Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Tuesday, January 31, 2017

சட்பலம் - கோள்கள் வீட்டினில் பெறும் வலிமை அல்லது ஸ்தான பலம்



சட்பலம் (அ) ஆறு வகை வலிமைகள்



நாம் இதுவரையில் பதிவிட்ட வகையில், கோள்களின் பலத்தினை அவை இருக்கும் வீடுகள், காரகத்துவங்கள், பார்வைகள், உச்சம், நீச்சம், நட்பு, பகை நிலைகள் ஆகியவற்றின் மூலம் கணிக்க வேண்டும் என பதிவு செய்தோம்.

ஆனால் சோதிட நூல்கள் கூறுவதுபடி, இவை மட்டுமே கோள்களில் பலத்தினை அறிய போதுமானதில்லை. ஒரு கோள், தனது சொந்த வீட்டில் இருப்பதாலேயோ அல்லது உச்ச நிலை பெற்றிருப்பதாலேயோ அது வலிமை மிகுந்தது என எண்ணிவிட முடியாது. அது போலவே அது பகை வீட்டிலோ அல்லது நீச்ச வீட்டிலோ இருப்பதாலேயே வலிமை குன்றிவிட்டதாகவும் எண்ணிவிட முடியாது.

ஒரு கோளின் வலிமையை, பல்வேறு கணிதங்களைச் செய்தே முடிவு செய்ய வேண்டும் என சோதிட நூல்கள் கூறுகின்றன. குறிப்பாக ஆறுவகை வலிமைகளைக் கண்டறிய வேண்டும் என கூறுகின்றன.  அதனை வடமொழியில் சட்பலம் எனக் குறிப்பிடுகின்றன.

ஆறுவகை வலிமை அல்லது சட்பலம் என்பது கீழ்வருமாறு தொகுத்து அளிக்கப்படுகிறது:

(1)  வீட்டினில் வலிமை (அ) ஸ்தான பலம்

(2)  திசையினில் வலிமை (அ) திக் பலம்

(3)  காலத்தில் வலிமை (அ) கால பலம்

(4)  நகர்வில் வலிமை (அ) சேஷ்டா பலம்

(5)  இயற்கையில் வலிமை (அ) நைசர்க்கிக பலம்

(6)  பார்வையின் வலிமை (அ) திருக் பலம்

ஆக, இந்த ஆறுவகை பிரிவிற்குள், கோள்களின் வலிமையினைக் கணக்கிடுகின்றனர்.

இங்கு, இவை எவ்வாறு கணக்கிடப்படுகின்றன என்பதை பதிவிடப் போவதில்லை. ஆனால், இந்த ஆறுவகை பிரிவுகள் கோள்களின் வலிமையை எவ்வாறு வரையறை செய்கின்றன என்பதைப் பார்க்கலாம்.


(1)  கோள்கள் வீட்டினில் பெறும் வலிமை அல்லது ஸ்தான பலம்

இதன்படி, ஒரு கோள் எந்த வீட்டில் இருக்கிறதோ, அதைப் பொருத்து பலம் அறிதல் என்பதாகும். அதாவது அக்கோளிற்கு அந்த வீடு  கீழ் வரும் நிலைகளில் ஏதேனும் ஒன்றாகவோ அல்லது அதற்கு மேற்பட்டோ இருக்கலாம்.

(1)  உச்சம்

(2)  மூலத் திரிகோணம்

(3)  ஆட்சி

(4)  நட்பு

(5)  பகை

(6)  கேந்திரம்

(7)  திரிகோணம்

(8)  பணபரம்

(9)  ஆபோக்லிமம்

இவை அனைத்தும் ஐந்து பிரிவிற்குள் கொண்டுவரப்படுகிறது.


(அ) உச்ச வலிமை – அதாவது அக்கோள் உச்ச வலிமையில் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கணக்கிடுவது

(ஆ) ஏழு வர்க்கங்களில் வலிமை (அ) சப்தவர்க்கஜ பலம் – இராசியில், ஹோரையில், திரேக்காணத்தில், சப்தாம்சத்தில், நவாம்சத்தில், துவதசாம்சத்தில், திரிம்சாம்சத்தில் என இவ்விடங்களில் அக்கோள் பெறும் வலிமையைக் கணக்கிடுவது

(இ) ஒற்றை இரட்டை (அ) ஆண் பெண் (அ) ஓஜ உக்ம வலிமை – இதன்படி, கோள்கள் இராசி மற்றும் நவாம்சத்தில் ஒற்றை அல்லது இரட்டை இராசிகளில் பெறும் வலிமையைக் கணக்கிடுவதாகும்.

(ஈ) நாற்கரம் அல்லது கேந்திரத்தில் வலிமை – இங்கு கேந்திர பலம் என்று கூறினாலும், நாற்கர அமைப்பிற்குள் வரும், கேந்திரம், பணபரம், ஆபோக்லிமம் இடங்களில், முறையே – 1, 4, 7, 10;  2, 5, 8, 11;  3, 5, 9, 12 ஆகிய இடங்களில் பெறும் பலத்தினைக் கணக்கிடுவது.

(உ) திரேக்காணத்தில் பெறும் பலம் – அதாவது திரேக்காண இராசிகளில் கோள்கள் பெறும் பலத்தினைக் கணக்கிடுவது.


ஆக, இந்த முறையில் கணக்கிடப்படும் ஐந்து வலிமைகளையும் ஒன்று கூட்டி கிடைக்கப் பெறுவது, ஸ்தான பலம் அல்லது வீட்டினில் வலிமை என்பதாகும்.


இவ்வாறு ஸ்தான பலம் அல்லது இடத்தினில் வலிமை பெறும் கோள்கள், மிக நற்பலன்களை அளிக்கும் எனவும், வலிமை குறைந்தால், கெடு பலன்களை வழங்கும் எனவும் சோதிட நூல்கள் கூறுகின்றன. பொதுவாக சோதிட நூல்கள் எனக் கூறினாலும், அவை பழமையான நூல்கள் என்பதினை நினைவிற் கொள்ளவும்.


…….திசையினில் வலிமை (அ) திக் பலம்


No comments: