இராசியில் ஒவ்வொரு கோளும் தமக்குரிய மூலத்
திரிகோணத்தைக் கொண்டிருக்கின்றன. மூலத் திரிகோணம் என்பது மூலம் + திரி + கோணம் என வட
மொழிச் சொல்லால் ஆனது. [சோதிடத்தில் 80% சொற்கள் வடமொழிச் சொற்களால்தான் ஆளப்படுகின்றன]. மூலம் என்பதனைத் தொடக்கம் எனவும், திரி என்பதனை
மூன்று எனவும் பொருள் கொண்டால், மூன்று கோணங்கள் கொண்ட ஒரு முக்கோணத்தின் ஆரம்பப் புள்ளி
எனலாம். எனவே மூலத் திரிகோணம் என்பது ஒரு கோள், இராசி மண்டலத்தில் ஒரு முக்கோண வடிவத்தினை
உருவாக்குவதற்கான ஆரம்பப் புள்ளியைக் கொண்ட முதல் கோணம் எனலாம்.
பொதுவாக இராசியில் திரிகோண வீடுகள் என்பன சிறப்புடையவையாகக்
கருதப்படுகின்றன. அதாவது, இலக்கினம் முதல் வீடு எனில், அது முதல் திரிகோணம் எனவும்,
ஐந்து மற்றும் ஒன்பதாம் வீடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது திரிகோண வீடுகள்
எனப்படுகின்றன. அதனால்தான் இலக்கினம், ஐந்தாவது மற்றும் ஒன்பதாம் வீட்டின் அதிபதிகளுக்கு
மிக முக்கியத்துவம் தருகிறார்கள்.
அதுபோலவே, கோள்களைக் கொண்டும் கோண வீடுகளைக்
காண்பதற்கு, மூலத் திரிகோணத்தை அடிப்படையாகக் கொள்கிறார்கள். மூலத் திரிகோணம் என்பது,
ஒரு கோள் தனக்குரிய ஒரு வீட்டில் அடிப்படையாக இருந்து கொண்டு, கோணங்களை உருவாக்குவதுதான்.
அவ்வாறு கோள்களுக்குரிய மூலத் திரிகோண வீட்டினை
அமைத்ததில் சில நுணுக்கங்களைப் பின்பற்றியுள்ளனர். ஒவ்வொரு கோளிற்கும் இரண்டு வீடுகள்
உள்ளன என்பதும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் மட்டும் ஒரு வீடு மட்டுமே என்பது நமக்குத்
தெரியும். ஆக இவற்றில் எந்த வீடுகளை அக்கோள்களுக்கு உரிய மூலத் திரிகோண வீடுகளாக குறிப்பது என்பதில் சில சிறப்பு அம்சங்களைக் கணக்கில்
எடுத்துள்ளனர். இதுபற்றி தெளிவான விளக்கங்கள் சோதிட நூல்களில் இல்லை என்றாலும், கோள்கள்
அக்குறிப்பிட்ட இராசியில் எவ்வளவு பாகை வரையில் மூலத்திரிகோணத்தில் இருக்கின்றன எனும்
விளக்கங்கள் உள்ளன. அதாவது எந்த கோளும் ஒரு இராசியில் முழுமையாக 30 பாகையிலும் மூலத்
திரிகோணமாக இருப்பதில்லை.
நான் அறிந்தவரையில், கீழ்வரும் சிறப்பு அம்சங்களைக்
கொண்டே மூலத் திரிகோணம் வரையறை செய்யப்பட்டுள்ளது.
1. அக் கோளிற்கு
சொந்த வீடாக இருக்க வேண்டும்
2. அந்த
வீட்டில் ஏதேனும் ஒரு கோள் உச்சம் பெற்றிருக்க வேண்டும்
3. அந்த
வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு நட்பு அல்லது சமம் எனும் நிலையில்
இருக்க வேண்டும்.
4. அந்த
வீட்டிற்கு முன்னும் பின்னும் உள்ள வீடுகள் அக்கோளிற்கு பகை எனும் நிலையில் இருக்கக்
கூடாது
5. ஐந்து
மற்றும் ஒன்பதாவது வீடுகள் நட்பு அல்லது சமம் எனும் நிலையில் இருக்க வேண்டும்.
இந்த சிறப்பு அம்சங்கள் நான் தொகுத்து அளித்திருப்பவை. இது அனைத்து
கோள்களின் மூலத் திரிகோண வீடுகளுக்கும் பொருந்தி வருகிறது. இதில் சிறு விதிவிலக்காக
சந்திரன் மட்டுமே உள்ளது. ஆனாலும் அதற்கும் சரியான காரணம் இருக்கிறது.
மூலத் திரிகோண வீடுகளைக் கொண்டுதான், வீடுகளின்
நட்பு, பகை, சமம் எனும் நிலைகள் தீர்மானிக்கப்படுகின்றன. மூலத்திரிகோண வீட்டிலிருந்து,
2, 4, 5, 8, 9, 12 ஆகிய வீடுகள் எப்போதும் நட்பாகவே இருக்கும் எனும் விதியும் இருக்கிறது.
எனவே, மூலத்திரிகோண வீடு ஒரு சிறப்புடனேயே சோதிடத்தில் பயன்படுகிறது.
ஏற்கனவே ஆட்சி வீட்டின் பலம் பற்றி முந்தைய
பதிவில் பார்த்தோம். மூலத்திரிகோண வீடு எப்போதும் ஆட்சி வீட்டில்தான் இருக்கும் என்பதால்,
ஆட்சி + மூலத்திரிகோணம் என்பது சற்று பலம் மிகுந்ததாகவே கணக்கிடப்படுகிறது. எனவே முன்பு
கூறியவாறு, மூலத்திரிகோண வீடானது ஆட்சி நிலைக்கும் உச்ச நிலைக்கும் இடைப்பட்ட நிலையில்
இருப்பதால், இதன் பலம் 75% எனும் அளவில் இருப்பதாக கணக்கிடப்படுகிறது. இந்தக் கணக்கீடானது,
சட்பலத்தில் மட்டுமே சரியாக வரையறை செய்ய முடியும்.
அடுத்து… உச்சம்
No comments:
Post a Comment