Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

குறிப்பு:

நண்பர்களுக்கு, பிருகத் ஜாதகா மொழிபெயர்ப்பு முழுமையாக முடியும்வரை, சோதிட ஆய்விற்கு கொஞ்சம் ஓய்வு.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Saturday, December 9, 2017

பிருகத் ஜாதகா – புத்தகமாக – விளக்கங்களுடன் ................ விரைவில்வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
முடிவுரை… என்னுரைவணக்கம். வராகமிகிரர் படைத்த பிருகத் ஜாதகம் எனும் பெரும் சோதிட நூலிற்கு ஆங்கிலத்தில் விளக்கங்களுடன் உரை எழுதிய திரு என். சிதம்பரம் அய்யர், மதுரை (1885) அவர்களின்  பிருகத் ஜாதகா எனும் ஆங்கில உரை நூலை, 2014 ஜனவரியில் தொடங்கி, டிசம்பர் 2017-இல், மிக நீண்ட பதிவுகளோடு, அதாவது நான்கு ஆண்டு கால அளவில் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். இரண்டு பாகங்கள், இருபத்தியெட்டு அத்தியாயங்கள் கொண்ட இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்தது எனக்குக் கிடைத்த ஒரு வரம்.


எனது வலைப்பூ நண்பர் திரு ஓம் பிரகாஷ் அவர்கள், “இதை ஏன் தமிழில் மொழிபெயர்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். பிருகத் ஜாதகத்தின் தமிழ் வடிவம் கடலங்குடி நடேசன் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப் படித்தால் போதுமானதல்லவா?” என்று வினவி இருந்தார். ஆனாலும் நான் இதன் மொழிபெயர்ப்பினைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். காரணம் – (1) கடலங்குடி பதிப்பகப் புத்தகம் விலைக்குக் கிடைக்கவில்லை. (2) திரு சிதம்பரம் அவர்களின் ஆங்கில உரை நடையில் இருந்த சொல்வளமும், ஆங்காங்கே அவர் கொடுத்த விளக்கங்களும் அருமை. எனவே, அந்த புத்தகத்தினை முழுமையாகப் படித்துவிட வேண்டும் எனும் ஆர்வமும், மொழிபெயர்ப்பதின் மூலம் கிடைக்கும் மொழியறிவும் எனக்குத் தேவையானதாக இருந்தது. இந்த மொழிபெயர்ப்பின் மூலம், சோதிடம் தொடர்பான தெரியாத தகவல்களும், தெரிந்த தகவல்களுக்கு புதிய விளக்கங்களும் கிடைத்தன.


இந்த தமிழாக்கத்தில், திரு சிதம்பரம் அவர்களின் புத்தகத்தின் இறுதியில் உள்ள இணைப்பு விவரங்களை தமிழாக்கம் செய்யவில்லை. அந்த இணைப்பில் – இலக்கின ஸ்புடம் கணிக்கும் முறை; சரியான உள்ளூர் நேரம் அறிதல்; அட்ச ரேகை – தீர்க்க ரேகை அட்டவணைகள்; தசா முறைக் காலக் கணித அட்டவணை; இந்தியா-கிரீன்வீச் நேர வேறுபாட்டின் அட்டவணை; கோள்களிக்கான நட்பு-பகை அட்டவணை; விண்மீன்கள் தொகுப்பின் உதய நேர அளவு அட்டவணை; சூரியனின் உதய நேர அளவு அட்டவணை போன்றவைகளையும்; நூலின் ஊடே வந்த வேறு சில விளக்கக் குறிப்புகளையும் மொழிபெயர்ப்பில் தவிர்த்திருக்கிறேன். அத்தகைய தகவல்களைத் திரட்டி அவைகளுக்கு கணிதம் செய்த திரு என். சிதம்பரம் அய்யர் அவர்களின் கணிதத் திறமை என்னை வியக்க வைத்திருக்கிறது என்பதுடன், வானியல் கணிதத்தில் அவரின் திறன் என்னை மண்டியிட வைக்கிறது. ஒரு முழுமையான கற்றறிந்த அறிஞரால் மட்டுமே இது சாத்தியாமாகும்.


இந்த மொழிபெயர்ப்பினை, நான் மிகச் சரியாக செய்திருக்கிறேனா என்று தெரியவில்லை. தொடக்கத்தில் மொழியறிவு குறைவினால் கொஞ்சம் தடுமாறியும் இருந்திருக்கிறேன். ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழுக்கு மாற்றி செம்மையில்லாமலும் செய்திருக்கிறேன். பின்னர் என்னை மேம்படுத்திக்கொள்ள, அதுவே நல்லதொரு தொடர் பயிற்சியாகவும் ஆயிற்று. புதிய சொற்கள், புரிபடாத சொற்கள், இணைச் சொற்கள் என ஆங்கில மொழியில் உள்ள நிறைய சொற்களை நான் இதன் மூலம் கற்றறிந்தேன். எனது மொழித்திறனும் சற்று செம்மையானது. ஏறக்குறைய 220 பதிவுகளில் இத் தொடரினை முடித்துள்ளேன்.


எனது நண்பர்கள் சிலர் இதனைப் புத்தகமாக பதிப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளனர். அந்த எண்ணமும் இருக்கிறது. ஆனால், வரிக்கு வரி செய்த மொழிபெயர்ப்பினைப் புத்தகமாகப் போடுவதில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், இங்கு பதிவு செய்யப்பட்டதை இன்னமும் செம்மை செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு செய்யுளுக்கும் எளிய முறையில் உரிய சோதிட பாடங்கள்/கட்டங்களுடன் விளக்க வேண்டியுள்ளது. எடுத்துக் காட்டாக, யோகங்களைப் பற்றி பேசும் போது, அவை கட்டங்களில் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்க வேண்டியுள்ளது. திரேக்காணம் எனும் போது, அது கட்டங்களில் எவ்வாறு வரையறை செய்யப்படுகிறது என்பதை விளக்க வேண்டியுள்ளது. சாதகம் இல்லாதவர்களுக்கு சாதகம் எழுதுவதை உரிய விளக்கங்களுடன் கூற வேண்டியுள்ளது. அதைவிட முக்கியம், மூல நூலின் சாரம் சிறிதும் மாறாமல் நம் கருத்தினைக் கூற வேண்டியுள்ளது. எனவே, நான் மொழிபெயர்த்த பாடங்களை மீண்டும் ஒருமுறை சீராய்ந்து, தவறுகள் இருப்பின் திருத்தம் செய்து (நிச்சயம் தவறுகள் இருக்க வாய்ப்பு உள்ளது). அதே வேளையில் படிப்பவர்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் எழுதி, தொகுக்க வேண்டியுள்ளது. இவ்வளவும் செய்து முடித்த பின்பே, நல்லதொரு பதிப்பகத்தார் கிடைப்பார் எனில் புத்தகமாக வெளியிடும் எண்ணம் உள்ளது.


வேண்டுகோள்:
எனவே, இந்த பிருகத் ஜாதாகா மொழிபெயர்ப்பினை, இதுவரையில் படித்தவர்கள், இன்னும் படித்துக் கொண்டிருப்பவர்கள், இதில் ஏதேனும் குறைகளை / தவறுகளைக் கண்டிருந்தால், அதனை எனக்குச் சுட்டிக் காட்ட அன்புடன் வேண்டுகிறேன். மேலதிகத் தகவல்களைத் தந்து உதவிடவும் வேண்டுகிறேன்.


இந்த வாய்ப்பினை எனக்களித்த பிருகத் ஜாதகத்தின் முதன்மை ஆசிரியர் சோதிட மாமேதை திரு.வராகமிகிரருக்கும், அதன் ஆங்கில நூல் ஆசிரியர் மதுரை திரு என். சிதம்பரம் அய்யர், அவர்களுக்கும், என்னை இந்த மன்னில் பிறக்க வைத்த என் தந்தை கொல்லுமாங்குடி திரு ந, கோவிந்தராசு அவர்களுக்கும் என்றென்றும் நன்றியுடன் கடமைப்பட்டுள்ளேன்.
  
அன்புடன்
நிமித்திகன்

பிருகத் ஜாதகம் - முற்றும் 

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17
[குறிப்பு:      விரைவில் மீண்டும் ஒரு சோதிட நூலை தமிழாக்கம் செய்ய உள்ளேன். அது, பலதீபிகை, பிருகத் பராசர ஹோரை, பிருகத் சம்ஹிதா, இலகு ஜாதகம் ஆகியவற்றில் ஒன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது.]Friday, December 8, 2017

வராகமிகிரரின் ஒப்புகை - பிருகத் ஜாதகா – 219


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து எட்டு

முடிவுரை… தொடர்ச்சி


7. இந்த சுருக்க உரையானது, பழம்பெரும் ஆசிரியர்கள் படைத்த விரிவான படைப்புகளை முழுமையாகப் படித்தும் ஆராய்ந்தும் என்னால் எழுதப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் முக்கிய கருத்துக்கள் விடுபட்டு இருப்பின், அறிவார்ந்த ஆய்வாளர்கள் மன்னிக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.


8. இதில் எந்த உரைப்பகுதியாவது இதனை படியெடுப்பவரால் அல்லது கற்பிக்கும்  ஆசிரியரால் விடுபட்டுப் போயிருப்பின், கற்றறிந்த அறிஞர்கள்  எவ்வித  மனக்கசப்புமின்றி அதனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், உரையில் ஏதேனும் தவறுகள், சரியற்ற விளக்கங்கள் அல்லது விடுபடல் இருப்பின், அறிஞர் பெருமக்கள் அத்தகைய தவறினை சரி செய்து, தேவையானதை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


9.   ஆதித்ய தாசரின் மகனாகிய வராகமிகிர் தனது தந்தையிடம் கல்வி பயின்றும், கபித்தா எனும் கிராமத்தில் சூரியனிடமிருந்து அறிவும் பெற்று, உஜ்ஜைனியில் உள்ள அவந்தியின் அரண்மணையில் பணியாற்றி, சோதிடம் தொடர்பாக முன்னோர்களின் படைப்பினைக் கவனமுடன் ஆராய்ந்து இந்த நல்லதொரு படைப்பினை வழங்கியிருக்கிறார்.


10.  இந்த படைப்பினை நான் வணங்கும் சூரியன், வசிஷ்டர், ஆதித்ய தாசர் ஆகியோரின் ஆசியுடன் படைத்துள்ளேன். சோதிடம் குறித்து எழுதிய முன்னோர்கள் அனைவரையும் வணங்குகிறேன்.


உத்திர பாகம் முடிவுற்றது.
..................................................


பாகம் இரண்டு முடிவுற்றது
....................


பிருகத் ஜாதகா முற்றும்
என முடிப்பதற்குமுன்
ஒரு சில வார்த்தைகள்
.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17

Wednesday, December 6, 2017

பிருகத் ஜாதகத்தில் விளக்கப்பட்ட தலைப்புகள் -பிருகத் ஜாதகா – 218வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  இருபத்து எட்டு

முடிவுரை


பத்தி 1,2,3:
           
          சாதகம் குறித்த இப்படைப்பில், கீழ்வரும் 27 பகுதிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
1.       வரையறை மற்றும் அடிப்படைக் கோட்பாடுகள் (இராசிக் கட்டம்)
2.       வரையறை மற்றும் அடிப்படைக் கோட்பாடுகள் (கோள்கள்)
3.       விலங்குகள் மற்றும் தாவரங்களின் சாதக அமைப்பு
4.       நிஷேக காலம் அல்லது கருவுறும் வேளை
5.       பிறப்பின் நேரத்தோடு தொடர்புடைய செய்திகள்
6.       பால அரிஷ்டம் அல்லது இளமைக்கால மரணம்
7.       ஆயுர்தயம் அல்லலது வாழ்க்கையின் கால அளவினைத் தீர்மானித்தல்
8.       கோள்களின் பிரிவுகள் மற்றும் துணைப்பிரிவுகள் எனப்படும் தசா மற்றும் அந்தரதசா.
9.       அஷ்டவர்க்கம்
10.    தொழில்கள்
11.   ராஜ யோகம் அல்லது அரசப் பிறவி
12.   நாபச யோகங்கள்
13.   சந்திர யோகங்கள்
14.   இரட்டைக் கோள்களின் யோகங்கள்
15.   சன்னியாசி யோகங்கள்
16.   நட்சத்திரங்கள் அல்லது நட்சத்திரத்தில் சந்திரன்
17.   இராசியில் பல்வேறு வீடுகளில் சந்திரன்
18.   இராசியில் பல்வேறு வீடுகளில் சூரியன், செவ்வாய் மற்றும் இதர  கோள்கள்
19.   கோள்களின் பார்வைகள்
20.   பாவங்களில் கோள்கள்
21.   பல்வேறு வர்க்கங்களில் கோள்கள்
22.   பல்வேறு யோகங்கள்
23.   அசுப யோகங்கள்
24.   பெண்களின் சாதகம்
25.   இறப்பு
26.   தொலைந்த சாதகத்தினை வடிவமைத்தல்
27.   திரேக்காணங்கள்


பத்தி 4,5,6:
நான் யாத்திரை எனும் நூலில் எழுதியதின் சுருக்கப் பொருளை இங்கு தருகிறேன். அவை:
1.       பிரசன்ன பிரபேதம்
2.       திதிபலம்
3.       நட்சத்திரபிதானம்
4.       வாரபலம்
5.       முகூர்த்த நிர்தேசம்
6.       சந்திர பலம்
7.       இலக்கின நிஷயம்
8.       இலக்கின பேதம்
9.       கிரகசுஹி
10.   அபவாதம்
11.   மிஸ்ரகம்
12.   தனுவேபனம்
13.   குஹையகபுஜம்
14.   ஸ்வப்னம்
15.   ஜனனவிதி
16.   கிரஹயஜனம்
17.   பிரயாணம்
18.   சகுனருதம்.

இவை மட்டுமின்றி, விவேககாலம் மற்றும் கிரஹகரணம்(கோள்கள்) போன்றவற்றைப் பற்றியும் படைத்திருக்கிறேன்.

மேலே கூறப்பட்ட பொருட்களைப் பற்றி எனது வானியல் நூலான பஞ்சசித்தாந்தத்தில் நான் விளக்கியிருக்கிறேன். இவ்வாறு சோதிடக்கலையின் பிரிவுகளான வானியல், சாதகம், சம்ஹிதை(1) ஆகியவற்றை அறிவார்ந்த மாணவர்களுக்காக படைத்துள்ளேன்.குறிப்பு: 1. வராகமிகிரரின் படைப்புகளான பஞ்ச சித்தாந்திகா என்பது வானியல் பற்றியும், பிருகத் ஜாதகம் என்பது சாதகம் பற்றியும், பிருகத் சம்ஹிதா என்பது சம்ஹிதை பற்றியும் விளக்குகிறது.

முடிவுரை.... தொடரும்.
முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17