Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, February 28, 2016

சந்திரன்- சோதிட வரையறை – தொடர்ச்சி
சந்திரனின் காரகத்துவம் (Portfolio) என்பதில் முதன்மையானது சாதகனின் தாயார். இந்த பூமிக்கு பகலில் சூரியனும், இரவில் சந்திரனும் ஒளி கொடுக்கும் செம்மல்கள். இன்று மின்சாரம் என்பது உணவு, உடை, உறைவிடம் என்பதற்கு அடுத்து நான்காவது நிலையில் உள்ளது. இரவில் மின்சாரமே இல்லையெனில் எப்படி இருப்போம் என எண்ணிப்பாருங்கள். ஆனால் மின்சாரம் பயன்பாட்டிற்கு வராத, அல்லது நாகரிக வளர்ச்சி அடையாத பழைய நாட்களில் மக்கள் இருளைக் கண்டு அஞ்சி நடுங்கியபோது, சந்திரன் மட்டுமே வெளிச்சம் கொடுத்தது. அதனால் சந்திரனையும் தெய்வமாகப் போற்றியுள்ளனர். ரிக் வேதத்தில் இப்போது வழிபடும் தெய்வங்கள் கிடையாது என்றும், சூரிய சந்திரர்களையே தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர் என்றும் படித்திருக்கிறேன். ஆக, சூரியனைத் தந்தையாக முதன்மைப் படுத்தியவர்கள், இரவில் ஒளிதரும் சந்திரனைத் தாயாக உருவகப்படுத்தியுள்ளார்கள். அதனால் சந்திரனின் சோதிட வரையறையின் முதன்மையானதாக தாயை வரையறை செய்துள்ளனர். இதன் பொருத்துவிதி (applicability law), சோதிடத்தில் மெய்ப்பிக்கப்பட வேண்டும்.

சந்திரனின் பொது வரையறைகள்:

தாய்
இரவு
உடல்
மனம்
பெண்கள்
அழகு
நீர்
கற்பனை

      முன்பே கூறியபடி இவை பொதுவாக அனைத்து சோதிட நூல்களிலும் தொகுத்து வழங்கப்பட்டவையாகும்- மற்றவை இவற்றின் விரிவுகளாகும்.

தாய் என்பதற்கு விளக்கம் மேலே கொடுக்கப்பட்டுவிட்டது.

உடல் என்பதற்கு – சூரியன் உயிர்க்கு காரணமாக இருப்பதால், அடுத்த அதிக பட்ச ஒளியைத் தரும்  சந்திரனை உடலுக்குக் காரணாமாகக் கொடுத்துள்ளனர்.

இரவில்தான் சந்திரனின் தேவை ஏற்படுவதால், இரவுக்குக் காரணமாக கொடுக்கப்பட்டுள்ளது.

அடுத்து, மனம் என்பதைப் பார்ப்போம். மனம் என்பது மூளையின் எண்ணச் செயல்பாடுகள். கற்பனை, உணர்ச்சி, மனப் பிறழ்வு, நினைவுத் திறன் என இவற்றை விரித்துச் சொல்லலாம். பூமியானது தட்பவெட்ப நிலைக்கு சந்திரனையும் சார்ந்திருப்பதாக வானியல் ஆய்வாளர்களும், வானிலை ஆராய்ச்சியாளர்களும் கூறுகின்றனர். கடலில் ஏற்படும் இடை உவா ஏற்றங்கள் – அதாவது முழுநிலவு, இருள்நிலவு நாட்களில் கடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு – சந்திரனே காரணம் என மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. அதாவது, சந்திரனின் காந்தப்புலம் ஏற்படுத்தும் விளைவுகளே இதற்குக் காரணம். இந்தக் காந்தப்புலமானது மனித மூளையின் எண்ணச் செயல்பாடுகளுக்கும் காரணமாக உள்ளது. அதாவது தெளிவான மனநிலை, தெளிவற்ற மனநிலை ஆகிய இருநிலைகளுக்கும் காரணமாக உள்ளது. ஆகவே, சந்திரனின் வரையறையில் மனம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் கற்பனையும் அடங்கியுள்ளது.

தொன்றுதொட்டே, எல்லா மொழி இலக்கியங்களும், சந்திரனைப் பெண்களுக்கும் பெண்களோடு தொடர்புடைய அழகியலுக்கும் தொடர்பு படுத்தி காப்பியங்களும் கவிதைகளும் செய்துள்ளன. இரவில் ஒளிரும் அழகு அதற்குக் காரணமாக இருக்கலாம்.

அடுத்து, சந்திரனை நீருக்குக் காரகன் என சோதிட நூல்கள் கூறுகின்றன. தற்போதைய வானியல் ஆய்வுகள், சந்திரனில், நமது பூமியின் கண்களுக்குப் புலப்படாத, மற்றொரு பகுதியில் உரைநிலையில் தண்ணீர் இருப்பதாக தெரிவிக்கின்றன.

ஆக, சந்திரனின் சோதிட வரையறைகள் எனக் கொடுக்கப்பட்டவைகள், சந்திரனின் இயல்தன்மையோடு பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. ஆனாலும் இவை ஒரு தனிமனித சாதகத்தில் எவ்விதம் விளைவை ஏற்படுத்துகின்றன என்பது, மனம் சார்ந்த வரையறையோடு ஒத்துப்போவதைப்போல், பிறவற்றோடு ஒத்துப்போவதை தர்க்க முறையில் மட்டுமே ஏற்க வேண்டியுள்ளது.

இருப்பினும், இந்தப் பொது வரையறைகள், சோதிட பயன்பாட்டில் பெருமளவில் மெய்ப்பிக்கப்பட்டுள்ளன. அது நிகழ்தகவு எனும் கணித தேற்றமாகவும் இருக்கலாம் அல்லது தொன்றுதொட்டு வரும் சோதிடப் பதிவுகளாகவும் இருக்கலாம்.அடுத்து… செவ்வாய்.

Friday, February 26, 2016

சந்திரன் – சோதிட வரையறை


சூரியக் குடும்பத்தில் முதல் சுற்றுக் கோளாக புதன் இருந்தாலும், நமது சோதிட முறைகளில் இரண்டாவது முக்கியத்துவம் பெரும் கோள் சந்திரன். சந்திரன் பூமியின் துணைக் கோளாக இருந்தாலும், சோதிட விதிப்படி அது கோள்களின் கணக்கில்தான் வருகிறது.

ஏனெனில் சோதிடம் என்பது பூமியில் வாழும் உயிர்களுக்கானது. இந்த பூமியானது சூரியனையும் சந்திரனையும் முழுமையாகச் சார்ந்துள்ளது. சந்திரன் பூமியின் துணைக் கோள் என்றாலும், சந்திரனைத் தனி ஒரு சக்தியாகவே நமது முன்னோர்கள் தொழுது வந்துள்ளனர்.

சந்திரன் தேய்ந்து வளர்ந்து வந்தாலும், அதன் ஒளி முழுமையாக எல்லா இரவுகளிலும் நமக்கு கிடைப்பதில்லை என்ற போதிலும், சந்திரன் இன்றி பூமி நிலைத்திருப்பது சாத்தியமில்லை எனும் நிலையே உள்ளது.

சந்திரனைப் பற்றி கற்பனைக் கதைகளும் நம்மிடம் ஏராளம். கவிதைப் பூக்களும் ஏராளம்.

சந்திரனின் இயல் தன்மைகளைப் பார்ப்போம்.

வானியலாளர்கள் சந்திரன் தோன்றியதைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கிறார்கள்.
-               (1) பூமியின் சுழற்சியில் உடைந்து திரிந்த பந்து
-               (2) சூரியக் குடும்பத்தில் மற்றக் கோள்கள் உருவான போதே சந்திரனும் உண்டாகி விட்டது
-               (3) சூரியக் குடும்பத்தில் ஒன்றான சந்திரன் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு மிக அருகில் வந்த போது, பூமியால் இழுக்கப் பட்டு, அதன் சுற்றுப்பாதைக்குள் வந்துவிட்டது.
-               (4) செவ்வாயின் அளவு உள்ள ஒருகோள் பூமியைத் தாக்கியதில், அதன் மிச்சம் மீதிகள் சந்திரனாக மாறி இந்த பூமியைச் சுற்றுகின்றன. (இதுவே பொதுவாக தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டக் கொள்கை)

பொதுவாக இந்த நான்கு கொள்கைகளே சந்திரன் உருவாக்கத்தின் காரணங்களாக சொல்லப்படுபவை.

நிலவில் காற்று என்பது ஒரு வெற்றிடம் போல் மிகக் குறைவாக இருப்பதால், பூமியைப் போல் ஒரு தட்பவெப்பக் காப்பு அங்கு இல்லாததால்  சூரியனின் வெப்பம் மிகக் கடுமையாக உள்ளது. அதேபோல் குளிரும் கடுமையாக உள்ளது. வெப்பம் +260 டிகிரியாகவும் குளிர் -260 டிகிரியாகவும் உள்ளது. சந்திரனிலும் எரிமலைகள் உள்ளன. ஆனால் அவை ஆழ்ந்தத் தூக்கத்தில் உள்ளன. விழிப்பது கடினம். சந்திராயன் செயற்கைக் கோள் நிலவில் தண்ணீர் உள்ளது என கண்டுபிடித்துள்ளது. ஆனால் சந்திரனில் கடல் எதுவும் இல்லை.

பூமியை விட்டு சந்திரன் ஒவ்வொரு வருடமும் ஒரு இன்ச் விலகிப் போவதாக வானியலாளர்கள் சொல்லுகின்றனர். பூமியைத்தவிர மனிதன் காலடிப் பட்ட வேறு இடம் சந்திரன் மட்டும் தான்.

சந்திரனில் ஈர்ப்பு விசைக் குறைவு. அதனால் தான் நீல் ஆம்ஸ்ட்ராங்க் துள்ளிக் குதித்து நடந்ததாக சொல்லப்படுகிறது. (அப்பல்லோ கதை பொய் என்ற கருத்தும் உண்டு). ஆனால் சந்திரனின் ஈர்ப்பு விசையால் தான், பூமியில் கடலில் அலைகளின் ஆர்ப்பரிப்பு என்றும் சொல்லுகிறார்கள். அதுமட்டுமின்றி பூமியின் கால அளவில் மாற்றத்தையும் அது உண்டாக்குகிறது.

நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகு என்பது, மற்றக் கோள்களைக் காட்டிலும் மிக அதிகமாக சூரியனின் வெளிச்சத்தை நமக்கு பிரதிபலித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் அழகு. .

சில குறிப்புகள்:
-               நிலவு பூமியிலிருந்து ஏறக்குறைய 3.84 இலட்சம் தொலைவில் உள்ளது.
-               நிலவு பூமியை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவும் அது தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் அளவும் ஏறக்குறைய சமம். அதாவது 27.5 நாட்கள் மற்றும் 29 நாட்கள்.
-               அதனால்தான் நமக்கு எப்போதும் ஒரு முகமே காட்டுகின்றது.
-               பாறைகளும் படிமங்களும் நிறைந்த ஒரு திடக் கோள் (துணைக் கோள்).
-               மிக மெல்லிய சுற்றுச் சூழல் கொண்டது. அதாவது வளி மண்டலம் இலகுவானது.
-               நிலவுக்கு நிலவு கிடையாது.
-               எளிதில் எல்லோராலும் பார்க்க முடிந்த விண் பொருள்.
-               கிரகணங்கள் உருவாக சந்திரனும் பங்கு வகிக்கின்றது.
 -              நிலவின் சுற்றளவு 10,921 கி.மீ.
-               பூமியின் எடையின் 81-ல் ஒரு பங்கு மட்டுமே.
-               காணப்படும் தனிமங்கள்ஆர்சனிக், ஹீலியம், சோடியம், பொட்டாசியம், ஹைட்ரஜன். ஆனால் ஆக்சிஜன் இருப்பதாகத் தகவல் இல்லை.
-               நிலவிற்கும் காந்தப் புலம் இருக்கிறது.

சரி இனி சோதிடத்திற்கு வருவோம்.

சந்திரனின் தொடர்ச்சி அடுத்த பதிவில்

Tuesday, February 23, 2016

சூரியன் – சோதிட வரையறை – சென்ற பதிவின் தொடர்ச்சிஇந்தத் தனிமங்கள் அவற்றின் எலக்ட்ரான்கள், புரோட்டான்கள், நியூட்ரான்கள் ஆகியவற்றின் எண்ணிக்கையினை வைத்தே, 118 தனிமங்களாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒரே ஒரு எலக்ட்ரான் கொண்டது ஹைட்ரஜன் அணு. அதற்கடுத்து இரண்டு எலக்ட்ரான்கள் கொண்டது ஹீலியம் அணு. இவ்வாறே அணைத்து தனிமங்களும் 118 எலக்ட்ரான்கள் வரை அடுக்கப்பட்டுள்ளன. ஹைட்ரஜன் எனும் தனிமம் அணுப்பிணைவு (அணுச் சேர்க்கை) எனும் கொள்கையின்படி, இரண்டாக சேரும்போது, இரண்டு எலக்ட்ரான்கள் கொண்ட ஹீலியமாக மாறுகிறது. இவ்வாறே, பிற தனிமங்களும் உருமாற்றம் அடைந்திருக்கின்றன.

இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ஹைட்ரஜன் இன்றி ஒரு அணுவும் அசையாது. ஹைட்ரஜன் அணுவே ஆரம்பம். அதற்கும் ஆதி மூலம் ஹிக்போசான் எனப்படும் “கடவுள் இல்லா துகள் (No God’s Particles) அல்லது கடவுள் துகள் (God’s Particles)” என்பதாக இருக்கலாம் என தற்போது கண்டுபிடித்து ஆய்வு செய்து கொண்டுள்ளனர். ஆக, இந்த பிரபஞ்சத்தில் உள்ள நமது சூரியக் குடும்பம், சூரியனைத் தலைவனாகக் கொண்டு சுற்றிவரும் வேளையில், நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனிலிருந்தே பிரிந்தன, பிறந்தன எனும் கருத்திற்கேற்ப, அனைத்துக் கோள்களுக்குமே ஆதாரம் ஹைட்ரஜன்தான். பூமிக்கும் அதுவே, பூமியில் பிறந்த உயிரினங்களுக்கும் அதுவே, சாதகக் கணக்கிற்கு உட்பட்ட மனிதர்களுக்கும் அதுவே. அத்தகைய ஹைட்ரஜனுக்கு ஆதி மூலமான சூரியனே இவை எல்லாவற்றிற்கும் ஆதாரம்.

எனவே உயிரின் ஆரம்பம் சூரியனைச் சார்ந்து இருப்பதால், சூரியனுக்கு “ஆத்மகாரகன் அல்லது உயிர்க்கு உடையவன்” என சோதிடத்தில் வரையறை செய்துள்ளது பொருத்தமாகவே உள்ளது.  அதுபோலவே, தந்தைக்கு காரகனும் சூரியன் என சோதிட நூல்கள் கூறுகின்றன. ஒரு உயிரின் பிறப்பின் ஆதாரம் தந்தையைச் சார்ந்து இருப்பதால் அதுவும் பொருத்தமாகவே இருக்கிறது.

இனி, சூரியனின் சோதிட வரையறையாக சோதிட நூல்களில் பொதுவாகக் கூறுவதைக் காண்போம்.

ஒளி
உயிர்
தந்தை
தலைமைப் பொறுப்பாளர்கள்
தலைமை அதிகாரம்
தலை
கண்கள்
இதயம்

இது பொதுவில் பல நூல்களில் கூறப்பட்டவை. இவைகளைச் சார்ந்தே பிற தன்மைகளும் விரித்து உரைக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சூரியனின்  காரகத்துவமாக மன்னர்கள், சக்கரவர்த்திகள், முதலமைச்சர்கள், குடியரசுத்தலைவர் என வரையறுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தலைமைப் பொறுப்பாளர்கள் எனும் வரையறைக்குள் அடங்கிவிடுகின்றன. அதே போல், அதிகாரம், பெருந்தன்மை, ஆத்ம சக்தி, கர்வம், தைரியம், வீரம் போன்றவை தலைமை அதிகாரம் எனும் வரையறைக்குள் அடங்கி விடுகின்றன. தலை எனும்போது, அதன் அமைப்பு, செயல்திறன் போன்றவைகளும், கண்கள் எனும்போது பார்வைத் திறன் எனவும், இதயம் எனும்போது இரத்த ஓட்டம் தொடர்பான செயல்திறனும் இந்த வரையறைக்குள் வந்து விடுகின்றன. இந்த வரையறைகளின் திறன் என்பது சூரியன் சாதகத்தில் இருக்கும் நிலைக்கேற்ப – வலிமையாகவோ அல்லது எளிமையாகவோ; நலம்பயக்கும் விதத்திலோ அல்லது தீங்குசெய்யும் நிலையிலோ இருக்கக்கூடும்.

ஆக, சூரியனின் வரையறை என்பது மேலேக் குறிப்பிட்ட பொது வரையறைக்குள் அடங்கிவிடுகிறது. அதே வேளையில் இந்தப் பொது வரையறைகளின் நீட்சியையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுபற்றி பலன் அறிதல் எனும் பதிவு எழுதும்பொது விரிவாகக் காண்போம்.

மீண்டும் சொல்கிறேன் – நான் இங்கு வரையறைப்படுத்த முயன்றிருப்பது இப்படி இருக்கக்கூடும் என்பதை தர்க்க முறை வாதத்தில்தான். அதே வேளையில் இந்த வரையறைகள் நிகழ்தகவின் அடிப்படையில், முன்னோர்கள் கண்டுணர்ந்து, கேட்டுணர்ந்து வகுத்தவை என்பதையும் மறந்துவிடக் கூடாது.


அடுத்து சந்திரன்

Monday, February 22, 2016

சூரியன் – சோதிட வரையறைசோதிடத்தின் பயன்பாட்டில் உள்ள ஒன்பது கோள்களில் முதன்மையானது சூரியன். நாம் வாழும் பூமியும் மற்றக் கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சோதிட விதிப்படி, பூமி மையக் கொள்கையே கடைபிடிக்கப்படுகிறது. அதாவது பூமியை மையமாகக் கொண்டு சூரியன் உட்பட அனைத்து கோள்களும் சுற்றி வருகின்றன என்பதே. பூமி மையக் கொள்கை சரியா என்பது பற்றி ஏற்கனவே நாம் பதிவு செய்துவிட்டோம். அதன்படி பூமி மையக் கொள்கையும் சரியே என பதிவு செய்துள்ளோம்.  சூரிய மையக் கொள்கை அல்லது பூமி மையக் கொள்கை இவற்றில் எதுவாக இருப்பினும், சூரியன் இன்றி இந்த பூமி சுழலாது என்பது உண்மை. சூரியன் இன்றி எந்தக் கோளும் சுழலாது என்பதும் உண்மை. எனவே சூரியன் இன்றி பூமியில் அணுவும் அசையாது என்பது உண்மை.


இதனைக் கருத்தில் கொண்டே சோதிடத்தில் சூரியனுக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அதாவது சூரியன், ஆத்ம காரகன் எனும் பெயரால் அழைக்கப்படுகிறது. மறுமொழியில் சொல்வதென்றால் ஒரு சாதகரின் உயிர்ப்பினை முன்னிறுத்துவது சூரியனே. இதனை சூரியனின் இயல் தன்மையோடு ஒப்பு நோக்குவோம்.


சூரியனின் இயல் தன்மை என்பது –

சூரியன் மிகப் பெரிய விண்மீன். ஏறக்குறைய 1.40 மில்லியன் கிலோமீட்டர் விரிவும், அதன் மேற்பரப்பில் 109 பூமிகளை பரப்பக்கூடிய அளவும், அது ஒரு வெற்றிடப் பந்தாக இருந்தால் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பூமிகளை நிரப்பக் கூடிய ஒரு பெரிய பந்தாகவும் உள்ளது. இந்த நெருப்புப் பந்து வெளிப்புறத்தில் 10,000 ஃபாரன்ஹீட்டாகவும், உட்கருவில் 2,80,00,000 ஃபாரன்ஹீட்டாகவும் வெப்பத்தை கொண்டிருக்கிறது. ஏனிந்த வெப்பம். கொஞ்சம் வேதியியல். அணுக்களில் பிளவு ஏற்படும்போதும் (fission), அணுக்களில் சேர்க்கை ஏற்படும்போதும் (fusion) அளப்பறிய வெப்பம் உண்டாகும். அந்த அடிப்படையில்தான் அணு உலைகள் செயல்படுகின்றன. இதை அணுக்கரு இயற்பியலில் (Nuclear Physics) விரிவாக படிப்பார்கள். சூரியனின் உட்கருவானது, ஏராளமான ஹைட்ரஜன் அணுக்களைக் கொண்டுள்ளது. அவை அணுக்கரு இணைவு விளைவில் ஒன்றிணைந்து ஹீலியம் அணுக்களாக மாற்றம் பெறுகின்றன. (ஹைட்ரஜனின் அணு எண் ஒன்று – ஹீலியத்தின் அணு எண் இரண்டு). அவ்வாறு இணையும்போது ஏற்படும் வெப்பம்தான் எரிசக்தியையும் உற்பத்தி செய்கிறது. ஒளித்துகள்கள் எனும் போட்டான்கள் அந்த சக்தியை உள்ளிருந்து சூரியனின் மேற்பரப்பிற்கு கொண்டுவருகின்றன. அந்த வெப்பம்தான் பூமிக்கும் கடத்தப்படுகின்றது.  

Ø  நமது பால்வீதியில் 100 பில்லியன்களுக்கும் மேலான சூரியன்கள் உள்ளன. அதில் நமது சூரியனும் ஒன்று.
Ø  சூரியனின் விட்டம் : 13,90,000 கி.மீ.
Ø  நிறை: 1.989e30 கி.கி.
Ø  சூரியக் குடும்பத்தில் 99.80% நிறையை சூரியன் மட்டுமே கொண்டுள்ளது.
Ø  மற்றக் கிரகங்களும் துணைக்கோள்களும் 0.20% அளவே உள்ளன.
Ø  70% ஹைட்ரஜனும், 28% ஹீலியமும் 2% மற்ற தனிமங்களும் கொண்டது.
Ø  அணு இணைவு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனில் ஹட்ரஜனே இருக்காது. ஹீலியத்தை மட்டுமே கொண்டிருக்கும்.
Ø  சூரியனும் தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது. (25 – 36 நாட்கள்)
Ø  சூரியனின் மையக்கருவின் தின்மம் நீரைவிட 150 மடங்கு அதிகம்.
Ø  சூரியன் 386 பில்லியன் மெகாவாட் சக்தியை உற்பத்தி செய்கிறது.
Ø  கதிரியக்கம் மற்றும் காமா கதிர்களை வெளியிடுகிறது.
Ø  இதன் காந்தப் புலம் மிகவும் சக்தி வாய்ந்தது. புளூட்டோவையும் தாண்டி செல்கிறது.
Ø  வெப்பம் மற்றும் வெளிச்சம் மட்டுமின்றி குறைந்த அடர்த்திக் கொண்ட (எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்களைக் கொண்ட) சூரியக் காற்றினையும் வீசுகிறது.
Ø  சூரியன் தோன்றி 4.50 பில்லியன் ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 5.00 பில்லியன் ஆண்டுகளுக்கு கவலையில்லை.

ஏற்கனவே சூரியன் பற்றிய பதிவில் பதிவு செய்யப்பட்டதையே இங்கு மறு பதிவு செய்துள்ளேன்.


இங்கு முதன்மையாகக் கவனிக்க வேண்டியது – சூரியனில் உள்ள வேதிப் பொருட்கள். அதாவது சூரியனின் மொத்த அளவில் 70% ஹைட்ரஜனும், 28% ஹீலியமும் 2% மற்ற தனிமங்களும் உள்ளன. உலகில் உள்ள அனைத்து பொருட்களையும், அதாவது, திட, திரவ, வாயு மற்றும் பிளாஸ்மா நிலையில் உள்ள அனைத்து பொருட்களையும் 118 தனிமங்களாக வகைப்படுத்த முடியும். அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட தனிமங்களே ஒன்றிணைந்து, பொருட்களாக மாறுகின்றன. பொருட்கள் என்பதில், மனிதனும் அடக்கம். அதாவது மனித உடலும் இந்த  தனிமங்களின் சேர்மங்களே.சூரியன் – சோதிட வரையறை – தொடரும்

Sunday, February 21, 2016

மூன்று கோள்கள் – சோதிட வரையறைசூரியனின் வரையறையைப் பார்ப்பதற்கு முன்னால், யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவற்றின் வரையறைகள் பற்றி கொஞ்சம் ஆராய்வோம். சோதிடத்தில் ஒவ்வொரு கோளிற்கும் சில தனித்த வரையறைகளைச் சோதிட நூல்கள் வழங்குகின்றன. தொடக்க நிலைகளில் ஏழு கோள்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்துள்ளன. பின்னர் நிழற்கோள்கள் அல்லது சூரிய சந்திர சுற்றுப்பாதையின் வெட்டுபுள்ளிகள் எனப்படும் இராகுவும் கேதுவும் கோள்களின் கணக்கில் கொண்டுவரப்பட்டு, ஒன்பது கோள்கள் சோதிடக் கணித முறைக்குப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் மாந்தி போன்ற துணைக் கோள்களும் சோதிடப்பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டன. அதன் பின்னர், புதிய வான்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ போன்ற கோள்களும் சோதிடக் கணித முறைக்கு சிலரால் கொண்டுவரப்பட்டன. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட மூன்று கோள்களும் மேற்கத்திய கோள்கள் என குறிப்பிடப்பட்டு, அவற்றை பயன்படுத்துவது சரியல்ல எனும் வாதமும் எழுத் தொடங்கியது. நம் முன்னோர் வகுத்துக் கொடுத்த வரையறையைத் தான் நாம் பயன்படுத்த வேண்டும் என்பதிலும் நமது நாட்டின் சோதிட அறிஞர்கள் கொள்கையாகக் கொண்டிருந்ததால், அத்தகைய மூன்று கோள்களையும் பயன்பாட்டில் இருந்து விலக்கினர். ஆனால் ஒரு சிலர் அவைகளையும் கணக்கில் கொண்டு இன்றும் சோதிட பலன் உரைத்து வருகின்றனர். இருப்பினும், திடீரென்று, புளூட்டோ என்பது கோள்களின் கணக்கில் வராது என தற்போதைய வானியல் அறிஞர்கள் அறிவித்து அதனைக் குறுங்கோள் எனும் கணக்கில் கொண்டு வந்துள்ளனர். அதனால் புளோட்டோவை சோதிடக் கணக்கில் இருந்து விலக்கினர். யுரோனசும் நெப்டியூனும் சிலரால் இன்னும் பயன் பாட்டில் கொண்டுவரப்பட்டு பலன் உரைக்கின்றனர். மேலை நாட்டு சோதிட முறையில் யுரோனசும் நெப்டியூனும் தவிர்க்க முடியாத கோள்கள் ஆகிவிட்டன.

இத்தகைய சூழலில், நாம் யுரோனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய மூன்று கோள்களுக்கும் சோதிட வரையறையை ஆய்வு செய்ய வேண்டுமா என்பது கேள்விக்கு உடையதாக உள்ளது.

இந்த மூன்று கோள்களும், தற்போதைய காலத்தில் (கடந்த மூன்று நூற்றாண்டுகளுக்குள்) கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன என்பதால் விட்டுவிடலாம் என்பது சரியான செயல் அல்ல. அதே நேரத்தில் அந்த கோள்களின் இயல் தன்மையை ஒப்பு நோக்குவோம். சோதிடக் கணக்கின்படி தூரம் என்பது ஒரு பொருட்டல்ல. ஏனெனில் கோள்களில் இருந்து அல்லது கோள்களில் எதிர்பட்டு வரும் கதிர் வீச்சு என்பது பூமிக்கு வந்து சேரும் எனும் கோட்பாடே சோதிடத்தின் அடிப்படை. ஆனால் கால அளவு என்பது தான் கருத்தில் கொள்ள வேண்டும். அது ஏன் என்பதைக் காண்போம்.

யுரோனஸ்:
யுரோனஸ் சூரியனிடமிருந்து 287.10 கோடி கி.மீ, தொலைவில் உள்ளது.  தனது பாதையில் அது சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது 84.30 ஆண்டுகள். அதனை 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளித்தால் ஏழு ஆண்டுகள் மூன்று மாதம் என்ற கணக்கில் ஒவ்வொரு இராசியிலும் இருக்கும். இதன்படி, இராசி சக்கரத்தில் ஒரு முழு சுற்றினைப் பூர்த்தி செய்வதற்கு 84 ஆண்டுகள் ஆகும். அதாவது மிகப்பெரும்பாலான சாதகர்களின் வாழ்வில் அது நிகழாமலேயே போய்விடும்.


நெப்டியூன்:
நெப்டியூன் சூரியனிடமிருந்து 450.40 கோடி கி.மீ, தொலைவில் உள்ளது.  தனது பாதையில் அது சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது 164.79 ஆண்டுகள். அதனை 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளித்தால் 12 ஆண்டுகள் ஒன்பது மாதம் என்ற கணக்கில் ஒவ்வொரு இராசியிலும் இருக்கும். இதன்படி, இராசி சக்கரத்தில் ஒரு முழு சுற்றினைப் பூர்த்தி செய்வதற்கு 165 ஆண்டுகள் ஆகும். அதாவது சாதகர்களின் வாழ்வில் அது நிகழவே முடியாது. மேலும், இதன் சுற்றுவட்டப்பாதை நியூட்டனின் விதிப்படி இல்லை எனவும் வானியலாளர்கள் கூறுகின்றனர்.

புளூட்டோ:
புளூட்டோ சூரியனிடமிருந்து 2274 கோடி கி.மீ, தொலைவில் உள்ளது.  தனது பாதையில் அது சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவு என்பது 248 ஆண்டுகள். அதனை 12 இராசிகளுக்கும் பகிர்ந்தளித்தால் 20 ஆண்டுகள் எட்டு மாதம் என்ற கணக்கில் ஒவ்வொரு இராசியிலும் இருக்கும். இதன்படி, இராசி சக்கரத்தில் ஒரு முழு சுற்றினைப் பூர்த்தி செய்வதற்கு 248 ஆண்டுகள் ஆகும். இதுவும் சாதகர்களின் வாழ்வில் நிகழவே முடியாது. மேலும், இது தற்போது கோள்களின் தகுதியையும் இழந்து விட்டது.

எனவே கோள்கள் இராசிகளைக் கடக்கும் கணக்குகள் இந்த மூன்று கோள்களுக்கும் பொதுவில் பொருந்த வில்லை. மேலும் இது நமது பண்டைய வானியல் மற்றும் நமது சோதிட அறிஞர்களால் கண்டறியப்படாதவை. எனவே இவற்றை தற்போது நாம் சோதிடக் கணக்கில் சேர்த்துக் கொள்வதில்லை. இருப்பினும்,  இவற்றின் தன்மைகள், தாக்கங்கள் குறித்து நிகழ்வுகள் பதிவு செய்யப்படும்போது, பின்னொரு காலங்களில் நமது சோதிடக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படலாம். நிகழ்தகவின் அடிப்படையில் அவை நிரூபிக்கவும் படலாம். அல்லது இக்கோள்களின் தேவை எழாமலும் போகலாம். இப்போதைக்கு நாம் இவற்றிற்கு வரையறை கொடுக்க இயலவில்லை என்பதே உண்மை.


அடுத்து சூரியன்