Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, January 25, 2014

வியாழன் **அது வண்ணத் தூரிகை வரைந்த ஓவியம்**

பெரியது என்பதால் பெரிய வியாழன்

     வண்ணக் குழம்புகளை வாரிக் கொட்டி, உருட்டி, திரட்டி, ஒரு கோளமாக வானில் எரிந்தால், எப்படித் தோன்றுமோ அப்படி வானில் மிதப்பதுதான் மிகப்பெரிய, மதிப்பு மிக்க, சூரியக் குடுபத்தின் ஐந்தாவது கோள், வியாழன்.  தொலை நோக்கியின்றி இரவில் காணக்கூடியக் கோள்களில் இதுவும் ஒன்று. சூரியக் குடும்பக் கோள்களை வரிசைப்படுத்தினால், ஐந்தாவது கோள். முதல் நான்கு கோள்களும் திடனிலைக் கோள்கள் எனும் நிலையில் இது வாயு நிலையில் உள்ள கோள். வாயு நிலை என்ற போதிலும், பாறைகளும் மிதக்கும். அதாவது திட-திரவ ஹட்ரஜன் பாறைகள் அதிகம்.

     வியாழனில் 90% ஹைட்ரஜனும், மீதி 10% ஹீலியம் பெருமளவிலும், மீத்தேன், அம்மோனியா, நீராவி, பாறைகள் எனக் கலவையும் கொண்டது. அதே நேரத்தில் வளிமண்டலம் 75% ஹட்ரஜன் 25% ஹீலியம் என சூழ்ந்துள்ளது. ஹைட்ரஜன், மீத்தேன், அம்மோனியா, கரியமிலம், ஈதேன், ஹைட்ரஜன் சல்பேட், நியான், ஆக்சிஜன், பாஸ்பின், கந்தகம், பென்சீன், ஹைட்ரோகார்பன், போன்ற பிறவாயுக்கள் கொண்டது. ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றின் அளவு மற்றும் அழுத்தம், சூரியனின் நெபுலா போல் உள்ளது.

     சூரியக் குழம்பில் முதலில் தோன்றியது வியாழன் எனும் கருத்தும் உண்டு.  திடக் கோள்களைக் காட்டிலும் வாயுக்கோள்கள் உயர்வேக காற்றழுத்தம் கொண்டவை என்பதில் வியாழன் முதலில் உள்ளது.

     வியாழனின் நிறையைப் பொருத்தவரையில், சூரியனின் நிறையில் ஆயிரத்தில் ஒரு பங்கும், பிறக் கோள்களைப் பொருத்தவரையில், அவைகள் அனைத்தின் நிறையில் இரண்டரை மடங்கும் கொண்ட மிகப்பெரிய வாயுக்கோள்.

     வியாழன், அது சூரியனிலிருந்து பெறும் ஆற்றலைக் காட்டிலும் அதிக ஆற்றலை விண்ணில் கதிரியக்கம் செய்கிறது. வியாழனின் உட்கருவானது 20,000K எனும் வெப்ப நிலையில் உள்ளது. பூமியைக் காட்டிலும், அதிக அளவிலான காந்தப் புலம் கொண்டது. அதன் வீச்சு அளவு 650 மில்லியன் கி.மீ.க்கு அப்பால் செல்லும் எனும் அளவில் உள்ளது.

   சனிக் கோள் கொண்டுள்ளதுபோல், வியாழனும் (மிக மெல்லிய) வளையங்களைக் கொண்டுள்ளது. மெல்லிய வளையம் சிறு பாறைத் துகள்களால் ஆனது. வளிமண்டலம் மற்றும் காந்தப் புலத்தில் அவை சிக்குவதால், அந்தப் பாறைகள் வளையத்தில் நிலைத்து நிற்பதில்லை.

    வியாழனுக்கு ஏகப்பட்ட சந்திரன்கள் உள்ளன. வானியலாளர்கள் அறிந்த வரையில் 67 சந்திரன்கள் வியாழனைச் சுற்றி வருகின்றன. அதில் ஒன்று, புதனைக் காட்டிலும் அளவில் பெரியது.

    வியாழன், பூமியைப்போல் அளவில் 11 மடங்கு பெரியதாக இருந்தாலும், அடர்த்தியில் பூமியைக் காட்டிலும் மிகக் குறைவு. தன்னைத்தானே சுற்றிக்கொள்ள மிகவும் குறைவான நேரமே எடுத்துக் கொள்கிறது. அதாவது ஒருநாள் என்பது வியாழனுக்கு 10 மணி நேரத்திற்கும் குறைவே.

    வியாழனின் வெப்பம் மற்றும் அழுத்தம் அதன் உட்கருவிலிருந்து உருவாகின்றது. உட்கருவிலிருக்கும் ஹைட்ரஜன் அதன் நிலைக்குமீறி வெப்பபடைவதால் உலோகமாவதாகவும் அது 10,000கே எனும் அளவில் வெப்பம் அடைவதாகவும் கூறப்படுகிறது.

     வியாழனின் மேகங்கள் அமோனியா படிகங்களாக உள்ளது. மேகங்கள் 50 கி.மீ. உயரம் உடையதாகவும் இரண்டு அடுக்குகள் கொண்டதாகவும் உள்ளன. அதனால் பூமியில் ஏற்படுவதுபோல் மின்னலும் இடியும் ஏற்படுகின்றன.அவை ஏற்படுத்தும் மின்னோட்டமானது, பூமியில் ஏற்படும் மின்னோட்டத்தைப்போல் ஆயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை. சூரியனின் புற ஊதாக் கதிர்கள் அந்த மேகங்களில் ஊடுருவும்போது, அவை வண்ணமயமாக, ஆரஞ்சு மற்றும் பழுப்பு நிறப் பிரிகைகளை உண்டாக்குகின்றன.

    வியாழனில் காணப்படுகின்ற பெருஞ்சிவப்பு புள்ளி பூமியின் சுற்றளவிற்கு சமம். நீள்வட்ட பெருஞ்சிவப்பு புள்ளி வியாழனின் தென் துருவப்பகுதியில் காணப்படுகிறது. அது புள்ளி என்று சொன்னாலும், அந்தப் புள்ளி அப்படியே பூமியை உள்ளிழுத்து விழுங்கிவிடும். ஒரு பெரும் புயலின் சீற்றம் அது.     வியாழனின் அகன்ற காந்தப் புலமானது, பூமியின் காந்தப் புலத்தைக் காட்டிலும் 14 மடங்கு அடர்வு கொண்டது. திட-திரவ ஹட்ரஜன் குழம்பால் ஆன உட்கரு சுழல் நிலையில் உள்ள உலோகங்களின் சுழற்சியில் உந்தப்பட்டு காந்தப்புலத்தை உண்டாக்குகிறது. காந்தப்புலம் என்று சொல்லுவதைவிட காந்த அடுக்கினை உண்டாக்குகின்றன என்பதே உண்மை.


சில குறிப்புகள்
 • சூரியக் குடும்பக் கோள்களில், மற்ற எல்லாக் கோள்களைக் காட்டிலும் மிகப்பெரியக் கோள்.
 • மிகவும் வெப்பமானக் கோள்.
 • சூரியனிலிருந்து 778 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
 • சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 11.86 ஆண்டுகள் ஆகும். [பூமி மையக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே ஆர்யபட்டர் 1500 ஆண்டுகளுக்கு முன்பே வியாழனின் கால அளவை 4332.2722 நாட்கள் அதாவது 11.86 ஆண்டுகள் என்று கணித்துள்ளார் – இது பற்றி பின்னர் விவாதிப்போம்]
 • தனது அச்சில் 3.13 பாகை மட்டுமே சாய்வில் உள்ளதால், பருவ மாற்றங்கள் எதுவும் ஏற்படுவதில்லை.
 • வியாழனுக்கும் வளையங்கள் உண்டு.
 • அப்பாடா என சொல்லும்படி 67 சந்திரன்களைக் கொண்டுள்ளது.
 • வியாழனின் ஈர்ப்பு சக்தி அதீதமானது. பூமியைப் போல் மூன்று மடங்கு வலிமையான ஈர்ப்பு சக்தி. அந்த சக்தி தான் பிற விண் பொருட்கள் சூரியக் குடும்பக் கோள்களைத் தாக்காமல் தன்னகத்தே இழுத்து காக்கின்றது.
 • ஒன்பது மணி 55 வினாடிகளில் தன்னைத்தானே சுற்றிக் கொள்ளும். அதாவது வேகம்… வேகம்.
 • மற்ற கிரகங்கள் சூரியனின் கதிரயக்கத்தை வாங்கி வெளியிடுகையில், வியாழன் தானே கதிரியக்கத்தை வெளிப்படுத்துகிறது. (சனியும் அந்தக் கணக்கில் வரும்).
 • இது இரவுச் சூரியன் – வெறுங்கண்ணால் காண முடியும்.
 • பூமியைக்காட்டிலும் 14 மடங்கு அதிகமான காந்தப்புலம் கொண்டது.


சில பல தன்மைகள் கொண்டிருந்தாலும், வியாழனால் ஒரு கோளாக மட்டுமே ஆட்சி செய்ய முடியும். விண்மீனாக மாறமுடியாது என பெரும்பாலான வானியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

 

….. அடுத்து
கெடுப்பாரும் …கொடுப்பாரும்… ஈடில்லா – சனி
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)அவன் - இவன்
அவன் :
வியாழன் பெரிய கோள் தான். அதுக்காக இவ்வளவு நாளா ?
இவன் :
நடுவில் ஒரு பதிவு பிருகத் ஜாதகா – தமிழாக்கம் வந்ததே அது தெரியாதா உனக்கு ?.

Thursday, January 16, 2014

பிருகத் ஜாதகா – தமிழில்-1

பிருகத் ஜாதகா 

     வணக்கம். நான் நிமித்திகன் பதிவிடத் தொடங்கியபோது, வராகமிகிரரின் பிருகத் ஜாதகா எனும் நூலைப் பற்றி முன்னுரை-5-ல் குறிப்பிட்டிருந்தேன். அதனைத் தமிழில் மொழிபெயர்ப்பது பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். நிமித்திகனில் முதன்மைப் பதிவு தற்போது பதிவிடப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், பிருகத் ஜாதகாவின் தமிழ் பெயர்ப்பையும் – கிளையாகப் பதிவிடலாம் என்று நினைக்கிறேன். பிருகத் ஜாதகாவின் தமிழ் பெயர்ப்பு நூல்கள் கிடைக்கின்றனவா என்று தெரியவில்லை. மணிமேகலைப் பிரசுரம் வராகமிகரரின் பிருகத் ஜாதகச் சாரம் என சுருக்கப் பதிப்பை வெளியிட்டுள்ளது தெரியும். மற்ற பதிப்புகள் பற்றி தெரியவில்லை. திரு. சிதம்பரம் அய்யர் அவர்கள் வடமொழி நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ததுடன், ஆங்காங்கே, தமது கருத்துக்களையும் விளக்கங்களையும் கொடுத்துள்ளார்.

    அந்த நூலை நான் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் படித்ததைத் தமிழில் மொழிபெயர்க்கும்போது, அது இன்னமும் கொஞ்சம் ஆழமாக என் மனதில் பதியும். அதே சமயம், அதை பிறர் படிக்கக் கொடுக்கும்போது, தொட்டனைத்தூறும் மணற்கேணியாக எனக்கு இருப்பதோடு, இதைப் படிக்க விரும்புவர்களுக்கு பயன் உள்ளதாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

     கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள், “ மாடு மேய்த்தது போலவும் ஆயிற்று .. பொண்ணு பார்த்தது போலவும் ஆயிற்று” என்று. அதே நிலைதான் இதிலும். நான் படித்தது போலவும் ஆயிற்று, பிறருக்கு படிக்கக் கொடுத்தது போலவும் ஆயிற்று.

     நான், பள்ளி இறுதி வகுப்புவரை தமிழ் வழிக்கல்வி பயின்றவன். ஆங்கிலத்தில் எனது அறிவு என்பது “As I am suffering from fever, I go to my sister marriage” என விடுப்புக் கடிதம் எழுதும் அளவுதான். அதன்பிறகு தட்டுத்தடுமாறி ஆங்கில வழியில்  மேற்கல்வி பயின்றவன். எனவே முடிந்தவரை பிழையில்லாமல் மொழிபெயர்க்க முனைந்திருக்கிறேன். பொருள் குற்றம் ஏதேனும் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இந்த மொழிபெயர்ப்பு முடிந்தவரை எளிமையான நேரடி பெயர்ப்பாக இருக்கும்.

     இந்த மொழிபெயர்ப்பை யாரும் எடுத்துப் பயன்படுத்தலாம். ஆனால், உங்களதுபோல் காட்டிக்கொள்ள முயலாதீர்கள். வெட்டி ஒட்டுதல் செய்யக்கூடாது என்பதற்காக இதைப் படப் பதிவாக வெளியிடுகிறேன்.

     இது நிமித்திகனின் கிளைப் பதிவு என்பதால் – பிருகத் ஜாதகா – தமிழில் என பதிவிடப்படும். வரிசை எண்கள் உண்டு.

[சோதிட ஆய்வு தொடர்பான பதிவுகள் நிமித்திகனில் முதன்மைப் பதிவுகளாக எப்போதும் இருக்கும்]


வராக மிகிரர்:

    இந்தக் கணிதக் குறியீடுகள் உங்களுக்குப் புரிகிறதா?      ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இந்தியர் இந்த சமன்பாட்டினைக் கொடுத்திருக்கிறார். அவர்தான் வராக மிகிரர். முக்கோணவியல் கணிதச் சமன்பாடுகளில் சில தான் இது. சைன், காஸ், கொசக், டான் என்பன இன்றைய பதங்களாக இருக்கலாம். ஆனால் அதன் மூலத்தை அன்றே அறிந்து கணித்து சொன்னவர் வராக மிகிரர். இவர், ஆர்யபட்டர்-2 க்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவர். ஐன்ஸ்டினுக்கு முன்பே புவியீர்ப்பு விசை பற்றி குறிப்பிட்டுள்ளதாக தெரியவருகிறது. ஆர்யபட்டர்-1 வகுத்துச் சென்ற பல கணித சூத்திரங்களை துல்லியமாக செதுக்கியவர். வானியல் அறிவியலில் சிறந்து விளங்கிய இவர், வானியல் கோட்பாடுகளை சோதிடவியலோடு தொடர்புபடுத்தி மிகச் சிறந்த சோதிட ஆய்வாளர் ஆகவும் இருந்துள்ளார். இவரது காலம் கி.பி. 505 – 587 என அறியப்படுகிறது. இவர் உஜ்ஜயினியில் வசித்தவர். 

    இவரது முதன்மை நூல்களில் சில:
 • 1.   பஞ்ச சித்தாந்தம் (வானியல் கணிதம்)
 • 2.   பிருகத் ஜாதகா (சோதிடம்)
 • 3.   லகு ஜாதகா (சோதிடம்)
 • 4.   பிருகத் சம்கிதா (கால நிகழ்வுகள்)

    இவரைப்பற்றிமட்டுமே, இருபது பதிவுகள் போடலாம். அவ்வளவு தகவல்கள் கிடைக்கப்பெற்றன.


திரு N. சிதம்பரம் அய்யர்:

    அதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. மதுரை இவரது ஊர். சென்னை அடையாரில் உள்ள தியாசோபிகல் சொசைட்டியில் உறுப்பினராக இருந்துள்ளார். திருவடி ஜோதிஸ்தந்த்ர  சபாவை தொடங்கியவர். வராக மிகரரின் பிருகத் ஜாதகா மற்றும் பிருகத் சம்கிதா ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததுடன், தேவைப்படும் இடங்களில் தமது விளக்கங்களையும் வழங்கியுள்ளார். ஆங்கில நடை சில இடங்களில் மிகக் கடினமாக இருப்பதைப் பார்க்கும்போது, இவரது ஆங்கிலப் புலமை வியக்க வைக்கிறது. அதாவது ஏறக்குறைய 150 ஆண்டுகளுக்கு முன்பு இவர் ஆங்கிலக் கல்வி பயின்று அதை கைவரப்பெற்றுள்ளார். இந்நூலின் முதற்பதிப்பு 1885-ல் வெளிவந்துள்ளது. இரண்டாம் பதிப்ப் 1905-ல் வெளிவந்துள்ளது. தமிழில் மொழிபெயர்த்தாரா என்று தெரியவில்லை.  தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை.

    இந்த பதிப்பு எனக்கு கூகுளில் டிஜிடல் லைப்ரரியில் கிடைத்தது. ஆனால் தற்போது பிருகத் ஜாதகாவின் ஆங்கில பதிப்பினை சாகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பு ஆசிரியர்கள் உஷா – ஷஷி, மேம்படுத்தியது ஜி.கே. கோயல் என்று பதிவிடப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கில மொழிபெயர்ப்பானது, அப்படியே வரிக்கு வரி, எழுத்திற்கு எழுத்து திரு. சிதம்பரம் அய்யரின் மொழிபெயர்ப்பை படி எடுக்கப்பட்டிருக்கிறது. அதைக் கீழே தந்துள்ளேன். இது தகவல் திருட்டா என்று தெரியவில்லை. ஆனால் வியாபாரம் ஆகிக் கொண்டிருக்கிறது.

              இது ORIGINAL                                இது அப்படியே COPY

இனி, பிருகத் ஜாதகா .. தமிழில் தொடரும்.Wednesday, January 8, 2014

செவ்வாய் – மங்கள்யானின் இலக்குசெவ்வாய் (பனியில் வெடித்த) கொவ்வை இதழாக

     
செவ்வாய் ஒரு இளஞ்சிவப்புக் கோள். பூமியில் உள்ள அனைவருக்கும் அதன் மேல் ஒரு கண். பூமிக்கு மிக அருகில் வீட்டு மனைகள் கிடைக்கும். பூமியிலிருந்து கூப்பிடு தூரத்தில், அதாவது சுமார் ஒன்றரை வருட பயனத்தில் நல்ல மனைகள் உடனடியாக வீடு கட்டி குடியேற கிடைக்கும் என விளம்பரம் வரும் நாளை மிக விரைவில் எதிர்பார்க்கலாம்.

      செவ்வாய், சூரியக் குடும்பத்தின் வரிசையில் நான்காவது திடக் கோள். பூமியின் விட்டத்தில் பாதி அளவு உடையது. பூமியின் எடையில் பத்தில் ஒரு பங்கே எடை உடையது. சூரியனைச் சுற்றிவர 687 நாட்கள் ஆகின்றது.

       பூமியில் நிலப்பரப்பு எவ்வளவோ அவ்வளவு நிலப்பரப்பு செவ்வாயிலும் உள்ளது. எப்போதும் புழுதிப் புயல். இரும்பு ஆக்சிடுகள் அதிகம் இருப்பதால் சிவப்பாகத் தெரிகிறது. பூமியிலிருந்து காணப்படும் வடிவில் பாதி அளவுதான் சூரியன் தெரியும். செவ்வாய்க்கு இரண்டு நிலவுகள். இரண்டிலும் பாட்டி வடை சுடுகிறாரா என்று தெரியவில்லை. வேற்றுக் கிரக வாசிகள் என்றாலே செவ்வாய்க் கிரக வாசிகள் என்றுதான் நம் மனதில் பதியப்பட்டிருக்கிறது.

      செவ்வாயின் மேற்பரப்பு

      எவரெஸ்ட் உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம். இந்தியாவில் உள்ள மிக உயரமான மலைச் சிகரம் கே2. ஆனால் சூரியக் குடும்பத்திலேயே செவ்வாயில்தான் மிகவும் உயரமான மலைச் சிகரம், அதாவது 21 கி.மீ. உயரமும் 600 கி.மீ. குறுக்களவும் கொண்ட மலை உள்ளது. செவ்வாயின் துகள்கள் (எரி கற்களாக) அவ்வப்போது பூமிக்கு வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவைதான் செவ்வாயைப் பற்றி ஆய்வதற்கு பெரிதும் துணைபுரிகின்றன.

செவ்வாயில் மனிதன் – கற்பனையின் உச்சம் 
(உண்மையில் அது ஒரு பாறையின் முனை)


     முன்னொரு காலத்தில் (பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு) செவ்வாயில் கடலும் ஆறும் இருந்திருக்கக் கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எரிமலைச் சாம்பல்களால் தற்போது நீர் இல்லை என கருதுகின்றனர். குளிர் தட்ப வெப்பமும், இலகுவான வான் வளி சூழலும் தண்ணீரைத் தக்கவைத்துக் கொள்ள ஏதுவாக இல்லை.ஆனால் துருவங்களில் நீர் பனிக்கடலாய் இருக்கலாம் எனும் கருத்தும் உண்டு.

     கரியமில வாயு 95%, நைட்ரஜன் 3%, மற்றவை 2% உள்ள வளிமண்டலம் கொண்டது செவ்வாய். செவ்வாயும் பூமியைப் போல் சற்றே சாய்ந்திருப்பதால், இங்கும் பருவநிலை மாற்றம் உண்டு.

     செவ்வாய்க்கு காந்தப்புலம் இருப்பதைப் பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. செவ்வாயின் தென் துருவத்தில் இன்னமும் காந்தப்புலம் இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.

சில குறிப்புகள்

 • ·         சூரியனிலிருந்து 228 மில்லியன் கி.மீ. தூரத்தில் உள்ளது.
 • ·         சூரிய மண்டலத்தில் நான்காவது கோள்.
 • ·         சூரியனின் வெளிவட்டப்பாதையில் உள்ள கோள்களில் முதலாவது கோள்.
 • ·         பூமியைப் போலவே தன்னைத்தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரம் ஆகின்றது.
 • ·         சூரியனைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் கால அளவு 687 நாட்கள்.
 • ·         திடக் கோள். பாறைகளும், எரிமலைக் குழம்பின் மிச்சங்களும் விரவிக் கிடக்கின்றன.
 • ·         தற்போதைய கருத்துக்களின்படி மனிதன் வாழக்கூடிய சூழல் இல்லை.
 • ·         செவ்வாயிலும் காந்தப்புலம் இருக்கிறது.
 •  மேலும் தகவல்களுக்கு, நமது மங்கள்யான் சொ(செ)ல்லும் வரை காத்திருப்போம்.


இதையும் படியுங்கள்:


07.01.2013 அன்று தினத் தந்தியில் வந்த ஒரு செய்தித் தகவல். 


வான் ஆய்வாளர்கள் இதனை உறுதி செய்தல் வேண்டும். இது பற்றி பின்னர் விவாதிப்போம்.

அடுத்து….. குரு பார்க்க …..
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)

அவன் - இவன்
அவன் :
திருநள்ளாறு போகலாமா ?
இவன் :
நீ எதுக்கு கேக்கறன்னு தெரியும். கொஞ்சம் பொறு, அடுத்த சனிப்பெயர்ச்சிக்கு போகலாம்.


Sunday, January 5, 2014

நிலா நிலா ஓடி வா..

    

     நிலா என்று அழைக்கப்படும் சந்திரன், பூமியின் துணைக் கோள். நமது சூரியக் குடும்பத்தில் பல நிலாக்கள் தவழ்ந்து வருகின்றன. ஆனால் நிலா என்றதும் பாட்டி வடை சுடும் நமது பூமியின் சந்திரன் மட்டும் தான் நமக்குத் தெரியும். பூமிக்கு மிக அருகில் உள்ள (துணைக்) கோள் சந்திரன்.

     வானியலாளர்கள் சந்திரன் தோன்றியதைப்பற்றி பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கிறார்கள்.
-            (1) பூமியின் சுழற்சியில் உடைந்து திரிந்த பந்து

-     (2) சூரியக் குடும்பத்தில் மற்றக் கோள்கள் உருவான போதே சந்திரனும் உண்டாகி விட்டது

-        (3) சூரியக் குடும்பத்தில் ஒன்றான சந்திரன் பூமியின் சுற்று வட்டப்பாதைக்கு மிக அருகில் வந்த போது, பூமியால் இழுக்கப் பட்டு, அதன் சுற்றுப்பாதைக்குல் வந்துவிட்டது.

-    (4) செவ்வாயின் அளவு உள்ள ஒருகோள் பூமியைத் தாக்கியதில், அதன் மிச்சம் மீதிகள் சந்திரனாக மாறி இந்த பூமியைச் சுற்றுகின்றன. (இதுவே பொதுவாக தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டக் கொள்கை)

    நிலவில் காற்று என்பது ஒரு வெற்றிடம் போல் மிகக் குறைவாக இருப்பதால், பூமியைப் போல் ஒரு தட்பவெப்பக் காப்பு அங்கு இல்லாததால்  சூரியனின் வெப்பம் மிகக் கடுமையாக உள்ளது. அதேபோல் குளிரும் கடுமையாக உள்ளது. வெப்பம் +260 டிகிரியாகவும் குளிர் -260 டிகிரியாகவும் உள்ளது. சந்திரனிலும் எரிமலைகள் உள்ளன. ஆனால் அவை ஆழ்ந்தத் தூக்கத்தில் உள்ளன. விழிப்பது கடினம். சந்திராயன் செயற்கைக் கோள் நிலவில் தண்ணீர் உள்ளது என கண்டுபிடித்துள்ளது. ஆனால் சந்திரனில் கடல் எதுவும் இல்லை.
                       சந்திரனும் சந்திராயனும்

    பூமியை விட்டு சந்திரன் ஒவ்வொரு வருடமும் ஒரு இன்ச் விலகிப் போவதாக வானியலாளர்கள் சொல்லுகின்றனர். பூமியைத்தவிர மனிதன் காலடிப் பட்ட வேறு இடம் சந்திரன் மட்டும் தான்.

     சந்திரனில் ஈர்ப்பு விசைக் குறைவு. அதனால் தான் நீல் ஆம்ஸ்ட்ராங்க் துள்ளிக் குதித்து நடந்ததாக சொல்லப்படுகிறது. (அப்பல்லோ கதை பொய் என்ற கருத்தும் உண்டு). ஆனால் சந்திரனின் ஈர்ப்பு விசையால் தான், பூமியில் கடலில் அலைகளின் ஆர்ப்பரிப்பு என்றும் சொல்லுகிறார்கள். அதுமட்டுமின்றி பூமியின் கால அளவில் மாற்றத்தையும் அது உண்டாக்குகிறது.

      நிலவு ஒரு பெண்ணாகி நீந்துகின்ற அழகு என்பது, மற்றக் கோள்களைக் காட்டிலும் மிக அதிகமாக சூரியனின் வெளிச்சத்தை நமக்கு பிரதிபலித்துக் கொண்டிருப்பதால் ஏற்படும் அழகு. .

     சில குறிப்புகள்:

 • -   நிலவு பூமியிலிருந்து ஏறக்குறைய 3.84 இலட்சம் தொலைவில் உள்ளது.
 • - நிலவு பூமியை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் கால அளவும் அது தன்னைத்தானே சுற்றிக் கொள்ள எடுத்துக் கொள்ளும் அளவும் ஏறக்குறைய சமம். அதாவது 27.5 நாட்கள் மற்றும் 29 நாட்கள்.
 • -   அதனால்தான் நமக்கு எப்போதும் ஒரு முகமே காட்டுகின்றது.
 • -   பாறைகளும் படிமங்களும் நிறைந்த ஒரு திடக் கோள் (துணைக் கோள்).
 • -   மிக மெல்லிய சுற்றுச் சூழல் கொண்டது. அதாவது வளி மண்டலம் இலகுவானது.
 • -   நிலவுக்கு நிலவு கிடையாது.
 • -   எளிதில் எல்லோராலும் பார்க்க முடிந்த விண் பொருள்.
 • -   பள்ளங்களும்  மேடுகளும் நிறைந்த தரைப்பகுதி, இங்கிருந்து பார்க்கும் போது, மாய உருவத் தோற்றங்களை உண்டாக்கிட, இன்னமும் பாட்டி வடை சுட்டுக் கொண்டிருக்கிறார்.
 • -   கிரகணங்கள் உருவாக சந்திரனும் பங்கு வகிக்கின்றது. (கிரகணங்கள் பற்றி பின்னர் பேசுவோம்)
 • -   நிலவின் சுற்றளவு 10,921 கி.மீ.
 • -   பூமியின் எடையின் 81-ல் ஒரு பங்கு மட்டுமே.
 • -   காணப்படும் தனிமங்கள் – ஆர்சனிக், ஹீலியம், சோடியம், பொட்டாசியம், ஹைட்ரஜன். ஆனால் ஆக்சிஜன் இருப்பதாகத் தகவல் இல்லை.
 • -   நிலவிற்கும் காந்தப் புலம் இருக்கிறது.

                                                             அடுத்து .. தோஷம் இல்லாத செவ்வாய்
(நன்றி: பல்வேறு இணைய தளங்கள்)

அவன் - இவன்
அவன் :
சந்திரன் – அப்பல்லோ – உண்மையா ? பொய்யா ?
இவன் :
தேவயானியைக் கேட்டுப்பார். அவங்கதான் அமெரிக்காவுல இருக்காங்க.