பஞ்சாங்கம்
வாக்கியம் எதிர் திருக்கணிதம்
சூரியக் குடும்பத்தில் உள்ள வான் கோள்களை சோதிடக் கணிதத்திற்கு
உட்படுத்துவதன் மூலம் சாதகம் கணிக்கப்படுகிறது என்பதனை நாம் அனைவரும் அறிவோம். வான்
கணிதமும் சோதிடக் கணிதமும் சில நிலைகளில் சற்று மாறுபட்டு இருப்பினும், கோள்கள் வானில்
இருக்கும் நிலையினை இரண்டுமே துள்ளியமாகக் கணிக்கின்றன. வானியல் கணிதமானது சூரிய மையக் கொள்கையினையும் சோதிடக்
கணிதமானது பூமிமையக் கொள்கையினையும் அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகின்றன. இது
பற்றி நாம் விரிவான ஆய்வினைச் செய்திருக்கிறோம் (சோதிட ஆய்வு 21-30 - பூமி மையக் கொள்கை
ஏற்புடையதா? எனும் பதிவினைப் பார்க்க).
வானியல் கணிதம் தற்போது தொலை நோக்கிகள், தர்க்கமுறைக் கணிதம்,
கணிணிப் பயன்பாடு போன்றவற்றின் மூலம் துள்ளியம் தர முயன்று கொண்டிருக்கும் அதே வேளையில்,
நமது முன்னோர்கள் வானில் நிகழும் கோள்களின் மாற்றங்களை வெறுங்கண்ணால் கண்டுணர்ந்து
வான் நிகழ்வுகளைப் பதிவு செய்தது பெரும் வியப்பிற்கு உரிய செய்தியாகும்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தாங்கள் கண்டுணர்ந்த தரவுகளின்
அடிப்படையிலேயே வான் கணிதம் செய்வதற்கு, கையேடுகள்
(ஓலைச் சுவடிகள்) தயாரித்தனர். அதன் அடிப்படை தரவு (data) என்பது தொடர்நிகழ்வுகளைக்
கண்டுணர்தல் (observing of occurance) என்பதாகும். அந்த அடிப்படையிலேயே குறிப்புகளைத்
தயாரித்து அதனைச் சுவடிகளாகவும் வாய்மொழியாகவும் தங்கள் கணித முறைக்கு பயன்படுத்தி
வந்தனர். அத்தகைய குறிப்புகளைப் பஞ்சாங்கம்
என பெயரிட்டு அழைத்தனர். அத்தகைய பஞ்சாங்கக் குறிப்பேடுகள்தான் அன்றையகாலத்தில் வான்
கணித அறிவியலுக்கும், சோதிட கணிதத்திற்கும் பெரிதும் பயன்படுத்தப்பட்டன. அன்றைய காலத்தில்
வானியலும் சோதிடவியலும் (Astronomy & Astrology) பிரிக்கமுடியாத இருகூறுகளாகவே
இருந்துவந்தன. காலப் போக்கில், அறிவியற்கருவிகளின்
வளர்ச்சி மற்றும் நடைமுறைப் பயன்பாடுகளின் காரணமாக, பஞ்சாங்கங்கள் பயன்பாடானது வான்
அறிவியல் (Astronomy) கணிதத்திலிருந்து விலக்கப்பட்டு, சோதிட அறிவியலுக்கு
(Astrology) மட்டும் எனும் நிலை உருவானது.
இன்று “நாசா” பல வானியல் கணிதங்களைச் செய்து வான் கோள்களின்
நகர்வினை எடுத்துரைக்கும் நிலையில், பஞ்சாங்கங்கள் தரவுகளின் அடிப்படையில் அதே நகர்வுக்
கணிதங்களைச் சொல்லிச் செல்கின்றன. எடுத்துக்காட்டாக
எப்போதாவது நிகழும் சூரிய சந்திர மறைவுக் காலங்கள் (சூரிய சந்திர கிரகணங்கள்), கோள்களின் வக்கிர நிலைகள் (பின்னோக்கிப் பயணித்தல்
எனும் மாயத்தோற்றம்), கோள்களின் நகர்வு, ஆகியவற்றை
பஞ்சாங்கங்கள் மிகத் துள்ளியமாக முன்கூட்டியே தெரிவிப்பது, போன்றவற்றைக் கூறலாம்.
ஆக சோதிடக் கணிதத்திற்கு பஞ்சாங்கள் கொடுக்கும் தரவுகளே பெரிதும்
துணை புரிந்தவந்தன. காலப்போக்கில், கணிதத்தில் துள்ளியம் வேண்டி, சில திருத்தங்களை
மேற்கொண்டு, பஞ்சாங்கத்தினை செம்மைப் படுத்தும் சூழல் எழுந்தது. அங்குதான் பிரச்சினையும்
எழுந்தது. முன்னோர்கள் தயாரித்து அளித்த கணிதத்தில் மாற்றம் செய்வது சரியல்ல என்று
ஒரு பிரிவும், காலத்திற்கேற்ப திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என ஒரு பிரிவும்
களத்தில் இறங்கின.
திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல், முன்னோர்கள் வகுத்தளித்த பஞ்சாங்க
முறையினைப் பின்பற்றுபவர்கள், தங்கள் பஞ்சாங்க முறையை வாக்கியப் பஞ்சாங்க முறை என்றனர்.
திருத்தங்களை மேற்கொண்டு, அதனைப் பயன்படுத்தியவர்கள் தங்கள் பஞ்சாங்க முறையினைத் திருக்கணித
பஞ்சாங்க முறை என்றனர். இரு பிரிவினரும் தத்தமது முறைதான் சிறந்தது என்று வாதிடத் தொடங்கினர்.
அன்று தொடங்கிய வாதம் இன்றுவரை தொடர்கிறது.
,,, மேலும்
தொடர்வோம்.
No comments:
Post a Comment