். நிகழ்தகவின் அடிப்படையில் (probability) எப்போதாவது உங்களின் விடையும் என்னுடைய விடையும் சரியாக இருக்கும்.


சரி, இதற்கும் சோதிடத்திற்கும் என்ன தொடர்பு? பலன் உரைக்கப் பயன்படும் சாதகத்தினை கணக்கில் கொள்வோம். பன்னிரெண்டு கட்டங்கள் கொண்ட வெறும் இராசிக்கட்டத்தினை மட்டும் எடுத்துக் கொண்டால், அதில் ஒன்பது கோள்களையும் (சூரியனுக்கு அருகில், சுக்கிரனும், புதனும்; இராகுவும் கேதுவும் எதிர் திசைகளில் எனும் விதி மீறாமல்) பல்வேறு வரிசைகளில் (permutation and combination) அடுக்கினால், கிடைக்கக் கூடிய, ஒன்றுபோல் மற்றொன்று இல்லாத இராசிக் கட்டங்களின் எண்ணிக்கையானது எத்தனை இருக்கும் என நினைக்கிறீர்கள், பத்தாயிரம், ஐம்பதாயிரம், ஒரு இலட்சம் அல்லது 10 இலட்சம். இவை அனைத்துமே குறைவுதான். ஏறக்குறைய, 52.50 கோடி இராசிக்கட்டங்களை உருவாக்க முடியும். (வர்க்கக் கட்டங்கள் தொடர்பான பழைய பதிவுகளைப் பார்க்கவும்).


எனவே, இராசிக்கட்டத்தினை, ஒன்றுபோல் அல்லாத 52½ கோடி இராசிக்கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொன்றிற்கும் ஒரு அடிப்படைக் கணிதம் தயாரித்து, பலன்களை வரையறை செய்தால், யாருக்கு எந்த இராசிக்கட்டம் சற்றும் பிழையில்லாமல் பொருந்துகிறதோ அந்த பலனைக் குறிப்பிடலாம்.


ஆனாலும், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. வெறும் இராசிக் கட்டத்தினை மட்டுமே வைத்துக் கொண்டு பலன் உரைத்தல் என்பது துள்ளியம் இல்லாதது என்பது சோதிடத்தினைக் கற்றுணர்ந்தவர்களுக்குத் தெரியும். குறைந்த பட்சம், நவாம்சக் கட்டமாவது உடன் வைத்து பலன் உரைப்பதே துள்ளியத்தினை மேம்படுத்தும். அப்படியென்றால், அதன் கணக்கு ஒரு 52½ கோடி. இராசிக் கட்டக் கணக்கு ஒரு 52½ கோடி. மொத்தம் 105 கோடி என கணக்கிட்டால், உங்கள் கணக்கு பிழையாகும். ஆம், இங்கே கூடுதல் செய்வதற்கு பதிலாக பெருக்கம் செய்தால்தான் (permutation and combination) ஒன்றுபோல் அல்லாமல் அடுக்க முடியும். எனவே 52½ x 52½ = 2756¼ கோடி சாதக (இராசி-நவாம்சம்) இணை சாதகங்கள் கிடைக்கும். என்ன மூச்சு வாங்குகிறதா? அதற்குள் என்ன அவசரம். ஏற்கனவே நிமித்திகனில் பதிவிட்ட பழைய பதிவினை ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள், ஒருவரின் சாதகக் கட்டத்தினை, இராசி, நவாம்சம் மட்டுமின்றி, மொத்தம் இருபது வகையாகப் பிரிக்கலாம். அப்படியானால் எத்தனை வகைகளில் அடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள். கணிதம் தெரியுமல்லவா, அதன் விடையானது 52½20. அதாவது 52½ x 52½ x 52½ …………..x 52½  என 20 முறை பெருக்க வேண்டும். கொஞ்சம் பெருக்கி விடை கூறுங்கள்.

தலை சுற்றுகிறதா? சோதிடம் .. வரையறைக்குள் அடங்காத வரையறைக் கணிதம்.

கணிதம் தொடரும்…Monday, December 18, 2017

சோதிடம் - வரையறைக்குள் அடங்காத வரையறைக் கணிதம்
தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தனாகத்தான் நான் இருக்கிறேன் என்று நினைக்கிறேன். வேதாளமும் என்னை எள்ளி நகையாடிக் கொண்டுதான் இருக்கிறது. தொடர்ச்சியாக எழுத நினைத்தாலும், பல்வேறு பணிகளும், எதிர்பாரா தடைகளும், ஆய்வினைத் தொடர்வதில் மேலே அமர்ந்து மெல்லழுத்தம் செய்கின்றன. பிருகத் ஜாதகம் மொழியாக்கம் முடிந்தபின்பு, ஆய்வினைத் தொய்யலின்றி தொடங்க முற்பட்டாலும், தொய்வு வழக்கமாகி விடுகிறது.

மீண்டும் ஆய்வினைத் தொடர்வதற்கு முன், இதுவரையில் தொடர்ந்ததை நினைவு கூறுவோம்.

முன்னுரையில் தொடங்கி, வானியலைத் தொட்டு, பிரபஞ்சம், சூரியக் குடும்பம், அதிலுள்ள கோள்கள், அவற்றின் இயல் தன்மைகள் ஆகியவற்றைப் பதிவு செய்தோம். பின்னர் சோதிடம் தோன்றிய காலங்கள், சோதிடத்தில் கணக்கிடப்படும் கோள்கள், சோதிடத்தில் வானியல் கோட்பாடுகள் ஆகியவற்றினையும் பதிவு செய்தோம். சோதிடத்தின் அடிப்படைக் கொள்கையான பூமி மையக் கொள்கையினையும் வானியலின் அடிப்படையான சூரிய மையக் கொள்கையினையும் ஒப்பு நோக்கி, அடிப்படையில் இரண்டிற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் வேற்றுமைகளை பகுத்தறிந்தோம்.

பின்னர் சோதிடத்தின் வான் மண்டலம் எவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ளது. இராசிகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதையும், குறிப்பாக, நிழல் கோள்கள் என சோதிடர்களால் அழைக்கப்படும் இராகு-கேது எனும் இரு கோள்கள் உண்மையில் நிழல் கோள்கள் எனும் நிலையிலும் இல்லை என்றும், அவை சூரிய-சந்திர சுற்றுப்பாதையின் வெட்டுப்புள்ளிகள் என்பதையும் அவைகள் ஏன் கடிகார எதிர்சுற்றில் கணக்கிடப்படுகின்றன என்பதையும் விரிவாகப் பார்த்தோம்.

ஒவ்வொரு கோளும் இராசிகளில் நகரும் கால அளவு, வக்கிரம் எனப்படும் பின்னோக்கி நகர்வு, ஏன் சூரியனுக்கும் சந்திரனுக்கும் வக்கிரம் இல்லை என்பதையும் பதிவு செய்தோம்.

இராசிகளை பல்வேறு வகைகளில் பிரித்து, ஐம்பூதத் தன்மை, உடல் ஒதுக்கீடு, பாலினம், நிலைத்தன்மை, எண்கள், திசைகள், பகல்-இரவு, விழித்திருத்தல் போன்று சோதிடத்தில் பயன்படுத்தப்படும் நிலைகளை ஆராய்ந்தோம்.

இலக்கினம் என்றால் என்ன? என்பதை சோதிட நிலையிலிருந்து விலகி, வானியல் நிலையில் ஆராய்ந்து, வரையறை செய்தோம். இரு சாதகங்கள் ஒன்றுபோல் இருக்குமா? இரட்டைப் பிறவிகளின் சாதகங்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஆராய்ந்தோம்.

பின்னர், சோதிடப்பயன்பாட்டின் இதர தலைப்புகளிலும் ஆய்வினைச் செய்தோம். அவை,

இராசிக் கட்டங்கள் - வர்க்கக் கட்டங்கள்
இராசி-  பாவகம்
சோதிடத்தில் வரையறைகள் -  தேற்றங்கள்
பன்னிரெண்டு வீடுகளின் வரையறைகள்
கோள்களின் சோதிட வரையறை
கோள்களின் நிலைஆட்சி, உச்சம், நீச்சம், மூலத் திரிகோணம், நட்பு-பகை, பார்வைகள், வலிமை
அஷ்டவர்க்கம்அடிப்படைபுள்ளிகள்
தசா புத்திகள்காலமுறைக் கணிதம்
சட் பலம்.
இவற்றோடு மிக முக்கியமாக சோதிடக் கணக்கீட்டில் பயன்படும் பஞ்சாங்கங்களான வாக்கியம்திருக்கணிதம் இரண்டிற்கும் இடையே உள்ள கணித முரண்கள் பற்றியும் விரிவாக ஆராய்ந்தோம்.

மேற்கூறியவை அனைத்தும் பொதுவில் ஒரு கணித அடிப்படையில், [மெய்ப்பிக்க இயலாத ஒரு சில முரண்பாடுகள் இருப்பினும்], குறிப்பாக வானியல் கணித அடிப்படையில் வரையறை செய்யப்பட்டுள்ளன.

சோதிடம் பொய் என்று கூறுபவர்கள்கூட, இக்கணித முறைகளை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுவதில்லை. இவை வானியல் சார்ந்த அறிவியல் என்பதிலும் தயக்கமில்லை.

ஆனால் சோதிடம் அறிவியாலா? புனைவியலா? அல்லது உண்மையா? பொய்யா? எனும் கேள்வி எங்கு எழுகிறது எனில், அதன் நம்பகத் தன்மையை உறுதி செய்யும், பலன் உரைத்தல் எனும் நிலையில்தான்.

ஏனெனில் சோதிட பலன் உரைத்தலுக்கு பயன்படுத்தப்படும் கணித முறையானது வரையறைக்குள் அடங்காத வரையறைக் கணிதம்” (Defined mathamatics in undefined mathematics) எனும் முரண்தொடராக இருப்பதுதான்.


மேலும் தொடர்வோம்.