இனி ஐம்பூதப் பிரிவுகளைப் பார்க்கலாம் – அதாவது, ஆகாயம் நீங்கலாக மீதமுள்ள நான்கு வகைகளைப் பார்க்கலாம்.
நெருப்பு இராசிகள்:
(1)
மேசம் – இதன் அதிபதி செவ்வாய் – செவ்வாய் நெருப்புக் கோள் என அழைக்கப்படுவதாலும், அது மேசத்திற்கு அதிபதியாக இருப்பதாலும், மேசத்தை நெருப்பு இராசி என்பதில் தவறில்லை.
(2)
சிம்மம் – இதன் அதிபதி சூரியன் – சூரியன் நெருப்புக் கோள் என அழைக்கப்படுவதாலும், அது சிம்மத்திற்கு அதிபதியாக இருப்பதாலும், சிம்மத்தை நெருப்பு இராசி என்பதில் தவறில்லை.
(3)
தனுசு – இதன் அதிபதி வியாழன் – வியாழன் ஒரு மிகப்பெரிய வாயுக் கோள். எனவே மேற்சொன்ன அடிப்படைவிதி இங்கு பொருந்தவில்லை. அடுத்து – தனுசுவில் உள்ள விண்மீன்களின் அதிபதிகள் மூலம்-கேது, பூராடம்-சுக்கிரன், உத்திராடம்-சூரியன். இதனை நெருப்பு இராசி என்பதற்கு உள்ள ஒரு வாய்ப்பு என உத்திராடத்தைக் கூறலாம். இருப்பினும், உத்திராடமானது நான்கில் ஒருபாகம் மட்டுமே தனுசுவில் இருக்கிறது. இவ்வாறான நிலையில் தனுசுவை எவ்வாறு நெருப்பு இராசி என வகைப்படுத்தியுள்ளனர் என்பது கேள்விக்குறியே.
நிலம் இராசிகள்:
(1)
ரிசபம் – இதன் அதிபதி வெள்ளி – வெள்ளி அல்லது சுக்கிரன் எனும் கோள், சூரியனின் உள்வட்டக் கோள். அது மட்டுமின்றி உள்வட்டக் கோள்கள் மட்டுமே திடக் கோள்கள். செவ்வாய் ஏற்கனவே மேசத்திற்கு நெருப்பு எனும் தகுதியைக் கொடுத்துவிட்டதால், மீதமுள்ள வெள்ளியும் புதனும் கணக்கில் எடுத்துக் கொள்ளும்போது, வெள்ளியைக் கருத்தில் கொண்டு, ரிசபத்தினை நில இராசி எனக் கொண்டுவந்திருக்கலாம். ஆனால் இந்த முறை சரியா என்பது தெரியவில்லை.
(2)
கன்னி – சிம்மத்திற்கு அடுத்த இராசி. இதன் அதிபதி புதன். ஏற்கனவே கூறியவாறு, புதனும் திடக் கோள் என்பதால், இங்கு புதனுக்கு வாய்ப்புக் கொடுத்து, கன்னியை நில இராசி என வகைப்படுத்தினார்களா எனத் தெரியவில்லை.
(3)
மகரம் – இதன் அதிபதி சனி எனும் பனிக்கோள். இது வெளி வட்டக் கோள் என்றாலும், முழுவதும் பனிக்கட்டிகளால் ஆன கோள் என்று வான் அறிவியல் கூறுகிறது. அதாவது திரவமானாது, உருகும் திட நிலையில் உள்ள சனிக்கோள். இங்கும், மகரத்தினை எப்படி நில இராசி எனப்பிரித்தார்கள் என்பதும் தெரியவில்லை.
காற்று இராசிகள்:
(1)
மிதுனம் – இதற்கு புதன் எனும் கோள் அதிபதி. சூரியனின் உள்வட்டக் கோள் என்பதுடன் திடக் கோள். ஒரு திடக் கோளினை அதிபதியாகக் கொண்ட மிதுன இராசிக்கு, காற்று இராசி என வகைப்படுத்தியுள்ளது சரியா எனத் தெரியவில்லை.
(2)
துலாம் - இதற்கு வெள்ளி எனும் கோள் அதிபதி. இதுவும் சூரியனின் உள்வட்டக் கோள் என்பதுடன் திடக் கோள். இங்கும் ஒரு திடக் கோளினை அதிபதியாகக் கொண்ட துலாம் இராசிக்கு, காற்று இராசி என வகைப்படுத்தியுள்ளது சரியா எனத் தெரியவில்லை.
(3)
கும்பம் - இதற்கு சனி எனும் கோள் அதிபதி. ஒரு திரவக் கோளினை அதிபதியாகக் கொண்ட கும்ப இராசிக்கு, காற்று இராசி என வகைப்படுத்தியுள்ளது சரியா எனத் தெரியவில்லை.
நீர் இராசிகள்:
(1)
கடகம் – இதற்கு சந்திரன் எனும் கோள் அதிபதி. சந்திரன் ஒரு நீர்க் கோள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையிலேயே கடகத்தினை, நீர் இராசி என வகைப்படுத்தியுள்ளனர்.
(2)
விருச்சிகம் – இங்கு செவ்வாய் இந்த இராசிக்கு அதிபதி. ஏற்கனவே, செவ்வாயினை நெருப்புக்கோள் என வகைப்படுத்தப்பட்ட நிலையில், விருச்சிகம் எப்படி நீர் இராசி என வகைப்படுத்தலாம் என்பது தெரியவில்லை. இருப்பினும் ஒரு ஆதரவுக் கருத்தாக, இங்கு நீர்க் கோளான சந்திரன் நீச்சம் அடைவதைக் கணக்கில் கொண்டாலும், நீச்சம் என்பது கீழ் நிலை, அதாவது எதிர் நிலை எனும் வகையில் அதுவும் பொருந்தவில்லை.
(3)
மீனம் – வியாழன் கோள் இதன் அதிபதி. வியாழன் ஒரு வாயுக் கோள். அவ்வாறு இருக்கையில், இதனை வைத்து முடிவு செய்வது சரியல்ல. இருப்பினும், மீனத்தின் வடிவமானது, இருமீன்கள் எனும் நிலையில் இருப்பதாலும், மீன்கள் நீரில் வாழ்பவை என்பதாலும், இதனை நீர் இராசி எனக் கூறியிருக்கலாம். ஆனால், மீன்களின் வடிவம் என்பது ஒரு குறியீடு மட்டுமே. அதனைக் கொண்டு அவ்வாறு தீர்மானிப்பது சரியா என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், ஒரு சில இராசிகள் மட்டுமே, வகைப்படுத்துதலில் ஏற்புடையதாக இருக்கின்றன. மற்றவற்றிற்கு பொருந்தவில்லை.
இருப்பினும், தர்க்க வரிசையில் இதனை வரிசைப்படுத்தியுள்ளது தெரியவருகிறது. அதாவது – இராசிச் சக்கரத்தில் திரிகோணம் (முக்கோணம்) என்பது மிகச் சிறப்புடையக் கோண அளவு. அந்த வகையில், ஒரு வரிசைக்கிரமமாக, ஒரு இராசியை அதன் நிலையினைத் தீர்மானித்துவிட்டு, மற்ற இரண்டு கோணங்களின் இராசிகளையும் அதே நிலைக்கு வகைப்படுத்தியுள்ளனர்.
எடுத்துக்காட்டாக –
(1)
மேசத்தை நெருப்பு இராசி எனத் தீர்மானித்துவிட்டு, அதன் மற்ற திரிகோண இராசிகளான சிம்மம் மற்றும் தனுசு ஆகிய இரண்டினையும், நெருப்பு இராசி என வகைப்படுத்தியுள்ளனர்.
(2)
அதேபோல், ரிசபத்தினை நில இராசி எனத் தீர்மானித்துவிட்டு, அதன் மற்ற திரிகோண இராசிகளான கன்னி மற்றும் மகரம் ஆகிய இரண்டினையும், நிலம் இராசி என வகைப்படுத்தியுள்ளனர்.
(4)
அதேபோல், கடகத்தினை நீர் இராசி எனத் தீர்மானித்துவிட்டு, அதன் மற்ற திரிகோண இராசிகளான விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய இரண்டினையும், நீர் இராசி என வகைப்படுத்தியுள்ளனர்.
அதாவது, {1, 5, 9}, {2, 6, 10}, {3, 7, 11}, {4, 8, 12} என இராசிகளைப் பிரித்து பின்னர் தொகுத்து, முறையே – நெருப்பு, நிலம், காற்று, நீர் என ஐம்பூதத் தத்துவத்தில் ஆகாயம் நீங்கலாகப் பிரித்துள்ளனர்.
இருப்பினும், இராசிகளை வகைப்படுத்தியதில் ஐம்பூதத் தொடர்பு என்பதில் தெளிவு இல்லாமலேயே இருக்கிறது. இது என் வரையில் ஏற்பட்ட விளக்கம். இதற்கு வேறு ஏதேனும் அடிப்படை விளக்கங்கள் பண்டைய நூல்களில் இருந்திருக்கலாம், அது தற்போது கிடைக்காமலும் இருக்கலாம். அதேபோல், ஐம்பூதத் தத்துவத்தினை இராசிகளில் கொண்டுவர வேண்டும் எனும் நிலைப்பாட்டிலும் பின்னர் வந்தவர்கள் தர்க்க வரிசையில் இதனை மேற்கொண்டிருக்கலாம்.
எப்பொழுதும் ஏற்புடைய விளக்கங்களே ஒரு தேற்றத்தை(Theory) நிரூபிக்கும். இது சோதிடத்திற்கும் பொருந்த வேண்டும். இதுபற்றி மேலும் அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் தெளிவான விளக்கத்தினை அளித்தால், பதிவில் அதற்கேற்றவாறு திருத்தம் மேற்கொள்ள முடியும்.
இனிவரும் பதிவுகளில் பிற பிரிவுகளைப் பார்ப்போம்.