திருக் பலம் (அ) பார்வையின் வலிமை
சட் பலத்தில் ஆறாவதாக கூறப்படுவது திருக் பலம் எனப்படும் கோள்களின் பார்வையின் வலிமை.
திருக் எனும் வடமொழி சொல்லிற்கு பார்வை என்பது பொருள். திருக் கணித முறை என்பதும் பார்வையின் அடிப்படையில் கணிக்கப் பெறுவதுதான். ஆக, கோள்களின் பார்வையினை அடிப்படையாகக் கொண்டு, பிறக் கோள்களின் வலிமையைனைக் கணிப்பதுதான் திருக் பலம் அல்லது பார்வையின் வலிமை என்பதாகும். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது யாதெனில், திருக் பலம் என்பது, ஒரு கோளின் பார்வையால் மற்ற கோள்கள் பெறும் வலிமை என்பதாகும்.
நாம் ஏற்கனவே பதிவிட்டவகையில், ஒவ்வொரு கோளிற்கும், தாம் இருக்கும் இடத்திலிருந்து 7-ஆம் பார்வையும், செவ்வாய், வியாழன், சனி ஆகியவற்றிற்குக் கூடுதலாக, முறையே – செவ்வாய் 4, 8; வியாழன் 5, 9; சனி 3, 10 ஆகிய பார்வைகள் உண்டு என்பதாகும்.
ஆனால், சட் பலக் கணக்கீட்டில், இந்த பார்வைகள் மட்டுமின்றி, ஒரு கோள், மற்றொரு கோளிலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருக்கிறது என்பதையும், அதாவது பார்க்கிறது எனும் கணக்கீடும் செய்கிறார்கள்.
அதன்படி, ஒரு கோளின் ஏழாம்பார்வை மற்றும் சிறப்புப் பார்வையும், முழுமையான வலிமையினைப் பார்க்கப்படும் கோள்களுக்கு கொடுப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமின்றி, பார்க்கும் கோளிற்கும் பார்க்கப்படும் கோளிற்கும் உள்ள பாகைக் கணக்கீடும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இவ்விதக் கணக்கீட்டில், ஒரு குறிப்பிட்ட சாதகத்தில் உள்ள ஒரு கோள், இராகு கேது நீங்களாக, மற்ற கோள்களுக்கு எவ்வளவு திருக் பலம் கொடுக்கிறது அல்லது அக்கோள்கள் எவ்வளவு பலம் பெறுகின்றன எனக் கணக்கிடப்படுகிறது. இதுவும் சஷ்டியாம்சம் எனும் அளவீட்டில்தான் கணக்கிடப்படுகிறது.
இவ்வாறு கணக்கீடு செய்தபின், ஒவ்வொரு கோளும் பெற்ற வலிமையானது, தொகுக்கப்பட்டு, அக் குறிப்பிட்ட கோள் பெற்ற திருக் பலம் பெறப்படுகிறது.
சோதிட பலன் உரைப்பதில், அதிக திருக் பலம் பெற்ற கோள், அதற்குரிய காரகத்தின் தன்மையில் அதிக நன்மைகளையும், குறைந்த பலம் பெற்றவை நன்மைகள் குறைவாகவும், அல்லது தீமைகளை அவைகளுக்குரிய தசா காலத்தில் வழங்கும் எனவும் சோதிட நூல்கள் கூறுகின்றன.
ஆக, திருக் பலம் அல்லது பார்வையின் வலிமை என்பது, ஒரு கோள் பிறக் கோள்களால் பார்க்கப்படுவதன் மூலம் பெறும் வலிமை என்பதை நினைவில் கொள்ளவும்.
இதன்படி, கோள்களுக்கு இடையே உள்ள தூரங்கள் கணக்கில் கொள்ளப்படுகின்றன என்பதுடன் ஒவ்வொரு கோளின் ஒளிவீச்சின் தன்மையும் கணக்கில் கொள்ளப்படுகிறது.
இங்கு நாம் இது பற்றிய மாதிரி கணிதம் செய்யவில்லை என்றாலும், இக்கணக்கீட்டில் குறிப்பிடத்தக்கது என்னவெனில், ஒரே இராசியில் இருக்கும் கோள்கள் எவ்வித பார்வை வலிமையும் பெறுவதில்லை என்பதுதான், அதாவது 0 சஷ்டியாம்சம் பெறுகின்றன. குறிப்பிட்ட கோண அளவில் விலகி இருக்கும்போதுதான் விலகலுக்கு ஏற்ப திருக் பலம் பெறுகின்றன.
இதுவரையில், சட்பலத்தின் ஆறுவகை வலிமைகளைச் சுருக்கமாக பார்த்தோம். அடுத்த பதிவில், இவைகளின் தொகுப்பினைப் பார்க்கலாம்.
அடுத்து … சட்பலம் தொகுப்பு.
No comments:
Post a Comment