Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0
Showing posts with label 12 வீடுகள். Show all posts
Showing posts with label 12 வீடுகள். Show all posts

Wednesday, February 3, 2016

மூன்றாம் வீடு முதல் பன்னிரண்டாம் வீடு வரை – முன்னோர் வகுத்த வரையறைகள்




இனி, மூன்றாம் வீடு முதல் பன்னிரண்டாம் வீடு வரை, அவற்றின் பொது வரையறைகளைத் தொகுத்துக் காண்போம். இங்கு கொடுக்கப்பட்ட பொது வரையறைகள் என்பன, பல்வேறு சோதிட நூல்களில் பொதுவில் காணப்படும் வரையறைகள் ஆகும். இவை மட்டுமின்றி வேறு பல வரையறைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை சிலவற்றோடு மாறுபட்டும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தாயார் குறித்த வரையறை என்பது நான்காம் வீடு என பொதுவில் அனைத்து சோதிட நூல்கள் கூறினாலும், மகாக்கவி காளிதாசரின் உத்திர காலாமிர்தத்தில், பத்தாம் வீட்டில் தாயார் பற்றி அறியலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதுபோலவே, பல்வேறு நூல்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் பல்வேறு வரையறைகளை வகைப்படுத்திக் கொடுத்திருந்தாலும், சில வரையறைகள் அனைத்து நூல்களிலும் பொதுவில் உள்ளன. எனவே அவற்றை மட்டுமே பொதுவரையறையாகக் கொடுத்துள்ளேன், மேலும், அத்தகைய வரையறையில் உள்ளவையின் விரிவையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக எட்டாம் வீட்டில் ‘நட்டம்’ என்றும் பதினொன்றாம் வீட்டில் ‘இலாபம்’ என்று இருந்தாலும், அவற்றின் எதிர்மறைக் கருத்துக்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அமைப்பு நிலை சரியில்லை என்றால் இலாபம் என்பது நட்டமாகவும் மாறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

       மீண்டும், சென்ற பதிவில் கூறியதை ஞாபகப்படுத்துகிறேன். இந்த பொது வரையறை என்பது அந்தந்த வீட்டின் பொது வரையறைதான். இவற்றின் நிலை என்பது, அது சார்ந்த இராசி, அதிலுள்ள கோள்கள், பார்வைகள், பலங்கள் ஆகியவற்றைப் பொருத்தே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

மூன்றாம் வீட்டின் பொது வரையறைகள் –

       உடன் பிறந்தவர்கள், வீரம், காது-மூக்கு-தொண்டை, சிறு பயணங்கள், பணியாட்கள் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

நான்காம் வீட்டின் பொது வரையறைகள் –

       தாயின் நிலை, கல்வித்திறன் (வித்தை), வாகனம், வீடு, நிலபுலன்கள் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஐந்தாம் வீட்டின் பொது வரையறைகள் –

       குழந்தைப் பேறு, பாட்டான், நல்வினைகள், மனத்திறன் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஆறாம் வீட்டின் பொது வரையறைகள் –

       உடல் நோய்கள், பகைவர்கள், பயம், தாய் வழி உறவினர்கள், சிறைப்படல் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஏழாம் வீட்டின் பொது வரையறைகள் –
       திருமணம், வாழ்க்கைத் துணை, நண்பர்கள், கூட்டு முயற்சி, வாழ்க்கை இன்பம் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

எட்டாம் வீட்டின் பொது வரையறைகள் –

       ஆயுட்காலம், பொருள் நட்டம், நெடுநாள் பிணிகள், பகை, கவலை, துன்பம் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஒன்பதாம் வீட்டின் பொது வரையறைகள் –

       தந்தை, குலப் பெருமை, தர்மச் சிந்தனைகள், வாழ்க்கை நலன் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

பத்தாம் வீட்டின் பொது வரையறைகள் –

       தொழில், வணிகம், பதவி-அதிகாரம், பெரும்புகழ் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

பதினொன்றாம் வீட்டின் பொது வரையறைகள் –

       மிகை செல்வம் (இலாபம்), எதிர்பாரா செல்வம், தமையன், ஆதாயம் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

பன்னிரண்டாம் வீட்டின் பொது வரையறைகள் –

       அயல் நாட்டு பணிகள், பயணங்கள், இழி செயல்கள், செல்வ விரையங்கள், தூக்கம் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்


       மேலே கூறப்பட்டவைகளின் வரையறைகளை எவ்வாறு தீர்மானித்தார்கள் என்பதற்கு எவ்வித கணிதம் சார்ந்த விளக்கமும் இல்லை.  முதல் வீடு என்பது தன்னிலை, இரண்டாம் வீடு என்பது தன் வாழ்வு என வகைப்படுத்திய வகையில் சரியெனக் கொண்டால், அடுத்து தாய், தந்தை, உடன்பிறந்தோர், உறவினர், வித்தை, தொழில், வாழ்க்கைத்துணை, இல்லற வாழ்வு, குழந்தைப்பேறு, செயல்பாடுகள், ஆயுள் என ஒரு வரிசையில் வகைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இங்கு மூன்றாம் வீடு – உடன் பிறந்தோன், நான்காம் வீடு – தாய், ஐந்தாம் வீடு – குழந்தை, ஆறாம் வீடு – நோய்நொடி, ஏழாம் வீடு – வாழ்க்கைத் துணை, எட்டாம் வீடு – ஆயுள், ஒன்பதாம் வீடு – தந்தை, பத்தாம் வீடு – தொழில், பதினொன்றாம் வீடு – மிகைச் செல்வம், பன்னிரண்டாம் வீடு – மிகைச் செலவு என பொதுவில் வரையறுத்துள்ளனர். இதில் ஏழாம் வீடு – வாழ்க்கைத்துணை என்பது மட்டும் மிக்க பொருத்தாமாய், அதாவது தன்னிலை என்பது வாழ்க்கைத் துணையோடு இணையும்போது தம் நிலை என மாறுவதால், அதாவது ஒன்றிற்கு நேர் எதிரான ஏழாம் வீடு (180 பாகை நேர்க்கோடு) என்பதில் அமைந்திருப்பதில் பொருத்தம் உள்ளது. மற்றவை அனைத்தும், ‘முன்னோர்கள் தம் அனுபவத்தை பதிவு செய்துள்ளார்கள் – நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம்’ எனும் நிலையில்தான் ஏற்க வேண்டியுள்ளது. அதனால்தான், அவரவர் அனுபவத்தினை (கற்றது – கேட்டது) பதிவு செய்ததில் சிற்சில கருத்துகளில் முரண் நிலைகள் உள்ளன. எனவே, இந்த பன்னிரெண்டு வீடுகளுக்குமான வரயறைகளுக்கான ‘விவாதத்தை நிலுவையில் வைத்துவிட்டு (Pending discussion)’ பொதுவில் வைக்கப்பட்ட வரையறைகளை, ‘நிகழ்தகவு’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வோம்.



அடுத்து – கோள்களின் வரையறைகள்

Saturday, January 30, 2016

இரண்டாம் வீடு – இது தான் வாழ்க்கை


      ஒன்று முதல் 12 வரையிலான வீடுகளின் வரையறை விளக்கத்தில் எவ்வித கோள்களின் நிலையினையும் நான் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அந்த வீடு உள்ள இராசி, அந்த வீட்டில் உள்ள கோள்கள், அவற்றின் தன்மைகள் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமல், வீடுகளின் தனித்துவமான வரையறைகளை மட்டுமே இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொள்கிறேன். முதலில் இவற்றின் தனி இயல்புகளை வரையறை செய்துவிட்டு, பின்னர் அவற்றின் ‘இருப்பு’ நிலையினை ஆராய்வதே முறை என்பதால், 12 வீடுகளின் தனி இயல்புகளை வரையறை செய்வோம்.

அடுத்து நாம் இரண்டாம் வீட்டின் வரையறையினைப் பார்ப்போம். முதல் வீடு தனி மனித இயல்புகளை வரையறுப்பதாகக் கூறினோம். இரண்டாம் வீடு என்பது ஒரு சாதகரின் வாழ்க்கை நிலையினை உரைப்பதாக வரையறுத்துள்ளனர். வாழ்க்கை நிலை என்பது – கல்வி, குடும்பம், செல்வம் ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதால் அவை தொடர்புடைய செய்திகளைத் தொகுத்து அளித்துள்ளனர். இங்கும், பல்வேறு சோதிட நூல்கள் பல்வேறு இயல்புகளைத் தெரிவித்தாலும், சில இயல்புகளில் ஒன்றுபட்டும், சில இயல்புகளில் மாறுபட்டும் இருக்கின்றன. பொதுவில் ஒன்றுபட்டு இருப்பவை – கல்வி, குடும்பம், செல்வம் ஆகிய மூன்றில் மட்டுமே. எனவே இவற்றின் விரிவுகளையே நாம் இரண்டாம் வீட்டின் இயல்புகளாகக் கொள்ள வேண்டும்.

கல்வி எனும் நிலையில் – மொழி, பேச்சு, வாக்கு, கல்வி நிலை

குடும்பம் எனும் நிலையில் – வாழ்க்கை நிலை, இன்ப துன்பங்கள், மன நிலை

செல்வம் எனும் நிலையில் – பொன், பொருள், வாழ்விற்கான செல்வ நிலை

ஆக, இவை தொடர்பான நிலைகளையும், இவற்றின் நீட்சியையும் உள்ளக்கியதே இரண்டாம் வீட்டின் இயல்புகள் என வரையறுக்கப்பட்டுள்ளன. நீட்சி எனும்போது – எடுத்துக்காட்டாக – எழுத்து, அறிவு, கணிதம், பேச்சுத் திறன் போன்றவற்றை கல்வியோடு தொடர்பு படுத்திக் கூறுவதாகும். கல்வி என்பது படிப்பறிவும் பட்டறிவும் இணைந்ததே.

      இந்த இரண்டாம் வீட்டின் இயல்புகளை எவ்வாறு வரையறுத்துள்ளனர் என்பதை, இலக்கின வரையறையில் கூறியதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் நிகழ்தகவு எனும் கணிதம்.

…. அடுத்து மூன்றாம் வீடு


      

Thursday, January 14, 2016

இலக்கினத்தின் தன்மைகள்



பொதுவாக இலக்கினத்தின் இயல்புகள் என சோதிட நூல்களில் குறிப்பிடப்படுவது, முந்தைய பதிவில் கூறிய அனைத்து இயல்புகளையும் உள்ளடக்கியே உள்ளது.

சாதகரின் பிறப்பு – இறப்பு; புகழ்ச்சி-இகழ்ச்சி; மகிழ்ச்சி-துயரம்; செல்வம்-வறுமை; தலை,  உடல், அங்க அடையாளங்கள் ஆகிய அனைத்தோடும் தொடர்புடைய செய்திகள்.

பிறப்பு என்ற நிலையில், சாதகர் எவருக்கு பிறப்பார், எங்கு பிறப்பார், பிறப்பில் ஏற்படும் சாதக பாதகங்கள் ஆகியவற்றைப்பற்றியும்; இறப்பு என்ற நிலையில், எந்த சூழல், எவ்வளவு ஆண்டுகள் போன்ற தகவல்களையும்; புகழ்ச்சி-இகழ்ச்சி எனும் நிலையில், அவரின் புகழ்பட வாழ்தல் நிலையும்; இகழ்ச்சி எனும் நிலையில் அதற்கு நேரிடையாக வாழ்தல் நிலையும்; மகிழ்ச்சி எனும் நிலையில், மகிழ்ச்சிகரமான வாழ்வு அமையும் சூழல்களும், இகழ்ச்சி எனும் நிலையில் அதற்கு நேரிடையான சூழல் நிகழ்வுகளும்;  செல்வம் எனும்போது, வாழ்க்கையின் வசதி வாய்ப்புகள், செல்வ நிலை அடையும் வகைகள்; வறுமை எனும்போது, வாழ்க்கையில் ஏற்படும் வறுமைத் துயரங்கள்; உடலமைப்பு பற்றிய பொதுவானத் தகவல்கள்; என அனைத்தும், அதாவது ஒவ்வொன்றிலும் ஏற்படும் உயர்வு தாழ்வுகள் அனைத்தும் இலக்கினத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும் என்பதே இதன் பொருள்.

மொத்தத்தில் ஒரு சாதகரின் வாழ்வு தொடங்கி மறைவு வரையில் உள்ள அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள உதவுவது இலக்கினமே. அதாவது, ஒரு சாதகரின் – தாய், தந்தை, பிறப்பு, வாழ்க்கை, வீரம், கல்வி, செல்வம், வேலை, வாழ்க்கைத்துணை, குழந்தைபேறு, நற்பேறு, மறைவு, ஆகிய அனைத்து விவரங்களையும் இலக்கினத்தின் துணையுடனேயே அறிந்துகொள்ள முடியும் என்பது சோதிட விதி. இந்த அனைத்தும் என்பது நன்மை தீமை இரண்டும் சேர்ந்த கலவைதான்.

மேற்கூறியவைகளில், பலவற்றிற்கு ஏனைய வீடுகள் (2-12) தனித்தனியே துறைகள் கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த தலைமை என்பது இலக்கினமே.

அதே வேளையில், இலக்கினத்தின் வலிமையைக் கொண்டுதான் மற்ற பலன்களைத் தீர்மானிக்க வேண்டும். அதாவது, இலக்கினம் - இலக்கினாதிபதி – இலக்கினம் இருக்கும் இராசியின் தன்மைகள் – இலக்கினத்தில் இருக்கும் கோள்கள் –  இலக்கினத்திலிருந்து விலகியிருக்கும் கோள்கள் - அவற்றின் பார்வைகள் – பலங்கள் – பிற வீடுகளில் இருக்கும் கோள்களின் இலக்கினப்பார்வை – இது போன்று பல்வேறு தகவல்களை உள்ளடக்கியே பலன்களைத் தீர்மானிக்க முடியும் என்பதால், இலக்கினத்தின் இயல்பு என்பது ஒரு வரையறைக்குள் வகுக்க முடியாது எனும் வரையறையில் வருகிறது.

சரி, இலக்கினத்தின் இயல்புகள் என மேலேக் குறிப்பிடப்பட்டனவற்றை எதை வைத்துக் கொண்டு தீர்மானித்தார்கள் என்பது விவரிக்க முடியா தன்மையுடனேயே உள்ளது. எடுத்துகாட்டாக, உடல் அமைப்பு, தலை, புகழ் என்பனவற்றை எடுத்துக் கொள்வோம். ஏன் அல்லது எப்படி இவற்றை இலக்கினத்தின் இயல்பாகத் தீர்மானித்தார்கள் என்பதற்கு போதிய விளக்கம் இல்லாமலேயே உள்ளது.

இலக்கினம் என்பது பிறக்கும் நேரத்தினை வைத்து தீர்மானிக்கப்படுவதால், பிறப்பு-இறப்பு பற்றி குறிப்பிடுவது என வாதத்திற்கு வைத்துக் கொண்டாலும், அதனை எவ்வித அறிவியல் விளக்கத்திற்கும் உட்படுத்தமுடியவில்லை. இதுபோலவே பிற இயல்புகளையும் குறிப்பிட வேண்டியுள்ளது.

அதே வேளையில், அந்த இயல்புகளைச் சாதகங்களில் சோதித்துப் பார்க்கும்போது பெரும்பாலும் இயல்பாகப் பொருந்துவதை உணரமுடிகிறது.

இது எப்படி எனில், தொடர் நிகழ்வுகளின் பதிவுகள், ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி, தரவுகளாக்கி, புள்ளியியல் கணிதம் செய்தால் கிடைக்கும் விடைபோலவே மெய்ப்பிக்கபட்டிருப்பதால், இந்தக் கணிதம் மெய்யென எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

ஒரு எளிய எடுத்துக்காட்டாக – கார்த்திகை தீபம் அன்று மழைபெய்யும் அல்லது சிறு தூறலாவது இருக்கும் என்பது பொதுவாக அதைக் கொண்டாடும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தகவல். இது பெரும்பாலும் மெய்ப்பிக்கப்பட்டே வருகிறது. சில சமயங்களில் மழைபெய்யும் நிகழ்வு இல்லாமலும் இருக்கும். இருப்பினும் அதிக அளவில் நிகழப்படும் நிகழ்தகவினால் இது மெய்யென்று நிரூபிக்கப்படுகிறது. இது மிக எளிமையான எடுத்துகாட்டு அவ்வளவுதான்.

இதுபோலவே, இலக்கினத்தின் இயல்புகளும் தொன்றுதொட்டும் இன்றும் நிகழ்வில் பெருமளவு ஏற்புடையதாக இருப்பதால், இந்த இயல்புகளே இலக்கினத்தின் வரையறைகள் எனக் கொள்ளலாம். 

ஏதேனும் மாற்றுக் கருத்து இருந்தால் அல்லது இன்னும் விளக்கமான தகவல் இருந்தால், தாராளமாகத் தெரிவிக்கலாம்.


அடுத்து – இரண்டாம் வீடு