Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, January 7, 2017

தசா புத்திகள் அல்லது கால முறைக் கணிதம் - 3


விம்சோத்திரி தசை எனும் நட்சத்திர தசை

விம்சோத்திரி எனும் வடமொழி சொல்லிற்கு “நூற்றி இருபது” என பொருள். அதாவது தசாக் காலத்தினை 120 ஆண்டுகள் கொண்டதாகக் கணக்கிடும் முறையாகும். இந்த முறையில், இலக்கினம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனால், இராகு-கேது உட்பட ஒன்பது கோள்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு கோளிற்கும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகள் (fixed - மாறிலி) கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு கோளின் தசை முடிந்த பின்பு அடுத்த தசையானது, அதற்குரிய வரிசைப்படிதான வரும்.

வரிசை என்பது, கேதுவில் ஆரம்பித்து புதனில் முடிவடைகிறது. (சூரியனில் ஆரம்பித்து சுக்கிரனில் முடிவடைகிறது என்பர் – விண்மீன்கள் வரிசைப்படி கேது – புதன் சரியானது). அதாவது, கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், இராகு, வியாழன், சனி, புதன் என்பதாகும்.

வரிசை முறை என்பது, பூமி மையக் கொள்கைப்படி, புதன், வெள்ளி, சூரியன், சந்திரன், செவ்வாய், வியாழன், சனி வரிசைப்படுத்தப்பட்டு, பின்னர் இவைகளுக்கு இடையே இராகுவையும் கேதுவையும் இணைத்திருக்க வேண்டும். அதாவது புதன்-வெள்ளி இவைகளுக்கு இடையே கேதுவையும், செவ்வாய்-வியாழன் இவைகளுக்கு இடையே இராகுவையும் இணைத்திருக்க வேண்டும். ஆனால் இதற்கான முடிவான விளக்கம் எங்கும் கிடைக்கவில்லை.

இது, விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதால், முதல் விண்மீனான அசுவினி (கேது) தொடங்கி, ஆயில்யம் (புதன்) வரையிலான முதல் ஒன்பது விண்மீன்களுக்கு உரிய அதிபதிகளான கோள்களின் வரிசைப்படி அமைந்திருக்கிறது.

இவைகளுக்கு உரிய ஆண்டுகள் என்பது கீழ்வருமாறு:

கேது
7
சுக்கிரன்
20
சூரியன்
6
சந்திரன்
10
செவ்வாய்
7
இராகு
18
வியாழன்
16
சனி
19
புதன்
17
மொத்தம்
120

ஆக, தசாக் கால அளவு என்பது மொத்தம் 120 ஆண்டுகள். இந்த 120 ஆண்டுகள் என்பது, வராக மிகிரரின் ஆயுர்தயக் கால அளவான, அதாவது அதிகபட்ச அளவான 120 ஆண்டுகள் 5 நாட்கள் என்பதனையே ஒத்து வருகிறது. அதாவது, 5 நாட்கள் என்பது மீச்சிறு நிலையில் விடுவிக்கப்பட்டிருக்கலாம். எனவே, பராசரர் அல்லது அவருக்கு முந்தைய சோதிட அறிஞர்கள், வராக மிகிரரின் ஆயுர்தய முறையின் அடிப்படையில், கோள்களுக்கான மொத்த தசாக் கால அளவினைத் தீர்மானித்திருக்கலாம். இதுபற்றியதொரு விரிவான கணிதம் செய்து கொண்டிருக்கிறேன். விடைகண்ட பிறகு இதனை உறுதி செய்கிறேன்.


இது மொத்தம் 120 ஆண்டுகளைக் கொண்டது என்பதால் விம்சோத்திரி தசை என அழைக்கப்பட்டாலும், நட்சத்திர தசை என்பதே மிகப் பொருந்தும். ஏனெனில் இது சோதிடத்தில் பயன்படுத்தப்படும் 27 விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகிறது.


தொடரும்…

No comments: