வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - இருபது
பாவங்களில் கோள்களின் பலன்கள்.. தொடர்ச்சி
5. பிறக்கும்போது, இலக்கினத்திலிருந்து 7வது வீட்டில் சந்திரன் இருந்தால், அந்த மனிதர் பிறரின் நலனைப் பார்த்து பொறாமைப் படுபவராகவும், காமம் மிக்கவராகவும் இருப்பார். அது 8வது வீட்டில் இருந்தால், அந்த மனிதர் நிலையற்ற மனம் கொண்டவராகவும், நோய்களால் பாதிக்கப்படுபவராகவும் இருப்பார். அது 9வது வீட்டில் இருந்தால், அவர் எல்லோராலும் விரும்பப்படுபவராகவும், குழந்தைகள், நண்பர்கள், உறவினர்கள், சொத்துக்கள் கொண்டவராகவும் இருப்பார். அது 10வது வீட்டில் இருந்தால், எல்லா இடங்களிலும் வெற்றிபெறுபவராகவும், நல்லொழுக்கம் மிக்கவராகவும், சொத்துக்கள் உடையவராகவும், புத்திகூர்மையாளராகவும், வீரமிக்கவராகவும் இருப்பார். அது 11வது வீட்டில் இருந்தால், அவர் புகழ்மிக்கவராகவும், சொத்துக்கள் போன்றவைகளை அடைபவராகவும் இருப்பார். அது இலக்கினத்திலிருந்து12வது வீட்டில் இருந்தால் அந்த மனிதர் தீயவராகவும் உடலுறுப்பு குறைபாடு உடையவராகவும் இருப்பார்.
6. ஒருவர் பிறக்கும்போது செவ்வாயானது இலக்கினத்தில் இருந்தால், அந்த மனிதரின் உடலில் தழும்புகள் ஏற்படும்; அது 2வது வீட்டில் இருந்தால், அவர் குறைவான உணவினை உட்கொள்வார்; அது 9வது வீட்டில் இருந்தால் அவர் பாவியாக இருப்பார்; அது பிற வீடுகளில் இருந்தால்(1) சூரியன் அந்த வீடுகளில் இருந்தால் கொடுக்கும் பலனையே அது கொடுக்கும்.
மேலும், ஒருவர் பிறக்கும்போது, புதன் இலக்கினத்தில் இருந்தால், அவர் கற்றறிந்தவராக இருப்பார். அது 2வது வீட்டில் இருந்தால், அவர் வளமுடன் இருப்பார். அது 3வது வீட்டில் இருந்தால், அவர் மிகவும் கொடியவராக இருப்பார். அது 4வது வீட்டில் இருந்தால், அவர் கற்றறிந்தவராக இருப்பார். அது 5வது வீட்டில் இருந்தால், அவர் அரசரின் கீழ் அமைச்சராக இருப்பார்; அது 6வது வீட்டில் இருந்தால், அவருக்கு எதிரிகள் இருக்க மாட்டார்கள். அது 7வது வீட்டில் இருந்தால் அவர் சட்டம் படித்தவராக இருப்பார். அது 8வது வீட்டில் இருந்தால் அவரது திறமையால் புகழ்பெறுவார். அது 9வது, 10வது, 11வது, 12வது வீட்டில் இருந்தால், அத்தகைய வீட்டில் சூரியன் இருந்தால் கொடுக்கும் பலனையே இதுவும் கொடுக்கும்.
குறிப்பு:(1): அதாவது, 3வது, 4வது, 5வது, 6வது, 7வது, 8வது, 10வது, 11வது, 12வது வீடுகள்.
பாவங்களில் கோள்கள்.. தொடரும்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|