Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, August 14, 2016

வீடுகளில் சந்திரனின் வலிமை



அடுத்து சந்திரன் 12 வீடுகளில் இருக்கும் நிலையில் உள்ள வலிமை அல்லது திறனைப் பார்ப்போம்.




ஆட்சி:

சந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு கடகம் ஆகும். அதாவது இராசி மண்டலத்தில் 91 பாகை முதல் 120 பாகைவரை உள்ள பகுதியாகும். அது எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே நாம் பதிவு செய்துவிட்டோம். கடகம் மட்டுமே சந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அதுவே சந்திரனின் ஆட்சி வீடாகும்..



மூலத்திரிகோணம்:

மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்.
1.   அக் கோளிற்கு சொந்த வீடாக இருக்க வேண்டும்
2.   அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
4.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக் கூடாது
5.   ஐந்து மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.

முதல் விதியான சொந்த வீடு என்பது சந்திரனுக்கு கடகம் மட்டுமே. அடுத்து அந்த வீட்டில் வியாழன் உச்சம் பெற்றிருக்கிறது. அதற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகளான மிதுனமும் சிம்மமும்  நட்பு நிலையிலேயே இருக்கின்றன. ஆனால் ஐந்தாவது விதிப்படி ஐந்து மற்றும் ஒன்பதாவது கோண வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும். இங்கு ஒன்பதாவது வீடு சமம் எனும் நிலையில் இருக்கும். ஆனால் தமது ஐந்தாவது வீடான விருச்சிகத்தில் சந்திரன் நீச்சம் எனும் நிலையில் இருக்கும். ஐந்தாவது கோணம் வலிமையாக இருக்க வேண்டும் எனும் விதிப்படி, நீச்ச நிலையில் உள்ளதைத் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, கடக வீடானது சந்திரனுக்கு மூலத் திரிகோணம் எனும் நிலையில் இருப்பதில் தகுதி இழப்பினை பெறுகிறது.

சந்திரனுக்கு ஆட்சி வீடு ஒரு வீடுதான் எனும் நிலையில், இன்னொரு வலிமையான வீட்டினைத் தேர்வு செய்ய வேண்டிய நிலையில், அது சந்திரனின் உச்ச வீடான ரிசபம் மட்டுமே. எனவே விதிவிலக்காக, ரிசப இராசியைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. மேற்கூறிய ஐந்து விதிகளில், ஆட்சி வீடு எனும் நிலையினைத் தவிர, பிற தகுதிகள் அனைத்தும் இதற்கு பொருந்திவருவதால், ரிசபத்தினையே சந்திரனின் மூலத் திரிகோண வீடாகக் கொள்ள வேண்டியுள்ளது. அதன்படி, ரிசபத்தில் சந்திரன் 3 பாகை முதல் 30 பாகை வரையில் மூலத் திரிகோணம் பெறுகிறது. அதாவது, இராசி மண்டலத்தில், 330வது பாகை முதல் 600வது பாகை வரையில் மூலத் திரிகோணம் அடைகிறது.



உச்சம்:

உச்சம் என்பது மிகைத் திறன் கொண்டது. சந்திரனைப் பொருத்தவரையில், சூரியனின் ஒளிக்கதிர்களையே பிரதிபலிக்கிறது. முழு ஒளியைப் பிரதிபலிக்கும் காலம் முழுநிலவுக் காலம் எனவும், ஒளியை முற்றிலும் இழக்கும் காலம் இருள் நிலவுக் காலம் எனவும் வழங்குகிறோம். சித்திரையில்தான் சூரியனின் முழு ஒளிக்கதிர்கள் பூமியில் வெப்ப மிகுதியோடு கிடைக்கிறது என முன்பதிவில் பார்த்தோம். அத்தகைய சூழலில்தான், அதன் முழு ஒளிக்கதிரையும் சந்திரன் பெற்று பூமியின்மீது பிரதிபலிக்க முடியும்.  அதுவும் குறிப்பாக அக்னி நட்சத்திரக்காலம் எனப்படும் கால அளவில் அதன் வெளிப்பாடு அதிகமாக இருக்கும். ஏற்கனவே குறிப்பிட்டவாறு, அது பரணியின் 3-ல் தொடங்கி கார்த்திகை முழுமைக்கும் இருக்கும் என பார்த்தோம். அதன்படி, கார்த்திகையின் 2, 3, 4வது பாகங்கள் ரிசபத்தில் இருக்கும் கால அளவில் அதன் கதிர்வீச்சினை முழுமையாகப் பெற முடியும். மேலும், சோதிட கணக்கீட்டின்படி, கார்த்திகை விண்மீனுக்கு அதிபதி சூரியன் ஆகும். அக்னியின் நடுப்பகுதியான கார்த்திகை இரண்டாம் பாகத்தில் சந்திரனானது, சூரியனிடமிருந்து பெற்ற கதிர்வீச்சினை முழுமையாக இப்புவியின் மீது செலுத்தும் நிலை உள்ளது. அதுவே, சந்திரனின் உச்ச நிலையாகும். அந்த உச்ச நிலை என்பது ரிசப இராசியில் 0-பாகை முதல் 3-பாகவரை மிக உச்ச நிலையில் இருக்கும். எனவே, சந்திரன் உச்சம் அடையும் இராசியாக ரிசபம் இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய வரையறையாகும்.



நீச்சம்:

நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில் வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரான விருச்சிக வீடானது, சந்திரனுக்கு நீச்ச வீடாக இருக்கும். பாகை அளவு என்பது, உச்ச நிலைக் கணக்கின்படியே, 0-முதல் 3-பாகை வரையில் இருக்கும்.



நட்பு, சமம், பகை:

ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து, 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இங்கு, சந்திரனுக்கு மூலத் திரிகோண வீடானது ரிசபமாகும். 2-மிதுனம்(புதன்), 4-சிம்மம்(சூரியன்), 5-கன்னி(புதன்), 8-தனுசு(வியாழன்), 9-மகரம் (சனி), 12-மேசம் (செவ்வாய்) ஆகியவை நட்பு வீடுகளாக வருகின்றன. பகைவீடுகள் எனும் நிலையில் 3-கடகம்(சந்திரன்), 6-துலாம்(வெள்ளி), 7-விருச்சிகம்(செவ்வாய்), 10-கும்பம்(சனி), 11-மீனம்(வியாழன்) என வருகிறது.  இதனை அப்படியே எடுத்துக் கொள்வதற்கு முன்பு, சிற்சில வரையறைகள் செய்ய வேண்டியுள்ளது. அதன்படி, ரிசபம்- சந்திரனுக்கு உச்சம் மற்றும் மூலத் திரிகோணம் என்பதால், ரிசபத்தின் அதிபதியான சுக்கிரன் இருக்கும் மற்றொறு வீடான துலாம் பகை எனும் நிலையில் இருக்க முடியாது அதனை சமம் எனக் கொள்ள வேண்டும். மிதுனமும் கன்னியும் நட்பு எனும் நிலையில் மாற்றம் தேவை இல்லை. கடகம் சந்திரனுக்கு ஆட்சி வீடு. சிம்மம் நட்பு. அடுத்து,  விருச்சிகம் சந்திரனுக்கு நீச்சம். தனுசு நட்பு எனும் நிலையில், வியாழனை அதிபதியாகக் கொண்ட மீனத்தை பகை எனக் கொள்வது சரியில்லை என்பதால், மீனம்- சமம் எனும் நிலையில் கொள்ள வேண்டும். அதேபோல், மகரம் நட்பு எனும் நிலையில் இருப்பதால், அதன் அதிபதியான சனி இருக்கும் கும்பம் பகை எனக் கொள்வதும் சரியில்லை என்பதால், கும்பத்தினை சமம் எனும் நிலையிலேயே வைக்க வேண்டியுள்ளது. இதன்படி – சந்திரனுக்கு நட்பு வீடுகள்: மிதுனம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம், மேசம் ஆகும். சந்திரனுக்கு சமம் வீடுகள்: துலாம், கும்பம், மீனம் ஆகும். மேற்கூறிய அமைப்பில் ஒரு முக்கிய நிலை என்னவெனில், சந்திரனுக்கு எந்த ஒரு வீடும் பகை எனும் அமைப்பில் வரவில்லை.


இங்கு வரயறை செய்த வகையில் இராசிகளில் சந்திரனின் வலிமை அல்லது நிலை





கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.



கோள்களுக்கிடையேயான உறவுகள்:

கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக் கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல் முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள் எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள் பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. அதன்படி, சந்திரனுக்கு நட்புக்கோள்கள் – சூரியன் மற்றும் புதன் ஆகியவை; பகைக் கோள்கள் – எதுவும் இல்லை சம நிலையில் உள்ள கோள்கள்- செவ்வாய், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை. இராகு-கேது பற்றி தனியே ஆய்வு செய்வோம்.  

மேல் கூறியவற்றின் அடிப்படையில் சந்திரனின் வலிமை அல்லது நிலை பற்றிய தொகுப்பினைக் கீழே காண்போம்.

மேசம்
நட்பு
துலாம்
சமம்
ரிசபம்
உச்சம் (0-3)
மூலத்திரிகோணம்(3-30)
விருச்சிகம்
நீச்சம் (0-3)
மிதுனம்
நட்பு
தனுசு
நட்பு
கடகம்
ஆட்சி
மகரம்
நட்பு
சிம்மம்
நட்பு
கும்பம்
சமம்
கன்னி
நட்பு
மீனம்
சமம்


கோள்களுடன் உறவு நிலை


நட்பு
சமம்
பகை
சூரியன்
புதன்
செவ்வாய்
வியாழன்
வெள்ளி
சனி
-



அடுத்து .. செவ்வாயின் நிலை


Sunday, August 7, 2016

வீடுகளில் சூரியனின் வலிமை



இதுவரையில் பொது விதிகளைப் பார்த்தோம். இனி அந்தப் பொது விதிகள் சூரியன் இருக்கும் வீடுகளில் எவ்வாறு இருக்கிறது என்பதைப் பார்ப்ப்போம்.


ஆட்சி:

கோள்களுக்கான இட ஒதுக்கீடு எனும் தலைப்பில் கோள்களுக்கான இட ஒதுக்கீடு வானியல் அடிப்படையில் 12 இராசிகளில் எவ்வாறு அளிக்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்கனவே பதிவு செய்து விட்டோம். [அப்பதிவுகளைப் படிக்காதவர்கள் அதனை ஒரு முறை படித்துவிட்டு தொடரவும்]. அதன்படி, சூரியனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீடு சிம்மம் ஆகும். அதாவது இராசி மண்டலத்தில் 121 பாகை முதல் 150 பாகைவரை உள்ள பகுதியாகும். எனவே, சூரியனின் ஆட்சி வீடு சிம்மம் ஆகும்.


மூலத்திரிகோணம்:

மூலத் திரிகோணத்தைத் தீர்மானிக்க கீழ்வரும் தகுதிகள் இருக்க வேண்டும்.

1.   அக் கோளிற்கு சொந்த வீடாக இருக்க வேண்டும்
2.   அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
4.   அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக் கூடாது
5.   ஐந்து மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.

இதன்படி, சூரியனுக்கு சொந்த வீடு சிம்மம் மட்டுமே.  ஏனைய கோள்களுக்கு இரண்டு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஒரு வீடுதான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  எனவே, சிம்மத்தையே கணக்கில் கொள்ள வேண்டும். அடுத்து இரண்டாவது தகுதியான அந்த வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும் என்பது இங்கு பொருந்தவில்லை. காரணம், ஒரு வீடு மட்டுமே உள்ள நிலையில் சூரியன் உள்ளதால் இதனை விதிவிலக்காகக் கொள்ள வேண்டியுள்ளது. இருப்பினும் அந்த விதி விலக்கும் உச்ச வீடாக மேசம் இருப்பதால் அதுவும் முழுமை அடையும். (ஒன்பதாவது கோண வீடு). மூன்று மற்றும் நான்காவது தகுதியாக, அந்த வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும். பகையாக இருக்கக் கூடாது. இங்கு கடகம் (சந்திரன்) மற்றும் கன்னி (புதன்) ஆகிய இரு வீடுகளும் நட்பு எனும் நிலையில் இருக்கின்றன. பகை எனும் நிலை இல்லை.(விரிவாக கீழே பார்ப்போம்). எனவே மூன்று மற்றும் நான்காவது தகுதி முழுமை அடைந்துள்ளது. அடுத்து, இரண்டு மற்றும் மூன்றாவது கோணங்கள், அதாவது ஐந்தாவது மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும். சிம்மத்திற்கு ஐந்தாவது வீடானது தனுசு ஆகும். அதுபோல், ஒன்பதாவது வீடானது மேசமாகும். தனுசு நட்பு வீடாக உள்ள நிலையில் ஒன்பதாவது வீடான மேசத்தில் சூரியன் உச்சம் நிலையில் இருக்கிறது. உச்சம் என்பது நட்பு எனும் நிலையைவிட மிக உயர்வானது. எனவே, சூரியனுக்கு மூலத் திரிகோண வீடு என்பது சிம்மம் ஆகும். மூலத்திரிகோணம் என்பது எத்தனை பாகையில் இருக்கிறது எனும் கணக்கும் இருக்கிறது. அதாவது, ஒரு வீட்டின் 30 பாகையும் மூலத்திரிகோண நிலையில் இருப்பதில்லை. பொதுவாக இருபது பாகை வரையில் மூலத்திரிகோண நிலையில் கோள்கள் இருக்கும். சூரியனைப் பொருத்தவரையில் சிம்மத்தில் 0-பாகை முதல் 20-பாகைவரை அதாவது (120.01-140.00 பாகைவரை) மூலத்திரிகோண நிலையில் இருக்கும்.


உச்சம்:

உச்ச நிலையில் ஒரு கோள் முழு வலிமையுடன், அதாவது அக்கோள் அதிகபட்சத் திறனோடு இருக்கும் என பார்த்தோம். பொதுவாக, சூரியனின் மிக வெப்ப நாட்கள் எனப்படுவது கத்திரி எனப்படும் மிகைக் கோடைகாலமாகும். அதுபோலவே, சித்திரை மாதம் என்பது வெயில் மிகு மாதம் ஆகும். இராசி மண்டலத்தில் உள்ள 12 இராசிகளில் முதல் இராசியான மேசம், சித்திரையில் தொடங்குகிறது. அதாவது சூரியன் மேசத்தில் இருக்கும் மாதமே சித்திரை ஆகும். மேசம் தொடங்கி ஒவ்வொரு மாதமாக, 12வது மாதம் பங்குனியானது மீனத்தில் முடிவடைகிறது. சித்திரை என்பது வெயில் மிகு மாதமாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதாவது, சூரியனின் முழு கதிர்வீச்சின் தன்மை அந்த மாதத்தில்தான் பூமியின்மீது தாக்குதலை ஏற்படுத்தும். உச்சம் என்பது மிகை எனும் நிலை என்பதால், சூரியன் மேசத்தில் இருக்கும் நிலையினையே உச்ச நிலை என சோதிட நூல்கள் கூறுகின்றன. எனவே சூரியன் மேசத்தில் உச்சம் அடைகிறது என வரையறை செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், மேசத்தின் 30 பாகையிலும் சூரியன் உச்ச நிலையில் இருப்பதில்லை.  குறிப்பாக 10வது பாகையில் மிக உச்ச நிலையில் இருக்கிறது. அதாவது 0-பாகை முதல் 10-வது பாகை வரையில் உச்ச நிலையில் இருக்கிறது. அதாவது சித்திரையின் முதல் 10 நாட்கள் உச்ச நிலையில் இருக்கிறது. இதனை வேறொரு கோணத்தில் ஆராய்ந்தால் இது முரணான தகவலாக இருக்கிறது. அதாவது ‘கத்திரி’ எனப்படும் ‘அக்னி வெயில்’ காலம்தான் வெயிலின் கதிர்வீச்சு அதிகம் உள்ள காலம். மேச இராசியானது, அசுவினி(4), பரணி(4), கார்த்திகை(1) ஆகிய நட்சத்திரங்களைக்  கொண்டிருக்கிறது. அக்னி வெயிலானது பரணியின் 3-வது பாகத்தில் தொடங்கி கார்த்திகை முழுதும் நீடிக்கும். நட்சத்திர அதிபதிகளின்படி, பரணி-சுக்கிரன், கார்த்திகை-சூரியன் ஆகும். கார்த்திகையானது முதல் பாகம் மேசத்திலும், மற்ற மூன்று பாகங்கள் ரிசபத்தில் இருக்கும். எனவே அக்னி ஆரம்பிக்கும் பரணி 3வது பாகத்தின் தொடக்கமான 20-பாகையில் தொடங்கி, கார்த்திகை முழுதும் சூரியன் உச்சமாக இருப்பதுதான் முறை. ஆனால் மேசத்தின் 10வது பாகையிலேயே சூரியன் முழு உச்சம் அடைந்து விடுகிறது. இது தவறு போன்று தோன்றினாலும், நான் முன்பொருமுறை பதிவு செய்ததை நினைவில் கொள்ள வேண்டுகிறேன். சூரியனின் தாக்கம் என்பது, நேரடித் தாக்கம் என்பதைக் காட்டிலும் அதன் கதிர்வீச்சின் தாக்கம் (radiation) முக்கியமானது என்றும், கதிர்வீச்சின் தாக்கத்தினைக் கொண்டுதான், வெயில் மின் தகடுவழி மின்சாரம் (solar radiation panel electricity) தயாரிக்கப்படுகிறது என்றும் பதிவு செய்துள்ளேன். எனவே, நேரடியான சூரிய வெப்பத்தைக் காட்டிலும் கதிர்வீச்சு அதிகமுள்ள காலத்தையே கணக்கில் கொள்ள வேண்டும். அதன்படி, சித்திரையின் முதல் 10 நாட்கள் சூரியனின் கதிர்வீச்சு அதிகமாக இருக்கலாம். எனவே அந்த கால அளவினையே உச்சம் என்று தீர்மானித்திருக்க வேண்டும். எனவே, சூரியன் மேசத்தில் 0-10 பாகை வரையில் மிகை உச்சத்திலும், மேசம் முழுமையும் உச்சத்திலும் இருப்பதாகக் கொள்ளலாம்.


நீச்சம்:

நீச்சம் என்பது, தனது முழு வலிமையைச் செலுத்த முடியாத நிலையில் இருப்பது. அதாவது மிகை உச்சத்தில் இருக்கும் கோள், அதற்கு நேர் எதிரான, 180 பாகையில் வலிமை இழந்து இருக்கும். அதன்படி, உச்ச நிலைக்கு நேர் எதிரான துலாம் வீடானது, சூரியனுக்கு நீச்ச வீடாக இருக்கும். பாகை அளவு என்பது, உச்ச நிலைக் கணக்கின்படியே, 0-முதல் 10-பாகை வரையில் இருக்கும்.


நட்பு, சமம், பகை:

ஒரு கோள் எந்த இராசியில் நட்பாகவும், சமமாகவும், பகையாகவும் இருக்கிறது என்பதைத் தீர்மானிக்க, முன்பே கூறியவாறு, அக்கோளிற்கு மூலத் திரிகோண வீட்டிலிருந்து, 2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகளில் நட்பாகவும், பிற வீடுகளில் பகையாகவும் இருக்கும் என்பதைக் கணக்கில் கொள்ள வேண்டும். இங்கு, சூரியன், சிம்மத்தில் மூலத் திரிகோணம் அடைவதால், 2-கன்னி(புதன்), 4-விருச்சிகம்(செவ்வாய்), 5-தனுசு(வியாழன்), 8-மீனம்(வியாழன்), 9-மேசம்(செவ்வாய்), 12-கடகம்(சந்திரன்) ஆகிய வீடுகளில் நட்பு நிலையில் இருக்க வேண்டும். இதில் 9-மேசம் உச்ச நிலையில் இருப்பதால் அதனை நீக்கிவிட்டால், மற்றவை நட்பு எனக் கொள்ள வேண்டும். பகை நிலை எனும்போது 3-துலாம்(வெள்ளி), 6-மகரம்(சனி), 7-கும்பம்(சனி), 10-ரிசபம்(வெள்ளி), 11-மிதுனம்(புதன்) ஆகியவை பகை நிலையில் இருக்கும். இரண்டிற்கு உரிய கன்னி(புதன்) நட்பு எனும் நிலையில் இருப்பதால், 11-மிதுனம்(புதன்) என்பதை பகையாகக் கொள்ள முடியாது. எனவே அதனை சமம் எனக் கொள்ளவது முறை. அதேபோல், 3-துலாம்(வெள்ளி) என்பது சூரியனுக்கு நீச்ச நிலை என்பதால், அதனையும் பகையிலிருந்து விலக்கு செய்யலாம்.  ஆக, சூரியனுக்கு – நட்பு வீடுகள்: கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம், கடகம்; சமம் வீடு: மிதுனம்; பகைவீடுகள்: மகரம், கும்பம், ரிசபம் ஆகும். நட்பு, பகை பற்றி பல்வேறு நூல்கள் சிற்சில மாற்றங்களைக் கொண்டிருந்தாலும், இதுவே பொதுவில் ஏற்றுக் கொள்ளப்படத்தக்க முறையாகும்.

இங்கு வரயறை செய்த வகையில் இராசிகளில் சூரியனின் வலிமை அல்லது நிலை

  
கோள்களின் நிலை அல்லது வலிமை பற்றி கூறும்போது, கோள்களுக்கிடையே உள்ள உறவு நிலைகள் பற்றியும் கூற வேண்டியுள்ளது.


கோள்களுக்கிடையேயான உறவுகள்:

கோள்களுக்கான உறவுகள் பற்றியும் பல்வேறு நூல்கள் சிற்சில முரணைக் கொண்டிருந்தாலும், வீடுகளின் நட்பு, பகை அடிப்படையிலேயே கோள்களின் நிலையைத் தீர்மானித்தல் முறையாக உள்ளது. அதன்படி, உச்சம் மற்றும் நட்பு வீட்டில் உள்ள கோள்கள், நட்புக் கோள்கள் எனவும், நட்பு+சமம் எனும் வீட்டில் உள்ள கோள்கள் சமம் எனவும், பகை வீட்டில் உள்ள கோள்கள் பகை எனவும் கொள்வது முறையாக உள்ளது. அதன்படி, சூரியனுக்கு - சந்திரன், செவ்வாய், வியாழன் ஆகியவை – நட்புக்கோள்கள்; சுக்கிரன், சனி ஆகியவை – பகைக் கோள்கள்; புதன்-சமம் எனும் நிலையில் உள்ளன.  


மேல் கூறியவற்றின் அடிப்படையில் சூரியனின் வலிமை அல்லது நிலை பற்றிய தொகுப்பினைக் கீழே காண்போம்.

மேசம்
உச்சம் (0-10)
துலாம்
நீச்சம் (0-10)
ரிசபம்
பகை
விருச்சிகம்
நட்பு
மிதுனம்
சமம்
தனுசு
நட்பு
கடகம்
நட்பு
மகரம்
பகை
சிம்மம்
ஆட்சி – மூலத்திரிகோணம் (0-20)
கும்பம்
பகை
கன்னி
நட்பு
மீனம்
நட்பு

கோள்களுடன் உறவு நிலை

நட்பு
சமம்
பகை
சந்திரன்
செவ்வாய்
வியாழன்
புதன்
சனி
சுக்கிரன்


அடுத்து .. சந்திரனின் நிலை



Monday, August 1, 2016

கோள்களின் பார்வைகள்- வரையறை




சோதிட பலன் உரைப்பதில் மிக முக்கிய பங்கு வகிப்பது, ஒரு குறிப்பிட்ட கோளின், குறிப்பிட்ட பார்வையாகும். பார்வை என்று பொதுவில் கூறினாலும், வானியல் கோட்பாட்டின்படி, ஒரு கோள் தனக்குரிய  குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட தொலைவில் உள்ள இராசியின் மீது தனது கதிர்வீச்சினை பாய்ச்சும் இலக்காகும்.

கோள்கள் நீள் வட்டப்பாதையில் சுற்றிவருகின்றன. கோள்கள் தாம் பெறும் ஒளியினை அல்லது, தமக்கே உரித்தான கதிர்வீச்சினை அல்லது காந்த விசையினை இந்த வான்வெளி மீது பாய்ச்சுகின்றன. அவ்வாறு பாய்ச்சும்போது அதன் திசைவேகம் என்பது ஒரே அளவில் இருப்பதில்லை. அது சுழலும் தன்மைக்கேற்ப, அதன் சுற்றுப்பாதையின் விலகலுக்கு ஏற்ப, அவை செலுத்தும் கதிர்வீச்சானது மாறுபாடு அடைகின்றன. அதனால் அவற்றிடமிருந்து விடுவிக்கப்படும் ஒளி அல்லது கதிர்வீச்சானது பூமியை வந்தடைதல் அனைத்து நிலைகளிலும் ஒரே அளவில் இருப்பதில்லை. குறிப்பிட்ட கோண அளவில் அது இருக்கும்போது மட்டுமே, அதன் ஒளி அல்லது கதிர்வீச்சானது முழுமையாக வந்தடைய முடிகிறது. அவ்வாறு முழுமையாக வந்தடையும்போதுதான் அக் குறிப்பிட்ட கோளின் கதிர்வீச்சு அல்லது ஒளியின் வீச்சு ஏற்படுத்தக்கூடிய வலிமையும் முழுமை பெறும்.

ஆக, ஒரு கோள் ஒரு குறிப்பிட்ட கோண விகிதத்தில் ஒரு குறிப்பிட்ட  இராசியின் மீது அல்லது வீட்டின் மீது முழுமையான ஆதிக்கம் செலுத்துவதே அக்கோளின் பார்வையாகும்.

பொதுவாக, கோண விகிதம் என்பதில் நேர் கோணம் என்பதே முழுமையான வலிமை மிக்கதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியின் முன்பு நீங்கள் நேர் கோணத்தில் நின்றால் மட்டுமே உங்கள் முகம் தெளிவாக அல்லது முழுமையாக உங்களுக்குத் தெரியும். கோண விகிதம் சற்று மாற்றி நின்றால், உங்கள் முகம் உங்களுக்கு தெரியாமல் போகலாம்.

இங்கு நேர் கோணம் என்பது என்னவென்று பார்ப்போம். ஒரு வட்டத்தின் சுற்றுப்பாதையில் உள்ள ஒரு புள்ளி, அந்த வட்டத்தின் மையப்புள்ளி வழியே, அதற்கு நேர் எதிரே உள்ள புள்ளியை ஒரு நேர்கோட்டின் மூலம் தொடுவதாகக் கொள்வோம். அவ்வாறெனில், அந்த வட்டத்தின் மையப்புள்ளியில் அக்கோடு ஏற்படுத்தும் நேர் கோணம் 1800 பாகையாகும்.


ஆக, வான் மண்டல சுற்றுப்பாதையில், ஒரு கோள் தமக்கு நேர் எதிரே உள்ள ஒரு வீட்டிற்கு அல்லது இராசிக்கு 180 பாகையில் இருந்தால், அது தனது முழுமையான கதிர்வீச்சு வலிமையை அந்த வீட்டின் மீது செலுத்தும் என்பது தெளிவாகிறது.

இதனை சுற்றுவட்டப்பாதையில் உள்ள பன்னிரெண்டு இராசிகளுக்கு இடையே செயல்படுத்தினால், ஒரு குறிப்பிட்ட வீட்டில் உள்ள ஒரு கோள் தமக்கு நேர் எதிரே உள்ள வீட்டின் மீது தம் கதிர்வீச்சின் முழு வலிமையைச் செலுத்தும் என்பது உறுதியாகிறது. கோள் இருக்கும் குறிப்பிட்ட வீடு ஒன்று எனக் கொண்டால், அதற்கு 180 பாகையில் நேர் எதிரே இருக்கும் வீடு ஏழாவது வீடாகும்.

இதைத்தான் சோதிடத்தில், அனைத்து கோள்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு என்று கூறுகின்றனர். ஆகவே, அனைத்து கோள்களுக்கும் ஏழாம் பார்வை உண்டு என்பது இங்கு மெய்ப்பிக்கப்படுகிறது.

மீண்டும் ஒரு எடுத்துக் காட்டிற்கு வருவோம். முகம் பார்க்கும் கண்ணாடி. அக்கண்ணாடிக்கு முன்பு நீங்கள் நேராக நின்றால் உங்கள் முகம் தெளிவாகத் தெரியும் என்று கூறினோம். நேராக மட்டுமின்றி, சற்று கோண மாறுபாட்டில் நின்றாலும், உங்கள் முகம் உங்களுக்கு தெரிய வாய்ப்பு இருக்கிறது. அது கோணத்தின் அளவைப் பொறுத்து தரம் அல்லது வடிவம் தெரியும் நிலையில் இருக்கும்.

அதுபோலவே, ஒரு சில கோள்கள், நேர் எதிர் கோணமான 180 பாகையில் மட்டுமின்றி, வேறு சில கோண மாறுபாட்டிலும், தமது கதிர்வீச்சின் வலிமையை இந்த புவியின் மீது பாய்ச்சும் திறன் கொண்டிருக்கின்றன. அவ்வாறான கோண மாறுபாட்டிற்கு உரிய பாகையானது, எந்த வீட்டிற்கு உரியதாக இருக்கிறதோ, அத்தகைய பார்வையும் அந்த குறிப்பிட்ட கோளிற்கு இருப்பதாக சோதிட நூல்கள் கூறுகின்றன. இங்கு ஒரு சில கோள்கள் என்று கூறியதை வரையறை செய்தால், அவை முறையே, செவ்வாய், வியாழன், சனி ஆகியவையாகும்.

செவ்வாய்க்கு 4, 8 பார்வைகள், அதாவது 90 பாகைகள் மற்றும் 210 பாகைகள்

வியாழனுக்கு 5, 9 பார்வைகள், அதாவது 120 பாகைகள் மற்றும் 240 பாகைகள்

சனிக்கு 3, 10 பார்வைகள், அதாவது 60 பாகைகள் மற்றும் 270 பாகைகள்

இந்த பார்வைகள் அல்லது கோண அளவுகள், அக்கோள்கள் தமக்குரிய பாதை மற்றும் பூமியிலிருந்து விலகல் தூரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நமது முன்னோர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  

      இங்கு மிக முக்கியமான ஒன்றைக் கவனிக்க வேண்டும். கூடுதல் பார்வைகள் கொண்ட செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய மூன்று கோள்களும் சூரிய மண்டலத்தின் வெளிவட்ட சுற்றுப்பாதையில் இருக்கும் கோள்கள். மீண்டும் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு வருவோம். நீங்கள் கண்ணாடிக்கு மிக அருகில் இருந்தால், நேர் எதிரில் நின்றால் மட்டுமே உங்கள் முகம் உங்களுக்குத் தெரியும். மிக அருகில் இருந்துகொண்டு சற்று விலகி நின்றால், நிச்சயம் உங்கள் முகம் மறைந்து போகும். நீங்கள் கண்ணாடிக்கு சற்று வெகு தொலைவில் நின்று கொண்டு நேர் எதிரே நின்றால் உங்கள் முகம் தெரியும். சற்று விலகி நின்றாலும், ஒரு குறிப்பிட்ட கோணத்தில் உங்கள் முகம் உங்களுக்குத் தெரியும். இந்த விதிதான் இங்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

      உள் வட்டப்பாதையில் உள்ள கோள்கள் பூமிக்கு நெருக்கமாக அல்லது சூரியனுக்கு அருகில் இருப்பதால், அவை நேர் எதிர் கோணமான 180 பாகையில் மட்டுமே முழுமையடைகின்றன. அதே வேளையில் வெளிவட்டப்பாதையில் உள்ள கோள்கள் பூமியைவிட்டு வெகு தொலைவில் இருப்பதால், அவை 180 பாகை எனும் நேர் எதிர் கோணம் மட்டுமின்றி, வேறு சில கோண அமைப்பிலும் தமது கதிர்வீச்சின் வலிமையை முழுமையாக செலுத்தும் நிலை உள்ளது. [இராகு-கேது புனைக் கோள்கள் என்பதால் அவற்றின் பார்வை பற்றி பின்னர் பார்ப்போம்].

      எனவே, சூரியன் மற்றும் உள்வட்டக் கோள்களான – சூரியன், புதன், வெள்ளி, சந்திரன் ஆகியவை 7-ம் பார்வையும், வெளிவட்டக் கோள்களான – செவ்வாய், 4, 7, 8-ம் பார்வையும், வியாழன், 5, 7, 9-ம் பார்வையும், சனி, 3, 7, 10-ம் பார்வையும் கொண்டிருப்பதாக சோதிட நூல்கள் கூறுவது ஏற்புடைய கருத்தே ஆகும்.


      அடுத்து வரும் பதிவுகளில், கோள்களின் வலிமையில் ஒவ்வொரு கோளையும் தனித் தனியே பார்க்கலாம்


…அடுத்து சூரியனின் வலிமை