Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label சோதிட ஆய்வு-111-120. Show all posts
Showing posts with label சோதிட ஆய்வு-111-120. Show all posts

Sunday, March 19, 2017

வாக்கியம் (எதிர்) திருக்கணிதம் (1)



பஞ்சாங்கம்




வாக்கியம்   எதிர்    திருக்கணிதம்


சூரியக் குடும்பத்தில் உள்ள வான் கோள்களை சோதிடக் கணிதத்திற்கு உட்படுத்துவதன் மூலம் சாதகம் கணிக்கப்படுகிறது என்பதனை நாம் அனைவரும் அறிவோம். வான் கணிதமும் சோதிடக் கணிதமும் சில நிலைகளில் சற்று மாறுபட்டு இருப்பினும், கோள்கள் வானில் இருக்கும் நிலையினை இரண்டுமே துள்ளியமாகக் கணிக்கின்றன.  வானியல் கணிதமானது சூரிய மையக் கொள்கையினையும் சோதிடக் கணிதமானது பூமிமையக் கொள்கையினையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. இது பற்றி நாம் விரிவான ஆய்வினைச் செய்திருக்கிறோம் (சோதிட ஆய்வு 21-30 - பூமி மையக் கொள்கை ஏற்புடையதா? எனும் பதிவினைப் பார்க்க).

வானியல் கணிதம் தற்போது தொலை நோக்கிகள், தர்க்கமுறைக் கணிதம், கணிணிப் பயன்பாடு போன்றவற்றின் மூலம் துள்ளியம் தர முயன்று கொண்டிருக்கும் அதே வேளையில், நமது முன்னோர்கள் வானில் நிகழும் கோள்களின் மாற்றங்களை வெறுங்கண்ணால் கண்டுணர்ந்து வான் நிகழ்வுகளைப் பதிவு செய்தது பெரும் வியப்பிற்கு உரிய செய்தியாகும்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் கண்டுணர்ந்த தரவுகளின் அடிப்படையிலேயே வான் கணிதம் செய்வதற்கு,  கையேடுகள் (ஓலைச் சுவடிகள்) தயாரித்தனர். அதன் அடிப்படை தரவு (data) என்பது தொடர்நிகழ்வுகளைக் கண்டுணர்தல் (observing of occurance) என்பதாகும். அந்த அடிப்படையிலேயே குறிப்புகளைத் தயாரித்து அதனைச் சுவடிகளாகவும் வாய்மொழியாகவும் தங்கள் கணித முறைக்கு பயன்படுத்தி வந்தனர்.   அத்தகைய குறிப்புகளைப் பஞ்சாங்கம் என பெயரிட்டு அழைத்தனர். அத்தகைய பஞ்சாங்கக் குறிப்பேடுகள்தான் அன்றையகாலத்தில் வான் கணித அறிவியலுக்கும், சோதிட கணிதத்திற்கும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. அன்றைய காலத்தில் வானியலும் சோதிடவியலும் (Astronomy & Astrology) பிரிக்கமுடியாத இருகூறுகளாகவே இருந்துவந்தன.  காலப் போக்கில், அறிவியற்கருவிகளின் வளர்ச்சி மற்றும் நடைமுறைப் பயன்பாடுகளின் காரணமாக, பஞ்சாங்கங்கள் பயன்பாடானது வான் அறிவியல் (Astronomy) கணிதத்திலிருந்து விலக்கப்பட்டு, சோதிட அறிவியலுக்கு (Astrology) மட்டும் எனும் நிலை உருவானது.

இன்று “நாசா” பல வானியல் கணிதங்களைச் செய்து வான் கோள்களின் நகர்வினை எடுத்துரைக்கும் நிலையில், பஞ்சாங்கங்கள் தரவுகளின் அடிப்படையில் அதே நகர்வுக் கணிதங்களைச் சொல்லிச் செல்கின்றன.  எடுத்துக்காட்டாக எப்போதாவது நிகழும் சூரிய சந்திர மறைவுக் காலங்கள் (சூரிய சந்திர கிரகணங்கள்),  கோள்களின் வக்கிர நிலைகள் (பின்னோக்கிப் பயணித்தல் எனும் மாயத்தோற்றம்), கோள்களின் நகர்வு,  ஆகியவற்றை பஞ்சாங்கங்கள் மிகத் துள்ளியமாக முன்கூட்டியே தெரிவிப்பது, போன்றவற்றைக் கூறலாம்.

ஆக சோதிடக் கணிதத்திற்கு பஞ்சாங்கள் கொடுக்கும் தரவுகளே பெரிதும் துணை புரிந்தவந்தன. காலப்போக்கில், கணிதத்தில் துள்ளியம் வேண்டி, சில திருத்தங்களை மேற்கொண்டு, பஞ்சாங்கத்தினை செம்மைப் படுத்தும் சூழல் எழுந்தது. அங்குதான் பிரச்சினையும் எழுந்தது. முன்னோர்கள் தயாரித்து அளித்த கணிதத்தில் மாற்றம் செய்வது சரியல்ல என்று ஒரு பிரிவும், காலத்திற்கேற்ப திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஒரு பிரிவும் களத்தில் இறங்கின.

திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல், முன்னோர்கள் வகுத்தளித்த பஞ்சாங்க முறையினைப் பின்பற்றுபவர்கள், தங்கள் பஞ்சாங்க முறையை வாக்கியப் பஞ்சாங்க முறை என்றனர். திருத்தங்களை மேற்கொண்டு, அதனைப் பயன்படுத்தியவர்கள் தங்கள் பஞ்சாங்க முறையினைத் திருக்கணித பஞ்சாங்க முறை என்றனர். இரு பிரிவினரும் தத்தமது முறைதான் சிறந்தது என்று வாதிடத் தொடங்கினர். அன்று தொடங்கிய வாதம் இன்றுவரை தொடர்கிறது.


,,, மேலும் தொடர்வோம்.

Saturday, February 18, 2017

சட்பலம் – ஒரு தொகுப்பு


சட்பலம் – ஒரு தொகுப்பு

      இதுவரையில், சட்பலம் எனப்படும் கோள்களின் ஆறு வகையான வலிமைகளைப் பார்த்தோம். அவற்றின் தொகுப்பாக –

Ø  கோள்களின் வலிமை என்பதை அவை இருக்கும் வீடுகள், காரகத்துவங்கள், பார்வைகள், உச்சம், நீச்சம், நட்பு, பகை நிலைகள் ஆகிய நிலைகளை வைத்துமட்டும் தீர்மானித்துவிடக்கூடாது.

Ø  ஒரு கோளின் வலிமையை, பல்வேறு கணிதங்களைச் செய்தே முடிவு செய்ய வேண்டும் என சோதிட நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆறுவகை வலிமைகளைக் கண்டறிய வேண்டும் என கூறுகின்றன.  அதனை வடமொழியில் சட்பலம் எனக் குறிப்பிடுகின்றன.

Ø  சட்பலம் (அ) ஆறுவகை வலிமை என்பது -

(1)    வீட்டினில் வலிமை (அ) ஸ்தான பலம்
(2)    திசையினில் வலிமை (அ) திக் பலம்
(3)    காலத்தில் வலிமை (அ) கால பலம்
(4)    நகர்வில் வலிமை (அ) சேஷ்டா பலம்
(5)    இயற்கையில் வலிமை (அ) நைசர்க்கிக பலம்
(6)    பார்வையின் வலிமை (அ) திருக் பலம்

Ø  ஸ்தான பலம் - கோள்கள் வீட்டினில் பெறும் வலிமை என்பது

(1)    உச்சம்
(2)    மூலத் திரிகோணம்
(3)    ஆட்சி
(4)    நட்பு
(5)    பகை
(6)    கேந்திரம்
(7)    திரிகோணம்
(8)    பணமரம்
(9)    ஆபோக்லிமம்
ஆகிய நிலைகளைக் கண்டு கணக்கிடப்படுகிறது

Ø  திக் பலம் (அ) திசையினில் வலிமை என்பது -

இராசிகள் பெறும் பலம் என்பதிலிருந்து மாறுபட்டு, இலக்கினத்தில் தொடங்கி நான்கு நாற்கரங்கள், அதாவது நான்கு கேந்திரங்களில் திசைகளை வரிசைப்படுத்தப்படுகிறது. குறிப்பிட்ட இடங்களில் அல்லது திசைகளில், குறிப்பிட்ட கோள்கள் வலிமை பெறுவதாகவும், அல்லது வலிமை இழப்பதாகவும் கணக்கிடப்படுகிறது.

Ø  கோள்கள் திசைகளில் பெறும் வலிமை சஷ்டியாம்சம் எனும் கணித அளவீட்டில் கணக்கிடப்படுகிறது.

Ø  அவ்வாறு கணக்கிடப்படுவதில், அதிக சஷ்டியாம்ச புள்ளிகள் பெறும் கோள்கள் அதிக வலிமையும், குறைந்த புள்ளிகள் பெறுபவை குறைவான வலிமையும் பெறுகின்றன.

Ø  கால பலம் (அ) காலத்தில் வலிமை

Ø  இதன்படி, சாதகர் பிறந்த பொழுதினை அடிப்படையாகக் கொண்டு கோள்களின் பலம் அறியப்படுகிறது - அதாவது

(1)  நடு நிசி – நடு பகல் வலிமை (அ) நத உன்னத பலம்
(2)  வளர் பிறை – தேய் பிறை வலிமை (அ) பட்ச பலம்
(3)  பகல் – இரவு வலிமை (அ) தின இராத்திரி பலம்
(4)  ஆண்டின் வலிமை (அ) ஆப்த பலம் (அ) வருஷ பலம்
(5)  மாதத்தின் வலிமை (அ) மாத பலம்
(6)  கிழமையின் வலிமை (அ) வார பலம்
(7)  ஓரை வலிமை (அ) ஹோரா பலம்
(8)  நகர்வின் வலிமை (அ) அயன பலம்
(9)  யுத்தத்தில் வலிமை (அ) யுத்த பலம்

Ø  ஆக, கால பலத்தில் கோள்களின் வலிமையானது பல்வேறு கால நிலைகளில் உள்ள கோள்களின் வலிமையினை கணித முறைகளுக்கு உட்பட்டு வரையறை செய்வதாகும்.

Ø  சேஷ்டா பலம் (அ) கோள்களின் நகர்வின் வலிமை – என்பது

Ø  கோள்கள் தாம் சுற்றிவரும் நிலையில் பெறும் வலிமையினைக் குறிப்பதாகும்.

Ø  குறிப்பாக, சூரியன், சந்திரன் தவிர்த்து பிற கோள்கள் வக்கிர நிலையில் பெறும் வலிமையினைக் கணக்கிடுவதாகும்.

Ø  சேஷ்டா பலம் கணக்கிடப்படுவதின் நோக்கமானது, ஒரு கோள் வக்கிர நிலையில் இருப்பதால் மட்டுமே வலிமை குன்றியது என்றோ அல்லது உச்ச நிலையில் இருப்பதால் மட்டுமே வலிமை மிகுந்து இருக்கிறது என்றோ பலன் உரைத்துவிடக் கூடாது என்பதுதான்.

Ø  நைசர்க்கிக பலம் (அ) இயல்பில் வலிமை என்பது –

Ø  இயற்கையில் கோள்கள் அவைகளுக்கு இடையே பெற்றிருக்கும் வலிமையாகும்.

Ø  சோதிட நூல்களில் கோள்களின் இயல்பான வலிமையாக தெரிவிக்கப்பட்டிருப்பது – 
    சனியை விட செவ்வாய் வலிமை
செவ்வாயை விட புதன் வலிமை
புதனை விட வியாழன் வலிமை
வியாழனை விட வெள்ளி வலிமை
வெள்ளியை விட சந்திரன் வலிமை
சந்திரனை விட சூரியன் வலிமை

ஆக, அனைத்து கோள்களிலும் வலிமை மிக்கதாக சூரியனும் அதற்கு அடுத்து சந்திரனும் வரிசைப்படுத்தப் படுகின்றன.

Ø  இயல்பில் வலிமையானது கோள்களின் ஒளிர் தன்மையின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

Ø  நைசர்க்கிக வலிமையானது, கோள்கள் இருக்கும் இராசிகள் அல்லது பாவகத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதில்லை.

Ø  நைசர்க்கிக வலிமையின் அளவானது, மாறிலி எனும் அடிப்படையில் எப்போதும், எந்த சாதகத்திற்கும், மாறாது என்பது குறிப்பிடத்தக்கது.

Ø  திருக் பலம் (அ) பார்வையின் வலிமை என்பது -

Ø  கோள்களின் பார்வையின் வலிமை யாகும். திருக் பலம் என்பது, ஒரு கோளின் பார்வையால் மற்ற கோள்கள் பெறும் வலிமை என்பதாகும்.

Ø  சட் பலக் கணக்கீட்டில், கோள்களின் பார்வைகள் மட்டுமின்றி, ஒரு கோள், மற்றொரு கோளிலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதையும், அதாவது பார்க்கிறது எனும் கணக்கீடும் செய்யப்படுகிறது.

Ø  ஒரு கோளின் ஏழாம்பார்வை மற்றும் சிறப்புப் பார்வையும், முழுமையான வலிமையினைப் பார்க்கப்படும் கோள்களுக்கு கொடுக்கிறது.

Ø  அது மட்டுமின்றி, பார்க்கும் கோளிற்கும் பார்க்கப்படும் கோளிற்கும் உள்ள பாகைக் கணக்கீடும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

Ø  கோள்களுக்கு இடையே உள்ள தூரங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன  என்பதுடன் ஒவ்வொரு கோளின் ஒளிவீச்சின் தன்மையும் கணக்கில் கொள்ளப்படுகிறது.

தொகுப்பாக – 

சட் பலம் என்பது, கோள்களின் வலிமையினை அவை இருக்கும் நிலையினைக் கொண்டு மிக நுணுக்கமாக ஆராயப்படும் நிலையாக உள்ளது. இது கோள்களின் வலிமையினை மிகத் துள்ளியமாக கணக்கிடும் முறையாக உள்ளது. ஆறுவகை வலிமைகளையும் ஒன்று கூட்டி சட்பலத்தின் மொத்த வலிமைக் கணக்கிடப்படுகிறது. கணக்கீடானது, பொதுவில் ரூபம் (அ) சஷ்டியாம்சம் எனும் அளவீட்டில் கணக்கிடப்படுகிறது.

சட்பலக் கணக்கீடானது, பெரும்பாலும் ஒரு ஒழுங்கானக் கணக்கீட்டில் அமைந்தாலும், சில கணக்கீட்டின் அடிப்படைத் தன்மைகள் எவ்வாறு வரையறை செய்யப்பட்டன என்பதற்கான கூறுகள் கிடைக்கப்பெறவில்லை. சோதிட நூல்களிலும், பொதுவாக சட்பலத்திற்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பலன் உரைப்பதில் துள்ளியம் குறைந்துபோவதற்கு, சட்பலக் கணக்கீட்டினைக் கவனத்தில் கொள்ளாததும் காரணமாக இருக்கலாம்.


அடுத்து – பலன்களை வரையறை செய்தல்