Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, February 4, 2017

சட் பலம் - கால பலம் (அ) காலத்தின் வலிமை


கால பலம்

சட் பலத்தில் மூன்றாவது பிரிவு கால பலம் அல்லது காலத்தில் வலிமை. இதன்படி, சாதகர் பிறந்த பொழுதினை அடிப்படையாகக் கொண்டு கோள்களின் பலத்தினை அறிவதாகும்.

பிறந்த பொழுது என்று கூறினாலும், அது நேரம், நாள், மாதம், வருடம் ஆகியவைகளை உள்ளடக்கியது ஆகும். இதன் உட்பிரிவுகள் பின்வருமாறு கணக்கிடப்படுகிறது.

(1)  நடு நிசி – நடு பகல் வலிமை (அ) நத உன்னத பலம்
சூரியன் வான் உச்சியில் இருப்பது நடு பகல், சூரியன் ஒளியற்று இருப்பது நள்ளிரவு வேளை ஆகிய இரு நிலைகளைக் கணக்கில் கொண்டு, சாதகத்தின்படி கோள்கள் பெறும் வலிமையினை கணக்கிடுவதாகும். இதன்படி, நடுப்பகலில் சில கோள்களும், நடு இரவில் சில கோள்களும் வலிமை மிகுத்தும், வலிமை குறைத்தும் கணக்கிடப்படுகின்றன.

(2)  வளர் பிறை – தேய் பிறை வலிமை (அ) பட்ச பலம்
இது சந்திரனின் இரு நிலைகளான வளர்பிறைப் பொழுது (அ) சுக்கில பட்சம் மற்றும் தேய்பிறைப் பொழுது (அ) கிருஷ்ண பட்சம் ஆகிய நிலைகளில் கோள்கள் இருக்கும் நிலையினைக் கணக்கிடுவதாகும்.

(3)  பகல் – இரவு வலிமை (அ) தின இராத்திரி பலம்
இதன்படி, பகல் பொழுதும் இரவுப் பொழுதும் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. சாதகத்தில் கோள்கள் இருக்கும் நிலைக்கு ஏற்ப ஒவ்வொரு மூன்று பகுதிகளிலும் சில கோள்கள் வலிமை மிகுந்தும் வலிமை குறைந்தும் இருக்கும் நிலையினைக் கொண்டு வலிமைக் கணக்கிடப்படுகிறது.

(4)  ஆண்டின் வலிமை (அ) ஆப்த பலம் (அ) வருஷ பலம்
இது சற்று வித்தியாசமான கணக்கீடாகும். இதன்படி, உலகம் தோன்றிய காலம் தொடங்கி சாதகர் பிறந்த பொழுது வரை உள்ள காலத்தினைக் கணக்கிடுவதாகும். இது அஹர்கணம் எனும் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. [இங்கு குறிப்பிடப்பட வேண்டியது என்னவெனில், உலகம் எப்போது தோன்றியது என்பது அறிவியற்கணக்கிற்கு அப்பாற்பட்டு இருக்கும் நிலையில் இந்தக் கணக்கீடு என்பது எவ்வளவு தூரம் பொருந்தும் என்பது வினாவிற்கு உரியதே]

(5)  மாதத்தின் வலிமை (அ) மாத பலம்
மாத பலம் என்பது பிறப்பு சாதகத்தில், பிறப்பின்போது உள்ள மாதத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுவதாகும். வருட அதிபதியை விட மாத அதிபதியின் வலிமை அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.

(6)  கிழமையின் வலிமை (அ) வார பலம்
இது பிறந்த கிழமையின் அடிப்படையில் அதற்குரிய கோளின் வலிமையை கணக்கிடும் முறையாகும்.

(7)  ஓரை வலிமை (அ) ஹோரா பலம்
ஒவ்வொரு மணி நேரமும் ஒரு ஓரை என பிரிக்கப்பட்டு, ஒரு நாளைக்கு 24 ஓரைகள், ஞாயிறு முதல் சனி வரையிலான ஏழு ஓரைகள், தொடர்ந்து வரிசைப்படுத்தப்படுகின்றன. பிறக்கும்போது இருக்கும் ஓரையின் அடிப்படையில் கோளின் வலிமைக் கணக்கிடப்படுகிறது.

(8)  நகர்வின் வலிமை (அ) அயன பலம்
அயனம் என்றால் கோள்களின் நகர்வு என்பதாகும். பொதுவாக, தட்சிணாயனம் உத்திராயனம் என சூரியனின் நகர்வினை, இராசிகளுடன் தொடர்புபடுத்தி கோள்களின் வலிமையினைக் கணக்கிடுவதாகும். இது மிக நீண்டதொரு கணக்கின் அடிப்படையில் செய்யப்படுகிறது.

(9)  யுத்தத்தில் வலிமை (அ) யுத்த பலம்
குறிப்பிட்ட பாகைக்குள் கோள்கள் அடங்கி இருக்குமாயின், கோள்களுக்கிடையே யுத்தம் உள்ளது என சோதிட நூல்கள் கூறுகின்றன. பொதுவாக, அதிக பாகையைப் பெற்ற கோள் யுத்தத்தில் வென்றதாகவும், குறைந்த பாகையைப் பெற்ற கோள் யுத்தத்தில் தோற்றதாகவும் கணக்கிடப்படுவதின் அடிப்படையில் கோள்களின் யுத்த பலம் கணக்கிடப்படுகிறது.

ஆக, கால பலத்தில் கோள்களின் வலிமையானது பல்வேறு கால நிலைகளில் உள்ள கோள்களின் வலிமையினைக் கணித முறைகளுக்கு உட்பட்டு வரையறை செய்வதாகும்.

முன்பு கூறியவாறே, கால பலம் அதிகம் பெற்ற கோள், அதற்குரிய செயல்பாட்டினைச் சிறப்பான வகையில் வழங்கும் எனவும், குறைவாக பெற்ற கோள், அதற்குரிய செயல்பாட்டினை வழங்குவதில் எதிர்மறைப் பலனை வழங்கும் எனவும் சோதிட நூல்கள் கூறுகின்றன.


…… அடுத்து சேஷ்டா(அ)நகர்வின் வலிமை


No comments: