Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, February 18, 2018

ஐம்பெருங்கோள்களின் யோகங்கள் (அ) பஞ்சமகா புருஷ யோகங்கள்




சோதிட விதிகளின்படி கோள்கள் ஒன்பது என்றாலும், சூரியனும் சந்திரனும் தனித்துவம் வாய்ந்தவை. இராகுவும் கேதுவும் கோள்களின் கணக்கில் உள்ள வெற்றிட முனைகள். மீதம் இருப்பவை, ஐம்பெரும் கோள்களான புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகியவை. வானியல் கருத்துப்படியும் இவைதான் கோள்கள். எனவே இவை ஐந்தும் ஐம்பெருங்கோள்கள் அல்லது பஞ்சமகா கோள்கள் என அழைக்கப்படுகின்றன.


இந்த ஐந்து கோள்களும் தம்முடைய ஆட்சி அல்லது உச்ச வீடுகளில் ஏற்படுத்தும் யோகம் பஞ்சமகா யோகம் எனப்படுகிறது.


அதாவது, ஒரு சாதகத்தில் இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரன் இருக்கும் இடத்திலிருந்து ஒரு கோளானது கேந்திர (நாற்கர) வீடுகளில் இருக்கும் நிலையில், அந்த நாற்கர அல்லது கேந்திர வீடானது, அக்கோளிற்கு ஆட்சி வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால் அந்த யோகமானது பஞ்சமகா புருச யோகம் அல்லது ஐம்பெருங்கோள்களின் யோகம் எனும் நிலையில் கணக்கில் கொள்ளப்படுகிறது.


இந்த யோகமானது ஐந்து கோள்களுக்கு ஏற்ப அவைகளுக்கு உரிய சிறப்பின் பெயரால் அழைக்கப்படுகிறது. அவை முறையே-

1.   ருசக மகா புருச யோகம் (செவ்வாய்)
2.   பத்ர மகா புருச யோகம் (புதன்)
3.   அம்ச மகா புருச யோகம் (வியாழன்)
4.   மாளவ்ய மகா புருச யோகம் (வெள்ளி)
5.   சக மகா புருச யோகம் (சனி)


இனி, ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்-

1. ருசக மகா புருச யோகம் – செவ்வாயின் தொடர்பு

செவ்வாயானது, இலக்கினத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து நாற்கர வீடுகளான (கேந்திர வீடுகளில்) இருக்கும் நிலையில் அந்த வீடானது செவ்வாயின் ஆட்சி அல்லது உச்ச வீடுகளாக இருந்தால், அது ருசக மகா புருச யோகம் எனப்படும். இங்கு குறிப்பிட்டு சொல்வதென்றால், செவ்வாயானது மேசம் அல்லது விருச்சிகம் அல்லது மகரத்தில் இருக்க வேண்டும். அந்த வீடானது இலக்கினம் அல்லது சந்திரனுக்குக் கேந்திரமாகவும் இருக்க வேண்டும்.



மேலே உள்ள அமைப்புகள் அனைத்தும் ருசக மகா யோக அமைப்பு உடையவை. ஆனால், 4-வது எடுத்துக்காட்டில், செவ்வாயானது சந்திரனுக்கு 10-ல் இருந்தாலும், இலக்கினத்திற்கு 8-ல் உள்ளதையும் கவனிக்க வேண்டும். இங்கு ருசக மகா யோக அமைப்பு இருந்தும், அதற்கு நற்பலன்கள் கிடைக்க வாய்ப்பில்லை என்றே கூறவேண்டும். ஆக முன்பே கூறியபடி, யோக அமைப்பினைக் கவனிக்கும்போது பிற நிலைகளையும் கவனிக்க வேண்டும்.


ருசக மகா யோகத்தின் பலன்கள்:

1.   நல்ல உடல் நிலை
2.   இளமையானத் தோற்றம்
3.   பழமையை மதித்தல்
4.   கல்வித்திறன்
5.   அரசர் (அ) அரசருக்கு நிகரான மதிப்பு
6.   செல்வந்தர்
7.   தர்ம சிந்தனை
8.   நீண்ட ஆயுள்

ஏனைய நான்கு யோகங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.


பஞ்ச மகா யோகங்கள் தொடரும்.


Tuesday, February 13, 2018

கஜகேசரி யோகம்



நலன் தரும் யோகங்களில் கஜ கேசரி யோகம் சிறப்பான யோகமாகும். கஜ என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம். அதாவது யானையும் சிங்கமும் சேர்ந்திருந்தால் எவ்வளவு பலமோ அவ்வளவு பலமிக்கதாக இந்த யோகம் கூறப்படுகிறது.


இதுபற்றி எனது முதுகலை ஆசிரியர் பாடம் நடத்தும்போது இந்த யோகத்தின் சிறப்புகளைக் கூறிவிட்டு, கஜ என்றால யானை, கேசரி என்றால் சிங்கம். அதாவது யானைக்கு குருவும் சிம்மத்திற்கு சூரியனும் என நினைத்துக் கொண்டு குருவும் சூரியனும் பார்த்துக் கொண்டால் கஜ கேசரி யோகம் என்று எழுதிவிடாதீர்கள் என எச்சரித்தார்.


கஜகேசரி யோக அமைப்பு என்பது மிகவும் எளிமையானது. ஒரு இராசியில் சந்திரன் இருக்கும் இடத்திற்கு கேந்திரத்தில் (நாற்கரத்தில்) வியாழன் இருப்பது கஜகேசரி யோகம் எனப்படும்.  ஒரு சாதகத்தில் இலக்கினம் எவ்வளவு சிறப்புடன் பார்க்கப்படுகிறதோ அதே அளவுகோலில் சந்திரன் இருக்கும் இடமும் அதாவது சந்திர இலக்கினமும் பார்க்கப்படுகிறது.


ஒரு சாதகத்தில் நாற்கர முனைகளும் (கேந்திரமும்) முக்கியம் என்பதை ஏற்கனவே நாம் பதிவு செய்துள்ளோம். சோதிடத்தில் பொதுவில் நிலவும் பேச்சு என்னவெனில் கேந்திரத்தில் சுபக் கோள்கள் நின்றால் கேந்திராதிபத்திய தோசம் ஏற்படும் என்பது. எனவே இலக்கினத்தினை அடிப்படையாகக் கொண்ட கேந்திரங்களில் (4, 7, 10 வீடுகள்) வியாழன் எனும் சுபக் கோள் நின்றால் கேந்திராதிபத்திய தோசம் ஏற்படும் எனக் கூறுவர். இதற்கு மாற்றுக் கருத்தும் உண்டு.


ஆனால் கஜ கேசரி யோகத்தில், சந்திர இலக்கினத்திற்கு கேந்திரத்தில் வியாழன் இருப்பதால் மேற்கூறிய விதி பொருந்தாமல் போய்விடுவதுடன், வியாழனின் பலன் அதிகரித்துக் காணப்படும் நிலை ஏற்படுகிறது.  எனவே கஜகேசரி யோகம் என்பது சந்திர இலக்கினத்திற்கு கேந்திரத்தில் வியாழன் இருக்கும் நிலையில் வலிமை வாய்ந்த யோகமாகக் கணக்கிடப்படுகிறது.


கஜகேசரி யோகம் அமைந்த சாதகருக்கு கிடைக்கக் கூடிய பலன்கள் என்பது:-
1.   புத்திக் கூர்மை
2.   பலசாலி
3.   செல்வந்தர்
4.   மதிப்பு மிக்கவர்
5.   ஊர் தலைவர்
6.   அரசின் ஆதரவு
7.   நீண்ட ஆயுள்


கஜகேசரி யோகமானது சந்திரனுக்கு கேந்திரத்தில் (நாற்கரத்தில்) வியாழன் இருந்தால் ஏற்படக்கூடியது என்றாலும், வேறு சில அமைப்புகளில் சந்திரனுக்கும் வியாழனுக்கும் தொடர்பு இருந்தாலும் ஏற்படும் என சில சோதிட நூல்கள் கூறுகின்றன.

1.   சந்திரனுக்குக் கேந்திரத்தில் வியாழன் இருப்பது
2.   வியாழனைச் சந்திரன் பார்ப்பது
3.   சந்திரனை வியாழன் பார்ப்பது
4.   சந்திரனும் வியாழனும் பரிவர்த்தனை ஆவது


இங்கு முதல் கருத்தானது அடிப்படையான விதி என்பதால் மாற்றுக் கருத்து இல்லை.
இரண்டாவது கருத்தின்படி, சந்திரன் வியாழனைத் தமது ஏழாம் பார்வையால் மட்டுமே பார்க்க முடியும் என்பதாலும், அதாவது அந்த நிலையில் வியாழனானது சந்திரனுக்கு 7-ம் இடத்தில் (கேந்திரத்தில்) இருக்கும் என்பதாலும் இந்தக் கருத்தும் பொருந்துகிறது.


மூன்றாவது கருத்தின்படி, வியாழனுக்கு 5, 7, 9-ம் பார்வைகள் உண்டு என்பதால், 7-ஐத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், வியாழனானது 5-ம் பார்வைக்கு சந்திரனிலிருந்து 9-ம் இடத்திலும், 9-ம் பார்வைக்கு சந்திரனிலிருந்து 5-ம் இடத்திலும் இருக்க வேண்டும். அவை திரிகோண இடங்கள் என்பதால், கஜ கேசரி யோகம் அமைய வாய்ப்பில்லை.


நான்காவது கருத்தின்படி, பரிவர்த்தனை ஏற்பட வேண்டுமென்றால், சந்திரன் தனுசு அல்லது மீனத்திலும், வியாழன் கடகத்தில் உச்சமாகவும் இருக்க வேண்டும். அந்த நிலையில் பரிவர்த்தனையானது சந்திர இலக்கினத்திற்கு  6-8, அல்லது 5-9 எனும் நிலையில் இருக்க நேரிடும். இதுவும் கேந்திர விதிக்கு பொருந்தவில்லை என்பதால் இதனையும் தவிர்த்து விடலாம்.


எனவே, கஜகேசரி யோகம் என்பது சந்திரனுக்குக் கேந்திரத்தில் வியாழன் இருப்பது என்பதே சரியானதாக இருக்கிறது.


திரு பி.வி.இராமன் அவர்கள், தனது “300 important combinations” எனும் புத்தகத்தில் சந்திரனுக்குக் கேந்திரத்தில் வியாழன் இருப்பதை மட்டுமே கஜகேசரி யோகம் எனக் கூறுகிறார். [எனது நண்பர் திரு ஓம் பிரகாஷ் அவர்களின் கருத்தும் தேவைப்படுகிறது].  


அதேவேளையில், முன்பு கூறிய பொதுவிதிப்படி,  நல்ல யோகங்கள் அமைய கோள்கள்  நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதையும் மறந்துவிடக் கூடாது.
கஜகேசரி யோக அமைப்புகள் சிலவற்றைக் காண்போம்.






 இங்கு முதல் சாதகத்தில், இலக்கினத்திலேயே சந்திரன் இருப்பதாலும், இலக்கினக் கேந்திரத்தில் வியாழன் இருப்பது சிறப்பு. அதுபோல, 4-ல் வியாழன் இருந்தால், கேந்திரம் மற்றும் உச்ச நிலையில் இருப்பதால் சிறப்பு. மூன்றாவது கேந்திரமான 7-ல் இருந்தால், அது வியாழனுக்கு பகை வீடு என்பதால் சிறப்பு குறைவாக இருக்கும். நான்காவது கேந்திரமான 10-ல் வியாழன் இருந்தால், அங்கு அது நீச்ச நிலையில் இருக்கும் என்பதால் சிறப்பில்லை


இரண்டாவது சாதகத்தில், இரண்டில் சந்திரன் உச்ச நிலையில். இந்தநிலையில் சந்திரனுடன் வியாழன் இருந்தால் மிகவும் சிறப்பு. இரண்டாவது நிலையில், சந்திரனுக்கு 4-ல், அதே வேளையில் இலக்கினத்திற்கு 5-ல் வியாழன் இருப்பதால் சிறப்பு. மூன்றாவது நிலையில், சந்திரனுக்கு 7-ல் வியாழன் இருந்தால் அது இலக்கினத்திற்கு 8-ம் இடம் என்பதால் சிறப்பில்லை. நான்காவது நிலையில் சந்திரனுக்கு 10, இலக்கினத்திற்கு 11 எனும் இடத்தில் வியாழன் இருப்பது சிறப்பு.


மேலே கூறிய விளக்கங்கள் பிற கோள்களின் நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களுக்கு உட்படும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.


… யோகங்கள் தொடரும்