Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, January 31, 2018

தர்மகர்மாதிபதி யோகம்(2)


தொடர்ச்சி....

தர்மகர்மாதிபதி யோக அமைப்பு இருந்தும் அதற்குரிய பலன்கள் கிடைக்காமல் போவதற்கு, சாதகக் கட்டத்தில் கோள்கள் எங்கு அமைந்திருக்கின்றன எனும் நிலையே காரணமாக இருக்கிறது.


அதாவது, 9-க்கும் 10-க்கும் உரிய கோள்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டியது முக்கியம். அதாவது, மறைவு, நீச்சம், பகை, வக்கிரம், பலமற்று இருத்தல், என்பன போன்று இருப்பது முழுமையான அல்லது பலனே இல்லாது போவதற்கு காரணமாக இருக்கும் நிலை ஏற்படுகிறது.


அதுமட்டுமின்றி, எந்த ஒரு யோக அமைப்பின் பலனும் அதற்குரிய கால திசையில் மட்டுமே பலனைக் கொடுக்கும் என்றும் சோதிட நூல்கள் கூறுகின்றன. ஆக தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் என்பது அவ்விரண்டு கோள்களும் எவ்வாறு அமைந்திருக்கின்றன என்பதைப் பொருத்து மட்டும் அல்லாமல் அவைகளுக்குரிய காலதிசையினையும் பொருத்தே கிடைக்கக் கூடும்,


எடுத்துக்காட்டாக-



இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சாதகங்களின் அமைப்பினைப் பார்ப்போம்

(1)  இலக்கினம் – மேசம்; 9-ம் இடம் தனுசு (அதிபதி – குரு); 10-ம் இடம் மகரம் (அதிபதி – சனி).  இங்கு குருவும் உச்சம்; சனியும் உச்சம். அதே வேளையில்  சனிக்கோளின் 10-பார்வையானது குருவின் மீது. எனவே, இது தர்மகர்மாதிபதி யோகத்திற்கு உரிய அமைப்பு எனலாம். மேலும் இங்கு சிறப்பான நிலை என்னவென்றால், குரு முதல் நாற்கரத்தில்(கேந்திரத்தில்), சனியானது இரண்டாவது நாற்கரத்தில்(கேந்திரத்தில்) இருப்பதும் சிறப்பான நிலை என்பதால், அந்த நிலைக்குரிய பலனும் கிடைக்கக் கூடும். [சனி 7-ல் இருக்கலாமா? குருவிற்கு கேந்திராதிபத்திய தோசம் உள்ளதா? என்பதெல்லாம் பிறகு பார்க்கலாம்].

(2)  இலக்கினம் – கடகம்; 9-ம் இடம் மீனம் (அதிபதி-குரு); 10-ம் இடம் மேசம் (அதிபதி-செவ்வாய்); இலக்கினத்தில் குரு உச்சம்; 7-ல் செவ்வாய் உச்சம்; 7-ம் பார்வையாக இரு கோள்களும் ஒன்றை ஒன்று பார்க்கின்றன. எனவே, தர்மகர்மாதிபதி யோக அமைப்பு உண்டு. மேலும், இரு கோள்களும் உச்ச நிலையில் இருப்பதால் மிக சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். [7-ல் செவ்வாய் – செவ்வாய் தோசமா என்பதை தனியாக செவ்வாய் தோசம் பற்றிய பதிவில் அலசுவோம்]

(3)  இலக்கினம் – கடகம்; 9-ம் இடம் மீனம் (அதிபதி – குரு); 10-ம் இடம் மேசம் (அதிபதி – செவ்வாய்). இரண்டும் ஒன்றை ஒன்று 7-ம் பார்வையால் பார்த்துக் கொள்கின்றன. எனவே தர்மகர்மாதிபதி யோக அமைப்பு உண்டு. ஆனால், இங்கு 9-ம் அதிபதியும் நீச்சம், 10-ம் அதிபதியும் நீச்சம்.  எனவே தர்மகர்மாதிபதி யோக அமைப்பு இருந்தும் பலன் என்பது கேள்விக்குறியே.

(4)  இதுவும் மேலே கூறிய அமைப்பே. தர்மகர்மாதிபதி யோக அமைப்பு இருந்தும் இரண்டும் நீச்ச நிலையில் இருப்பதால் சிறப்பில்லை என கூறினாலும், இங்கு வேறொரு நிலையினை நாம் பார்க்க வேண்டும். இலக்கினாதிபதி சந்திரன் உச்ச நிலையில் இருப்பதால், சந்திரனின் வீட்டில் இருக்கும் செவ்வாய் நீச்ச பங்கம் அடையும் நிலையில் உள்ளது. அதுபோலவே சனியின் வீட்டில் இருக்கும் குருவும், சனியின் உச்ச நிலையால் நீச்ச பங்கம் அடையும் நிலையில் உள்ளது.  ஆக, 9, 10-க்கு உரிய கோள்கள் நீச்சம் அடைந்திருந்தாலும், அவை நீச்ச பங்கம் அடைந்திருப்பதால், தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் அவைகளின் தசாக்காலத்தில் கிடைக்கும் எனலாம்.


மேலே கூறியவை எடுத்துக்காட்டுகளே. இதுபோன்று எண்ணற்ற இணைவுகளில் தர்மகர்மாதியோக அமைப்பு உள்ள சாதகங்கள் அமையக் கூடும். ஆக, தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் என்பது அக்கோள்கள் இருக்கும் நிலையினில் மட்டுமல்லாமல், சாதகத்தில் உள்ள பிறக்கோள்களின் அமைப்பிற்கேற்பவும், தசாபுத்திக் காலத்தின் நிலைக்கேற்பவும் பலன் இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.


எனவே தர்மகர்மாதிபதி யோக அமைப்பு என்பது 9, 10-ம் இடத்தின் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்பால் ஏற்படக்கூடிய அமைப்பாகும். அதற்குரிய பலன்கள் என்பது அவை இருக்கும் நிலைகளுக்கு ஏற்ப, சிறப்பாகவோ அல்லது குறைவாகவோ கிடைக்கக் கூடும் அல்லது பலனே இல்லாமலும் போகக் கூடும்.


[குறிப்பு: மேற்கூறிய விளக்கம் அனைத்து யோகங்களுக்கும் பொருந்தும்]



யோகங்கள் தொடரும்……

Tuesday, January 30, 2018

தர்மகர்மாதிபதி யோகம் (1)



சாதகத்தில் கோள்களின் அமைவில் ஏற்படக்கூடிய யோகங்களில் முதன்மையானது தர்மகர்மாதிபதி யோகம். இராசி சக்கரத்தின் வீடுகளில் ஒன்பதாம் இடமும் பத்தாம் இடமும் மிக முக்கியமான இடங்கள். ஒன்பதாம் இடம் என்பது செல்வச் சிறப்பு வீடு அல்லது பாக்கிய ஸ்தானம் எனப்படும். செல்வம் என்றால் பணம், சொத்து, என்பது மட்டுமல்ல புகழும் பெருமையும் நோய்நொடியற்ற வாழ்க்கையும் என அனைத்தும் கொண்டதுதான் பாக்கியம் எனப்படும். பொதுவாக, ஒன்பதாம் வீட்டின் அதிபதி எந்த நிலையில் இருந்தாலும் முடிந்தவரை நன்மையையே அளிக்கும் என்பது சோதிட நூல்களின் கருத்து, ஒருவனுக்கு செல்வமும் புகழும் கிடைக்க வேண்டுமென்றால், ஒன்று அது தனது மூதாதையர் அல்லது தந்தை வழியாகக் கிடைக்க வேண்டும் அல்லது தான் செய்யும் பணியின் காரணமாகக் கிடைக்க வேண்டும். இங்கு ஒன்பதாம் இடம் என்பது தந்தைக்கு உரியது என்பதையும் கவனத்தில் கொண்டால், ஒரு சாதகருக்கு பாக்கியம் என்பது தந்தை வழியிலும் கிடைக்கும்.


அதுபோல், ஒருவரின் வாழ்க்கை என்பது அவர் சார்ந்திருக்கும் தொழிலின் அடிப்படையிலேயே சிறப்புடனோ அல்லது சிறப்பு குன்றியோ அமையக் கூடும். இராசியில் 10-ம் இடம் என்பது தொழிலினைக் குறிக்கும் என்பதை அறிவோம். தொழில் மேன்மை என்பது 10-ம் இடத்தினைச் சார்ந்தே இருக்கும். எனவே ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய செல்வம் அல்லது புகழ் என்பது தொழிலைச் சார்ந்தும் இருக்கும். அதாவது 10-ம் இடம் என்பது 9-ம் இடத்தோடு தொடர்பில் இருப்பது சிறப்பாக இருக்கும்.


இராசியில் 9-ம் இடம் என்பது முக்கோணத்தில் (திரிகோணத்தில்) மூன்றாவது கோணம் ஆகும். திரிகோண வீடுகளில் மூன்றாவது கோணமான 9-ம் வீட்டின் தனித்துவத்தினை நாம் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். அதே போல, இராசியின் நாற்கரங்களில் (கேந்திரங்களில்) நான்காவது கேந்திரம் அல்லது நான்காவது நாற்கரத்தின் தனித்துவத்தையும் பதிவு செய்துள்ளோம். நான்காவது கேந்திரம் என்பது 10-ம் வீடு என்பது நாம் அறிந்ததே. ஆக 9-வது வீடும் 10-வது வீடும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்பதுடன் சிறப்பானது என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.


ஒன்பது மற்றும் பத்து ஆகிய இந்த இரண்டு வீடுகளின் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்பு அல்லது பார்வைகள் சோதிடத்தில் சிறப்பான பலன்களைக் கொடுக்கின்றன. இந்த அமைப்பிற்கு தர்மகர்மாதிபதி யோகம்என்று பெயர். அதாவது ஒன்பதுதர்மம், பத்துகர்மம் ஆகிய இவற்றின் அதிபதிகளின் இணைவு அல்லது தொடர்பு என்பதே தர்ம கர்ம அதிபதிகளின் யோகம் எனப்படுகிறது.


தர்மகர்மாதிபதி யோகம் எவ்வாறு அமையக் கூடும் என்பதைப் பார்ப்போம்

1.இலக்கினத்திற்கு ஒன்பதுபத்து வீடுகளின் அதிபதிகள் இணைந்திருப்பது

2.இரண்டும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வது

3.ஒன்று மற்றொன்றைப் பார்ப்பது

4.இரண்டும் பரிவர்த்தனைப் பெற்றிருப்பது




எடுத்துக்காட்டாக-



இவைகள் எடுத்துக்காட்டு மட்டுமே. ஆனால் இணைவுகள் சேர்க்கைகள் (permutation & combination) அடிப்படையில் எண்ணற்ற சாதகங்கள் அமையக் கூடும்.


இவ்வாறு அமையப் பெற்றிருக்கும் சாதகர்கள், அதாவது தர்மகர்மாதிபதி யோகம் இருக்கும் சாதக அமைப்பு உடையவர்கள்:-

      செல்வந்தர்களாக இருப்பர்

      தொழில் அதிபராக இருப்பர்

      அறிவாற்றல் மிக்கவராக இருப்பர்

      அறிவுரை வழங்குபவர்களாக இருப்பர்

      வெளிநாடு செல்லும் செல்வந்தராக இருப்பர்


ஆனால் நடைமுறையில் தர்மகர்மாதிபதி யோகம் பெற்றிருந்தும் மேற்சொன்ன பலன்கள் இல்லாத நிலையும் ஏற்படக்கூடும்


அதாவது, தர்மகர்மாதிபதி யோக அமைப்பு உடைய சாதகர்கள் மேற்கூறிய பலன்களை அடைய முடியாமல் போகும். அது ஏன்?



தர்மகர்மாதிபதி யோகம்..... தொடரும்

குறிப்பு: திரு ஓம் பிரகாஷ் அவர்கள் தெரிவித்த சில விளக்கங்களின்படி, எடுத்துக்காட்டு சாதகம் - 4ல், திருத்தம் மேற்கொள்ளவும் - தனுசுவில் சனி; மகரத்தில் குரு

Saturday, January 27, 2018

யோகங்கள்




சோதிட ஆய்வினைத் தொடர்ந்து கொண்டிருக்கும் நண்பர்களுக்கு வணக்கம். ஆய்வின் இரண்டாம் பகுதியானசோதிடப் பலன் உரைத்தலில்நாம் இருக்கிறோம். இந்த ஆய்வின் பதிவுகள் தொடர்ந்து கொண்டிருக்கு அதே வேளையில், சோதிடத்தில் உள்ள பிற தகவல்களையும் கொஞ்சம் தொட்டுச் செல்லலாம் என்று இருக்கிறேன்.


இதில் முதலில் யோகங்களை எடுத்துக் கொள்ள இருக்கிறேன். பொதுவாக யோகங்கள்தான் பலன் உரைத்தலில் மிக முக்கியப் பங்கு ஆற்றுகின்றன. யோகங்களை அறிந்து கொள்ளாமல் பலன் உரைத்தல் என்பது முற்று பெறாது.


யோக: ( योग: ) எனும் வடமொழிச் சொல்லிற்கு இணைப்பு, தொடர்பு, பயன்படுத்துதல், செய்முறை, முயற்சி, செயல் நேர்த்தி, தகுதி, கூட்டல், மன ஒழுங்கு என பல பொருட்கள் உண்டு.


சோதிடத்தினைப் பொருத்தவரையில், யோகம் என்ற சொல்லிற்கு கோள்களின் இணைவு அல்லது தொடர்பு என்பதே சரியான பொருள் ஆகும். ஒரு சாதகத்தில் கோள்கள் எவ்வாறு அமைந்திருக்கின்றன, அவை ஒன்றுக்கொன்று எவ்வித தொடர்பில் இருக்கின்றன என்பதை வரையறை செய்வதே யோகம் ஆகும். அவ்வாறு கோள்கள் இணைவிலோ அல்லது தொடர்பிலோ இருப்பதால் ஏற்படக்கூடிய சோதிட பலன்கள் யாவை என்பதைக் குறிப்பில் கொள்வதே சாதகத்தில் யோகம் ஆகும்.


இந்த அமைப்பினால் ஏற்படக்கூடிய பலன்களை யார் வரையறை செய்தது அல்லது எந்த அடிப்படையில் வரையறை செய்யப்பட்டுள்ளது என்பதை நம்மால் அறிதியிட்டு கூற முடியாவிட்டாலும், இவை பண்டைய சோதிட அறிஞர்களால் தொகுக்கப்பட்டவை, அதன் பலன்கள் ஆய்விற்கு உட்படுத்தப்பட்டு ஒரு பொதுக்கருத்திற்கு கொண்டுவரப்பட்டவை என்பதே உண்மை. அதன் அடிப்படையிலேயே இன்றும் சோதிடப் பலன்கள் உரைக்கப்பட்டு வருகிறது.


நாம் யோகங்களைப் பற்றி பதிவிடும்போது, அவற்றை பகுத்தாய்ந்து, அவை ஏன் அத்தகைய பலன்களைக் கொடுக்கின்றன என்பதை முடிந்த வரையில் விளக்க முற்படுவோம்.


யோகங்கள் என்றவுடன் அவை நன்மைதரும் யோகங்களாக மட்டும் இருக்கும் என நினைப்பது தவறு. யோகம் என்ற சொல்லிற்கு இணைவு அல்லது தொடர்பு என பொருள் இருக்கும் நிலையில்.  கோள்களின் ஒன்றுகொன்றான தொடர்பால் நன்மை மட்டும் அல்ல தீமையும் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.


ஆக யோகம் என்றால் நன்மைதரும் யோகங்களும் உண்டு தீமை தரும் யோகங்களும் உண்டு. ஆனால் வேறுபாடு கருதி நன்மை தரும் இணைவு அல்லது தொடர்புகள்யோகம்என்றும், தீமை தரும் நிலைகளைதோசம்என்றும்  வழக்கில் கொள்கிறோம். தோசம் என்பதற்கு குறைவு என்பது பொருள்.


ஒரு சாதகத்தில் நல்ல அல்லது தீய யோகங்கள் இருந்து, அவற்றை அனுபவிக்கும் வாய்ப்பு அந்த சாதகருக்கும் இருந்தால் அதுஅனுகூல யோகங்கள்எனப்படும். அனுபவிக்கும் வாய்ப்பினை இழக்கும் நிலை இருந்தால் அதுஅபவாத யோகங்கள்எனப்படும்.


பொதுவாக, யோகங்கள் சிறப்பாக செயல்பட கோள்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். வெறும் இணைவு மட்டுமே அல்லது பார்வைகள் மட்டுமே யோக பலனைக் கொடுப்பதில்லை. அதனோடு தொடர்புடைய பிற தகவல்களையும் ஆராய வேண்டும்.


யோகங்கள் சிறப்பாக செயல்பட, கீழ்வரும் அமைப்புகளில் கோள்கள் இருப்பது சிறப்பு என சோதிட நூல்கள் கூறுகின்றன.

1.   ஆட்சி, உச்சம், நட்பு, பரிவர்த்தனை, வர்க்கோத்தமம் ஆகிய நிலைகளில் இருப்பது
2.   கேந்திர, திரிகோணங்களில் இருப்பது
3.   ஆதிபத்ய தோசங்கள் இல்லாமல் இருப்பது
4.   கோள்கள் இருக்கும் நட்சத்திரத்தின் அதிபதி சிறப்பாக இருப்பது
5.   கோள்களின் யுத்தத்தில் தோல்வியடையாமல் இருப்பது
6.   நவாம்சத்தில் பலமிழக்காமல் இருப்பது
7.   கோள்கள் இருக்கும் வீட்டின் அதிபதி வலுவுடன் இருப்பது
8.   பிற கோள்களின் பார்வைகள் நல்ல நிலையில் இருப்பது
9.   மற்ற கோள்களின் இணைவுகள் நல்ல நிலையில் இருப்பது

ஆக, யோகத்தினைப் பற்றிப் பார்க்கும்போது அனைத்து நிலைகளையும் நன்கு ஆராய்ந்தே முடிவு செய்ய வேண்டும்.

யோகங்கள் என்பது கோள்களின் இணைவு மற்றும் தொடர்புகள் என்பதால், இவற்றின் எண்ணிக்கை என்பது ஏறக்குறைய நான்காயிரத்திற்குமேல் இருக்கும். அவ்வளவு யோகங்களையும் தொகுப்பது அல்லது பட்டியலிட்டு பதிவிடுவது என்பது ஒரு பெரும்பணியாக இருக்கும் என்பதாலும், அதற்கு காலமும் நேரமும் ஒத்துழைக்க வேண்டும் எனும் சார்பு நிலையும் இருப்பதால், சில முக்கிய யோகங்களை மட்டும் இங்கே பதிவிட விரும்புகிறேன். அவ்வாறான முக்கிய யோகங்களே நூற்றுக் கணக்கில் வரும் என நினைக்கிறேன். அடுத்த பதிவிலிருந்து முதன்மையான சில யோகங்களைப் பார்க்கலாம்.



யோகங்கள் தொடரும்