Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Wednesday, February 3, 2016

மூன்றாம் வீடு முதல் பன்னிரண்டாம் வீடு வரை – முன்னோர் வகுத்த வரையறைகள்




இனி, மூன்றாம் வீடு முதல் பன்னிரண்டாம் வீடு வரை, அவற்றின் பொது வரையறைகளைத் தொகுத்துக் காண்போம். இங்கு கொடுக்கப்பட்ட பொது வரையறைகள் என்பன, பல்வேறு சோதிட நூல்களில் பொதுவில் காணப்படும் வரையறைகள் ஆகும். இவை மட்டுமின்றி வேறு பல வரையறைகளும் கொடுக்கப்பட்டிருந்தாலும், அவை சிலவற்றோடு மாறுபட்டும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, தாயார் குறித்த வரையறை என்பது நான்காம் வீடு என பொதுவில் அனைத்து சோதிட நூல்கள் கூறினாலும், மகாக்கவி காளிதாசரின் உத்திர காலாமிர்தத்தில், பத்தாம் வீட்டில் தாயார் பற்றி அறியலாம் எனக் கூறப்பட்டுள்ளது. இதுபோலவே, பல்வேறு நூல்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் பல்வேறு வரையறைகளை வகைப்படுத்திக் கொடுத்திருந்தாலும், சில வரையறைகள் அனைத்து நூல்களிலும் பொதுவில் உள்ளன. எனவே அவற்றை மட்டுமே பொதுவரையறையாகக் கொடுத்துள்ளேன், மேலும், அத்தகைய வரையறையில் உள்ளவையின் விரிவையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். எடுத்துக்காட்டாக எட்டாம் வீட்டில் ‘நட்டம்’ என்றும் பதினொன்றாம் வீட்டில் ‘இலாபம்’ என்று இருந்தாலும், அவற்றின் எதிர்மறைக் கருத்துக்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். அமைப்பு நிலை சரியில்லை என்றால் இலாபம் என்பது நட்டமாகவும் மாறும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

       மீண்டும், சென்ற பதிவில் கூறியதை ஞாபகப்படுத்துகிறேன். இந்த பொது வரையறை என்பது அந்தந்த வீட்டின் பொது வரையறைதான். இவற்றின் நிலை என்பது, அது சார்ந்த இராசி, அதிலுள்ள கோள்கள், பார்வைகள், பலங்கள் ஆகியவற்றைப் பொருத்தே தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்க.

மூன்றாம் வீட்டின் பொது வரையறைகள் –

       உடன் பிறந்தவர்கள், வீரம், காது-மூக்கு-தொண்டை, சிறு பயணங்கள், பணியாட்கள் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

நான்காம் வீட்டின் பொது வரையறைகள் –

       தாயின் நிலை, கல்வித்திறன் (வித்தை), வாகனம், வீடு, நிலபுலன்கள் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஐந்தாம் வீட்டின் பொது வரையறைகள் –

       குழந்தைப் பேறு, பாட்டான், நல்வினைகள், மனத்திறன் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஆறாம் வீட்டின் பொது வரையறைகள் –

       உடல் நோய்கள், பகைவர்கள், பயம், தாய் வழி உறவினர்கள், சிறைப்படல் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஏழாம் வீட்டின் பொது வரையறைகள் –
       திருமணம், வாழ்க்கைத் துணை, நண்பர்கள், கூட்டு முயற்சி, வாழ்க்கை இன்பம் – மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

எட்டாம் வீட்டின் பொது வரையறைகள் –

       ஆயுட்காலம், பொருள் நட்டம், நெடுநாள் பிணிகள், பகை, கவலை, துன்பம் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

ஒன்பதாம் வீட்டின் பொது வரையறைகள் –

       தந்தை, குலப் பெருமை, தர்மச் சிந்தனைகள், வாழ்க்கை நலன் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

பத்தாம் வீட்டின் பொது வரையறைகள் –

       தொழில், வணிகம், பதவி-அதிகாரம், பெரும்புகழ் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

பதினொன்றாம் வீட்டின் பொது வரையறைகள் –

       மிகை செல்வம் (இலாபம்), எதிர்பாரா செல்வம், தமையன், ஆதாயம் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்

பன்னிரண்டாம் வீட்டின் பொது வரையறைகள் –

       அயல் நாட்டு பணிகள், பயணங்கள், இழி செயல்கள், செல்வ விரையங்கள், தூக்கம் - மற்றும் இவை சார்ந்தவற்றின் விரிவுகள்


       மேலே கூறப்பட்டவைகளின் வரையறைகளை எவ்வாறு தீர்மானித்தார்கள் என்பதற்கு எவ்வித கணிதம் சார்ந்த விளக்கமும் இல்லை.  முதல் வீடு என்பது தன்னிலை, இரண்டாம் வீடு என்பது தன் வாழ்வு என வகைப்படுத்திய வகையில் சரியெனக் கொண்டால், அடுத்து தாய், தந்தை, உடன்பிறந்தோர், உறவினர், வித்தை, தொழில், வாழ்க்கைத்துணை, இல்லற வாழ்வு, குழந்தைப்பேறு, செயல்பாடுகள், ஆயுள் என ஒரு வரிசையில் வகைப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இங்கு மூன்றாம் வீடு – உடன் பிறந்தோன், நான்காம் வீடு – தாய், ஐந்தாம் வீடு – குழந்தை, ஆறாம் வீடு – நோய்நொடி, ஏழாம் வீடு – வாழ்க்கைத் துணை, எட்டாம் வீடு – ஆயுள், ஒன்பதாம் வீடு – தந்தை, பத்தாம் வீடு – தொழில், பதினொன்றாம் வீடு – மிகைச் செல்வம், பன்னிரண்டாம் வீடு – மிகைச் செலவு என பொதுவில் வரையறுத்துள்ளனர். இதில் ஏழாம் வீடு – வாழ்க்கைத்துணை என்பது மட்டும் மிக்க பொருத்தாமாய், அதாவது தன்னிலை என்பது வாழ்க்கைத் துணையோடு இணையும்போது தம் நிலை என மாறுவதால், அதாவது ஒன்றிற்கு நேர் எதிரான ஏழாம் வீடு (180 பாகை நேர்க்கோடு) என்பதில் அமைந்திருப்பதில் பொருத்தம் உள்ளது. மற்றவை அனைத்தும், ‘முன்னோர்கள் தம் அனுபவத்தை பதிவு செய்துள்ளார்கள் – நாம் அதை அப்படியே ஏற்றுக் கொள்வோம்’ எனும் நிலையில்தான் ஏற்க வேண்டியுள்ளது. அதனால்தான், அவரவர் அனுபவத்தினை (கற்றது – கேட்டது) பதிவு செய்ததில் சிற்சில கருத்துகளில் முரண் நிலைகள் உள்ளன. எனவே, இந்த பன்னிரெண்டு வீடுகளுக்குமான வரயறைகளுக்கான ‘விவாதத்தை நிலுவையில் வைத்துவிட்டு (Pending discussion)’ பொதுவில் வைக்கப்பட்ட வரையறைகளை, ‘நிகழ்தகவு’ எனும் கோட்பாட்டின் அடிப்படையில் ஏற்றுக் கொள்வோம்.



அடுத்து – கோள்களின் வரையறைகள்

No comments: